காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018

காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35 நாட்களுமாக காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மக்களின் வேதனைகள் பலருக்கு இங்கே புரியாமல் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும், பாதுகாத்தல், பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் தொடர்டபில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்தலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாத்தல் தொடர்பிலான சட்டமென்பது அவசியமானதொன்றாகும். ஏனெனில் வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்பட்டவர்களால் ஏற்படுகின்ற வலியினை உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே, அத்தகையதொரு விடயம் தொடர்பில் எமது மக்களினதும், எனதும் வேதனைகளைப் பகிர்ந்து கௌ;;வதற்கு இங்கு வாய்ப்பளித்தமை குறித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது உடன் பிறந்த சகோதரர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர். என்னுடன் இருந்த உடன் பிறவா சகோதரர்கள் பலர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற எமது தமிழ் பேசுகின்ற மக்களின் உறவுகளில் பலர் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். இங்கே இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். இந்த நாட்டிலே காணாமற் போகச் செய்யப்பட்டவர்களுக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று திசைகள் கிடையாது.

காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35 நாட்களுமாக காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மக்களின் வேதனைகள் பலருக்கு இங்கே புரியாமல் இருக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நான் கதைக்கின்ற போதெல்லாம், ‘எமது நாட்டிலே அரசியல் கைதிகள் என எவருமே கிடையாது’ என ஒரு சிலர் கூறுவதைப்போல், ‘காணாமற் போனோர் என இங்கு எவருமே இல்லை’ என எவராலும் கூற முடியாத வகையில் இன, மத, பேதங்களின்றி இந்த நாட்டில் நபர்கள் காணாமற் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவேதான் காணாமற் போனோரைக் கண்டறிவது தொடர்பிலான விசாரணைகளை 1971ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும்படி நாம் ஏற்கனவே கோரியிருந்தோம்.

அதேநேரம், நபர்கள் காணாமற்போனச் சம்பவங்கள, கொலைச் சம்பவங்கள் என்பன் திசை திருப்பப்பட்டுள்ளன நிலைமைகளும் இல்லாமல் இல்லை.
கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டபோது, அது தொடர்பிலான குற்றச்சாட்டு திசைதிருப்பப்பட்டது. இப்போது இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி விசாரணைகளிலிருந்து உண்மை வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதே போன்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவும் சில குற்றச்சாட்டுகள் திசைதிருப்பப்பட்டிருந்தன. இவை தொடர்பிலும் நீதி விசாரணை அவசியம் வேண்டும் என்றே நாங்கள் இந்த அரசிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அத்தகைய நீதி விசாரணைகளின் போதுதான் அவற்றின் உண்மைகளும் வெளிவரும்.

இத்தகைய திசைதிருப்பல்களில் சில அரசியல்வாதிகள், சில ஊடக அதிபர்கள், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் என பல்துறையினருக்கு பங்குண்டு. அரசியல் உள் நோக்கங்கள் காரணமாக, காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக, ஒரு சிலரது பிழைப்பிற்காக என இவ்வாறு இவை திசைதிருப்பப்பட்டன.
அதேபோன்று, பல்வேறு அரசியல் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளும திசைதிருப்பப்பட்டன. இன்று, அச்சம்பவங்கள் தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில், காணாமற்போகச் செய்தல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் ஒருவர் மீது அல்லது ஒரு தரப்பினர் மீது சுமத்தப்பட்டால், அது தொடர்பில் பக்கசார்பற்ற முறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அக் குற்றச்சாட்டு பொய்யானது எனக் கண்டறியப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்துவதுடன், பொய்யானக் குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு எதிராக தற்போதுள்ள சட்ட மானியங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஏற்படுகின்ற சமூக, பொருளாதார, உடல், உள ரீதியிலான பாதிப்புகளுக்கேற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளையும் மேற்படி சட்டமூலம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

‘பலிக்கு உட்படுத்தப்பட்டவர்’ என்பது காணாமற் போக்கப்பட்ட ஆள் மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலின் நேரடி விளைவாகத் தீங்குற்ற எவரேனும் தனியாள் என்று பொருளாகும்’ என இந்தச் சட்டமூலத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, காணாமற் போகச் செய்தார் எனப் பொய்யானக் குற்றச்சாட்டு சுமத்தப்படுபவரும் பலிக்கு உட்படுத்தப்படுகின்றார் என்பதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களையும், காhணமற் போகச் செய்தல் தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்படுகின்றவர்களையும்; காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்ற கோரிக்கையையும் இங்கு நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

காணாமற்போனோர் அலுவலக உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் காணாமற்போனோரது உறவுகளிடத்தேயும்;, சில சிங்கள தரப்பினரிடையேயும் எதிர்ப்பு நிலை காணப்படுகின்றது. மேற்படி உறுப்பினர்கள் தெரிவானது ‘இராணுவத்தையும், இந்த நாட்டையும் காட்டிக் கொடுக்கும் ஏற்பாடு’ என சில சிங்களத் தரப்பினர் கூறுகின்றனர். அதே நேரம், ‘காணாமற்போனோர் தொடர்பான அலுவலகமானது காலங் கடத்தும் செயற்பாடே அன்றி, அதனால் எங்களுக்கு எவ்விதமான தீர்வுகளும் கிட்டாது’ என காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் எமது மக்கள் சார்ந்து எழுந்திருந்த பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை. ஒரு பிரச்சினையுடன் இன்னொரு பிரச்சினை, இன்னொரு பிரச்சினையுடன் மேலுமொரு பிரச்சினை என பிரச்சினைகள் நாளுக்கு நாள் பெருகி, வளர்ந்து, ஓர் இடத்தில் தேங்கிக் கிடந்த நிலைமையிலேயே ‘இந்தப் பிரச்சினைகளுகெல்லாம் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள்’ என வாக்குறுதியளித்து இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

