‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021

என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்று ஒப்படைககப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு தனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு எமது மக்களால் ஒப்படைக்கப்பட்ட அப் பாரிய பொறுப்பின் சவால்களை வென்று கொண்டே, எமது நாட்டின் முன்னேற்றத்திற்கென மிகச் சரியான நோக்குடன், தைரியமாக செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமைத்துவத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டமானது, அனைத்துத் துறைகளையும் சேர்த்தே கடற்றொழில் துறைக்கெனவும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்  (முழுமையான உரை)

நாடாளுமன்ற உரை – வரவு – செலவுத் திட்டம் 2022  – கடற்றொழில் அமைச்சு – 07.12.2021

கௌரவ சபாநாயகர் அவர்களே!

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கடற்றொழில் அமைச்சு தொடர்பில் எனது உரையை நிகழ்த்துவதற்கென வாய்ப்பினை வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

‘நீங்கள் என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்றை ஒப்படைக்கின்றீர்கள்’ என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் 2019ஆம் ஆண்டு தனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு எமது மக்களால் ஒப்படைக்கப்பட்ட அப் பாரிய பொறுப்பின் சவால்களை வென்று கொண்டே, எமது நாட்டின் முன்னேற்றத்திற்கென மிகச் சரியான நோக்குடன், தைரியமாக செயற்பட்டு வருகின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமைத்துவத்தில், மேன்மைதங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டமானது, அனைத்துத் துறைகளையும் சேர்த்தே கடற்றொழில் துறைக்கெனவும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த 16 இலக்குகளை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அமைவாக, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் கடற்கரையை அண்டியதான கடற்பரப்பில் 129,600 மெற்றிக் தொன், ஆழ்கடலில் 115,315 மெற்றிக் தொன் என 244, 915 மெற்றிக் தொன் மற்றும், நன்னீர் வேளாண்மையில் 76,660 மெற்றிக் தொன் என மொத்தம் 321,575 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை நாம் எட்டியுள்ளோம். ஒரு மாதத்திற்கான தனிநபர் மீனின நுகர்வை 36.7 வீதமாக உயர்த்தி, அனைத்து மீனின ஏற்றுமதியின் மூலம் 43,106.1 மில்லியன் ரூபாவினை தேசிய பொருளாதாரத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

மீன் வகை மற்றும் மீன் வகை சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதியினை நாம் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், தேசிய அளவில் கிடைக்காத, நுகர்வுத் தேவைகளுக்கு அவசியமான சில மீன்வகை மற்றும்; மீன் வகை சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிக்கென இக் காலப் பகுதிக்குள் 78,808.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எமது தேசிய உற்பத்தியின் மேம்பாடு கருதி, இறக்குமதி தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருவதுடன், தேசிய அளவில் கிடைக்காத மீன் வகை மற்றும் மீனின உற்பத்திகளை மாத்திரம் தேவை கருதி இறக்குமதி செய்வது மற்றும் தேசிய ரீதியில் மீனின அறுவடையில் பற்றாக்குறைகள் நிலவுகின்ற காலகட்டங்களில் குறிப்பாக மார்ச்  முதற்கொண்டு ஜூன் மாதக் காலப்பகுதியில், அக்காலப் பகுதியிலும், ஏனைய காலப் பகுதிகளிலும் நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையில் நியாயமான விலையினைப் பேணும் நோக்கில் தேவையான மீனினங்கள் மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை வரையறைக்கு உட்பட்டு இறக்குமதி செய்வது குறித்தும், உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி, நாம் மீளாய்வுகளை மேற்கொண்டு, வருகின்றோம் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதே காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதியின் மூலம் 2,754.1 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை நாம் பெற்றுள்ளோம். செவனபிட்டிய பகுதியில் அலங்கார மீன்கள் கருத்தரிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளதுடன்,  பங்கதெனிய பகுதியிலும் இத்தகையதொரு நிலையத்தை நிர்மாணித்து வருகின்றோம்.

மேலும், அலங்கார கடல் தாவரங்கள் செய்கையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதிக்குள் 26,910 தாவரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதியின் மூலம் 5.40 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளன. அவ்வாறே, 1,069.80 மெற்றிக் தொன் உவர் நீர் இறால் உற்பத்தியில் 1,874.60 மில்லியன் ரூபாவும், 57.38 மெற்றிக் தொன் நன்னீர் இறால் உற்பத்தியில் 156.94 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.

