செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

10.-1-300x229 Wednesday, March 22nd, 2017

இந்த நாட்டில் இலஞ்சம், மற்றும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கிலும், ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும், அதற்கு ஒத்துழைக்கும் வகையில் நிதி ஊழல், மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்குமாறு இந்த அரசு ஆட்சிக்கு வந்த நிலையில் பொது மக்கள் முன்பாக கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக, கோரிக்கை விடுக்கப்பட்டு முதல் மாதத்திலேயே சுமார் 4 ஆயிரம் பொது மக்கள், இவ்விடயம் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

மற்றும் இலஞ்சம் பெற்றமை, ஊழல்கள் புரிந்தமை, அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளும் இந்த முறைப்பாடுகளில் அடங்கியிருந்ததாகவும் அறியக் கிடைத்தது.

இந்த ஒருமாத காலத்திற்குப் பின்னரும் இத்தகைய முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறியக் கிடைக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனைகள் முற்பணக் கணக்கின் வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர் –

இந்த நாட்டில் செயற்பட்டு வருகின்ற ஊழலுக்கு எதிரான முன்னணியும் சுமார் 500க்கும் மேலான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

அந்த வகையில் பார்க்கின்றபோது, எமது நாட்டில் இடம்பெற்றுள்ள இலஞ்சம், ஊழல், மோசடிகளை கண்டறிவது தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல்கள் விசாரணை ஆணைக் குழு, பாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இதுகால வரை கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எமது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களே நிலவுகின்றன.

இன்று இந்தச் சபையிலே முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையைப் பார்க்கின்றபோது, ‘முன்னைய வருடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் முடிவடையாததன் காரணமாக, வழக்குகளுக்குரிய பொருட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை வரவு வைக்க முடியாது போனமை காரணமாக, வரவில் குறைவு ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலை தோன்றவதற்கான அடிப்படைகள் என்ன என்பது பற்றி ஆராயாமல், நிதி வரவுகள் பல்வேறு துறைகள் சார்ந்து தேங்கியிருப்பது, எமது நாட்டின் தற்போதைய நிலையில் எத்தகைய பாதிப்புகளை கொண்டு தரக்கூடும் என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில், எமது நாட்டில் இதுகால வரையில் இலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து எத்தனை முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன? அவற்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் எத்தனை? விசாரணைகள் முடிக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விடயங்கள் எத்தனை? சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ள விடயங்கள் எத்தனை? போன்ற கேள்விகளுக்கான விடைகள், மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்படல் வேண்டும்.

மேற்படி முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தாமதம் அடைவதற்கு, இந்த ஆணைக்குழுவில் நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறை ஒரு பிரதானமான காரணமாகக் கூறப்படுகின்றது. எனவே, இது குறித்து உரிய அவதானங்களை செலுத்தி, அதற்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும்,

மேற்படி ஆணைக்குழுவில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதில,; சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தாமதமடையச் செய்வதாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இது குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், உள் நோக்கங்கள், காரணமாகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோது, குற்றஞ்சாட்டப்படுகின்றவர் சமூகத்தில் தவறான கண்ணோட்டங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எனவே, இவ்வாறு சுமத்தப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அக் குற்றச்சாட்டு பொய்யானது எனக் காணப்பட்டால், அக் குற்றத்தை சுமத்தியவருக்கு எதிராக சட்ட ஏற்பாட்டில் உள்ளவாறு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களை மாகாண மட்டத்தில் அமைப்பது குறித்தும் அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ‘ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர் நெஷனல்’ அமைப்பினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கை கடந்த 7ஆம் திகதி ‘மக்களும் ஊழலும், ஆசிய பசுபிக்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையர்களே பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குவதாகவும், பொது பாடசாலைகள், நீதிமன்றங்கள் மற்றும் பயன்பாட்டு வழங்குநர்களுக்கு மக்கள் இலஞ்சம் செலுத்துவதாகவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட 17 நாடுகளில் இலங்கை 17 சதவீத இலஞ்ச அளவைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் இத்தகைய நிலைமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். இதற்கு சட்ட ஏற்பாடுகள் மட்டும் போதாது என்றே நான் கருதுகின்றேன். இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் எமது சமூகத்தில் பாடசாலை மட்டத்திலிருந்தே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். அந்த வகையில், எமது பாடசாலை பாட நூல்களில் குறிப்பிட்ட தரத்திலிருந்து இவ்விடயம் தொடர்பான பாடத் திட்டங்களை இணைத்துக் கொள்வதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

கடந்த மாதம் 07ஆம் திகதி ஊடகங்களில் ஒரு செய்தியைப் படிக்கக் கிடைத்தது. அந்தச் செய்தியின் தகவல் இன்று இந்தச் சபையிலே விவாதிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடையது என்பதால், அதனை இங்கு கூறி எனது இந்த உரையை முடித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு நபர் பொது சுகாதார பரிசோதகராக இலங்கையில் பல பகுதிகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் அநுராதபுரத்தில் பணியாற்றிய நிலையில், அங்கு கடமையாற்றிய தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவரிடம் 300 ரூபா இலஞ்சமாகப் பெற்றபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இரண்டு வருட சிறைத் தண்டனையும் அனுபவித்து, விடுதலையாகி வந்து, தொழிலை இழந்த நிலையில் நாட்டில் பல பகுதிகளில் ஆங்கில ஆசிரியராக மேலதிக வகுப்புகளை நடத்தியுள்ளார் என்றும்,

எனினும், தான் இலஞ்சம் பெற்றது ஒரு மாபெரும் குற்றமாகவே இவரது மனதில் பதிந்துவிட்டதால், சட்டம் இவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கியிருந்தும், அது போதாது என இவரது மனம் அடிக்கடி இவரை வதைத்துக் கொண்டிருந்ததால், சுமார் 20 வருடங்களுக்கு முன்பிருந்து இன்றுவரை இவர் கலேவெல, கலாவெவ பிரதான வீதியிலுள்ள பெலியகந்த பிரதேசத்திற்குரிய பொது மயானத்தின் கல்லறையொன்றில் வாழ்ந்து வருகின்றார்.

தற்போது 75 வயதுடைய  ரணவீர ஆராச்சி தொன் டேவிட் என்ற இந்த நபர், ‘செய்யும் தவறுக்கு முன்னர், அதன் பின்னரான விளைவுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுவதாகவும்,  அந்த பகுதி மக்கள் வழங்கும் உணவில் உயிர்வாழும் இவர் உயிரிழக்கும் வரை அந்தக் கல்லறையில் வாழ்ந்து வருவதாகவும் அச் செய்தி குறிப்பிடுகின்றது.

இந்த மனிதரின் குற்ற உணர்ச்சியானது குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். அதே நேரம் இந்த நபரது கருத்தாக இங்கு குறிப்பிடப்படும்  ‘செய்யும் தவறுக்கு முன்னர், அதன் பின்னரான விளைவுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்’ என்பதற்கமைவான சிந்தனைகளை எமது மக்களிடையே ஏற்படுத்தவதற்கு பாடசாலை மட்டங்களிலிருந்து விழிப்புணர்வுகளை எற்படுத்துவதுடன், பரந்தளவில் நாடளாவிய ரீதியில் அதனை ஏனைய மக்களிடத்தே ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலஞ்ச, ஊழல், மோசடிகளை ஒழிப்பதே எம்மைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அவதானத்தில் கொண்டு, அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்?...
மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் - டக்ளஸ் எம்.பி ச...