ஆனாலும், இன்று வரையில் எமது மக்களது பிரச்சினைகள் எதுவுமே தீர்ந்ததாக இல்லை. மேலும், வேறு பல பிரச்சினைகளும் பெருகி, நாடே பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள ஒரு நிலைமையே காணப்படுகின்றது.  காணாமற் போனவர்களைக் கண்டறிதல் என்பது வெறும் தகவல்களைப் பெறுதல் என்பதல்ல. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயங்கள் கிடைக்க வேண்டும். பரிகாரங்கள் கிட்ட வேண்டும். இவை அனைத்துமே இந்த நாட்டில் மீண்டுமொரு இன ரீதியிலான பிரிவுகளுக்கு வித்திடாமல், தேசிய நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கடந்த கால யுத்தம் என்பது, எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, எதிர்காலத்தில் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது.

கடந்த கால யுத்தமானது கற்றறிந்த பாடமாக இருக்க வேண்டும். கழற்றியெறிந்த பாடமாக இருக்கக்கூடாது. அந்தக் கற்றறிந்த பாடங்களின் வேதனைமிக்க கதாபாத்திரங்களாகவே இன்று காணாமற்போனோர்களது உறவினர்கள் காத்திருக்கின்றார்கள். காணாமற்போன தங்களது உறவுகளைத் தேடிச் செல்லும் பயணத்தில், அவர்கள் இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டாவது, தங்களது காணாமற் போன உறவுகளைக் கண்டறிவதற்கான பாதையில் வெளிச்சம் பிறக்கும் என்ற அவர்களது எதிர்பார்ப்பகளும,; தற்போது தகர்க்கப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது. காணாமற்போரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பில் ஆரம்பத்தில் எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இன்று பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியவர்கள் பலரும், தெரிவித்து வருகின்ற ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளால் அம் மக்களது நம்பிக்கைகள் சிதைந்துள்ளதாகவே தெரிய வருகின்றது.

எனவே, மேற்படி காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பில் – அதன் பணிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமாக அறிவுறுத்தப்படல் வேண்டும். ‘வலுக்கட்டாயமாக காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம்’ என்கின்ற இந்த சட்டமூலத்திற்கு அமைவாக, மேற்படி காணாமற்போனோரைக் கணடறிவதற்கான அலுவலகமும் செயற்படுமா? அல்லது ‘காணாமற்போக்கப் பட்டோரையும்’ கண்டறிவது தொடர்பில் செயற்படுமா? என்பதுதான் எமது மக்களிடையே நிலவுகின்ற கேள்வியாக இருக்கின்றது.

அதாவது, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி முதற்கொண்டு அதிலிருந்து எதிர்காலத்தில் காணாமற் போக்கப்படுவோர் தொடர்பில் மாத்திரமே கண்டறியுமா? அல்லது இதற்கு முன்பதாக – கடந்த காலத்தில் காணாமற் போக்கப்பட்டோர் தொடர்பிலும் கண்டறியுமா? இதற்கு முன்பதாக – கடந்த காலத்தில் காணாமற் போக்கப்பட்டோர் தொடர்பிலும் கண்டறியும் என்றால், அது எப்போதிருந்து? என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.
பொது மக்களுக்குத் அறிவுறுத்தப்பட்டு, கலந்துரையாடப்பட்டு, மக்கள் தெளிவினைப் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்து வருவதால், எமது மக்கள் மத்தியில் தேவையற்ற முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
யுத்தத்திற்குப் பின்னரான காலமானது இனங்களுக்கிடையில் சந்தேகங்களை களைகின்ற, பரஸ்பர நம்பிக்கைகளை கட்யெழுப்புகின்ற, அதன் ஊடாக பகைமைகளை மறுக்கின்ற தேசிய நல்லிணக்கத்தை, சகவாழ்வினைக் கட்டியெழுப்பி, வலுவாக்கின்ற காலமாக இருத்தல் வேண்டும். அதன் மூலமாகவே இந்த நாட்டின் சமூக, பொருளாதார, ஆரோக்கியமான அரசியல் மேம்பாடு நோக்கிச் செல்ல முடியும்.

இன்று இந்த நாட்டில் அனைத்துத் துறைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. சமூகங்களிடையே நம்;பிக்கைகள் சிதைந்து வருகின்றன. பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் காணப்படுகின்றது. அரசியல், ஸ்திரத் தன்மை இழந்து காணப்படுகின்றது. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், ஊர்வலங்கள், பகிஸ்கரிப்புகள். சட்டம், ஒழுங்கை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு, வன்முறைகளில் ஈடுபடுகின்ற வன்முறையாளர்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்களின் பிரதிநிதிகளாகவே நாம் இந்தச் சபையினை பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம். மக்களின் நலன்கள் கருதியே நாம் ஒரு தீர்மானத்தை எடுக்கின்றோம் என்றால், நாம் ஏன் அவை தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்துவதில்லை? என்ற கேள்வியே என்னுள் எழுகின்றது.
மக்களுக்குத் தெளிவுபடுத்தி, முறையான கலந்துரையாடலுக்கு விடப்படாமை காரணமாகவே அரசியல் யாப்பு தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்கனவே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்று கூறப்போய் தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும், சிங்கள மக்கள் தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.எனவே, இந்த சட்டமூலமாகட்டும், காணாமற்போனோரைக் கண்டறிவது தொடர்பான அலுவலகமாகட்டும் இவை தொடர்பிலும் எமது மக்களுக்கு அறிவுறுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 3 டிசம்பர் 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - புதிய அரசியல் யாப்ப...
சிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோர...

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்...