கடற்றொழில் சார்ந்த மக்களை பலப்படுத்துகின்ற வேலைத் திட்டத்தின் கீழ், 05 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிதாக கடற்றொழிலை ஆரம்பித்துள்ள கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நவீன படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களை வழங்குகின்ற வேலைத் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்துடன் இணைந்து 04 மாதிரி படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான ஏனைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிய பரிமாண கடற்றொழில் படகுகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைக்கும் வகையில், மீன் பெட்டிகள் வழங்கும் நடவடிக்கையும், அனைத்து கடற்றொழில் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடல் சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது 04 பயிற்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கென மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 பேர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சிலாபம், புத்தளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலிருந்து 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 55 ஆயிரம் ரூபா பெறுமதியிலான கருவாடு உற்பத்தி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதற்கென மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சொரவில, மாதுருஓயா பகுதிகளிலிருந்து 60 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

மேலும், தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள 300 கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடற்றொழில் சார்ந்த புதிய தொழில்நுட்பத்திற்கான பங்களிப்பு  திட்டத்தின் கீழ் 06 வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மீனினங்கள் பரவலாக இருக்கக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்களை பரிமாறுவதற்கென தற்போதுள்ள மென் கருவிகளை மேம்படுத்தும் ஏற்பாடுகள், செயற்கை மீனினங்கள் ஒன்று சேர்க்கப்படும் கருவி (குiளா யுபபசநபயவiபெ னுநஎiஉந) பயன்பாட்டின் மூலம் மீன் குஞ்சுகளை பெருக்கும் வேலைத்திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சூழலுக்கு நன்மை பயக்கின்ற மாற்று எரிபொருள், மற்றும் மின்சக்தி பயன்பாட்டில் கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறைக்கென களப்புகள் மற்றும் நீர் நிலைகளில் செயற்படுத்தத்தக்க புதிய படகுகளை அபிவிருத்தி செய்கின்ற வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது விக்டோரியா, ரன்தெணிகல, மேல் கொத்மலை, ரிதியகம, முருத்தவெல போன்ற நீர் நிலைகளும், மட்டக்களப்பு, ரெக்கவ, புத்தளம் போன்ற களப்புப் பகுதிகளும் இனங்காணப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அழிந்து வருகின்ற கடல் வளங்களிடையே, மீனின பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு, ஆழ்கடலில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் வகையில் பயன்பாட்டுக்கு உதவாத பழைய பஸ் வண்டிகள், படகுகள் மற்றும் ரயில் பெட்டிகளை கடலில் இடுகின்ற ஏற்பாட்டின் பிரகாரம், இதுவரையில்  பழைய பஸ் வண்டிகள் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக் கடலில் இடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்பிலான சூழலியல் செயற்பாடுகளை ஆராய்வதற்கென உரிய கருவியினை (யுஉவழைn ஊயஅநசய) கொள்வனவு செய்கின்ற ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரிதாகி வருகின்ற மீனினங்களுக்கு மாற்றீடாக மீன் குஞ்சுகளை மீள வைப்பிலிடுகின்ற வேலைத்திட்டங்கள், மீனினங்களின் பற்றாக்குறை மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் என்பன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட ரெக்கவ, பாணம, கோமரி, பெரிய உப்பு போன்ற களப்புகளில் மீன் குஞ்சுகளை வைப்பிலிட்டு, அரிதாகி வருகின்ற மீனினங்களின் பெருக்கம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

அவ்வாறே, தற்போது அறுவடை செய்யப்படாதுள்ள மீனினங்களை அறுவடை செய்வது குறித்த ஆய்வுகளும் திக்ஓவிட்ட கடற்றொழில் துறைமுகத்தின் பலநாட் களங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

களப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தைப் பொறுத்த வரையில், தற்போதைக்கு நந்திக்கடல், நாயாறு, ரெக்கவ, அறுகம்பே போன்ற களப்புகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. களப்பினை அண்டிய அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, 17 திட்டங்களுக்கென 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு களப்புப் பகுதியில், 2.2 மில்லியன் ரூபா செலவில் 4 மில்லியன் இறால் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன. மட்டக்ளப்பு களப்பில் 0.825 மில்லியன் ரூபா செலவில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.

