குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018

வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரால் ஒரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு, அந்த நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கம்; செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்பில் வேறு சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்றைய தினம் அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு, எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை குறித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஒரு பாரிய சுமையினைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற அரச நிறுவனங்களின் நட்டங்கள் என்பது, இந்நத நாட்டின் பொருளாதாரத்துறையில் மிக அதீதமான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றன.
குறிப்பாக, அரசுக்கும் வர்த்தக செயற்பாடுகளுக்கும் ஒத்துவராது என்ற நிலையினை உருவாக்கி வருகின்ற மேற்படி நிறுவனங்கள் காரணமாக, பல்வேறு வரிச் சுமைகளால் பொது மக்கள் பாதிக்கின்ற நிலைமைகளையே காணுகின்றோம்.
ஒரு பக்கத்தில் மேற்படி அரச நிறவனங்களில் பணியாற்றுகின்ற பணியபளர்களுடைய வாழ்வாதாரங்கள் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ள அதே நேரம், மேற்படி அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அந்த நட்டத்தினை ஈடுசெய்கின்ற வகையில் பெறப்படுகின்ற பொது மக்களின் நிதி காரணமாக பொது மக்கள் அடைகின்ற பாதிப்புகள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
அரச நிறுவனங்கள் தொடர்பிலான பல்வேறு முறைப்பாடுகளையே நாம் கடந்த பல காலங்களாக கேள்வியுற்று வருகின்றோம். ஒரு நிறுவனத்தை சிறந்த முறையில் இயக்கி, அதன் மூலமான போதிய பயன்களை ஈட்டுவதற்குப் பதிலாக, அந்த நிறுவனத்தின் மூலமாக தத்தமது தனிப்பட்ட அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முனைகன்;ற நபர்கள் அத்தகைய நிறுவனங்களின் பிரதானிகளாக நியமனம் பெறுகின்ற நிலைகளிலேயே இத்தகைய தவறுகள், முறைகேடுகள், ஊழல், மோசடிகள் இடம் பெறுவதாகத் தெரிய வருகின்றது.
எனவே, அரச நிறுவனங்கள் உயரிய பயனை – அதாவது அவற்றின் உரிய இலக்குகளை எட்ட வேண்டுமெனில் அவற்றுக்கு என நியமிக்கப்படுகின்ற பிரதானிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகின்றது.
அந்தந்த நிறுவனங்களின் ஏனைய பதவிகளுக்கென கல்வி, திறமை மற்றும் தகுதி அடிப்படையில் நபர்கள் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், அவற்றின் பிரதானிகள் அரசியல் நியமனங்களாக இருக்கின்ற நிலையில், அந்த அரசியல் நியமனங்களும் அந்தந்த துறைகள் சார்ந்த அனுபவங்களுடன் கூடிய ஏனைய தகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டவைகளாக இருத்தலே அவசிமாகின்றது.
நட்டமேற்படுகின்ற அரச நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்காக எனக் கூறப்பட்டு, அரச தொழில் முயற்சிகள் அமைச்சு உருவாக்கப்பட்டது. எனினும், அந்த அமைச்சு அரச நிறுவனங்களை விற்கின்ற அமைச்சாகக் காணப்படுகின்றதே அன்றி, அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதாகத் தெரிய வரவில்லை.
ஒரு சில அரச மற்றும் தனிப்பட்ட ஆய்வு ரீதியிலான அறிக்கைகளைப் பார்க்கின்றபோது, இந்த நாட்டைப் பொறுத்த வரையில் அரசாங்கமானது வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவது சாத்தியமானதாக இல்லை என்ற விடயம் வலியுறுத்தப்பட்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த இடத்தில் அரசியல் தலையீடுகள், அடிப்படை செயற் திறன் இன்மை, இயலாமை – முயலாமை போன்ற காரணிகளை நாம் முதன்மை படுத்த வேண்டியுள்ளது.
எனவே, இந்த நிலையிலிருந்து நாங்கள் மேற்படி அரச நிறுவனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமே அன்றி, அவற்றினை உடனடியாக விற்று விட முயற்சிப்பதை மாத்திரமே குறியாகக் கொள்ளல் நல்லதல்ல. ஏனெனில், இங்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றிருப்போரது வாழ்வாதாரம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரம், எமது பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்டிருந்த அரச நிறுவனங்களையும், தற்போதைய தேவைகளுக்கேற்ற மறுசீரமைக்கப்பட வேண்டியத் தேவைகளும், ஏனைய வளங்களைப் பயன்படுத்தியதான புதிய தொழில் முயற்சிகளின் உருவாக்கங்களும் தேவைப்படுகிறன.
