காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017

தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான மாற்று ஏற்பாடுகளைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

காணிகள் தொடர்பில் இங்கு எனது கருத்துக்களை முன்வைக்கின்ற நிலையில் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, மீண்டும் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதிலும், உரித்தைப் பெற்றுக் கொள்வதிலும் ஏற்படுகின்ற காணிப் பிணக்குகள் அதிகமாகக் காணப்படுகின்ற நிலையில், இதற்கு துரித ஏற்பாடாக அப் பகுதிகளில் காணிக் கச்சேரிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன்.

அந்த வகையில், பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தல், மக்களது ஆதனங்களை இனங்கண்டு கொள்ள முடியாமை, உரிய ஆவணங்கள் அல்லது பதிவேடுகள் அழிந்து போயுள்ளமை, அந்த ஆதனங்களில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றமை, விவசாய நிலங்களில் பிறர் பயிர்ச் செய்கையினை மேற்கொள்கின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அதே நேரம், கடந்த கால அரசியல் சூழ்நிலைகள், அச்சுறுத்தலான பின்னணிகள், நிச்சயமற்ற எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் காணிகள், கட்டடங்கள் என்பன மாற்று நபர்களுக்கு குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை, அல்லது, அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு, கைமாற்றம் செய்துள்ள சந்தர்ப்பங்கள் என்பன தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றங்களில் தங்களது உடமையுரித்து குறித்து மீள நிலை நிறுத்துவதற்கும், யுத்தம் தவிர்ந்த ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் குழப்ப சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்துக் கொண்டிருப்போருக்கு எதிராக தமது உரிமைகளை மீள நிலை நிறுத்துவதற்கும் இயலாமையுடையவர்களை, இயலச் செய்வது தொடர்பில் விசேட சட்ட ஏற்பாடுகளை வகுக்க வேண்டிய தேவை குறித்து இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேற்படி விடயங்களை சீர்திருத்தங்களாக 2016ம் ஆண்டின் 5ம் இலக்க ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும், அத்துடன், ஆட்சியுரிமை அடிப்படையில் பாதிக்கப்பட்ட பிறருக்குச் சொந்தமான காணிகளில் பல ஆண்டு காலமாக திருத்தங்களையும், முதலீடுகளையும், பண்ணைகள் மற்றும் பயிர்ச் செய்கைகளையும் மேற்கொண்டு, அதற்கான செலவுகளை செய்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மற்றைய தரப்பினருக்கு இச் சட்டமானது பாதகமான விளைவுகளைத் தரக்கூடும் என்பதால், இதற்கொரு மாற்றுத் திட்டத்தை விரைவாக வகுக்குமாறும்,

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்களில் இச்சட்ட மூலத்தின் அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைத்து, தீர்வுகளை நாடுவது என்பது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருத்தமாக இருக்காது என்பதால், விசேட காணி மத்தியஸ்த முறைமையொன்றை, மாற்று ஏற்பாடாக இதற்கென அமைக்குமாறும், பாதுகாப்புப் படையினர் தம் வசம் கொண்டுள்ள பொது மக்களின் காணி, நிலங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சாதகமான சட்ட ஏற்பாடுகளும் வழங்கப்படாதுள்ள நிலையில், மேற்படிச் சட்டத்தில் அதற்கான விசேட ஏற்பாடொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால் வெறுமனே அதற்கென அலுவலகங்களை அமைத்து, அதிகாரிகளை நியமித்து, நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, பிரச்சாரங்களை மாத்திரம் முன்னெடுத்து வருவதாலும், ஆளுக்காள் தேசிய நல்லிணக்கம் குறித்து கதைத்துக் கொண்டிருப்பதாலும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கம் என்பது உணர்வுப்பூர்வமாக உருவாக்கம் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இந்தச் சபையிலே தெரிவித்து வருகின்றேன்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிகவும் இக்கட்டான – தேசிய நல்லிணக்கத்திற்கு பலத்த எதிர்ப்புகளைக் கொண்டிருந்த ஒரு சூழலில் அதனை ஒரு கொள்கையாக எமது நாட்டில் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் துணிந்து முன்னெடுத்தவர்கள் என்ற வகையில், எமக்கிருக்கின்ற அனுபவங்களைக் கொண்டே இதை நான் கூறி வருகின்றேன். எனவே, எமது மக்களது காணி, நிலங்களை விடுவிப்பதிலும்கூட தேசிய நல்லிணக்கத்திற்கான வித்து உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதை தேசிய நல்லிணக்கம் தொடர்பில் முயற்சிக்கின்ற அனைத்து தரப்பினரும் உணர முன்வர வேண்டும்.

எனவே, படையினர் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டிடங்கள் என்பன எமது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இன்று முல்லைதீவு மாவட்டத்திலே, கேப்பாபிலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக் கோரி 9வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வலிகாமம் வடக்கிலே இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் நிறையவே இருக்கின்றன. எமது மக்கள் இந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை. எமது மக்களது இந்த அடிப்படைப் பிரச்சினையை வைத்து தொடர்ந்து அரசியல் பிழைப்பு நடாத்திக் கொண்டிருப்பவர்கள், அரசியல் ரீதியிலான போதிய அதிகாரங்களை  கொண்டிருக்கின்ற இன்றைய நிலையிலும,; அந்த காணி, நிலங்களை விடுவித்து, எமது மக்களுக்கு வழங்குவதற்கு, முன்வருவதாக இல்லை. எமது மக்களது வாழ்வாதாரங்கள் அந்த காணிகளில் தேங்கிக் கிடக்கின்றன. வளமிக்க, செழிப்பான விவசாய மற்றும் கடற்றொழில் சார் காணிகள் அங்கே மடக்கியும், முடக்கியும், மிகுந்த பயன்களைவிட குறுகிய பயன்களுக்காகவும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

அந்தவகையில,; கேப்பாபிலவு மற்றும் பிலவுகுடியிருப்பு பகுதிகளில் சுமார் 209 குடும்பங்களது சுமார் 625 ஏக்கர் காணி, நிலங்களை விடுவிக்கக் கோரியே இம் மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து, தொடர்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான மாற்று ஏற்பாடுகளைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, இந்த விடயத்தையும் இனவாதமாகவோ, குறுகிய அரசியல் இலாபமாகவோ கருதாமல், குறைந்தபட்சம் மனிதாபிமான உணர்வுடன் அவதானத்தைச் செலுத்தி, எமது மக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு சில பக்தர்களால் கோவில்களுக்கென எழுதிக் கொடுக்கப்பட்ட காணிகள் பெரும் அளவில் காணப்படும் நிலையில், வடக்கில் மக்களது காணியற்றப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அந்தக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய பெறுமானத்தை குறிப்பிட்ட கோவில்களுக்கு வருமானம் என்ற வகையில் வழங்குவதற்கும், அக் காணிகளில் அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை அமைப்பதற்கு ஏதுவாக, அக் காணிகளுக்கு சட்ட ரீதியான உறுதி அல்லது அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கும் ஒரு விசேட ஏற்பாடொன்றை வகுக்குமாறும்,  அரச காணி அளிப்புகளின் உரித்தை இரத்த உறவினருக்கு கைமாற்றல் செய்கின்றபோது, பால் சமத்துவத்தைப் பேணும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

மது வரிகள் சட்டத்தின் மீதான அறிவித்தல் குறித்து இச் சபையில் பேசப்படுகின்ற நிலையில், அத தொடர்பிலும் சில கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்று எமது நாட்டில் மதுபானம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்ற மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தையும். மட்டக்களப்பு இரண்டாம் இடத்தையும், நுவரெலியா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்ற ஒரு நிலையை காண்கின்றோம். இந்த மாவட்டங்களில் காணப்படுகின்ற மதுபான சாலைகளில் அநேகமானவை பாடசாலைகள், வணக்க வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை அண்மித்ததாக அமையப்பெற்றுள்ள காரணத்தினால், அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 4.5 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லீற்றர் மதுபானம் அருந்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றமைக்கு இந்த மதுபான பாவனையும் பிரதான காரணமாகும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எனவே, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஒரு காலத்தில் யுத்தம் காரணமாக அழிந்த எமது சமுதாயம் இன்று, மதுபானத்தால் அழிந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

போதைப் பொருள் மற்றும் புகையிலைத் தயாரிப்புகளுக்கு எதிராக மிக அதிகமாகப் பேசப்படுகின்ற தற்போதைய சூழ்நிலையில், 2020ம் ஆண்டில் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதீத மது பாவனை குறித்தும் விழிப்புணர்வுகளையும், மேலும் வலுவான திட்டங்களையும் முன்னெடுக்க இந்த அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினம், ஈதுல் பித்ர் – றமழான் பெருநாள் தினம், நத்தார் தினம் ஆகிய 6 நாட்களிலுமாக வருடத்தில் 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.

அதே நேரம், இந்து மக்களின் மிக முக்கிய மத அனுஷ;டான தினங்களாகிய மகா சிவராத்திரி தினத்திலும், தைப் பொங்கல், தீபாவளி போன்ற திருநாட்களிலும், அதே போன்று சகோதர முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமான தினமாகக் கொண்டாடப்படுகின்ற முஹம்மது நபிகளார் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்திலும், ஈதுல் அல்ஹா – ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திலும் மேற்படி மதுபான சாலைகள் மூடப்படுவதில்லை.

எனவே, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் மேற்படி நாட்களிலும் மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது - டக்ளஸ் த...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...