கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2017

வீடுகளுக்கான முறைறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ் நகர அபிவிருத்தி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன் என ஈம க்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் பிராந்திய அபிவிருத்தி அபிவிருத்திப் பணிப் பொறுப்பு  நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் குடிநீருக்கான தட்டுப்பாட்டினை மிகவும் அதிக நிலையிலேயே காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் சுத்தமான குடிநீர் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டே வருகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், நீருக்கான தட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்தே வந்துள்ளன. அந்தவகையில் பார்ககின்றபோது இன்னும் 5 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் சுத்தமானக் குடிநீர் இல்லாமல் போகின்ற அபாய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் புவியியல் பேராசியர் செனவி எல்விட்டவத்த அவர்கள் தனது ஆய்வுகளிலிருந்து தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் முழுவதிலுமாகவுள்ள சுண்ணாம்புத் தட்டுகள் கரைய ஆரம்பித்துள்ளன என்றும் அதன் காரணமாக அவை கடலுக்குள் செல்வதனால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்கப்படுகின்றது என்றும் தெரிவித்திருக்கின்ற அவர், யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில் யாழ் குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்து எச்சரித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்து மக்கள் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 ௲ 15 கிலோ மீற்றர்களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கின்ற கிணறுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவை உவர் நீர் கலந்தே காணப்படுகின்றன.

குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஒரு சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத் தோற்றத்தில் ஒரு அம்சமாக தரைக்கீழ் நீரோட்டங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் நிலாவரைக் கிணறு குரும்பசிட்டி பேய்க் கிணறு புன்னாலைக்கட்டுவன் குளக் கிணறு கீரிமலைக் கேணி அல்வாய் மாயக்கைக் குளம் கரவெட்டி குளக் கிணறு ஊறணிப் பகுதி கிணறுகள் யமுனா ஏரி என்பன இத்தகைய நீர் நிலைகளாகும் என்றே தெரிய வருகின்றது. தற்போது இந்த நீர் நிலைகள் விவசாயச் செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேம்பாட்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இங்கிருந்து கிடைக்கின்ற நீரைக் குடிநீராகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் உண்டென்றே கூறப்படுகின்றது.

தற்போதுள்ள நன்னீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், உவர் நீர்த் தடுப்பு அணைகள் அமைக்கப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஐந்து திட்டங்கள் துறைசார் நிபணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதன் பிரகாரம் யாழ் குடாநாட்டின் நீரேரிகளில் கடல் நீர் உட்புகுதலைத் தடுப்பது ஒரு முக்கிய செயற்திட்டமாக இருக்கின்றது.  அந்த வகையில் வல்லை நாவற்குழி மற்றும் சுண்டிக்குளம் போன்ற நீரேரிகளில் இத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மேற்படி நீரேரிகளை ஆழப்படுத்தி மழை நீரினைத் தேக்கக்கூடியதான தரைத்தன்மையினை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் தரையினில் மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கென தற்போது இருக்கின்ற சிறிய நடுத்தர மற்றும் பெரிய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கற்கள் கரைசலால் ஏற்பட்டுள்ள சுமார் 1050 குளங்கள் காணப்பட்டபோதிலும் அவை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக்கப்பட்டு முழுமையான புனரமைப்புகளுக்கு உட்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. மேலும் வீடுகள் தோறும் மழை நீரினைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகளும் அதற்கான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன.

மக்களுக்குத் தேவையான குடிநீரினை விநியோகிப்பதற்கு பொதுவானதும் பொருத்தமானதுமான நீர் விநியோக நடைமுறைத் திட்டமொன்றைச் செயற்படுத்தி அதனைத் தொடர வேண்டியுள்ளது.

நிலக்கீழ் நீர் மாசடைதலைத் தடுக்க வேண்டியுள்ளதுடன் பொதுவான கழிவகற்றல் பொறிமுறையினை வலுவுள்ள வகையில் திட்டமிடப்பட்டு செயற்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் நிலக்கீழ் நீரைக் கடலில் கலக்கின்ற குகை வழிகளை யாழ் குடாநாட்டில் பல பகுதிகளிலும் காண முடிகின்றது. எனவே மேற்படி குகை வழிகள் இனங்காணப்பட்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட்டு தடுக்கின்ற ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன.

மேலும் கடல் நீரேரிகளை நன்னீராக்குகின்ற  திட்டத்தின் மூலமாக யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதுடன் வீணாக கடலில் கலக்கின்ற நீரானது நிலக்கீழ் நீரின் மீள் நிரப்பியாக மாறும் நிலைமைகள் ஏற்படும். இதன் காரணமாக நிலக்கீழ் நீர்வில்லைகள் சிதைவடைந்து போகாது தொடராகவே இருக்கும் நிலையில் நிலக்கீழ் நீர் உவராகும் நிலைமையானது போதியளவு குறைவடையும். யாழ் குடாநாட்டின் நிலப்பரப்பில் நன்னீர் பரப்பின் அளவு அதிகரிக்கும்.

அந்த வகையில் ஆனையிறவு மேற்குக் கடல் நீரேரி ஆனையிறவு கிழக்குக் கடல் நீரேரி உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடல் நீரேரி போன்ற திட்டங்கள் மிக முக்கியமானவையாகும். மேலும் இலகுவாகவும் அதிக செலவுகளின்றியும் சில நீரேரிகளையும் நன்னீர் ஏரிகளாக மாற்றக்கூடிய சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. குறிப்பாக மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக யாழ் நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.

இத்தகையத் திட்டங்கள் அனைத்துமே பல காலமாக ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை செயல்வடிவம் பெறாத காரணத்தினாலேயே இன்று யாழ் குடாநாட்டிற்கு நீர் தொடர்பில் இத்தகைய அபாயம் ஏற்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு தொடக்கம் 1953ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தொண்டைமானாற்றிலும் அரியாலையிலும் தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவை மரத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிர்மாணிப்புகள் என்ற வகையில் பிற்காலத்தில் அவை சேதமாகிவிட்டுள்ளன. எனவே மேற்படி அணைக்கட்டுகள் மீள அமைக்கப்பட வேண்டியுள்ளன. இவ்வாறு அமைக்கப்படுகின்ற தடுப்பு அணைகள் இரண்டு அடுக்குகளாக அமைய வேண்டியதும் அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அத்தகைய நிலையில்தான் வரட்சிக் காலங்களில் கடல் நீர் நிலக்கீழ் செல்வதைத் தடுக்க இயலும். ஆனையிறவு ஏரியிலும் இத்தகைய ஏற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது.

மேலும் சுண்டிக்குளம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள  தடுப்பு அணையும் மேலதிக நீரை வெளியேற்றுகின்ற பொறிமுறையும் சேதமடைந்துள்ளதால் அவற்றை மீளப் புனரமைப்புச் செய்யப்பட வேண்டியத் தேவை எற்பட்டுள்ளது.

ஆனையிறவு நன்னீர் ஏரியை முள்ளியான் கால்வாய் மூலமாக வடமராட்சியின் தென் பகுதியுடன் இணைக்கின்ற செயற்திட்டமும் இன்னும் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் அதனை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டியத் தேவை உள்ளது.

நாவற்குழி தடுப்பு அணையும் மீளத் திருத்தி அமைக்கப்பட தேவையில் இருக்கின்றது. அத்துடன் உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

அதே போன்று நீர் சேமிப்புத் திட்டங்களை வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய எற்பாடுகளின் மூலமாக யாழ் குடாநாட்டினை தற்போது அச்சுறுத்தி வருகின்ற நீருக்கான தட்டுப்பாட்டினைப் போதியளவு தீர்க்க முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தகைய ஏற்பாடுகளுடன் இரனைமடுத் திட்டம் மற்றும் ஏனைய தேசியத் திட்டங்களும் இணைகின்றபோதுதான் யாழ் குடாநாடு நீர்த் தேவையில் திருப்தி காண்கின்ற நிலை உருவாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இத்திட்டங்கள் இனியும் ஒழுங்குற செயற்படுத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டால் மேற்கூறிய பேராசிரியரின் கூற்றின்படி யாழ் குடாநாட்டு மக்கள் உவர் நீரை மாத்திரமே அருந்தக்கூடிய நிலை வெகுவிரைவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளே இருக்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் யாழ் குடாநாட்டின் நிலக்கீழ் நீர் மாசடைவது தொடர்பில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்ற வடக்கு மகாணத்தைச் சேர்ந்த இருவர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் விபரங்களை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம்  முன்வைத்திருந்ததாகவும் அறிய முடிகின்றது. அந்த அறிக்கையின் விபரங்களை நான் அறியாத நிலையிலும் அந்த ஆய்வில் நான் இங்கு முன்வைத்துள்ள திட்டங்களும் இருக்கலாம் என்றே எண்ணுகின்றேன்.

