சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, May 4th, 2017

இன்று உலகில் செயற்பட்டு வருகின்ற பாரிய பரிமாணத்தைக் கொண்ட நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் பலவும் ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு துறை சார்ந்த தொழில் முயற்சிகளாக இருந்திருப்பதைக் காணலாம். அந்த வகையிலேயே எமது நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களின் நிலையும் காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் பல்துறை சார்ந்த ஒரு தள உற்பத்தியின் முன்னணி நிறுவனங்கள் பல இல்லாவிடத்தும், ஒரு துறை சார்ந்த உற்பத்திகளின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிறுவனங்கள் பல தொழிலக ரீதியாகவும், குடிசைக் கைத்தொழில் ரீதியாகவும், கூட்டுறவு ரீதியாகவும் பரவலான நிலையில் காணப்படுகின்றன.

எமது நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பொருளாதார நிலையையும், எமது எதிர்கால பொருளாதார நிலைமையையும் அவதானத்தில் கொள்கின்றபோது, இவ்வாறான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் ஊக்குவிப்பு என்பது இன்றியமையாதது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்லாது, தரமற்ற மற்றும் அதிகளவிலான கழிவுகளைக் கொண்ட எமது நாட்டின் இயற்கை வளங்களுக்கு பெரிதும் சவாலான உற்பத்திகளின் இறக்குமதிகளை தடுப்பதற்கும் இந்த ஊக்குவிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இருப்பினும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி சார்ந்து விதிக்கப்படுகின்ற வரிகள் மற்றும் பதிவுக் கட்டணத் தொகைகள் என்பவற்றின் முன்பாக இன்று இந்த தொழில் முயற்சியாளர்கள் அத்துறைகளைக் கைவிட்டு ஒதுங்குகின்ற ஒரு நிலைமை காணப்படுவதாகவே அன்றாடம் அது சார்ந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இத்துறையினை மேலும் ஊக்குவித்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில், வரி விதிப்புகள், கட்டண அறவீடுகள், இலகு அனுமதிகள் மற்றும் கடன் வசதிகள், மூலப் பொருட்களுக்கான இலகு ஏற்பாடுகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, அத்துறைகளை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிந்துவிடக் கூடிய நிலைமை ஏற்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவது இயல்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (04) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியை எடுத்துக் கொண்டால், எமது யாழ் குடாநாட்டிலே பாரிய தொழில் முயற்சியாக காண்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனம்  காணப்பட்டது. இது 1990ஆம் ஆண்டிலே மூடப்பட்டு விட்டது.

அக் காலப்பகுதியில் – அதாவது 1980களின் முற்பகுதியில் யாழ் குடாநாட்டிலே பனிக் கட்டி தொழிற்சாலைகள், கடல் உணவுகள் பதனிடும் தொழிற்சாலை, படகு கட்டும் தொழிற்சாலை, கூரைத் தகடு உற்பத்தி தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, வடிசாலைகள், மின் தறி தொழிற்சாலைகள், உப்பளங்கள், இரசாயனத் தொழிற்சாலை, கால் நடைகளுக்கான தீவன தொழிற்சாலைகள், பனம்பொருள் உறபத்தி தொழிற்சாலைகள், சலவைக் கட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கடதாசி தொழிற்சாலை, ஆடைக் கைத்தொழிற்சாலைகள் போன்ற 3,121 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், இவற்றில் சுமார்  18,553 பேர் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாது, 1980ஆம் ஆண்டு வரையில் எமது நாட்டிலே சிறந்த மனித வள வெளிப்பாடுகளைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்ந்திருந்தது.

அதேபோன்று, மொத்த தேசிய உற்பத்தியில் 7 வீதம் கோழியினையும், 10 வீதம் மாடுகளையும், 20 வீதம் ஆடுகளையும், 60 வீதம் செம்மறி ஆடுகளையும் மற்றும் 20 வீதம் மீனையும், 57 வீதம் கருவாட்டையும் உற்பத்தி செய்து தேசிய உற்பத்தியில் பங்களிப்பைச் செய்திருந்தது மட்டுமல்லாமல் இதன் மூலமாக சுமார் 24,839 பேர் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். இதைத்தவிர, சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்துறை சார்ந்து ஈடுபட்டிருந்தன.

இவ்வாறிருந்த யாழ் குடாநாட்டின் இன்றைய நிலை மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. தவறான அரசியல் வழிநடத்தல்கள் காரணமாக இன்று இருக்கின்ற மனித வளமும் வேலை வாய்ப்புகளுக்காகவும், சொந்த காணி, நிலங்களுக்காகவும், காணாமற் போனவர்களைக் கண்டறிவதற்குமாக என நடுத் தெருக்களில் முடக்கப்பட்டிருப்பதையே காணுகின்றோம்.

தற்போதும் எமது பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான வளங்களும், வாய்ப்புகளும் இருந்தும்கூட அவற்றைப் பயன்படுத்தி தொழில் முயற்சிகளில் ஈடுபட முயல்கின்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே வரிகள், கட்டண அறவீடுகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் இருக்க வேண்டுமே அன்றி, அந்த முயற்சிகளை அடியோடு இல்லாமற் செய்கின்ற வகையில் அமையக்கூடாது என்பதே எனது ஏதிர்பார்ப்பாகும். இந்த ஏற்பாடுகள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்போது, இத்துறைகள் சார்ந்த வளர்ச்சிகளின் மூலமாக எமது பொருளாதாரத்திற்கு இயன்றளவு ஊக்கத்தைப் பெற முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

எமது நாட்டில் உற்பத்தித்துறைகள் ஊக்குவிக்கப்பட்டு, அவை பரவலாக கட்டியெழுப்பப்படுவதன் ஊடாகவே எமது நாட்டை பொருளதார ரீதியிலும் பலமிக்கதாகக் கட்டியெழுப்ப முடியும். அந்த வகையில் எமக்கான உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு இன்னுமொரு முக்கியத் தடையாக இருப்பது, தரம் குறைந்த பொருட்களின் இறக்கமதிக் குப்பைகளாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தகைய பொருட்களின் இறக்குமதியிலிருந்து தங்களது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு நாடுகள் பல்வேறு வகையான சட்ட விதிகளை அமுல்படுத்தி வருகின்றன. எனினும், இந்த பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீள்வது மிகவும் இலகுவான காரியமல்ல என்பது கிழக்கு ஆபிரிக்க நாடுகளின் மூலமாகத் தெளிவாகின்றது.

தற்போதைய நிலையில் புருண்டி, கென்யா, ருவன்டா, டன்சானியா, உகண்டா போன்ற நாடுகள் இத்தகைய தரங்குறைந்த இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த வேலைத் திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று இந்தியாவும் தற்போது இது தொடர்பில் தனது அவதானத்தைச் செலுத்த முன்வந்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஒரு நாட்டின் பொருட்களுக்கான தடையை நடைமுறைப்படுத்துவது கடினம் எனக் கூறப்பட்டாலும், எமது நாட்டுக்கு எமது நாட்டினது மக்களை,   கைத்தொழிற்துறையை, சுற்றுச் சூழலை, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய உரிமை இருக்கின்றது என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்போது இவ்வாறான பொருட்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் ‘உற்பத்திப் பாதுகாப்பு’ எனும் கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், உரிய தரமின்றிய பொருட்கள் பாரியளவில் இறக்குமதியாகின்ற ஒரு பாரிய சந்தையாக மாறிவிட்டுள்ள ஒரு நிலையையே காணக்கூடியதாக உள்ளது. குறைந்த விலையில் கைக்கடிகாரங்;கள், பாதணிகள், கையடக்கத் தொலைப்பேசிகள் என்பன தாராளமாகக் கிடைக்கின்றன. மேலும், வாகன உதிரிப்பாகங்கள், போலியான பெயின்ட் வகைகள், போலியான மின்னியல் மென் பொருட்கள், போலியான மின் குமிழ்கள் போன்ற பல்வேறு பொருட்கள் மலிந்துள்ளன.

அதேபோன்று, உரிய தரத்தைக் கொண்டிராத கணினி இயந்திரங்கள், கணினி உதிரிப்பாகங்கள் என்பன நாடளாவிய ரீதியில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றைக் கொள்வனவு செய்கின்றவர்களது அது தொடர்பிலான அறிவு குறைபாடுகள் காரணமாக இவ்வாறான பொருட்களளின் விற்பனையானது மிகவும் எளிதாக இருப்பதாகவும், ஒரு குறுகிய வட்டத்தினரின் அதிக இலாபம் கருதப்பட்டே இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த பாதணி கைத்தொழிற்துறையொன்று உள்ளது. இத்துறையில் ஏற்றுமதியுடன் தொடர்புள்ள 10 பாரியளவிலான பாதணி உற்பத்தி தொழிற்சாலைகளும், 30 சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும், குடிசைக் கைத்தொழில் என்ற ரீதியில் பல தொழில் முயற்சிகளும் இருக்கின்றன. என்றாலும், கொரியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து தனித்தனியாக பாதணியினது பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, எமது நாட்டில் வைத்து அவை பொருத்தப்பட்டு மலிவான விலைகளில் அவை விற்கப்பட்டு வருகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.

இலங்கையின் தோட் பொருட்கள், பாதணி என்பன இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளை முக்கிய ஏற்றுமதிச் சந்தை இலக்குகளாகக் கொண்ட ஒரு துறையாகும். இதனது கொள்ளளவு வருடத்திற்கு உற்பத்தி ஜோடிகள் 15 மில்லியன் என்ற பாரிய தொழிற்துறையாக எம்மிடையே இருக்கின்ற போதிலும், தரம் குன்றிய இறக்குமதி பாதணிகளுடன் அது இன்று போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கின்றபோது, ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டின் தேவையையே அது உணர்த்துகின்றது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

தோட் பொருட்கள் மற்றும் பாதணி உற்பத்தித் துறையானது எமது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஒரு முக்கியத் தீர்வாகும். பாரிய தொழிற்சாலைகள் மூலமாக குத்தகை அடிப்படையில் கேள்விகள் பெறப்பட்டு, பாதணிகளை உற்பத்தி செய்கின்ற உப குத்தகை முறைமையொன்று எமது நாட்டிலே காணப்படுகின்றது. எமது நாட்டிலே இத்துறை சார்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட உப குத்தகைக்காரர்கள் இருக்கின்றனர். ஒரு உப குத்தகைக்காரரிடம் குறைந்த பட்சமாக 5 பேராவது தொழில் புரிகின்றனர். மேலும், இத்துறையானது எமது நாட்டின் பாதணித் தேவையின் நூற்றுக்கு 70 சத வீதத்தைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதி மூலமாக பாரியளவிலான வருமானத்தையும் ஈட்டுகின்றது.எனினும், தரம் குன்றிய இறக்குமதிகளின் காரணமாக இன்று இத்துறை சார்ந்தவர்களது நிலை மிகவும் பரிதாபகரமாகவே இருக்கின்றது.

இவ்வாறான தரம் குன்றிய பொருட்களின் பாவனை காரணமாக பல்வேறு பாதிப்புகள் அதனைப் பயன்படுத்தகின்றவர்களுக்கு ஏற்படுகின்றதாகவும் அறியப்பட்டுள்ளது. எனவே, இவை தொடர்பில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது அயலக நாடான இந்தியா, அந்த நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய உற்பத்திகள் எனக் கருதிய பல இறக்குமதிப் பொருட்களை கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடைசெய்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், எமது நாட்டினது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேலும், மேலும் ஊக்குவித்து, அதனை வளர்த்தெடுக்கும் வகையில் இந்த அரசாங்கத்தின் அத் துறை சார்ந்த அனைத்து செயற்பாடுகளினதும் ஒரே நோக்கமாக அமைய வேண்டும். அது தவிர, இத் துறைகள் சார்ந்த ஈடுபாட்டினை கொண்டுள்ளவர்கள் இத் துறைகளை வெறுத்து, ஒதுங்குகின்ற நிலையினை ஒருபோதும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது - நாடாளுமன்றில...
மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...

அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போ...
வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நா...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....