கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020

கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை ஒருபோதும் எம்மால் வெற்றி கொள்ள முடியாது.

எனவே, தொற்றாளர்களை மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவதற்கும், உரிய சிகிச்சைகளின்பால் அவர்களை உட்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியமாகும்.

அதேநேரம் இத் தொற்றுக்கு உள்ளாவோர் அச்சம் கொள்வதற்கு, மறைந்து வாழ்வதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நாட்டை மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் – 19 தொற்று அனர்த்தம் தொடரப்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் கொரோனா தொற்று அனர்த்தம் உணரப்பட்ட காலகட்டத்தில் இருந்து அதனை போதியளவில் கட்டுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் அனைத்து வழிமுறைகளையும் எடுத்திருந்தது. எனினும், இடைநடுவில் தொற்று உள்நாட்டு மக்களிடமிருந்து உருவாக்கம் பெறாத நிலையில், அது பற்றிய விழிப்புணர்வு என்பது எமது மக்களிடமிருந்து ஓரளவு ஒதுங்கியிருந்தாலும், இந்தத் தொற்றின் அபாயம் குறித்து அரசாங்கமும், சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும், பொலிஸாரும் தொடர்ந்து எமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மூலமாக தனது இரண்டாவது அலையை ஆரம்பித்துள்ள கொரோனா, தற்கால நிலையில் மினுவாங்கொடை கொத்தணியையும் தாண்டியதாக நாடளாவிய ரீதியில் துணைக் கொத்தணிகளாக உருவாகி வருகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டு மக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை மிக உன்னதமாக ஏற்று செயற்பட்டு வருகின்ற இந்த அரசு, கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் மிக கடுமையாகவே உழைத்து வருகின்றது. அந்த வகையில் இந்த இரண்டாவது அலையின் சவாலுக்கு முகங் கொடுப்பதற்கான வல்லமை இந்த அரசுக்கு இருக்கின்றது. என்றாலும், இதன்போது பொது மக்களின் அபரிமிதமான ஒத்துழைப்புகளே அவசியமாகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை ஒருபோதும் எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எனவே, தொற்றாளர்களை மனிதாபிமானக் கண் கொண்டு அனுகுவதற்கும், உரிய சிகிச்சைகளின்பால் அவர்களை உட்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியமாகும். அதே நேரம் இத் தொற்றுக்கு உள்ளாவோர் அச்சம் கொள்வதற்கு, மறைந்து வாழ்வதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த தொற்று இப்போதைக்கு இந்த நாட்டை விட்டு விடைபெறும் எனக் கூறுவதற்கில்லை. ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரையிலேயே இருக்கும் என்றும், ஆதலால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்படலாம்’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸில் அண்மையில் தெரிவித்திருப்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, விதிக்கப்பட்டுள்ள சகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் உரிய முறையில் கடைப்பிடிப்பது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நிலையில் 100 கோடி பேருக்கு விநியோகிக்கக் கூடிய அளவக்கு கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை சீனா நிறுவத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இது, எந்தளவு காலத்தை எடுக்கும், எந்தளவு சாத்தியப்பாட்டைக் கொடுக்கும் என்பதெல்லாம் கேள்விக் குறிகளாகும்.

இன்றும்கூட உலக அளவில் கொரோனா தொற்று தொடர்ந்து பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. வல்லரசு எனக் கூறப்படுகின்ற அமெரிக்கா இந்தக் கொரோனா காரணமாக இன்று கொல்லரசாகவே மாறிவிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகளவில் அதிகரித்து வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

உலக அளவில் கொரோன தொற்றாளர்களது எண்ணிக்கையை பார்க்கின்றபோது எமது நாட்டில் அந்த எண்ணிக்கை அளவுக்கு தொற்றாளர்கள் இல்லை என்றாலும், எமது நாட்டின் சுகாதாரம் சார்ந்த வசதிவாய்ப்பு கொள்ளவுக்கு தற்போதுள்ள எண்ணிக்கையினரும் அதிகம் போல் காணப்படுவதாகவே தெரிய வருகின்றது.

இந்தியாவில் தற்போது சுமார் 77 இலட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உட்பட்டுள்ளதுடன், சுமார் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேர் வரையில் பலியாகியும் உள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், இதுவரையில் சுமார் 7 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 ஆயிரத்து 780 பேர் வரையில் பலியாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, வடக்கைப் பொறுத்தவரையில், கொரோனா தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் கடல் வழியாகவும் இருக்கலாம் என்றே கருதப்படுவதால், நாம் சில ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களுடன் எவ்விதமான தொடர்புகளையும் வைத்திருக்கக்கூடாது என எமது கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம். அதுமட்டுமல்லாது, அவர்களுடன் தொடர்புகளை வைக்கக் கூடியதாக சந்தேகிக்கப்படுகின்ற  ஒரு சில கடற்றொழில் முறைமைகளையும் நாம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளோம்.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சையளிப்பு விசேட மருத்துவமனையொன்றின் தேவை வடக்கிலே ஏற்பட்டுள்ளது. இதனை கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொள்வார் என நம்புகின்றேன்.

அதேபோன்று, அண்மையில் எமது பேலியகொட மத்திய மீன் விற்பனை சந்தையிலும் வர்த்தகர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக அங்கிருந்த வர்த்தகர்களை தனிமைப்பத்தலுக்கும், தொற்று கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்கும் உட்படுத்திவிட்டு, மீன் விற்பனை சந்தையை தற்காலிகமாக மூடியிருக்கின்றோம்.

எனினும், தற்போது நாட்டில் மீன் அறுவடைகள் அதிகமான காலம் என்பதால், கடற்றொழிலாளர்களை பாதிப்படைய விடாமல், அவர்களது அறுவடைகளை எமது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கும், நுகர்வோருக்கு இலகுவாகவும், நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதற்குமான ஏற்பாடுகளையும், களஞ்சியப்படுத்தும் வசதிகளையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே, நாட்டில் மீன்களுக்கான தட்டுப்பாடகள் ஏற்படாது என்பதையும் இந்தச் சபையிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கென எனது கோரிக்கையின் பிரகாரம் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கித் தந்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய நிலையில் எமது நாட்டில் ஒரு பக்கம் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருகின்ற நிலையில், மறுபக்கத்தில் டெங்கு நோயும் தனது கைவரிசையைக் காட்டி வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுவதால், இதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அதிக அவதானங்களை செலுத்த வேண்டியுள்ளதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்தக் கொரோனா தொற்று என்பது எமது நாட்டுக்கு மட்டும் இருந்து வருகின்ற பிரச்சினையோ அல்லது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையோ, ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையோ அல்ல. இது உலகளாவிய பிரச்சினையாகும். எனவே, எதிர்க்கட்சிகள் இதனையும் அரசியலாகப் பார்க்காமல், இந்த கொடூரமான தொற்றிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைக...