சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே! குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் அங்கே தவித்திருக்க, தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும், சொகுசு வாகனங்களும் கேட்டு பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறிவிட முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்றைய தினம் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எனது கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கியமை குறித்து முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களால் எட்ட நின்று பார்வையார்களாகப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்திவிட்டு செல்லக்கூடிய வெறும் வரைபுகளாக மாத்திரமே இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டங்கள் காணப்படுகின்றனவே தவிர, அவற்றின் மூலமாகக் கூறப்படுகின்ற விடயங்கள் நடைமுறை ரீதியில் எந்தளவிற்கு சாத்தியம் என்பது வெறும் பூச்சியமாக இருந்து வருவதையே எமது மக்களால் தொடர்ந்தும் கணிக்கப்பெற்று வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பாக, கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட வரைபிலே ‘நல்லிணக்கம்’ என்ற தலைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு சார்ந்து கிட்டத்தட்ட 20 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த 20 விடயங்களில் கடந்த ஆண்டு, அல்லது இதுவரையில் எந்தெந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்வி எமது மக்களிடையே எழுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செங்கல் மற்றும் ஓடுகள் கொண்ட 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. அப்படி ஏதேனும் வீடுகள் அமைக்கப்பட்டனவா என்பது பற்றி எமது மக்களுக்குத் தெரியாது.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் ‘நல்லிணக்கம்’ எனும் தலைப்பிருந்து ‘சமூகப் பராமரிப்பு முன்னெடுப்புகள்’ என்ற தலைப்புக்கு மாற்றி, 2019ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 15 ஆயிரம் செங்கற்களினாலான வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்காக 4,500 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக மேலும் 5,500 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டத்தினை மேற்கொள்வதற்கென திறைசேரியில் நிதி இல்லை என்றே கடந்த பல மாதங்களாகக் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற அந்த 4,500 மில்லியன் ரூபா எங்கே இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.
அதே நேரம் இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டள்ள ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ – ‘சிஹின மாளிகா’ – கனவு மாளிகை போன்ற வீடமைப்புக் கடன் திட்டத்தை போல், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாகவோ அல்லது வேறு அரச நிறுவனங்களின் ஊடாகவோ வீடமைப்பு கடன் திட்டத்தை இரட்டிப்பாக வழங்க கூடிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதும் எமது மக்களுக்கு வசதியாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நுண் கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கின்ற பெண்களை அப்பிரச்சினையிலிருந்து மீட்டெடுப்பது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்ட வரைபில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. கிராமியக் கூட்டுறவு வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக இவர்களை கடன் பொறியிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டம் ஒன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் முன்னோடியாக ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அது எந்தளவிற்கு சாத்திமானது என்பதற்கு எவ்விதமான பெறுபேறுகளையும் மேற்;படி கடன் சுமைகளுக்கு ஆளானோர் மத்தியில் காணக்கூடியதாக இல்லாத நிலையில், இம்முறையும் படு கடன் நிவாரணத் திட்டமானது கூட்டுறவு, கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி நுண் கடன் சுமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் கடன்களை வழங்கி அதற்கான நிவாரணங்களை வழங்குவது என்பது ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாகவே அமையும் என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.
மத்திய வங்கியின் கண்காணிப்பு ஏற்;பாடுகள் வலுவுள்ளதாக அமைந்திருப்பின் இத்தகைய நிதி நிறுவனங்களால் இம் மக்கள் இந்தளவு பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பெப்லோ பொகொஸ்லெவ்ஸ்கி (Pயடிடழடீழாழளடயளமல) ‘அரசாங்கத்தினால் கடுமையானதும், உறுதியானதுமான கட்டளை கட்டமைப்பொன்று உருவாக்கப்படும் வரையில் நுண் கடன்களை மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிப்பொன்றினை இலங்கை அரசு விடுக்க வேண்டுமென’ குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
ஐக்கிய நாடுகள் கவுன்ஸிலின் 40வது அமர்வில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அதிக வட்டியுடன் கூடிய நுண் கடன்களை வலுவிழக்கச் செய்து, தாம் இதுவரை செலுத்திய நிதியினை இழப்பீடு என்ற வகையில் கோருவதற்கு பாதிக்கப்பட்டோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரச வங்கிகள் தமது நிவாரண ரீதியிலான கடன் வழங்கல்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிய வருகின்றது.
எனவே, இந்த நுண் கடன் பிரச்சினைக்கு இதுவொரு சிறந்த தீர்வாக அமையுமென்றே கருதுகின்றேன். வேண்டுமானால் மேற்படி நிதி நிறுவனங்கள் பாதிப்படையாத வகையில் நியாயமான ஒரு பொறிமுறையினை ஏற்படுத்தவும் முடியும்.
குறிப்பாக நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகைகளுக்கு எமது மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு நியாயமான வட்டியினை உறுதி செய்து, கடனுடன் சேர்த்து அதனை அறவிட்டுக் கொள்வதற்கும், அதனை மீறிய வகையில் அறவீடுகள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், அத்தொகையினை மீள பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க இயலும்.
இதனை கடன் செலுத்தியோருக்கும், செலுத்த இருப்போருக்குமான ஏற்பாடாக முன்னெடுக்க வேண்டும். அதேநேரம், கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை அரசு ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாடும் அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அடுத்ததாக நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உணவுப் பதனிடும் நிலையங்கள் அமைப்பதாகக் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அது எந்தவகையில் சாத்தியமாயிற்று என்பது தெரியவில்லை.
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி கைத்தொழிற் பேட்டைக்கு செல்கின்ற பாதை இன்னமும் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று ஆரம்பிக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
ஆனால், இம்முறையும், மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைக்கப்பட்ட 10 துணைப் பொருளாதார நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உருவாக்கப்படும் என்றும், மேலும், காங்கேன்துறை, மாந்தைக் கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கிண்ணியா, சம்மாந்துறை, திருகோணமலையில் கைத்தொழிற் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வரவு – செலவுத் திட்ட வரைபில், யுத்த மற்றும் இன முறுகலினால் பாதிக்கப்பட்ட கணவன்மார்களை இழந்த பெண்களுக்கும,; முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுமெனக் குறிப்பிட்டிருந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களில் வாழ்வாதார வசதிகள் இல்லாதோருக்கு அவர்களது திறன்களின் அடிப்படையில் தேசிய தொழில்சார் தகைமை சான்றிதழ்கள் வழங்கப்படுமென்றும், இதற்கென நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
மேலும், குறைந்தபட்சம் 5 முன்னாள் இயக்க உறுப்பினர்களை தொழிலுக்காகச் சேர்த்துக் கொள்கின்ற தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 50 வீதமான ஊதிய மானியம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இவை எல்லாம் எற்தளவிற்கு சாத்தியமான செயற்பாடுகளாக சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன? என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
தாங்கள் கூறித்தான் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு தொடர்பில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன எனக் கூறி இந்த ஆட்சியை கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொண்டு வந்த தமிழ்த் தரப்பினர், உள்ளடக்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்பட்டனவா? என்பது தொடர்பில் அக்கறையின்றி, மௌனமாகவே இருந்துவிட்டு, இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தையும் நம்புகின்றோம் எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்க்கின்றபோது வரவு – செலவுத் திட்ட வரைபுகளும், இந்தத் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளும் எமது மக்களைப் பொறுத்தவரையில் ஒன்றே என்றுதான் தெரிய வருகின்றது. அதாவது வெறும் வாய்ப் பேச்சு மாத்திரம்தான். அதுவன்றி செயலில் ஒன்றுமே இல்லை.
அதேநேரம், இம் முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த ஊதியத்திற்கென 50 ரூபா ஒதுக்கப்படுமென கூறப்பட்டு வந்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களது ஊதியப் பிரச்சினைக்கு தேயிலை சபையுடன் கலந்துரையாடி உடனடித் தீர்வு எட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வேறு எவ்விதமான குறிப்புகளும் அது தொடர்பில் இல்லை.
அத்துடன், ‘பனை நிதியம்’ என்றொரு விடயம் இம்முறை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கென 2,500 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பங்களிப்புச் செய்யுமாறு நலன்விரும்பிகள், கொடை வள்ளல்கள் மற்றும் விஷேடமாக புலம்பெயர் மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச்செயற்பாடானது நிலைபேற்றைக் கொண்டதா? என்றொரு சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. இத்தகையதொரு நிதியம் திறைசேரியினால் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், இதற்கு பங்களிப்பு வழங்குவதற்கென எவரும் முன்வருவார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
ஏற்கனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வீடமைப்புத் திட்டத்திற்கென ஒதுக்கப்படதாகக் கூறப்பட்ட நிதியே இல்லை என திறைசேரி கூறியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது ஒரு கேள்விக்குறியான நிலைமையினையே கொண்டிருக்கிறது என்பதால், இத்திட்டத்தின் கீழான ஏற்பாடுகள் தொடர்பில் நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
அதேநேரம், ‘பனை நிதியம்’ என்கின்ற பெயர் எமது பகுதியினை அடையாளப்படுத்துவதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், பனை வளத் தொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துகின்ற திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், இத்தகைய ஏற்பாடுகள் மாகாண ரீதியில் நிர்வகிக்கப்படக்கூடிய நிலைமைகளைக் கொண்டிருப்பின், அவற்றுக்கான பங்களிப்புகளை சமூகம் சார்ந்த பலரிடமும் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அடுத்து, நல்லிணக்கம் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பிரஸ்தாபிக்கப்பட்டு, அதற்கென பல்வேறு தொகையிலான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த செயற்திட்டங்களின் ஊடாக இன்று இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது எந்தளவிற்கு வலுப்பெற்றுள்ளது? என்பது கேள்விக்குறியேயாகும்.
அந்தவகையில் இங்கே பிரதமரின் கீழ் இயங்கும் நல்லினக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தின் மூலமாக விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம், கலை மற்றும் கலாசாரத்தின் ஊடான சமாதானத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் எனக் கூறப்பட்டு, மேலுமொரு தொகை நிதி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், வடக்கு மாகாணத்தில் நிலைபேரான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்துவதற்குமாக ‘கடந்த காலத்தை மறப்போம் – எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ என்றொரு திட்டம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பாதிப்புகள் தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகள் கடந்த கால அனர்த்த நிகழ்வுகள் மீள ஏற்படாதிருக்கும் வகையிலும், பாதிப்புகளுக்கு உட்பட்டோருக்கு நியாயம் – நீதி வழங்கப்பட வேண்டியதற்காகவும் முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அப் பரிந்துரைகளில் ஒன்றாவது இதுவரையில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், கடந்தகால இன முரண்பாடுகள் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், யுத்தம் நிக்ழ்ந்து கொண்டிருந்தபோதும், அதன் இறுதியிலும் யுத்த களம் தவிர்ந்து நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து உண்மை நிலைமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நியாயம் மற்றும் பரிகாரங்கள் காணப்பட வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம்.
இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல், ‘கடந்த காலத்தை மறப்போம்’ என்ற நிலை ஏற்படுகின்ற நிலையில், அண்மையில் தென்பகுதியில் ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
‘எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ என்னும் திட்டத்திற்கு எமது மக்களும் தங்களது பங்களிப்புகளை தாராளமாகவே வழங்க முன்வார்கள். ஆனால், அதற்கு முன்பதாக எமது மக்கள் ஏனைய சமவுரிமைகள் பெற்ற மக்களாகத் திகழ வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதி, நியாயங்கள் வழங்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் அரசியல் ரீதியில் அவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்ற அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
வடக்கு என்பது தென்பகுதியின் கொள்ளைப் புறமல்ல என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த நாடு போகின்ற போக்கினைப் பார்த்தால், தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைப் பார்த்தால், வடக்கு இந்த நாட்டின் எல்லைப்புறமாக ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகமே எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேலும் ‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ என்கின்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற கேள்வி இருந்து வருகின்றது.
வங்கிகளால் இத் திட்டங்கள் தொடர்பில் பலர் புறந்தள்ளப்பட்டு வருகின்ற ஒரு நிலையினையே எமது பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. வங்கிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் நலன் கருதிய திட்டங்களிலேயே அவை மும்முரமாகச் செயற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதைவிடுத்து மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவுமாறு வங்கிகளின் நலனிலிருந்து வெகுவாக ஒதுங்கிய திட்டங்களுக்காக வற்புறுத்துவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயம் என்றே கருத வேண்டியுள்ளது.
மேலும் இங்கே பல்வேறு திட்டங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. கம்பரெலிய – நங்வமு சிறி லங்கா – ரண் அஸ்வென்ன – ரெக்கவர்ண – சிகின மாளிகா – சிங்கித்தி பாசல – சுவசெறிய – சுகிந்த புரவர – பிரஜா ஜல அபிமான – சஹசர – ஹரித்த உத்யான – ரண் மாவத் என நிறையவே திட்டங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், மேற்படி சிங்கள சொற் பதங்களின் அர்த்தத்தை தமிழிலும் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு அத்திட்டங்கள் பற்றி உணர்வுகள் ஏற்படும்.
‘பனை நிதியம்’ என்ற திட்டத்திற்கு நீங்கள் ‘தல் அரமுதல’ என சிங்களத்திலே அர்த்தம் கொடுத்திருப்பதைப் போல் மேற்படித் திட்டங்களக்கு தமிழில் அர்த்தத்தை இணைத்து வெளியிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தேசிய நல்லிணக்கம் கருதி பல மில்லியன்களை ஒதுக்குவதாகக் கூறுகின்ற நிலையில், இந்த சிங்களப் பெயர்களுக்கு தமிழில் அர்த்தததை; வெளியிடுவதற்கு எந்தச் செலவுகளும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம், தேசிய நல்லிணக்கத்திற்கு இது வலுவுள்ளதொரு ஏற்பாடாக அமையும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!….
தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே! குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் அங்கே தவித்திருக்க, தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும், சொகுசு வாகனங்களும் கேட்டு பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறிவிட முடியுமா?
