காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Wednesday, November 17th, 2021

தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்சவனால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சரியானதை பிழை என்றும், பிழையானதை சரி என்றும் எதிரிக் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து விமர்சனம் செய்து கொண்டிருப்பதே தமது பணி என நினைத்தச் செயற்படாமல், எதிர்க் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து தனது பார்வையை நியாயமாக செலுத்த எதிர்க் கட்சிகள் தவறுவதையே இப்போதும், இந்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த அவர்களது கருத்துகளிலிருந்து தெரிய வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

சரியானதை பிழை என்றும், பிழையானதை சரி என்றும் எதிரிக் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து விமர்சனம் செய்து கொண்டிருப்பதே தமது பணி என நினைத்தச் செயற்படாமல், எதிர்க் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து தனது பார்வையை நியாயமாக செலுத்த எதிர்க் கட்சிகள்  தவறுவதையே இப்போதும், இந்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த அவர்களது கருத்துகளிலிருந்தும் தெரிய வருகின்றது என்பதை சுட்டிக்காட்டி,

தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் கௌரவ பசில் ரோஹன ராஜபக்ச அவர்களது முதலாவது வரவு – செலவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. காலத்தை வெல்கின்ற, பல்வேறு இயற்கை, செயற்கை சவால்களை முறியடித்த, முன்னேற்றகரமான இந்த வரவு – செலவுத் திட்டத்தை எமக்கு தந்துள்ளமை குறித்து கௌரவ பசில் ரோஹன ராஜபக்ச அவர்களுக்கு  எமது மக்கள் சார்பாக எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த ஆட்சியை நாங்கள் பொறுப்பேற்றது முதல் இன்று வரையில் உலகளாவிய கொடும் அனர்த்தமான கோவிட் – 19 கொரோனாவின் பிடி இன்னும் தளர்ந்ததாக இல்லை. கோவிட் – 19 கொரோனா அனர்த்தமும் ஓர் இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது. ஏனைய இயற்கை அனர்த்தங்கள் சில நாட்களில் அகன்று போனாலும், இது அகலா அனர்த்தமாகவும் தொடர்கிறது.

இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் இதுவரையில் நாட்டின் சனத்தொகையில் 80 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது மக்களின் உயிர் பாதுகாப்பிற்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகவே இதனை நான் கருதுகின்றேன்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில், நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தி தொடர்பில் நாம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளுக்கு இசைவாக சேதன பசளை மற்றும் சேதன கிருமி நாசினி உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்வது குறித்து போதிய அவதானம் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென 35 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இரசாயன பசளை மற்றும் விவசாய உள்ளீடுகளின் இறக்குமதிக்கென வருடாந்நதம் செலவிடப்பட்டு வருகின்ற சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாக்களை இதனால் மீதப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், இத்தகைய இரசாயன நச்சுத் தன்மைகள் கொண்டு வருகின்ற நோய்களிலிருந்து விடுபடவும் முடியும்.

ஆரம்பத்தில் சில இடையூகள் இரு;நதாலும், சில காலத்தில் சேதன பசளைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்றபோது, ஓர் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த நோக்கச் செயற்பாடாகும் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், எமது விவசாயத் துறையின் முன்னேற்றம் கருதி 70.70 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கால்நடைகள் அபிவிருத்திக்கென 1.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் திரவப் பால் உற்பத்திகள் தற்போது பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. பண்ணைகள் அபிவிருத்தியடைந்து வருகின்றன. பாலில் நம் நாடு தன்னிறைவு காணுகின்றபோது, பாலுக்கெனவும் எமது மக்கள் வெளிநாடுகளை நம்பி இருக்கின்ற நிலைமை மாறும் என நினைக்கின்றேன். அண்மையில், பால் மாவுக்கென எமது மக்கள் அடைந்திருந்த நெருக்கடி நிலைமைகளை மறந்துவிடக் கூடாது.