மேலும், நீர்கொழும்பு களப்புப் பகுதிகளின் அபிவிருத்திகள் 7 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறுகம்பே, லங்காபட்டுன, சிலாபம், முந்தலம், ரெக்கவ, கொக்கிளாய் போன்ற களப்புகளில் எல்லையிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம் தொடர்பிலும் நாம் அதிக அவதானத்தை எடுத்து வருகின்றோம். இதனடிப்படையில் தற்போது புத்தளம் களப்பில் 14 ஆயிரம் கொடுவா குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளதுடன், 200 பயனாளிகள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பெரிய நீர்த்தேக்கங்களில் கூண்டு முறை வளர்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

களப்புகளை அண்டி வாழுகின்ற கடற்றொழிலார்களது வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில், யாழ்ப்பாணம் மாவட்ட களப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 104.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நண்டு, கொடுவா, இறால், கடலட்டை போன்ற செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழில் துறைமுகங்களைப் பொறுத்த வரையில், தற்போது செயற்பாட்டில் உள்ள 22 கடற்றொழில் துறைமுகங்களுக்கு மேலதிகமாக களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. வெல்லமன்கர கடற்றொழில் துறைமுகத்தில் மேலும் 03 இறங்குதுறைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன. மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. மேலும், பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற பகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பசுமை கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பேருவலை, காலி, புராண வெல்ல, குடாவெல்ல போன்ற கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், தற்போது செயற்பாட்டில் இருந்த வருகின்ற கடற்றொழில் துறைமுகங்களில் செயற்பாடுகளின்றி தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம் மேலும் பல படகுகளுக்கான வசதிகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.

அத்துடன், பலநாட் களங்களில் படகுகள் செல்கின்ற திசை கண்காணிப்பு கருவிகளை  (ஏஆளு) பொருத்துகின்ற நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதற்கென அவுஸ்திரேலிய அரசாங்கம் 5.2 மில்லியன் டொலர் செலவில் 4,200 கருவிகளை வழங்கி வருகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்டு, தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள 1,200 கருவிகளுக்குப் பதிலாக நாம் புதிய கருவிகளையும் மேலதிகமாகக் கோரியுள்ளதுடன், இ;நத கருவிகளுடன் இணைந்தவாறு திரை மூலமாக எமது தகவல் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து பலநாட் களங்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான செய்மதி தொழில்நுட்பத்தினாலான நவீன கருவிகளையும், மீனினங்கள் அதிகமாகக் காணப்படுகின்ற இடங்களைக் காட்டக்கூடிய கருவிகளையும் நாம் அவுஸ்திரேலிய அரசிடம் கோரியுள்ளோம்.

இந்திய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத, நியாயமற்ற கடற்றொழிலை தடுப்பது குறித்து, அரசியல் ரீதியிலான இராஜதந்திர முறைமையிலும், வினைத்திறன்மிக்க சட்ட அமுலாக்கல் மூலமாகவும், விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்திய கடற்றொழிலாளர்கள் 60 முதல் 75 அடி நீளமானதும், 250 முதல் 350 வரையிலான குதிரை வலு கொண்ட இரட்டை மடி இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதுடன், எமது கடற்றொழிலார்களின் தொழில் உபகரணங்களை அழித்தும், வாழ்வாதாரங்களை பாதித்தும் வருகின்றனர். இந்த தொழில் முறைமையானது, சர்வதேச மட்டத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத கடற்றொழில் முறைமையாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், மேன்மைதங்கிய பிரதமர் அவர்களும் கடந்த தேர்தல் காலங்களில் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளுக்கு அமைவாகவும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாகவும் ஒலுவில் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டு வருகின்ற ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக குளிரூட்டி மற்றும் அதி விறைவிப்பான் கிடங்கு வசதிகள் கொண்ட பகுதியை நாம் கையேற்றுள்ளோம். கடற்றொழில் படகுகளை அங்கு தரித்து வைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு, கொழும்பு, களுத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி மற்றும் மறைமுக கடற்றொழிலாளர்கள் 12,229 பேருக்கு இதுவரையில் முதற்கட்டமாக 225,5425 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த வலை உள்ளடங்களான கடற்றொழில் உபகரணங்களுக்கு பதிலாக புதிய வலை மற்றும் உபகரணங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், கப்பல் அனர்த்தத்திற்குள்ளான சுமார் 459 கிலோ மீற்றர் கடல் பகுதி கடற்றொழிலாளர்களது பாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த பகுதி தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பெறுபேறுகளின்படி இத்தடை குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த புறவி புயல் (ஊலஉடழநெ டீரசநஎi) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் படகுகள் மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முகமாக நாம் சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதுடன், தற்போது அடுத்த கட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் இந்த இழப்பீடுகளை வழங்க முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நோர்த் சீ நிறுவனத்தின் மூலமாக தரமான  மீன்பிடி வலைகள் உற்பத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்த முறைகேடுகள் காரணமாக இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் தரம் குன்றி இருந்ததாக கடற்றொழிலாளர்கள் மத்தியில் முறைப்பாடுகள் எழுந்திருந்தன. நாங்கள் இந்த நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் அந்த நிலைமைகளை மாற்றி, வீரவில, லுனுவில மற்றும் குருநகர் ஆகிய மூன்று தொழிற்சாலைகளிலும் தரமான வலை உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். கொரோனா அனர்த்தம் காரணமாக மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சில தடைகள், தாமதங்கள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றை சமாளித்து இந் நிறுவனத்தை செயற்படுத்தி வருகின்றோம்.