அந்த வகையில் மேற்படி அரச நிறுவனங்களை முன்னெடுப்பது தொடர்பில் நீண்ட காலத்திற்குரிய செயற்றிறன் கொண்ட கொள்கை வகுப்புகள் அவசியமாகின்றன.
பொது படு கடன் பெறுதலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கொள்கை உறுதியில் இந்த அரசு தொடர்ந்து செயற்படுகின்ற நிலையில், அரச சொத்துக்களை விற்கின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படலாம்.
ஆனால், விற்பனை மூலமாகப் பெறப்படுகின்ற வருமானமானது வரி வருமானத்தினைப் போலன்றி, ஒரு முறை மாத்திரமே கிடைக்கப் பெறக்கூடிய வருமானமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன், விற்பனை என வருமிடத்து, நட்டமேற்பட்டுள்ள அரச நிறுவனங்களை அன்றி, இலாபம் ஈட்டக் கூடிய அரச நிறுவனங்களுக்கே சந்தையில் கேள்விகள் இருக்கும் என்பதுதான் யதார்த்தமாகும்.
அந்த வகையில், அரசின் இலாபம் ஈட்டுகின்ற நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக இதனை சாத்தியமாக்கலாம் என முயற்சித்தாலும், நாளடைவில் அரசின் பங்குகளின் வீதம் குறைந்து, அரசின் செலவினங்களை ஈடுசெய்து கொள்வதற்கு பயன்பட்ட சொத்துக்கள் அனைத்தும் இறுதியில் தனியார்வசமாகிவிடும் நிலை ஏற்பட்டு விடும்.
அதே நேரம், பங்குச் சந்தை ஊடான விற்பனையின்போது, பங்குகளின் மதிப்பானது அவற்றின் உண்மையான மதிப்பில் நிர்ணயம் பெறாமல், சந்தை நிலையில் காணப்படுக்கின்ற பல்வேறு சக்திகளின் தாக்கங்களின் அடிப்படையிலேயே அவை நிர்ணயிக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன.
எனவே, அரச நிறுவனங்கள் – அரச தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுமானால், அவற்றின் செயற்றிறனையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள இயலுமாக இருக்கும் என எண்ணுகின்றேன். எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அவதானமெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரச திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள், உள்ளூட்சி மன்றங்கள், மாவட்ட செயலகங்கள் தொடர்பிலான நிதி நிர்வாகம் மற்றும் செயலாற்றுகை தொடர்பிலும் அரசாங்க கணக்குகள் தொடர்பிலான குழுவின் மூன்றாவது அறிக்கை எடுத்துரைக்கின்றது.
பொதுவாகவே மேற்படி அனைத்துத் துறைகள் சார்ந்தும் பார்க்கின்றபோது, நிதி விதிகள் மற்றும் செயற்றிறன் விதிகள் பின்பற்றலான விகிதாசார நிலைமைகளை இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலகுபடுத்தும் வகையில் எனக் கூறப்பட்டு, கொண்டு வரப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் பிரதிபலன்களை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
வேட்பாளருக்கு அதிக செலவுகளை ஏற்படுத்துகின்ற விருப்பு வாக்கு முறைமையினை ஒழிக்கப்பட்டு, இன்று வேட்பாளர்களுக்கு செலவினைக் குறைத்து, அரசுக்கு பாரிய செலவினை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்த உறுப்பினர்களைக் கொண்டதாகவே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் உருவாகியிருக்கின்றன. அதே நேரம், பணமுள்ளவர்கள் வட்டாரங்களில் வெற்றி பெறக்கூடிய நிலைமையினையும் இது எற்படுத்தியிருக்கின்றது.
60 வீதம் வட்டார முறைமையிலும் 40 வீதம் விகிகதாசார முறைமையிலும் எனக் கூறப்பட்டாலும் இன்று நடைமுறையில் 100 வீதம் விகிதாசார முறையிலேயே இந்த தேர்தல் முறைமை செயற்படுத்தப்பட்டு வருகின்றதாகவே உணர முடிகின்றது.
அந்த வகையில், வட்டாரங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் வெற்றியானது முடங்கிப் போய், தோல்விகண்ட கட்சிகளின் பலமான எதிர்க்கட்சிகள் உருவாக்கம் பெற்றுள்ள நிலையில், வெற்றியாளர்களால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகள் தொடர்பிலான தீர்மானங்கள் போதிய பெரும்பான்மை இன்றிய நிலையில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சிக்கலான நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகளைப் பொறுத்தவரையில் நிதி விதிகள் தொடர்பிலான முறைமைகள் பின்பற்றப்படாத நிலை பொதுவாகவே அவதானிப்புப் பெறுகின்ற நிலையில், இது பல்வேறு ஊழல், மோசடிகளுக்கு வழியேற்படுத்தும் நிலையாகவே தென்படுகின்றது.
இந்த சபையில் நான் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ள வகையில் வடக்கு மாகாண சபையில் எற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளுந் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரால் ஒரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு, அந்த நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கஞ் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்பில் வேறு சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற் கொள்ளப்படவில்லை.
அதே நேரம், மேற்படி நான்கு அமைச்சர்களினதும் அமைச்சுக்கள் போக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இருக்கின்ற அமைச்சுகள் தொடர்பிலும், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அவை தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலைமையின் மத்தியில் தற்போது வடக்கு மாகாணத்தில் நியமனம் பெற்றிருக்கின்ற கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராகவும், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதே போன்று கடந்த காலத்தில் ‘நெல்சிப்’ உதவித் திட்டத்தில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்றிருந்த மோசடிகள் தொடர்பில் இதுவரையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் வடக்கு மாகாண சபை விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்பட்டிருந்த நிலையிலும், அது குறித்து எவ்விதமான தகவல்களும் இல்லாத நிலையில், அது குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்ற ஒரு தந்திரோபாயம் என்றே கருதப்பட வேண்டியுள்ளது.
எனவே, எமது மக்களுக்கான நிதி – எமது மக்களின் நிதி – இவ்வாறு முறைகேடுகளுக்கு ஒரு சில நபர்களால் உட்படுத்தப்படுகின்ற நிலையில், அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்தவை தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அத்தகைய தவறுகள் நடக்காதிருப்பதற்கும் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், செயற்றிறன் என்பது பொதுவாகவே எமது பகுதிகளில் மக்கள் பயன்பெற வேண்டிய அரச நிறுவனங்களில் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் போதிய ஆளணிகள் இன்றிய குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றது. மேலும், நிரப்பப்பட வேண்டிய ஆளணி வெற்றிடங்களுக்கு தென் பகுதிகளைச் சார்ந்தவர்கள் நிரப்பப்பட்டு வருகின்ற நிலையில்; மொழி மற்றும் சூழல் – குறிப்பாக பிரதேச பரிச்சயமற்ற காரணங்களாலும் அரச நிறுவனங்களின் பயன்பாடுகளை பெறுவதில் எமது மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே, இத்தகைய பாதகங்கள் இனங்காணப்பட்டு, அவற்றை அகற்றுவதன் ஊடாகவே எமது பகுதிகளில் அரச துறை சார்ந்த நிறுவனங்களால் போதிய பயன்களை எமது மக்களுக்கு வழங்க முடியும். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பொறுத்த வரையில் ஏனைய மாகாண சபைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் உள்ளூராட்சி மன்றங்களுடன் எமது பகுதி – குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மாகாண சபையையோ, அல்லது வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளையோ அடைவு மட்டத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
ஏனைய மாகாணங்களைப் பொறுத்த வரையில் மாகாண சபைகளும், உள்ளூராட்சி சபைகளும் மக்கள் நலன்சார்ந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், எமது பகுதியில் அது தொடர்ந்தும் மக்கள் நலன் சாராத செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றன. அதாவது, மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட்டு, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக மக்களை மேலும், மேலும் உணர்வுப்பூர்மாகத் தூண்டியும், சீண்டியுமே வருகின்றன.
மறுபக்கத்தில் ஏனைய மாகாணங்களுக்கு மத்திய அரசின் நேரடி பங்களிப்புகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், வடக்கில் அந்த நிலை அரிதென்றே கூற வேண்டும். ஒன்று மத்திய அரசின் நேரடிப் பங்களிப்புகள் போதியளவு வருவதில்லை. வந்தாலும், அங்கு அவற்றை மேற்கொள்ள விடுவதில்லை என்ற நிலையே காணப்படுகின்றது. எனவே, மக்களது நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்வதை புறக்கணித்து வருகின்ற விருப்பமின்மை, முயலாமை, இயலாமை கொண்டவர்களிடம் எமது பகுதியின் அரச நிறுவனங்கள் மாட்டிக் கொண்டு, செய்வதறியாத நிலைமை தொடர்கின்ற போது, எமது மக்களே மீள முடியாத வாழ்க்கைச் சுமைகளை அரவணைத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைந்தவுடன், எமது மக்களின் விடிவு கருதி வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை இந்த அரசு உடன் நடாத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம
எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிரு...
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!