மூவாயிரம் மில்லியன் ரூபா கடற்றொழிலுக்கென வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சம் ஹெக்டயர் நீர் நிலைகளில் நன்னீர் வேளாண்மைக்கான வசதிகளை மேற்கொள்வதற்கும், இதற்கென 196 மி;ல்லியன் மீனின குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டு, அதன் மூலம் சமார் 18 ஆயிரம் மில்லியன் பெறுமதியான 125 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடையினை எதிர்பார்ப்பு கொள்ளப்படுகின்றது. அதேநேரம், மூல வளங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் நிறையவே பலன்களை நாம் எதிர்பார்க்க முடியுமென நம்புகின்றேன்.

மேலும், வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம், கடற்றொழில் துறைமுக அபிவிருத்திகள். நீர்வள ஊக்கம் (தியவர திரிய) கடன் திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, பலநாட் களங்களுக்கான வழித்தட கண்காணிப்புக் கருவிகள், கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகளில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வியலை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும,; மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதால், அடுத்த வருடத்தில் நீர் வேளாண்மை தொடர்பில் மிக அதிகளவிலான செயற் திட்டங்களை நாம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அண்மைக் காலம் வரையில் போராட்டக் களம் கண்டிருந்த பாடசாலை அதிபர்கள், ஆசியர்கள் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, அதற்கென 30 ஆயிரம் மில்லியன் ரூபா அவர்களது ஊதியத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் துறை மேம்பாடு தொடர்பிலும், உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, போதிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சுகாதாரத் துறையின் மேம்பாடு தொடர்பிலும் விரிவான கவனம் செலுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக அமைகின்றது. மழைக்காலங்களில் மக்களின் இடப்பெயர்வுகள், நாளாந்த தேவைகளுக்கான பிரச்சினைகள் போன்றவற்றிலிருந்து நிலையானதொரு தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்று நம்புகின்றேன்.

அதே நேரம், ‘நிலச் சக்தி’ (பிம் சவிய) திட்டத்திற்கெனவும் 518 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டிய இலக்கில் எமது அரசாங்கம் இருக்கின்ற போதிலும், உலகளாவிய அனர்த்தம் காரணமாக 60 ஆயிரம் காணி உறுதிகளே இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. காணி உறுதிகள், காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காணி அமைச்சர் அவர்கள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.

கைத்தொழில் சார்ந்த பெருந்தோட்டச் செய்கை மற்றும் வேளாண் பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டக்கென வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுக்கென 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களாக கணிக்கப்பெற்று வருகின்றன. அந்த நிலங்களில் எமது மக்கள் யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, அவ்வாறான இனங்காணப்படுகின்ற நிலங்களில் சூழல் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மண் வேளாண்மை மற்றும் நீர் வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகளை துறைசார்ந்த அமைச்சர்கள் மேற்கொண்டு தர வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கான எனது விஜயத்தின்போது, பல்வேறு கடற்கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு உட்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அப் பகுதிகளில் மட்டுமல்லாது கடலரிப்பானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரைவானதொரு மட்டத்தில் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. இத்தகைய கடலரிப்பிலிருந்து அப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் மீளக் குடியேறாமல் இருந்து வருகின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கென 1,259 மில்லியன் ரூபாவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 1,200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், யாழ் நகர சபைக் கட்டிட நிர்மாணிப்பிற்குமென மேற்படி அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பாசனத் துறையைப் பொறுத்த வரையில், கீழ் மல்வத்து ஓயாத் திட்டம், வட மத்தி பிரதான கால்வாய் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் எமது மக்களுக்கு பெரிதும் பயன்படத்தக்கவை. எமது மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத் துறைக்கும், கால்நடை அபிவிருத்திக்கும், எமது நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பதற்கும்  பெரிதும் நன்மை பயக்கின்ற அபிவிருத்திகளாக இவற்றை எமது பகுதிகளைப் பொறுத்து கருத முடிகின்றது. அதேநேரம், இத்திட்டங்களின் கீழான குடியேற்றங்களில் அப்பகுதி சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது பகுதிகளில் உவர் நீர் உட்புகும் பகுதிகளில் அவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குடி நீர் வசதிகளைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்டதாக மழை நீர் சேகரிப்பு ஏற்பாடுகளுக்கான வசதிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேலும் மேற்கொள்ளத்தக்க வகையில் நிதி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழிற்துறையை பொருத்தமட்டில், திருகோணமலை கைத்தொழிற்பேட்டை உள்ளடங்களான மேம்பாடுகள் மற்றும் ஏறாவூர் விசேட புடவை உற்பத்தி வலய உருவாக்கம் எமது பகுதிகளுக்கு முக்கியத்துவங்களாக அமைகின்றன. ஏறாவூர் புடவை உற்பத்தி வலயம் என்பது நீண்டகால எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், தற்போது செயற்பாட்டிலுள்ள வவுனியா மற்றும் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டைகளின் மேம்பாடு தொடர்பிலும், ஏற்கனவே செயற்பட்டு, தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, உப்பளங்கள், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை போன்ற ஏனைய கைத்தொழிற்துறை சார்ந்த தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும், பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்பதனையும் இங்கு அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை தொடர்பில் பார்க்கின்றபோது, மன்னார், முசலி, கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகளில் கலப்பு, புதுப்பிக்கத்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துறைமுகங்களைப் பொறுத்தவரையில், காங்கேசன்துறை இறங்குதுறை பணிகளுக்கென 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகம் அபிவிருத்தியடையும் நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே எமது பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்களாக ஏனைய தேவைகளுக்கேற்ற பொருட்களையும் கொண்டு வருவதன் மூலம், குறைந்த விலையில், இலகுவாக அவற்றை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு எமது மக்களுக்கு ஏற்படும்.

