செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
Saturday, May 20th, 2000கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளரவர்களே!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முதன்முறையாகச் சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத் திட்டத்தின் மீது நாங்கள் இப்போது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றோம். கௌரவ நிதி அமைச்சரவர்கள் தமது உரையில் “யுத்த நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது தேசிய சமாதானத்திற்கும் பொருளா தார புத்தியிர்ப்புக்குமான பாதையில் முதலாவதும் உறுதியானதுமான அடியெடுத்து வைத்தலாகுமென ஓரிடத்தில் கூறியுள்ளார். மோதல் களற்ற இந்த நிலையானது பொருளாதார அபிவிருத்திகள் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் செயற்படுவதற்கும் போதுமான அவகாசத்தை வழங்குவதாகவுள்ளது. கௌரவ நிதி அமைச்சரவர்கள் மேலும் கூறுகையில். எமது நாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது உண்மையே ஆனால் ஒரு நாட்டின் மீதான சர்வதேச சமூகத்தின் செல்வாக்கு என்பது ஒரு வெளிப்புற காரணி மட்டுமே. எமது நாட்டின் அக முரண்பாடுகளுக்கு சரியான தெளிவான கௌரவமான தீர்வுகள் காணப்படும்போது தான் சமாதானம் நிலைபெறும். ஏனெனில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பாலும் தேனும் ஒட்டப் போவதில்லை என்று இந்த அவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் கருத்துக் கூறியுள்ளார். இது இந்த மோதல்கள் அற்ற நிலை நீடிக்காமல் போவதற்கு முன்னெச்சரிக்கை செய்யப்படுகின்றதே? என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஆனால் சமாதான சூழல் நிலைபெறுவதற்கு பங்களிக்க வேண்டிய தேவை எல்லாத் தரப்புக்கும் உரியதாகும்.இந்தக் குறிப்புடன் எனது உரையைத் தொடர்கின்றேன்.
இந்த வரவுச் செலவுத் திட்டத்தில் சில வரி அறவீடுகள் தவிர்க்கப் பட்டுள்ளன. மக்கள் உடனடியாகப் பொருளாதார நெருக்கடி களுக்கு உள்ளாகும் நிலை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை வாய்ப்பின்மைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகப் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு வழி காணப்படவில்லை.போர்ச்சூழலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளும் காணப்படுகின்றன. எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். பொருளாதாரம் புத்துயிர் பெறவேண்டுமாயின் உற்பத்தித்துறைகள் பெருக வேண்டும். இன்று பசுப்பால் தேவையெனக் கருதும் ஒரு நபர் பக்கெற் பாலைத் தேடிச் செல்கிறாரே தவிர பசுமாடு ஒன்றை வளர்க்கலாம் என்பதில் முனைப்புக் காட்டுவதாக இல்லை. இது நுகர்வுக் கலாசாரத்தின் பின்விளைவு ஆகும்.
தாமே நேரடியாக உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றும் ஆர்வத்தைப் புறந்தள்ளுகிறது. இதனாலேயே எங்கள் ஊர் நகைச்சுவைப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இலங்கை நாட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்” கடலால் சூழப்பட்ட தீவு ஆனால் ரின் மீனையும் கருவாட்டையும் இறக்குமதி செய்யும் நாடு” எனக் கூறியிருந்தார். இது எமது மக்கள் மத்தியில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வராத நிலையும், உற்பத்தியில் ஈடுபடுவதற்கு போதியளவு ஊக்குவிப்பு வழங்கப்படாத நிலையும் காணப்படுகிறது என்பதற்கு உதராணமாகும். இந்த நிலை மாற்றப்படவேண்டுமென்பதில் ஐயமில்லை. இதற்கு நிம்மதியான அமைதிச்சூழல் தேவையென்பது மிக முக்கியமானதொரு முன் நிபந்தனையாகும்.ஆனால் அத்தகைய சூழல் தோன்றுகிறதா என்பது எமக்கு முன்னாலுள்ள மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 13540கோடி ரூபாவாக இருக்கின்ற போதும், போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு 6300கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு சமாதானம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையில்லையா என்று ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் மறுபுறத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றுக்கு முரணான கருத்துக்கள் பலமாக விதைக்கப்படுகின்றன.
இதன் மூலமாகக் கோப உணர்ச்சிகளும் பழிவாங்கும் மனப்பான்மை களும் தூண்டப்படுகின்றன. நடுநிலையாக நின்று இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் மக்கள் சமாதான சக வாழ்வுக்கான முயற்சிகள் எந்தத் திசையில் செல்கின்றன என்பது குறித்து விழி பிதங்கி நிற்கின்றனர்.இதனாலேயே நாட்டை விட்டுச் சட்டவிரோதமான வழிகளில் என்றாலும் வெளியேறும் ஆவல் பெருகி வருகின்றது. கடந்த ஜனவரிக்குப் பின்னர் சட்டவிரோதமாக படகுகளில் நாட்டைவிட்டு வெளியேற முனைந்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. காலியிலிருந்தும் நீர்கொழும்பிலிருந்தும் இவ்வாறு படகுகள் மூலமாகத் தப்பிச் செல்ல முயன்ற பலர் கடலில் மூழ்கியுள்ளனர்.
பலர் கைதாகியுமுள்ளனர்.எனவே இவ்வாறு நாட்டிலிருந்து உயிராபத்து நிறைந்த பொருள் செலவுமிக்க மார்க்கங்களில் தப்பிச் செல்ல இந்த நாட்டு இளைஞர்கள் ஏன் முயல்கின்றனர். என்பது குறித்து நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். புலிகளின் படையணிகளில் சேரவேண்டிய கட்டாயம் ஏற்படலாம் எனும் அச்சம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் துரத்துகிறது. அதேபோலவே வேலைவாய்ப்பின்மை போன்ற காரணிகள் தென்னிலங்கையின் இளைய தலைமுறையை வெளிநாடுகளுக்கு விரட்டுகின்றது.
ஆனால் இங்கவாழும் மக்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்துக்களை செயற்பாடுகளை விடவும் அதிகாரக் கைப்பற்றுதலுக்கான போட்டிகள் முனைப்புப் பெற்றுள்ளமையின் ஆபத்தான குறிகாட்டிகள் இவை என்பது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே முன்னைய அரசின் தவறுகள் பலவீனங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றைக் கவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக தேசிய பிரச்சினையில் கருத்தொருமிப்பு காண்பதற்கான வழிமுறைகளை எல்லாத் தரப்பும் நாட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்.
மேலும் சுயாதீன அரச பணிகள் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை நிறுவுவதன் மூலம் அரச மற்றும் பொலிஸ் அலுவலர்களை அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான முயற்சியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுவோமெனக் கௌரவ நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டியதே. தேர்தலுக்குப் பின்னரான அரசியல் வன்முறைச் சம்பவங்கள் தொடருவதற்கு பொலிஸார் சுயாதீனமாகச் செயற்படும் நிலை இல்லாதிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இங்கு சில விடயங்கள் பக்கச்சார்பானவையாக அரசியல் உள்நோக்கங்களுடன் அபாண்டமான பழி சுமத்தும் கைங்கரியங்களாக இடம்பெற்று வருவதை அவதானிகக் கூடியதாக உள்ளது.
இத்தகைய உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருந்தும் கொழும்பில் பட்டப்பகலில் நடு வீதியில் படுகொலைக்கு உள்ளானவர்களில் இந்த அவையின் உறுப்பினர்களில் ஒருவரான நீலன் திருச்செல்வமும் உள்ளார். அதேபோல இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அ.தங்கத்துரை நிமலன் சௌந்தரநாயகம் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்படுகொலைகளைப் பற்றிக் கண்டு கொள்ள மறுப்பவர்கள் மற்றுமொரு தலைவரின் கொலைக்குக் காரணமானவர்களென பலர் மீதும் சுட்டு நீட்டுகின்றனர்.
எல்லா மனித உயிர்களும் பெறுமதி மிக்கவை. கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவையே இத்தகைய குற்றச்செயல்கள் பெருகாமல் தடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றைக் கண்டுகொள்ளாமல் மற்றையதை மட்டும் சுட்டிக்காட்டுவதன் நோக்கம் சுயலாபம் தேடும் அரசியல் போக்கே ஆகும். இதுபோலவே பத்திரிகையாளர் செழியன் பேரின்பநாயகத்தின் படுகொலை பற்றியோ பத்திரிகை ஆசிரியரும் இந்த அவையின் உறுப்பினரும் எனது உற்ற தோழருமான நடராஜா அற்புதராஜா (ரமேஷ்)போன்றவர்களின் படுகொலைகள் பற்றியோ அலட்டிக் கொள்ளாமல் நிமலராஜனுக்காக நீலிக் கண்ணீh வடிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
லுயன் எயார் விமானம் பயணிகளுடன் சுட்ட வீழ்த்தப்பட்ட சம்பவம் போன்ற பொதுமக்கள் அநாவசியமாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைகள் வேண்டும் எனவும் குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் பகிரங்கமாக வேண்டகிறேன். இப்போது சமாதானச் சூழல் தோன்றியிருப்பதால் இத்தகைய அசாம்பாவிதச் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது என்றே மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே பொலிஸ் மற்றும் அரச பணிகள் யாவும் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்குமாகப் பணிபுரிய வகை செய்யப்பட வேண்டும்.ஆனால் அது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. ஏனெனில் கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் தேசிய பாதுகாப்பு வரி பொருட்கள் சேவைகள் வரி எனப் பல்வேறு வரிச்சுமைகளைத் தடுக்க முற்பட்டுள்ளர்.
இது வரவேற்புக்கு உரியது.ஆனால் மறுபுறத்தில் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் மேலதிகமாகச் சட்டவிரோத பண அறவீPடுகளைச் செலுத்துவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். தமிழர்களான தென்னிலங்கையில் வசிக்கும் தனவந்தர்களும் வர்த்தகர்களும் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களும் அத்தகைய வரிவிலக்குப் பெற்றிருக்கவில்லை.தமிழீழ மண்ணில் வாழ்வதற்காக – தமிழீழ மண்ணின் ஊடாகப் பயணம் செய்வதற்காக – என்று இந்தப் பண அறவீடுகளுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இத்தகைய பண அறவீடுகள் குறித்து குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களில் ஒரு பிரிவினரான முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து வெளிப்படும் அதிருப்திகள் கண்டுகொள்ளாமல் விடப்படக்கூடிய சிறிய விடயங்களல்ல இவ்வாறாகத் திரட்டப்படும் நிதிகள் போர் முனைப்புக்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்பதை எவரும் உத்தரவாதப்படுத்தம் நிலை இல்லை. இவற்றைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ எவரும் முன்வருவதாக இல்லை. இவை பற்றிப் பேசினாலே சமாதான ஒப்பந்தத்தைக் குலைத்தவர்கள் என்ற பழி ஏற்பட்டுவிடுமென்னும் போலி அச்சம் மேலோங்கிக் காணப்படுகின்றது.வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பிறக்க நேர்ந்து விட்டமைக்காக அந்த மண்ணில் வாழ்கின்றமைக்காக இத்தகைய வரிக் கொடுப்பனவுகளைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்டும் மக்களை அவற்றிலிருந்து விடுவிக்கும் பணியிலிருந்து அரசாங்கம்; தூர விலகி நிற்க முடியுமா என்பது எமக்கு முன்னுள்ள கேள்வியாகும்.
இதேவேளை இலங்கையின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப் பாடு என்பதற்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இனங் களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் கூட்டாட்சி மத்தியில் நிலைபெறுவதுடன் எக்காலமும் பிரிக்கப்பட முடியாத வடக்கு – கிழக்கு மாநிலத்திற்கு விஷேட அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்பதே எமது அரசியல் இலக்காகும் ஆனால் இனங்களுக்கிடையில் ஐக்கிய உணர்வை வளர்தெடுப்பதற்குப் பதிலாக பகைமையையும் குரோத உணர்வுகளையும் தூண்டிவிடக்கூடிய நிகழ்சிகளே ஆங்காங்கு இடம்பெறுகின்றன. ஒரு சாரரின் நிகழ்ச்சித் திட்டததிற்காக மக்கள் வீதிகளுக்கு இழுக்கப்படுகின்றனர். தேர்ப் பவனிக்கும் அங்கப் பிரதட்டைகளும் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை அரசாங்கம் காவனத்திலெடுத்து இன ஐக்கியம் பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றை பேணுதல் தனக்குரிய பொறுப்புணர்வை உணர்த்த முற்பட வேண்டும்.
கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது போல வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் ஜனநாயகத்தின் இரட்டைப் பகைவர்களாவர். மேலதிக வரிச்சுமைகளால் மக்கள் வறுமைக்கு உள்ளாக்கப்படும்போது அதற்கான முழுப் பொறுப்பம் அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும். அது அரசாங்கததிற்கு எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவிக்கும். ஏற்கனவே கைக்கெட்டிய தூரத்தில் தற்போது பயன்பாடற்றுக் கிடக்கும் ஆயுதங்களை நோக்கி இளைஞர்களின் பார்வை திரும்ப இது வழிவகுக்கும் எனவே தான் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண வசூலிப்புக்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக மேற்கொள்ளத் தவறுமாயின் அதன் பின்விளைவு ஒப்பந்தத்தின் ஆயுளை நீர்க்குழியானதாக மாற்றிவிடுமென்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தடுத்தாக இளைஞர்களுக்காக தொழில்வாய்ப்புக்கள் பெருக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த அரசாங்க காலத்தில் எமுது முனைப்பான முயற்சிகளால் மேற்கொள்ளப்பட்டு இதுவரை அமுல்படுத்தப்படாதிருக்கும் அமைச்சரவை முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.உதாரணமாக வடக்கில் செயற்படாதிருந்த உப்புக் கூட்டுத்தாபனம் -நோர் தொழிற்சாலை போன்றவற்றைக் கம்பனிகளாக உருவாக்கி அவற்றைத் துரிதகதியில் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். இவை சிறப்பாகச் செயற்படுமிடத்து வட பகுதியில் வேலைவாய்ப்பக்கள் அதிகரிக்கம் உற்பத்திகளும் பெருகும்.அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணங்களும் வளரும் அதைவிட வடக்கு – கிழக்கு மாகாணத்தின் சமுர்த்தி விரிவாக்கம் தொண்டர் அடிப்படையில் சேவையில் ஈடுபட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் என இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம்.
இதேபோல யாழ்பபாணத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் படுதல் யாழ்ப்பாண பல்கiலைக்கழகத்திற்கான பொறியியல்பீடம் அமைக்கப்படுதல் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை என்பவற்றை மீளத் திறத்தல் என்பனவும் இங்கு குறிப்பிடத்தக்கவை யாகும். மேலும் சுய தொழில் முயற்சிகள் பல்கிப் பெருக வேண்டும். இதற்காகவே அபிவிருத்தித் தொண்டர்கள் திரட்டப்பட்டுச் சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. திரிபடையும் அரசியற் காரணங்களுக்காக அபிவிருத்தித் தொண்டர்கள் கைவிடப்படுவார்களேயானால் அவர்கள் மத்தியில் நம்பிக்கையீனம் விரக்தியும் வளரவே அது துணை செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் சுயதொழில் முயற்சிகள் பெருகுவதற்காக அநாவசியமான இறக்குமதிகள் கட்டப்படுத்தப்பட வேண்டும். திறந்த பொருளாதாரம் என்பதன்; பெயரால் சகல பொருள்களும் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையானது மறுபக்கத்தில் சுயதொழில் முயற்சிகளைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. தொழில்துறை அறிவும் தொழிற்பாட்டிற்கான மூலதனமும் மட்டும் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பனவாக இருக்கக்கூடாது. உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு உத்தரவாதம் செய்யப்படுவதற்கு இறக்குமதிகளின் மீதான கண்டிப்பு தேவையானதாக இருக்கிறது. கட்டுபாடற்ற இறக்குமதிகளின் மூலமாக வர்த்தகத்துறை வளர்ச்சியடையுமே தவிர உற்பத்தித்துறை ஓங்குவதாக இல்லை.
மேலும் நவீன விரைவூர்திப் பாதை வலையமைப்பொன்றினை நிர்மாணிப்பது குறித்துக் கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பாதை வலையமைப்புக்கள் வடக்கு – கிழக்கு மாகாணம் எந்தளவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. என்பது தெரியவில்லை.கடந்த பல ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாடு தரைவழித் தொடர்பை இழந்து இருந்தது. ஜரிஸ்மோனா கப்பல்; கடத்தப்படும் லயன் எயர் பயணிகள் விமானம் சுட்டிவீழ்த்தப்படும், கொழும்புக்கான கடல் மார்க்க வான் மார்க்க பயணங்கள் உயிராபத்து மிக்கவையாக மாற்றப்பட்டிருந்தது. இப்போது வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரை மக்கள் தரைவழியாகப் பயணம் செய்யக்கூடிய ஏதுநிலை தோன்றுவது போல் தெரிகிறது.
இந்தப் பாதையூடான பயணத்தைத் தொடர வேண்டுமென்பதற்காகவும் அதனைத் தடுப்பதற்காகவும் போரில் ஈடுபட்டிருந்த இந்த நாட்டு இளைஞர்களின் இரத்தத்தால் சிவந்து போயிருக்கும் அந்த ஏ-9 வீதியும் நவீன விரைவூர்திப் பாதைக்களுக்கான வலையமைப்புக்கள் கொண்டு வரப்படுமா என்பதை இச்சபையில் வினவ விரும்புகின்றேன். மேலும் ஏ-9 பாதை திறக்கப்படுவதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து இலகுவாகும். பொருட்கள் தாராளமாக எடுத்துச் செல்லப்பட வழிபிறப்பது மாத்திரமல்ல யாழ் விவசாய கடல்வள உற்பத்திப் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பாதையூடாக அனைவரும் எவ்வித தடங்கல் தாமதங்கள் இல்லாமல் போய்வரக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதில்லாமல் சட்டவிரோத பண அறவீடுகளையும் பயணிகளின் போக்குவரத்துக் குந்தகம் ஏற்படுத்தும் நுழைவாயில்களையும் கொண்டிருக்குமாயின் பொதுமக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதாகவே இருக்கும்.
இதேவேளை பெற்றோலியத்தின் இறக்குமதியும் வழங்கலும் தாராள மயப்படுத்தப்பட்ட தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே போர்ச் சூழல் நிலவிய காலப் பகுதியில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்களால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர். என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்ப் பிரதேசங்களில் பெற்றோலியப் பொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டிய வர்த்தகர்களின் காலம் மீண்டும் வந்துவிடக்கூடாது. பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதியை தனியார் துறைக்குத் திறந்துவிடுவதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் பெருகுமானால் அது வரவேற்கக்கூடியதாய் இருக்கும். மறுதலையாக ஆட்குறைப்பு இது வழிவகுக்குமாயின் சங்கடமான நிலைமைகளே தோன்றக்கூடும்.
போர்ச்சூழல் பாதிப்புக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டு மெனவும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலைக்காகவும் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காகவும் வேiவாய்ப்பு நட்டஈடு போன்றவற்றிக்காகவும் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை மக்களுக்காகப் பெற்றுக் கொடுத்த போது சலுகைகளைக் கோருகிறோம் எனச்சிலர் குற்றச்சாட்டினார். அற்ப சொற்ப சலுகைகளுக்காக இன உணர்வை மலினப்படுத்துவதாக சுயலாப அரசியல் நோக்கில் சேறு பூசினர்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இந்தச் சபையில் இப்போது உரையாற்றிய பலரும் நிவாரணங்களுக்காகவும் நட்டஈடுகளுக்காகவுமே குரல் கொடுத்துள்ளனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கதகும். இது சுயலாப அரசியலாக இருந்தாலும் வரவேற்கத்தக்கதே.
வடக்கு – கிழக்குக்கு வெளியே நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தல்களின் முடிவுகள் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு அளிப்பதாக இருக்கிறது. இதனை இங்கு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அதேபோன்று மக்கள் அபிப்பிரயாத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வடக்கு – கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்த்ப்பட்டிருக்குமாயின் அது மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும். வடக்கு – கிழக்கின் உள்@ராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பைப் பின்தள்ளி வைப்பதில் மக்களின் வாக்குகள் மூலமாக இந்தச் சபைக்கு வந்ததாகக் கூறிக்கொள்பவர்களே முட்டுக் கட்டை போட்டுவது மிகவும் கவலையளிப்பதாகும்.
இறுதியாக ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக்காட்டி எனது உரையை நிறைவு செய்கின்றேன். பொருளாதார அபிவிருத்தியும் அரசியல் ஸ்திரப் பாடும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை. அரசாங்கம் உறுதியான தளம்பலற்றதாக இருக்கும்போது தான் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் இவ்வாறு உறுதியானதாக தளம்பலற்றதாக இருப்பதற்கு தேசியப் பிரச்சினைகளில் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையும் எதிர்காலம் குறித்து தெளிவான குறிக் கோளுடன் கூடிய தொலைநோக்கம் அவசியமானவையாகும். ஆதலால் இன்றுள்ள சூழ்நிலையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது பேச்சுக் களுக்கான பேச்சு என்பன போன்ற விடயங்களுக்காக கால விரயம் செய்யாமல் இன்ப பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறான பேச்சுக்கள் மூலமாகவே தேவையற்ற தடங்கல்களையும் அநாவசிய சந்தேகங்களையும் தவிர்த்துக் கொள்ள வழி பிறக்கும். ஆதலால் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் மக்களின் குரலை பதிவு செய்து எனது இவ்வுரையை நிறைவு செய்கின்றேன் நன்றி. வணக்கம்.
20 மே 2000
Related posts:
|
|