எனவே அந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய விடயங்களையும் நான் இங்கு முன்வைத்துள்ள திட்டங்களையும் ஆராய்ந்து விரைவானதொரு தீர்மானத்தை எடுத்து எமது மக்களது குடி நீர்த் தேவையினை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சி காலங்களில் மட்டுமல்லாது வரட்சியற்ற காலங்களிலும் தட்டுவன்கொட்டி பூநகரி கல்லாறு போன்ற பகுதிகளில் குடி நீருக்கான பாரியத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய குடி நீர்ப் பிரச்சினையினை எதிர்நோக்குகின்ற பகுதியாக, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இருக்கின்ற நிலையில் அதில் 10 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள சுமார் 3200 வரையிலான குடும்பங்களும் இப்பகுதிகளில் செயற்படுகின்ற 9 பாடசாலைகளின் மாணவர்களும் தங்களது அன்றாட குடிநீர்த் தேவைக்காகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

இம் மக்களது தேவைகள் மற்றும் படையினரின் தேவைகளுக்காக தற்போது தெளிகரை என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு கிணற்றிலிருந்தே குடி நீர் பெறப்படுவதாகக் கூறப்படும் நிலையில் பூநகரிப் பகுதியானது முற்றுமுழுதாகவே புனரமைக்கப்பட வேண்டிய நீர் நிலைகளைக் கொண்ட  பகுதியாகவே இருக்கின்றது.

குறிப்பாக மண்டைக்கல்லாறு குடமுருட்டியாறு கோடாலியாறு முடக்கன் ஆறு வண்ணாங்குளம் நல்ல தண்ணீர்க் குளம் மாளாப்புக் குளம் கிராஞ்சிக்குளம் மேளாய்க் குளம் நெடுங்குளம் திகிரிக் குளம் ஈநொச்சிக் குளம் செம்மண்குளம் பெரிய தம்பிராய் குளம் மூலையடம்பன் குளம் கரிக்கோட்டன் குளம் என்ற வகையில் பல நீர் நிலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் புனரமைப்புச் செய்யப்படும் நிலையில் இப் பகுதியின் குடி நீர்த் தேவையினைப் போதியளவு ஈடு செய்ய முடியும் என்பதால் கௌரவ அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பிலும் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நிலைமைகள் வடக்கில் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் நீர் மாசடைவு காரணமாக பலர் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் இந்த நிலை தற்போது அதிகரித்துள்ளது. நீர்நிலைகள் இருந்தும் அவை பராமரிப்பற்ற நிலைமைகள் இந்த மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற நீர்த் தட்டப்பாடுகளை நீக்குவதற்கான நிரந்தரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டியுள்ளன.

கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தற்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு நீர் விநியோகத் திட்டங்களை முன்னெடுத்த வருகின்ற நிலையில் எமது பகுதிகள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகள் குறித்தும் தனது அவதானங்களைச் செலுத்துவார் என நம்புகின்றேன்.

மேலும் வடக்கு மாகாணத்தில் குழாய் நீர் விநியோகத் திட்டத்திற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியானது 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிக கடனுதவியாக அனுமதித்துள்ளதாகத தெரிய வருகின்றது. அத் திட்டம் தொடர்பிலான தெளிவுகளையும் கௌரவ அமைச்சர் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

மகா நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

யாழ் நகர அபிவிருத்தி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை முதலில் கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். இதற்கான பதிலை அவர் தனது உரையின் போது தருவார் என எதிர்பாரப்பதுடன் இன்று வீடுகளுக்கான முழறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது.