இத்தகைய அபிவிருத்திகளின் மூலம் எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ஊடக அமைச்சின் கீழ் 100 மில்லியன் ரூபா மட்டக்களப்பு புதிய தபாலகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலே சுன்னாகம் தபாலகம் மற்றும் தபால் அதிபர் தங்குமிட கட்டிட நிர்மாணத்திற்கென 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி 26.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், அதன் பணிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஊடக அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், உலகளாவிய அனர்த்தம் காரணமாக வாழ்வாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் போன்றோருக்கான சலுகைகள், நிவாரணங்கள் போன்ற செயற்திட்டங்கள் பெரிதும் வரவேற்கத்தக்க திட்டங்களாகும்.

அதேபோன்று பட்டாதாரிகளுக்கான மேலும்,  வேலைவாய்ப்பு வழங்குவது என்ற விடயமும், பட்டதாரிகளுக்கான நியமன நிரந்தரமாக்கலும் காலத்தின் தேவையாகவுள்ளன. எமது ஜனாதிபதி அவர்கள் பதவியேற்றதன் பின்னர் இதுவரையில் 63 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 1, 793,533 சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் பெருமளவினர் காத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. எனவே, தற்போது நடைமுறையில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்துவது நல்லதென நினைக்கின்றேன். அத்துடன், இத்திட்டத்தைப் பயன்படுத்p, எமது மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், இந்த அரசாங்கம். காணாமற்போனோர் தொடர்பில் பரிகாரம் காண்பதற்கான ஒரு மனிதாபிமான செயலாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தனது அவதானத்தைச் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. உறவுகள், தோழர்கள், என்னோடு பழகியவர்கள் காணாமற்போனதன் வலியை நான ;உளமாற  உணர்ந்தவன் என்ற வகையில், காணமற்போன உறவுகளது உறவினர்களது உணர்வுகளையும் நான் அறிவேன்.

காணாமற் போனோரது உறவுகள் என்னைச் சந்தித்து, என்னிடம் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த வகையில், இம்முறை வரவு – செலவுத் திட்டமானது, தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட, பிரதேச அபிவிருத்திகளின் பாலான முதன்மைத்துவங்களைக் கொண்ட வரவு – செலவுத் திட்டமாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையில், படிப்படியாக வெளிநாட்டு இறக்குமதி மோகத்திலிருந்து விடுபட்டு, தேசிய உற்பத்தியின்பால் மக்கள் நாட்டம் கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்றைய உலக நடத்தைகள் அவ்வாறானதொரு பாடத்தையே ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் உணர்த்தி வருகின்றன.

அந்த வகையில், இந்த வரவு – செலவுத் திட்டத்தை எமது மக்கள் சார்பாக வரவேற்று எனது உரையை முடித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி,

Related posts: