சிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 21st, 2018

மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை  இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம்; எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம் நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

இன்றைய தினம் நீதித்துறையுடன் தொடர்புடைய சில சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் இங்கு விவாதங்கள் நடைபெறுகின்ற நிலையில், அது சார்ந்து எமது மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்ற எமது மக்களின் உணர்வுடனும், உரிமைகளுடனும் தொடர்புள்ள விடயங்கள் குறித்து எனது கருத்துக்களை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். அந்த வகையில், அதற்கான வாய்ப்பினை வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டில் இதுவரையில் தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான் இங்கு தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறுகின்றபோது, நீங்கள் ‘அப்படி எவரும் இல்லை’ எனக் கூறலாம். அது உங்களது அரசியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். அதுவல்ல இங்கு பிரச்சினை. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சுமார் 130 பேர் வரையில் இன்னும் தடுப்பில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாத்திரம் 78 தமிழ் அரசியல் கைதிகள் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவர்களில் வழக்குத் தொடரப் படாதவர்களுக்கு வழக்கு தொடர்வதற்கோ, தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிவுறுத்துவதற்கோ நீங்கள் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் என்ன? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இக் கைதிகளின் பிரச்சினைகளின் தீர்வினை விரைவுபடுத்தும் நோக்கில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு உறுதி காணப்பட்டிருந்த போதிலும், அந்த வழக்குகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவை என்ற வகையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதுவும், முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்ற வகையில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமலும், விசாரணைகளை ஒத்தி வைக்கும் செயற்பாடுகளே தொடர்வதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாது, பல வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதிகள், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும், தண்டனைப் பெற்றவர்களைப் போன்று தொடர்ந்தும் நீண்ட காலம் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் 2 பேர் 22 வருடங்களாகவும், 3 பேர் 18 வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு சிலரது வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இவர்களது வழக்குகள் நடைபெறாதததன் காரணமாக அடுத்த கட்டமாக தங்களுக்கு என்ன நடக்கும் என்பது புரியாமலேயே தாங்கள் நிலை குழம்பிப் போயுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தங்களது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, முடிவுகள் ஏதேனும் வருமா? அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றிய நிலையில் எதுவுமே அறியக் கிடைக்காமல், வாழ் நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க நேரிடுமா? என்ற திக்கற்ற நிலையில் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இடம்பெறுகின்ற பல்வேறு கெடுபிடிகள், சித்திரவதைகள் காரணமாக உள மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அக் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

புலிகள் இயக்கத்திற்கு வாகனங்களைப் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்து 70 வயதுடைய சண்முகநாதன் தேவகன் என்ற முதியவரது வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த வருடம் இவருக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இவர்மீது இன்னுமொரு வழக்கினை தாக்கல் செய்திருந்த நிலையில் நோய்வாய்ப் பட்டிருந்த இவர் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கடந்த 16ஆம் திகதி உயிரிழந்த பரிதாபச் சம்பவமும் நடந்துள்ளது.

ஆதேபோன்று, கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, மருதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்பவரது மனைவி, கணவனின் பிரிவுத் துயரங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், 3 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த சுதாகரின் 10 வயது பெண் குழந்தை தாயும் அற்ற நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபமும் எமது மண்ணில் நடந்தேறியிருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் கொழு;புக்கு வெளியிலுள்ள நீதி மன்றங்கள் பலவற்றிலும்; தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைத் தவணைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சில தினங்கள் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றபோது, ஏனைய கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புபட்ட கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்கின்ற இடையூறுகள், கொடுமைகள் என்பன ஏராளம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலைமைகளில் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கென தனியான ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பன இருந்தன என்றும், தற்போது அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, ஏனைய குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புள்ள கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், மாலைத்தீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மாலைத்தீவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள மூவர் கடந்த 3 வருடங்களாக வெலிக்கடைச் சிறையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்கள் குற்றங்களுடன் தொடர்பு பட்டிருந்தால் அது குறித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, துரித விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல், தாக்கல் செய்யப்பட்ட வழக்ககளும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என கூக்குரலிடும் தென்பகுதி பேரினவாதிகளின் போலி ஆட்டங்களுக்கு பயந்தே அரசு இந்த தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் வீண் காலதாமதங்களை ஏற்படுத்தி வருகின்றது என்றால், அது வேதனைக்குரிய விடயமாகும். வெட்கப்படக் கூடிய விடயமாகும்.

இத்தகைய இனவாதக் குழுக்களின் குரலுக்கு எடுபட்டுப் போனதால்ல் அண்மையில் அம்பாறை மட்டும் திகன போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கதிக்கே இந்த நாடு முழுமையாக ஆட்படக்கூடும் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டுவோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென சுயாதீன ஆணைக்குழுக்களை இந்த அரசு அமைக்க முற்பட்ட காலத்திலேயே நாம் வலியுறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, இந்த நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், மக்கட் தொகைக்கும் ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் என்றும், படைகளிலும், பொலிஸ் துறையிலும் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தோம்.
இந்த விடயங்களை நாம் இந்த நாடு குறித்த தூர நோக்குடைய பார்வையிலேயே வலியுறுத்தியிருந்தோம். அது குறித்து நீங்கள் உரிய அவதானங்களை செலுத்தவில்லை. அதன் விளைவு எத்தகையது என்பதை நாம் அண்மையில் அம்பாறையிலும், கண்டி, திகனயிலும் காணவில்லையா? என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

இத்தகைய சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர், அவர் செய்தார், இவர் செய்தார், நான் செய்யவில்லை, அவர் செய்யவில்லை என்றெல்லாம் கருத்து தெரிவித்துக் கொண்டு திரிவதில் எவ்விதமான பயனும் இல்லை. நாம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததைப் போன்று இந்த நாட்டில் ஏற்பாடுகள் இருந்திருப்பின் இன்று அம்பாறை சம்பவம், கண்டி, திகன சம்பவம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லாதிருந்திருக்கும் என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

வெறுப்புணர்வுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகளுக்கு எதிரான தடைச் சட்டமூலமொன்று கொண்டு வரப்படுவதாக இருந்தது. அது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என அதற்கு எதிராக செயற்பட்டவர்கள், அவர்கள் கூறிய அந்தக் கருத்துச் சுதந்திரத்தால் அண்மையில் அம்பாறையிலும், திகனயிலும் இழக்கப்பட்ட மனித உயிர்களுக்கும், எரிந்து முடிந்த சொத்துக்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் இலங்கையின் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையின் வெளிப்பாடு என அமெரிக்காவின் முன்னாள் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தைக் கையாண்ட தூதுவர் ஸ்ரீபன் ரப் கூறியிருக்கின்றார்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!
நாங்கள் இயற்றுகின்ற சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும். இந்த நாடு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது. எனவே பகைமைகள் மறுக்கப்பட வேண்டும். இனங்களிடையே சந்தேகங்கள் அகற்றப்பட்டு, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும். அதனை நோக்கிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை தகர்க்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான சட்ட மூலங்கள் வகுக்கப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்படுவதில் இருந்துதான் இந்த நாடு, இந்த நாட்டு மக்களது நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்கின்ற பாடங்கள் இந்த நாட்டில் செயற்பாட்டு ரீதியில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை தொடர்பிலும் எமக்கு கேள்விகள் இல்லாமல் இல்லை. அதாவது, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு, வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவர் சட்டத்தரணியின் உதவியை நாட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மொழியில் மாத்திரமே பரிச்சயம் கொண்ட ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுமிடத்து, தமிழ் மொழியில் பரிச்சயமற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் வாக்குமூலங்கள் பதியப்படுகின்ற நிலைமைகள் எமது நாட்டில் இல்லாமல் இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலங்கள் எந்தளவிற்கு உண்மைத் தன்மையுடையதாக, சரியானதாக இருக்குமென்பது கேள்விக்குறியாகும்.
பொலிஸாருக்கு முதலில் வழங்கும் வாக்குமூலமே அநேகமான வழக்குகளில் முக்கிய சாட்சியாக மாற்றம் பெறுகின்ற நிலைமைகள் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், குற்றம் செய்யாதவர்கள்கூட குற்றவாளியாக்கப்படுகின்ற நிலைமைகள் உருவாகக் கூடும் என்பதால், இது தொடர்பில் மீள் பரிசீலனை அவசியமாகின்றது என்ற விடயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், இந்த நாட்டில் இருக்கின்ற குழப்பங்களையே இன்னும் தீர்க்க முடியாதுள்ள நிலையில், மேலும், மேலும் குழப்பங்களை எற்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல், இந்த நாட்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, இந்த நாட்டை சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கியமான அரசியல் நோக்கி நகர்த்துகின்ற வகையிலான, எமது நாட்டுக்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, சிந்தித்து, செயற்படுமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.
நன்றி.

Related posts:

தேசிய நல்லிணக்க  என்றும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா ...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலா...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...