தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்பதற்காக முன்வந்தவர். எனவே, அவர் ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றபோது, இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் ஒரு போதும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலான நாடாளுடன்றில்  நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாடாளுமன்ற உரை – 01.07.2023 கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்றைய தினம், எமது அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் எனது கருத்துக்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது.

எமது ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்பதற்காக முன்வந்தவர். எனவே, அவர் ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றபோது, இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் ஒரு போதும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அவர், இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது நாட்டில் நிலவிய மிக மோசமான பிரச்சினைகள் அதாவது – அரகலய வன்முறைப் போராட்டங்கள். எரிபொருள் தட்டுப்பாடு, அதற்கான வரிசைகள், மின்சாரத் தடைகள், உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் தட்டுப்பாடு, போசாக்கின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவர் குறுகிய காலத்திற்குள் எட்டியிருக்கிறார்.

எமது நாடு அவலத்தில் தத்தளித்த வேளை நானும் சிலரைப்போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனித்திருக்கலாம். குறுகிய அரசியல் இலாப நோக்கில் குழப்பங்களை தூண்டி விட்டிருக்கலாம். எனக்கென்ன எதுவும் நடக்கட்டும் என்று சுத்த சுயலாப நோக்கில் சும்மா இருந்திருக்கலாம். தீராப்பிரச்சினையாக இதுவும் இருந்து விட்டு போகட்டுமே என்று மக்களின் அவலங்களை வைத்து அரசியல் கபட நாடங்களை நடத்தியிருக்கலாம். அப்படியெல்லாம் நான் செய்யப்போவதில்லை என்பதே வரலாற்று உண்மை. தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது.

திக்கற்று நிற்கும் மக்களுக்கு திசைகாட்டி செல்லும் வல்லமை யாருக்கு உண்டென்று நான் கூறினேனோ அவரே நாட்டின் ஜனாதிபதியாக இருந்து நாட்டை மீட்டெடுத்து வருகின்றார்.

தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொண்டால் நாட்டிலுள்ள வங்கிகள் பாதிக்கப்படும் என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவை பாதிக்கப்படும் என்றும் பல்வேறு ஊகங்கள் எதிர்த் தரப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஊகங்களுக்கு அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் பதில் அளித்திருக்கின்றார். அதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம், வங்கிக் கட்டமைப்போ, ஊழியர் சேமலாப நிதியமோ, ஊழியர் நம்பிக்கை நிதியமோ பாதிக்கப்பட மாட்டாது என அவர் விளக்கமளித்துள்ளார்

இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றம் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில்தான் நாம் இந்த தேசிய கடன் மறுசீரமைப்பினையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

எமது ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் தொடர்பில் உலக நாடுகளே பாராட்டி வருகின்றன. உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் உரையாற்றுவதற்கு எமது ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையில், அவரது ஆளுமை பற்றி இங்கு வேறேதும் கூறத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

இந்த நாடு இருக்கின்ற நிலையில், அதைத் தாங்கிக் கொண்டு, வழி நடாத்தக்கூடிய சர்வலோக நிவாரணியாக எமது ஜனாதிபதி அவர்கள் திகழ்கின்றார் என்றே கூற வேண்டும்.

அடுத்ததாக, தற்போது இந்த நாட்டில் ‘அஸ்வெசும’ எனப்படுகின்ற ஆறுதல் நலன்புரி நிவாரணத் திட்டம் என்கின்ற நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், பயனாளிகளின் தேர்வு தொடர்பில் தற்போதைக்கு சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆட்சேபனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேலும், வடக்கு, கிழக்கில் நீண்டகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்கள் பலவும் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்கென அரசாங்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தற்போதைய தேர்வு தொடர்பில் மக்கள் தங்களது மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மேற்படி“ஆறுதல்” நலன்புரி நிவாரணத் திட்டத்தில் தகுதியுடைய எவரையும் கைவிடக்கூடாது என்பதே எமது ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடாகும்.

இத்தகைய நிவாரணத் திட்டங்கள் அதன் மூலமான பயனாளிகளை சுய வாழ்வாதார ஈட்டலுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனினும், எமது நாட்டில் இத்தகைய பயனாளிகள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்த்தவர்களாகவே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த “ஆறுதல்” நலன்புரி நிவாரணத் திட்டமானது, ஓரிரு வருடங்களில் அதன் மூலமான பயனாளிகளை சுய செயற்பாட்டாளர்களாக மாற்றும் என்ற நம்பிக்கை தென்படுகின்றது.

அடுத்ததாக இந்திய அத்துமீறி எல்லைத் தாண்டியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய – குறிப்பாக தமிழக கடற்றொழிலாளர்களது செயற்பாடுகள் தொடர்பில் சில விடயங்களைக் கூறலாம் என நினைக்கின்றேன்.

1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 7 சரத்துக்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் 5வது சரத்தில், இந்திய கடற்றொழிலாளர்களும்,இந்திய யாத்ரீகர்களும் கச்சதீவை அனுபவிக்கலாம், மற்றும் இந்த விடயங்களுக்கு “சிறி லங்காவுக்கு” விசாவோ பயண ஆவணமோ பெறப்பட வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 6வது சரத்தில்,“சிறி லங்;கா” மற்றும் இந்திய கடற்றொழில் படகுகள் தாங்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அனுபவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கும், இந்தியாவுக்குமான கடல் எல்லைகளையும், கடல் உரிமைகளையும் வரையறுத்துக் கொள்கின்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தம் கைசாத்திடப்படுவதற்கு முன்னர்; இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பது போன்று, இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள் சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே “வெட்ஜ் பாங்” என்ற மீன்வளம் பெருகிய கடற்பரப்பில் 1922ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான மீன்பிடி நிறுவனம் 06பாரிய மீன்பிடி கப்பல்களைக் கொண்டு மீன்பிடித்து வந்துள்ளது. அதைவிட நூற்றுக்கணக்கான இலங்கை மீன்பிடிப் படகுகள் இந்திய கடற்பரப்பினுள் சென்று மீன்பிடித்து வந்துள்ளன. இந்த நடவடிக்கை 1975ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

எனினும், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், இப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு 3 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுவும் இலங்கையின் 06மீன்பிடி கப்பல்களிற்கு மட்டுமே அதாவது – மேற்படி 6 கடற்றொழில் கப்பல்களும் இந்தியஅரசாங்கத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டே கடற்றொழிலில் ஈடுபட இயலுமென தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 1979ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன.

அதன் பின்னர் 1980 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருந்த மீன்களுக்கான பற்றாக்குறை காரணமாக இந்திய அரசு வருடத்திற்கு 2,000 தொன் மீன்களை இரு அரசுகளும் இணங்குகின்ற வகையில் வழங்க முன்வந்திருந்தது. அதன் பின்னர் எவ்விதமான செயற்பாடுகளும் இல்லை.

ஆரம்பத்தில், இந்திய கடற்றொழிலார்கள் தங்களது வலைகளை பழுதுபார்ப்பதற்கும், உலர்த்துவதற்கும், மீன்களை காயவைத்து உப்பிடுவதற்கும் என கச்சதீவை பயன்படுத்தி வந்தனர். அக்கால கட்டத்தில் பருத்தி நூல் சார்ந்த வலைகள் பயன்படுத்தப்பட்டதால் அவை நீரில் பட்டவுடன் ஊறி விடும் என்பதால் இப்படியொரு நிலை இருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தற்போது நைலோன் வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்குறிப்பிட்டபட்ட “வெட்ஜ் பாங்” பகுதியில் இலங்கை கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. அத்துடன் அந்தந்த நாடுகளின் கடற்பரப்புகளுக்குள் அந்தந்த நாடுகளின் கடற்றொழிலாளர்களே கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும், எல்லைகள் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவது தடை எனவும் குறிப்பிடப்பட்டது.

தற்போது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுமான கடற்றொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் மேற்படி (வெட்ஜ் பாங்) பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது.

இத்தகைய நிலையில்தான் பாண்டிச்சேரி,காரைக்கால், நாகப்பட்டிணம், இராமேஸ்வரம், போன்ற மாவட்டங்களைச் சாரந்த 5,000க்கும் அதிகமான இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற் பரப்பிற்குள் அத்துமீறி, எல்லைத்தாண்டி வந்து தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

1976ஆம் ஆண்டின் இரு நாடுகளிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் பின்னர் சுமார் 36 அடி நீளமும் 120 குதிரை வலுச் சக்தி கொண்டதுமான இந்திய இழுவை வலை மடிப் படகுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 50 – 60அடி நீளமும், 350 முதல் 550 வரையிலான குதிரை வலுச் சக்தி கொண்டவையாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்ட நாங்கள் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை தாரைவார்த்துள்ளோம் என்ற விடயம் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி எல்லைத்தாண்டியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், எமது கடற்றொழிலார்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நாங்கள் இராஜதந்திர முறையிலும், சட்ட நடவடிக்கைகள் மூலமும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் ஊடுறுவல், அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அண்மையிலே எமது ஜனாதிபதி அவர்கள் புதுடில்லி செல்லவுள்ளார் அப்போது இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசுக்கு எடுத்துரைப்பார் என நம்புகின்றேன்.

நான் கடற்றொழில் அமைச்சராக ஆனதன் பின்னரே கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல. அதற்கு முன்னரே பல்வேறு அமைச்சு நிலைகளில் இருந்த போதும் கூட,ஆட்சியில் பங்கெடுக்காத காலங்களில் கூட எங்கள்  கடலும் நிலமும் வளமும் எமது மக்களுக்கே சொந்தமென்று களமிறங்கி செயலாற்றியிருக்கின்றேன்.

இதை முன்னுதாரணமாக கொண்டு சக தமிழ் கட்சி தலைமைளும் வினைத்திறனுடன் செயலாற்ற முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

இதயத்தில் சுத்தமிருந்தால் இலட்சியத்தில் சித்தமிருக்கும்,..

நடுக்கடலில் தத்தளிக்கும் எமது மக்களை காப்பாற்ற வாருங்கள்!

வடக்கிலே இருக்கின்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் இருக்கின்ற ஒரு மூத்த உறுப்பினரின் தலைமையில், தமிழகத்துக்குச் சென்று, தமிழக முதலமைச்சர், கடல் வள அபிவிருத்தி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் அநியாயங்களிலிருந்து வடக்கின் தமிழ் கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுமாறு கோர வேண்டும்.

இத்தகைய இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்கனவே இந்திய கடற் பரப்பில் வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது இலங்கைக் கடற் பரப்பினிற்குள் வந்தும் வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது இலங்கைக் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பினையே உண்டு பண்ணும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது கன்னியாகுமரி கடற்றொழிலார்கள வெட்ஜ் பாங் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதைப் போல், ஏனைய தமிழக பாண்டிச்சேரி, காரைக்கால், நாகப்பட்டிணம், இராமேஸ்வரம், மாவட்டங்களின் கடற்றொழிலார்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையவிட வேண்டாம் எனவும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும், ஆழ்கடல் தொழிலுக்கான வாய்ப்புகளை தமிழக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் அத்துமீறிய வருகையானது இலங்கையின் கடற்படையினரிற்கோ, தரைபடையினரிற்கோ உரிய பிரச்சினை அல்ல. வடக்கே வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான (சுமார் 56,740)இலங்கை தமிழ் மக்களது பிரச்சினை என்பதை இந்திய தமிழக அரசுக்கு உணர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும்,வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏற்கனவே ஒரு சிலர் மாத்திரம் பயன்பெற்று வந்திருந்த கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலை நாம் பரவலாக்கி இதுவரையில் பல நூற்றுக் கணக்கான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியிருக்கின்றோம்.

 “பழையன கழிதலும் புதியன புகுதலும்”; என்ற அடிப்படையில் கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை சார்ந்து நாம் பல்வேறு புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கறுப்புத் தங்கம்’ எனப்படுகின்ற கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலானது எமது மக்களின் பொருளாதாரத்தில் அதீத செல்வாக்கு செலுத்த ஆரம்பித்ததும், சில தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, சில சுரண்டல்வாதிகள்; அதற்கெதிரான கருத்தாடல்களை முன்வைத்து வருகின்றனர்.

மக்களின் அவலங்களுக்கு தூபமிடுபவர்கள்  ஆசை காட்டி தமது எவலாளர்களை தூண்டி விடுகிறார்கள். அதன் மூலம் உயர்ந்த இலட்சிய கோபுரங்களை  உடைத்து வீழ்த்தி குட்டிசுவர்களாக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். தம்மால் முடியாததை அடுத்தவன் செய்தால் அதைத்தடுக்க தகிடு தித்தி தாளம் போடுவது தமிழ் தேசியம் அல்ல. நாங்கள் தமிழ் தேசத்தின் விடியலுக்காக நீதியான வழியில் இரத்தமே சிந்தியவர்கள். தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக ஒரு போதும் உச்சரித்தவர்கள் அல்ல. நாங்கள் அரசியல் யதார்த்த சூழலை உணர்ந்து தேசிய நல்லிணக்க பாதையில் வெளிப்படையாகவே அணிவகுப்பவர்கள்,எக்காலத்திலும் அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள் அல்ல. அல்லது தென்னிலங்கையை தூண்டி விட்டு அதில் குளிர் காய,தமிழர் தேசத்தில் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்களும் அல்ல. மாகாணசபை முறைமையில் இருந்து முன்னோக்கி செல்வதே நடைமுறை சாத்தியம் என்ற எமது தீர்க்கதரிசனத்தை ஏற்றுக்கொண்டது போல். அதை ஏற்க மாட்டோம் ஆனாலும் அதில் பங்கெடுப்போம் என்ற மறைமுக ஆதரவு போல். எல்லா விடயங்களிலும் இதய சுத்தியோடு செயலாற்ற முன் வாருங்கள். விளக்கங்களை கோரும் மக்களுக்கு குழப்பங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள்.

சில தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும்  விளக்கமில்லாததும், விளக்கமிருந்தும் விளங்காதது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள், தங்களது வாழ்வாதாரங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், மக்களது வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும்,மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு நன்மைகள் கிட்டும் போது அதைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்துக் கொண்டு, அரசியல் செய்வதும், தமது பிழைப்புகளை முன்னெடுப்பதும் இவர்களது நோக்கமாக இருக்கின்றது.

நாங்கள் முறையான ஆய்வுகளுக்கூடாகவே இத்தகைய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அன்றி, தான்தோன்றித் தனமாக எதையும் முன்னெடுப்பதில்லை. வெளிப்படையான தன்மை கொண்டவையாகவே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஒருவர் கடலட்டை, இறால், நண்டு, கடல் பாசி, சிப்பி போன்ற நீர் வேளாண்மைக் கைத்தொழில்களை மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர், அத் தொழிலினை மேற்கொள்கின்ற பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரிடம் அது சார்ந்த கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி முகவர் நிலையம் (நெக்டா),கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அடங்கலாக கள ஆய்வு நடத்தப்பட்டு, கடற்றொழில் அமைச்சு அதன் சாதக, பாதகங்ளை ஆய்வு செய்த பின்னரே அவருக்கு குறித்த நீர் வேளாண்மைக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனை விளங்கிக் கொள்ளாமல் சுயலாப அரசியலுக்காக சிலர் கூக்குரல் இடுவது தொடர்பில் எமது மக்களும் தமிழ் ஊடகங்களும் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஆக, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை நாம் வழங்கும் போது, அதனை எதிர்ப்பவர்கள், இந்திய இழுவை மடி வலைப் படகுகளுக்கு எதிராக வெளிப்படையானதும், ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் அனைவரதும் ஒத்துழைப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் கோரி, விடைபெறுகிறேன்.

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!

நன்றி,

வணக்கம்.

Related posts:


வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...