அரசியல் தீர்விற்கு ஒத்துவரவில்லை என்று எதிர்க்கட்சி மீது பழி சுமத்திவரும் இவர்கள், தமக்கு கிடைத்திருக்கும் சலுகைகளுக்கு அதே எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கியதும், அதற்கு மட்டும் யாரும் அறியாமல் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்து வருவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறி விட முடியுமா?
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும், அன்றாடத்தேவைகளையும், பெற்றுக்கொடுக்க மறந்தவர்கள், அதற்காக கடந்த காலங்களைப்போல் அண்மையிலும் கனிந்து வந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மறுத்தவர்கள், இலங்கையில் பெய்கின்ற மழைக்கு ஜெனீவாவில் குடை பிடிக்க போகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நோக்கி எமது மக்கள் செத்து செத்து ஓடிக்கொண்டிருந்த அவலம் கண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெளியுலகம் வந்து எமக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று யாருக்கு இவர்கள் புலுடா விடுகிறார்கள்? அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். தேவையென்றால் ஒரு மருத்துவிச்சியின் துணைபோல் ஐ.நா அல்ல எந்த நாடும் வந்து எமக்கு பங்களிக்கட்டும்.
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவது போல், பேரம் பேசி எந்த தீர்வையும் பெறவல்ல அரசியல் பலத்தை தம் வசம் வைத்துக்கொண்டு உலகெல்லாம் இவர்கள் சுற்றி வர நினைப்பது ஏன் என்று நான் கேட்கின்றேன்.
மேலும், விவசாய மக்கள் மற்றும் கடல் தொழிலாளர்கள் சார்ந்து பெரிதாக அவதானங்கள் செலுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. அதேநேரம் தனியார்த்துறை பணியாளர்கள் தொடர்பிலும் அக்கறை இம்முறை செலுத்தப்படவில்லை.
அதேபோன்று மாற்று வலுவுள்ளோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மத வழிபாட்டுத் தலங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, கட்டுமானப் பொருள் இறக்குமதிக்கான செஸ் வரி குறைப்பு, முதியோருக்கான ஓய்வூதியத் திட்டம், மாணவர்களுக்கான வெளிநாட்டுப் புலமைப்பரிசில், மலசல கூடங்கள் அமைப்பு போன்ற திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும் அவற்றினை செயற்படுத்துவதில் எதிர்நோக்கப்பட வேண்டிய நிதிக்கு என்ன வழி என்பது தெரியவில்லை.
அதேநேரம், இம்முறையும் பாதுகாப்புக்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான கடந்த காலங்கள் அடங்கலான இக்காலகட்டங்கள் பகை மறுப்புக் காலங்களாக உருவாகியிருக்க வேண்டியவை. எனவே, அவ்வாறானதொரு நிலைமையினை ஏற்படுத்தும் முகமாக அதிக நிதியினை யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாராங்களை உயர்த்துவதற்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு எனப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அத்தகையதொரு நிலையினை முதலில் ஏற்படுத்த முனையுங்கள் என்ற கோரக்கையினையும் இங்கு முன் வைக்க விரும்புகின்றேன்.
கடந்த வருடங்களில் கடன் வட்டிகளை செலுத்துவதற்கு மாத்திரம் 85,200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், அது இவ்வருடம் 91,300 கோடி ரூபா வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கடன் தவணையானது 30,700 கோடி ரூபாவாக இருந்து இந்த வருடம் அது 66,500 கோடி ரூபாவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது ஒரு வருடத்தில் கடன் தவணையானது நூற்றுக்கு 217 வீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் மக்களுக்கு மிக அதிகமான வரிச் சுமை தொடர்வதையும் அவதானிக்க முடிகின்றது. கடந்த வருடம் ஒர் இலட்சத்து எழபத்தொரு ஆயிரத்து இருநூறு கோடி ரூபா என்ற வகையில் எதிர்பார்க்கப்பட்ட முழு வருமான வரித் தொகையானது இந்த வருடம் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து எழுநூறு கோடி ரூபா என எதிர்பார்ககப்படுகின்றது.
எனவே, நாடளாவிய ரீதியில் மக்களது சுமைகள் நீக்கப்படக்கூடிய வகையிலான பொருளாதார ஏற்பாடுகள் அவசியமாகும். ஒரு பக்கத்தில் கவர்ச்சியான விடயங்களைக்காட்டிவிட்டு, மறுபக்கத்தில் அதிகமான சுமைகளை மக்கள் மீது திணிப்பதால் மக்கள் எவ்விதமான நன்மைக்கும் ஆளாகப் போவதில்லை என்பதைக் குறிப்பிட்டு, விடைபெறுகின்றேன்.
Related posts:
|
|