மேலும் மேற்படி யாழ் நகர அபவிருத்தி ஏற்பாடுகளின் போது போக்குவரத்து தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகையில் சுற்றுவட்ட இரயில் போக்குவரத்து தொடர்பில் அதிக அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபைக்கென சொந்தக் கட்டிடமொன்று இல்லாத நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.  இவ்விடயம் தொடர்பிலும் மேற்படி நகர அபிவிருத்தி;த் திணைக்கள அதிகார சபையின் பௌதீக வளங்கள் மற்றும் ஆளணியினரின் வினைத்திறன்கள் மேம்பாடு தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் வலுவுள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நகர அபிவிருத்தி செயற்பாடுகளை நோக்குகின்றபோது பிரதான நகரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற அதே நேரம் அதற்கு சமாந்தரமாக பிராந்திய நகரங்களின் உருவாக்கங்களும் அவசியமாகின்றன என்றே கருதுகின்றேன். குறிப்பாக எமது நாட்டில் 1931ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டு காலப் பகுதிவரையில் அநேகமாக பின்தங்கிய பகுதிகள் நோக்கியே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்ட்டு வந்தமை காரணமாக பிரதான நகர்ப் பகுதிகளிலிருந்து மக்கள் அபிவிருத்தி பெற்ற பகுதிகள் நோக்கி நகர ஆரம்பித்தனர். தற்போது பிரதான நகரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்திகளின்போது பெருமளவிலான மக்கள் பிரதான நகரப் பகுதிகளையே நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அந்தவகையில் மீளவும் சேரிகள் போன்ற குடியிருப்புகளுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

மேலும், அடுக்குமாடிக் கட்டிட முறைமையினை பிரதான நகரப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த முறையின் கீழ் பொருளாதார நிலையில் ஒரே மட்டத்திலான மக்கள் பெருவாரியாக ஒரே இடத்தில் குவிக்கப்படுகின்ற நிலைமைகள் ஏராளம். இவ்வாறு மக்கள் பலர் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால், மனித வளங்கள் தொடர்பிலான ஏனைய பகுதிகளுக்கான தேவைகளில் பாதிப்புகள் எதிர்நோக்கப்படுகின்ற நிலைமைகளும் பொருளாதார ரீதியில் பலம் குன்றிய மக்கள் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் அவர்களது பொருளாதார நிலை மேம்படாததொரு நிலைமையும் இல்லாமல இல்லை. மேலும் இத்தகைய மாடிக் கட்டிடங்கள் அநேகமானவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே பழுதடைகின்ற நிலைமைகளையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே இத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியதொரு நிலையும் உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், கொழும்பில் உள்ள டுப்ளிகேசன் வீதியை சென்ட் பீற்றர்ஸ் கல்லூரி அருகிலிருந்து ஹெம்டன் வீதியுடன் இணைப்பதற்கு ஒரு எற்பாட்டினை எடுக்க முடிந்தால் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல்களை ஓரளவுக்கு கட்டப்படுத்தலாம் என்பதையும் பொதுவாக கொழும்பு நகரில் காணப்படுகின்ற உள்ளக போக்குவரத்து வீதிகள் பல இன்னமும் குறுகிய நிலையிலேயே இருப்பதால் அவற்றை அகழிப்பது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.

கௌரவ அமைச்சர் சரத் பொன்செக்கா அவர்கள் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை என்றே கருதுகின்றேன். அவர் யாழ் குடாநாட்டிற்கோ வடக்கு மாகாணத்திற்கோ பரிச்சயமற்றவர் அல்லர். அவர் அங்கு  சில நாள் விஜயத்தினை மேற்கொண்டு, எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அவர்மீது எமது மக்களுக்கு அன்பு இருக்கின்றது. அதனை எமது மக்கள் அவருக்கு ஏற்கனவே தேர்தல் மூலமாக உணர்த்தியிருக்கின்றார்கள். அந்த வகையில் அவர் அங்கு வந்து முன்னாள் இயக்க உறுப்பினர்கள் மீள்குடியேறியுள்ள மக்கள் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்ட்டுள்ள மக்கள் தங்களது சொந்த காணி நிலங்களுக்காகப் போராடுகின்ற மக்கள் என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

மேலும். தற்போதைய நிலையில் எமது நாட்டில் அபிவிருத்தி தொடர்பில் பல அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் நடைமுறையில் காணக்கூடியதான அபிவிருத்திகள் இன்றிய நிலையே காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பணிக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது வேறொரு பணிக்கு மாற்றப்படுகின்ற நிலைமைகளும் பொருத்தமற்ற காலப் பகுதிகளிலும் இறுதி நேரத்திலும் சில பணிகளுக்கு என நிதி ஒதுக்கீடுகள் மேற்ககாள்ளப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. பிராந்திய அபிவிருத்திகள் மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவனவாகவும் அதே நேரம் மக்களின் உயர் விழுமியங்களை உறுதி செய்வதாகவும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

Related posts:

வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ட...
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது ...