ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு !

Friday, October 23rd, 2020

இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என்பதனை மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

19வது திருத்தச் சட்டமானது, நீதிமன்றத்தினால் விதிந்துரைக்கப்பட்டிருந்த வியாக்கியானங்களையும் பொருட்படுத்தாமல், இரவோடிரவாக நிறைவேற்றப்பட்டு, கடந்த நான்கரை வருட காலத்தில் இந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி இருந்தமையை எமது மக்கள் நேரிடையாகவே அனுபவித்து வந்திருந்தனர்.

அந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக உயிரிழந்த மக்களுக்கும், அங்கவீனமுற்றுள்ள மக்களுக்கும், அழிந்த சொத்துக்களுக்கும், வீழ்ச்சி கண்ட பல்துறை பொருளாதாரத்திற்கும், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களைக் கூறிவருகின்றனர். இந்த சாட்சியங்கள் ஊடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இந்த சாட்சியங்களில் கூறப்படுகின்ற விடயங்களை அவதானிக்கின்றபோது, 19வது திருத்தத்தின் பின்னரான கடந்த ஆட்சிக் காலமானது, அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டிருந்த நிலையில், மக்களது பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டு, ஆளுக்காள் தத்தமது சுயலாபங்கள் சார்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது எமது மக்களுக்கு புலனாகின்றதுடன், 19வது திருத்தச் சட்டத்தின் நிர்வாணம் தெட்டத் தெளிவாகின்றது.

அதுமட்டுமல்ல, இந்த நாடு கடந்த கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட கால யுத்தம் காரணமாக பின்னடைவினை நோக்கிச் சென்றிருந்ததைப் போன்றே, 19வது திருத்தச் சட்டத்திற்கு பிற்பட்ட கடந்த கால ஆட்சியிலும் இந்த நாடு பல வருடங்கள் பின்னோக்கியதாக சென்றுவிட்டிருந்தது.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைப் பின்பற்றியதாக முன்னெடுக்கப்பட்டிருந்த 19வது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட, சுயாதீனம் எனக் கூறிக் கொள்ளப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? என்ற கேள்வி எழுகின்றது. இந்த நாட்டுக்கு பொருத்தமில்லாத வகையிலேயே இந்த ஆணைக்குழுக்கள் செயற்பட்டிருந்தன என்பது பலரும் அறிந்த விடயமாகும்.

பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அது பாரியதொரு நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டு, இறுதியில் அந்தப் பதவி கடந்த ஆட்சிக் காலத்தின்போது எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருந்தது? என்பது பற்றியும் இப்போது விடயங்கள் வெளிப்பட்டு வருகின்றன.  அரசிலமைப்புச் சபையின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய நியமனங்கள் மற்றும் செயற்பாடுகள் அந்தந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள், நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய அமையவில்லை என்பதுடன், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைக் கொண்டிருந்தவர்கள், தங்களது கருத்துகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரையில் சுயாதீன ஆணைக்குழுக்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து மறுசீரமைப்புகளையும் மேற்கொண்டு வந்திருந்தனர் என்றே தெரிய வந்திருந்தது.

ஆகக் கூடிய சுயாதீனம் கொண்டதும், நாடாளுமன்றத்துக்குக்கூட பொறுப்பு கூறாத சுயாதீன ஆணைக்குழுவாக செயற்பட்டிருந்ததுமான தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினர் செயற்பட்டிருந்த மிக மோசமான நிலைமை தொடர்பில் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். இதன் காரணமாக இந்த ஆணைக்குழு மக்கள் மத்தியில் நகைப்பிற்கு உட்பட்டும் இருந்தது. அதாவது, பக்கசார்பின் உச்ச கட்டத்திற்கே சென்று, இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் செயற்பட்டிருந்தார்.

கடந்த இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டும், முட்டுக் கொடுத்துக் கொண்டும், இன்னும் தீராதிருக்கின்ற தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என எமது மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி, அந்த ஆட்சியையே கொண்டு வந்ததாக கூக்குரல் இட்ட தமிழ்த் தேசிய அரசியல் கும்பல், இறுதிவரையில் ஒரு துரும்பையும் கூட அசைக்க முடியாமல், தங்களுக்கான சலுகை சுகங்களை மாத்திரம் பெற்று வாய் மூடிக் கிடந்தனர். இவர்கள் எமது மக்களுக்கு வாக்களித்ததைப் போல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் விடுவிப்பு, காணாமற்போனோர் பற்றிய விடயத்திற்கான தீர்வு போன்ற எதுவும் சாத்தியமாக்கப்படவில்லை.

19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த நாட்டையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல், உரிய கால வரையறைக்கு முன்பாகவே அந்த அரசைக் கலைக்க நேரிட்டதானது, பெரும்பான்மை பலத்தை இந்த அரசுக்குத் தேடித் தருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்த 20வது திருத்தச் சட்டமானது திடீரென வானத்திலிருந்து குதித்தது அல்ல. தற்போதைய ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கு முன்பாகவே 19வது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டு வந்தது. இது குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். ஜனாதிபதி அவர்கள் அப்பதவிக்கு வந்ததன் பின்னர், 19வது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் காரணமாக இந்த நாடு முகங்கொடுத்திருந்த இடையூறுகள், தடைகள், பொறுப்புக் கூறலுக்கான நம்பகத்தன்மை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் பொதுத் தேர்தலுக்கு முன்பாக 19வது திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனாதிபதி அவர்கள் பெற்றிருந்த மக்கள் ஆணையை அந்த மக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையில், வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டுமெனில், 19வது திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவதெனில் நாடாளுமன்றத்தில் 3ஃ2 பெரும்பான்மை வேண்டும் என உணரப்பட்டு, பொதுத் தேர்தலின் போது அதற்கான ஆணை மக்களிடம் கோரப்பட்டது.

19வது திருத்தச் சட்டத்தின் மூலமாக மக்கள் அனுபவித்திருந்த துன்ப துயரங்களும், வாழ்வாதாரங்களுக்கான முட்டுக்கட்டைகளும், பாதுகாப்பற்ற சூழலும் என பல்வேறு காரணங்கள் புதியதொரு, வலிமை மிக்க, சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியதைப் போன்றே, 19வது திருத்தச்; சட்டத்தை மாற்றியமைப்பதற்கான நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி அவர்களதும், கௌரவ பிரதமர் அவர்களதும் வேண்டுகோள்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கும் மக்களைத் தூண்டியது.

அந்த மக்களது ஆணையின் பிரகாரமே இந்த 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

20வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி காலகட்டத்தின்போது, இந்த நாட்டிலே 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம், அளுத்கமை கலவரம், ஜிந்தோட்டைக் கலவரம், கண்டி – திகன கலவரம் போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருந்தன என்பது உண்மையாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியல்லாத காலங்களில் 1958 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், கடந்த நல்லாட்சியின் போது நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமிருந்து குறைக்கப்பட்டு, பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த காலகட்டத்தில் திடமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான கண்டி – திகன – அம்பாறைத் தாக்குதல்கள், குறிப்பட்ட பேரினவாத பெரும்பாண்மை மதகுருமாரது சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் செயற்பாடுகள், இந்த நாட்டு வரலாற்றில் 1983 ஜூலை கலவரத்திற்குப் பின்னர் பெரும் மோசமான வடுவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பவை பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தகைய செயற்பாடுகள் மூலமாக சகோதர முஸ்லிம் மக்களது பொருளாதாரம் பாரியளவில் அழிக்கப்பட்டிருந்தது.

சகோதர முஸ்லிம் மக்களது ஆடைகள்கூட கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கப்பட்டு, அம் மக்கள் வீடுகளில் காய்கறி நறுக்கிய கத்திகள்கூட சுற்றிவளைக்கப்பட்டு, பிடிக்கப்பட்டு, ஊடகங்களில் பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கப்பட்டன.

இத்தகைய பெரும்பான்மை பேரினவாத மதகுருமார்களது அடிப்படைவாத போக்குகள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றிய பெரும்பான்மை இன மக்கள், அத்தகைய அடிப்படைவாத மதகுருமார்களுக்கு கடந்த பொதுத் தேர்தலில் பாடம் புகட்டியே, இந்த ஆட்சியைக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டு மக்கள் ஓர் இனவாத ஆட்சிக்கு ஆணை வழங்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதற்கெதிரான தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாபதியின் ஆட்சியின் கீழேயே கொண்டுவரப்பட்டது.

அன்றைய அதே பிரதமர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானதும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருந்த இந்திய சமாதானப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 விகிதத்திலிருந்து 5 விகிதம் வரையில் குறைக்கப்பட்டதும் சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் போதாகும்.

தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற ஸ்ரீ எதிரப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஆகும்.

அளுத்கம பகுதியில் சகோதர முஸ்லிம் மக்களது உடமைகள் அழிக்கப்பட்டு, வன்செயல்கள் பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சமயத்தில் வெளிநாட்டிலிருந்த அப்போதைய ஜனாதிபதி மதிப்பிற்குரிய மகிந்த ராஜபக்ச அவர்கள் உடனடியாக நாடு திரும்பி, ஒரே இரவில் அந்த வன்செயல்களைக் கட்டப்படுத்த கட்டளையிட்டதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் போதாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா தொடர்பில் இந்தச் சபையிலே அன்று கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அண்ணர் அவர்கள், ‘இந்தப் புதிய அரசியலமைப்பு மசோதாவிலுள்ள ஏற்பாடுகள், கடந்த 22 வருடங்களாக இருந்த நிலையைவிட சற்று முன்னேற்றகரமானது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

அவர் மட்டுமல்லாமல், தமிழ், முஸ்லிம் மக்களது தலைவர்களான அமரர்களான கௌரவ சௌயமியமூர்த்தி தொண்டமான், கௌரவ எம். எச். எம். அ~;ரப் ஆகியோரும் தெட்டத் தெளிவாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஏற்றிருந்தனர்.

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சாதகமான அல்லது பாதகமான கருத்துக்கள் இருப்பின் அவற்றை முறைப்படி முன்வைப்பது வரவேற்கத்தக்கது. அதைவிடுத்து, இதை ஒரு மாபெரும் பயங்கரத் திட்டமாக சித்தரித்து, மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவது அவர் அவர்களது தனிப்பட்ட, சுயலாப நிகழ்ச்சி நிரலையே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

சிறுபான்மை மக்களுக்கு மட்டுமில்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் சௌபாக்கியமான, வலிமைமிக்கதொரு நாட்டை, சகல துறைகளிலும் பலமிக்கதாகக் கட்டியெழுப்புகின்ற வகையில் கொண்டுவரப்படவுள்ள இந்த 20வது திருத்தச் சட்டத்தை ஒரு சில தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் தரப்புகள் பாரதூரமாக விமர்சித்து வருகின்றன.

 ‘காய்ந்த மாடு கம்பிலே பாய்வது” போல், இப்போது கதைப்பதற்கு, அறிக்கைவிடுவதற்கு எதுவுமே இலலாத நிலையில், இந்த 20வது திருத்தச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு. இளைஞர்களே போராடுங்கள் என்றும் முதியோர்களே வாதாடுங்கள் என்றும், சிறியோர்களே விளையாடுங்கள் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சுயலாப பேர்வழிகளும் சேர்ந்து கொண்டுவந்த 19வது திருத்தச் சட்டம் ஏற்படுத்திய ஆட்சியில் என்னென்ன நடந்தன என்பது பற்றி, இப்போது பல்வேறு விடயங்கள் விலாவாரியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது வெட்டவெளிச்சமாகி வருகின்றன.

19வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான நல்லாட்சி எனக் கூறப்பட்ட அந்த ஆட்சிக் காலத்தின்போது, அந்த ஆட்சியை தாங்கி நின்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரால்கூட, எமது சமூகத்துக்கு எதையுமே  செய்ய முடியாதிருந்தது. சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, பலம் பொருந்தியவர்களாக இருந்த சகோதர முஸ்லிம் அமைச்சர்களாலும் எதையுமே செய்ய முடியாதிருந்தது.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச அவர்களால் முடியுமாக இருந்தது. ஆனால், சிறுபான்மை மக்களது பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கடந்த கால ‘லிச்சவி’ ஆட்சியினருக்கும், அந்த ஆட்சிக்கு முண்டுக் கொடுத்துக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுத் தருவோம் எனக் கூறி, எமது மக்களது வாக்குகளைக்  அபகரித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தரப்பிற்கும் அந்த மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குக் கூட திராணியற்றுப் போனதால், இன்றும்கூட நீண்டகாலமாக ஆளுநர் ஆட்சி சார்ந்தே மாகாண சபைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று இந்தியாவுடன் பேசப் போவதாகக் கூறுகிறார்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி கதைக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.

 இவர்களது போலி வர்க்குறுதிகiளை நம்பி, இவர்களுக்கு வாக்களித்துவிட்டு, இன்றும்கூட கடலை நம்பி, கரையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களை மட்டுமின்றி, எமது கடற்றொழிலாளர்களுக்கான கடல் வளத்தையே சுரண்டிக் கொண்டிருக்கின்ற இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியாவிடம் மூச்சு விடாத இவர்கள், எமது நாட்டு அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க வேண்டியதை இந்திய அரசுடனும், இந்திய அரசுடன் பேசித் தீர்க்க வேண்டியதை இலங்கை அரசுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கேயோ அலைகின்ற ஞான சூனியங்கள்’ என்பது இவர்களைத் தான் குறிக்கும் என நம்ப முடிகின்றது.

இன்னொருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகின்றது. நரேந்திர மோடி அவர்கள் இந்த நாட்டுக்கு வருகை தந்து, யாழ்ப்பாண மண்ணுக்கும் வந்திருந்தபோது,  தமிழ்நாட்டிலே சிறுவர் து~;பிரயோகம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, நிதி மோசடி போன்ற வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த பிரேமானந்தாவின் உதவியார்களான தனது சகாக்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி நரேந்திர மோடி அவர்களிடம் கடிதம் எழுதிக் கொடுத்திருந்திருந்தார் இந்த நீதியானவர். அந்தக் கடிதத்தை கசக்கிப் போட்டுவிட்ட நரேந்திர மோடி அவர்கள், இப்போது இவர் இப்போது எழுதியுள்ள கடிதத்தை வேத வாக்காகக் கொள்ளப் போவதில்லை. அதுவும் முன்னர் எழுதியதைப் போல் வேலைக்கு உதவாததாக இருக்கும் என்றே எமது மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

எனவே, இத்தகைய பித்தலாட்டங்களிலிருந்து விடுபட்டு, எமது மக்களுக்கு மேலும் சிறந்த பயனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், 20வது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி பயன்படுத்திக் கொள்வதற்கு, அதற்கான ஆதரவைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - செயலாளர் ந...
அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ந...

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...