நன்னீர் வேளாண்மையைப் பொறுத்தமட்டில், கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையில் நன்னீர் நிலைகளில் 82.4 மில்லியன் மீன் குஞ்சுகளும், 39.6 மில்லியன் இறால் குஞ்சுகளும் வைப்பில் இடப்பட்டுள்ளன.

இறால் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் தகுந்த காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. அத்துடன், கடலட்டை உற்பத்திக்கென மன்னார், யாழ்;ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஆழமற்ற கடல் பகுதிகள் சுமார் 5000 ஏக்கர் அளவில் இனங்காணப்பட்டுள்ளன. ஏற்கனவே, கிளிநொச்சி, இரணைத்தீவு பகுதியில் கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் ஒன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம்.

கடல் தாவரங்கள் வளர்ப்பில் வடக்கு மகாகாணத்தில் சுமார் 117 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 200 பேருக்கு அதற்குரிய தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.

அதேநேரம், சமுர்த்தி அமைச்சுடன் இணைந்த வாழ்வாதார திட்டத்திற்கமைவாக நன்னீர் வேளாண்மையில் 11 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, இதுவரையில் 2038 பயனாளிகள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான முதற்கட்ட நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரையில் இதற்கென 151.3 மில்லியன் ரூபா நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் என்கின்ற கடற் பயணத்தில் தாகத்தைக்கூட தீர்த்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்காது,  இந்த நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், கடற்றொழில் துறையின் அபிவிருத்தி, எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரங்கள், நாட்டு மக்களின் போசாக்கின் தன்னிறைவு போன்றவை குறித்து நாளாந்தம் உழைத்து வர வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே

இம்முறை கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைக்கென  3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கும் மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், தேவைகள் கருதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தின் ஊடாகத் தேவையான மேலதிக நிதியை குறைநிரப்பு பிரேரணை மூலம் பெற்றுக் கொள்ள முடியும். நாம் எமது வேலைத் திட்டங்களை அதிகளவில் தனியார் துறையுடனும் இணைந்ததாகவே விஸ்தரித்துச் செல்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கடற்றொழில் தொடர்பிலும், நன்னீர் வேளாண்மை தொடர்பிலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தின் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்திற்கு அமைவாக மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்.

அந்தவகையில், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட, சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை செயற்பாடுககளை முழுமையாகத் தடை செய்;வதற்கான ஒழுங்குவிதிகளை நாம் கொண்டு வருவதுடன், அதனை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தவதற்கு கடல் ரோந்து நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புப் படையினருடன்  இணைந்த ஒரு கூட்டு ஏற்பாடாக மேற்கொள்வது, கடல் வளத்தைப் பேண பாதுகாப்பு காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளை நியமிப்பது குறித்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

கண்டல் தாவரங்களின் அழிவினைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை நடுகை மற்றும் மீள் நடுகைச் செய்வதற்கும், அதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்து இளைஞர், யுவதிகளை பணிகளில் அமர்த்துவதற்கும் உத்தேசித்துள்ளோம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும்  தரமானதும், நியாயமான விலைகளிலுமான மீன் வகைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கென மத்திய மீன் சந்தைகளை ஆரம்ப கட்டமாக கண்டி, இரத்தினபுரி, தம்புள்ளை, குருனாகலை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த கால உதாசீனப் போக்குகள் காரணமாக மூடப்பட்டுள்ள குளிரூட்டி தொழிற்சாலைகள், அதி விறைவிப்பான் தொழிற்சாலைகள் போன்றவற்றை மீளத் திறப்பதற்கும், தேவைக்கேற்ப புதிய தொழிற்சாலைகளை நிறுவுதற்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கத்ததக்க இயந்திரங்களின் மூலம் உலர்த்தும் வகையில், புதிய மீன்களைக் கொண்ட கருவாடு மற்றும் மாசி உற்பத்தியினை ஏற்றுமதித் தரத்திற்கேற்ப மேற்கொள்வதற்கும், இதற்கென தேர்ந்தெடுக்கப்படுகின்ற பகுதிகளில் கருவாடு மற்றும் மாசி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேநேரம், சிறியளவிலான மீன் வலைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், படகு இயந்திர பழுதுபார்க்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அது சார்ந்த கைத்தொழில் நிறுவனங்கள், சிறியளவிலான மீன் பதப்படுத்தப்படும் நிலையங்கள் போன்றவற்றை தகுந்த இடங்களில் அமைப்பதற்கும், அதற்கென முன்வருபவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

ஆழ்கடல் கடற்றொழில் தொடர்பில் பங்களிப்புகள் காட்டப்படாதுள்ள பகுதிகளிலும், பங்களிப்புகள் குறைந்து காணப்படுகின்ற பகுதிகளிலும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அத் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கும், கை மூலமான நீள் வரித் தூண்டில் கடற்றொழில் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் மூலம் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளை குறைப்பதற்கு மேலும் சூரிய மின்சக்தி பயன்பாட்டைக் கொண்ட கடல் நீர் குளிரூட்டி ஏற்பாடுகளை படகுகளுக்கென அறிமுகஞ் செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், புதிதாக படகுகளைத் தயாரிக்கின்றபோது இந்த நவீன முறையை படகுகளில் உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதுவரையில், பலநாட் களங்களின் அறுவடைகளை காலதாமதமின்றி கரைக்குக் கொண்டு வருவதற்கென தாய் களமொன்றின் தேவை தொடர்பிலும் உணரப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடற்றொழில் கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்கள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றையும் இனங்கண்டு, படிப்படியாக அவற்றை மேற்கொள்வதற்கும், கடற்றொழில் சமூகத்தினருக்கு ஏனைய சமூகத்தினர் அனுபவித்து வருகின்ற அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கும், அவர்களது பிள்ளைகளின் ஈடுபாடுகளை அவதானத்தில் கொண்டு அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும், அவர்களது கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.

அதேநேரம், மீனின உற்பத்தி குறைவு காலங்கள் மற்றும் இயற்கையினால் ஏற்படுகின்ற தொழில் பாதிப்பு காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கென நியாயமான ஒரு தொகை கொடுப்பனவை வழங்கக்கூடிய வகையில் கடற்றொழிலாளர்களது சேமிப்பின் ஊடாக விசேட திட்டமொன்றை அரச வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கும், தொழில் மற்றும் உயிர் தொடர்பிலான நிலையான காப்புறுதித் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கும், ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றினை நிறுவுவதற்கும் நான் உத்தேசித்துள்ளேன். இது இன்றைய பெரும் தேவையாக இருப்பதை சுட்டிக் காட்டுவதுடன், இது தொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

அத்துடன், விரால் மீனினத்தைச் சார்ந்த பாம்புத் தலை மீன் எனப்படும் சன்னா (ஊhயnயெ Pரnஉவயவய) மீன்வகை இனப்பெருக்க நிலையங்களை பொலன்னறுவை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும், நாரா நிறுவனம் மற்றும் கடல் சார் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் கடற்றொழில் சார் அலுவலர்களின் தொடர் பணி வளர்ச்சி கருதி கடற்றொழில் மேலாண்மை கற்கையில் முதுகலை டிப்ளோமா பட்டம் வழங்க அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம், எமது நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற குளங்கள், சிறு குளங்கள், நீர்த் தேக்கங்கள், பருவகால நீர்த் தேக்கங்கள்,  அனைத்தையும் பயன்படுத்தியும், கிராம தொட்டிகள் மூலமாகவும், நன்னீர் வேளாண்மையை பரவலாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

இதன் ஊடாக கிராமப் புறங்களின் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதும், மக்களுக்கு போசாக்கான உணவினை எட்டச் செய்வதும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, மக்களது வாழ்வாதாரங்களை உயர்த்துவதும் எமது நோக்கமாகும். அதேநேரம், ஏற்றுமதி இலக்கு கொண்ட உற்பத்திகளைப் பெருக்கி, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு அதிகளவிலான பங்களிப்பினைச் செய்வதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

இத்தகைய திட்டங்களுக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினது ஒத்துழைப்புகள் இன்றியமையாததாகும். நாங்கள் மேற்கொள்கின்ற நீர் வேளாண்மை செய்கைகள் வனஜீவராசிகளுக்கோ அல்லது சூழலுக்கோ தீங்கு விளைவிப்பதாக அமையாது. அந்த வகையில், எமது செயற்பாடுகளுக்கு இந்த அமைச்சினது ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாதிருந்த மற்றும் பயிர்ச் செய்கைக்கும், மேய்ச்சல் தரைக்கும் பொருத்தமான காணிகளை விடுவிக்க மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். அந்த வகையில், அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது அமைச்சின் இந்தச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்ற எமது இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு, ஜயந்த சந்திரசோம, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த ககவத்த, ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், ஏனைய அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயல...
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்...