கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Tuesday, October 4th, 2016
வவுனியா. செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில் வாழ்ந்துவரும் மக்களுக்கு குடி நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், அங்கு குளமொன்று காணப்படும் நிலையில் அதிலிருந்து நீரைச் சுத்திகரித்து வழங்கக்கூடிய திட்டங்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(04) நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, புனரமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது –
வவனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் வசித்துவந்த சுமார் 250 குடும்பங்கள் யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து, அதில் சுமார் 90 குடும்பங்கள் மீண்டும் 1994ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ளன. நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் கூலித் தொழில்களைத் தங்களது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இக் கிராமத்து மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் இதுவரை காலமும் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு குளம் காணப்படுகின்ற நிலையிலும், இம் மக்கள் குடிநீரின்மை காரணமாகப் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 8 குழாய்க் கிணறுகள் இம் மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் இரண்டின் நீரை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக உள்ளதாகவும், கோடை காலத்தில் மிகவும் குறைந்தளவிலான நீரை மாத்திரமே இக் குழாய்க் கிணறுகளின் மூலம் பெற முடியுமென்றும் கூறப்படுகின்றது. ஏனைய 6 குழாய்க் கிணறுகளின் நீர் பாவனைக்கு எடுக்க இயலாததாக உள்ளதாகவும், மேலும் இக் கிராமத்தில் 6 கிணறுகள் இருந்தும் அவற்றின் நீரை குடிநீர் பாவனைக்கன்றி ஏனைய வேறு தேவைகளுக்கே பயன்படுத்த முடிகிறது எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் அதிக தூரம் சென்று பணம் கொடுத்து குடி நீர் பெற வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும், தாங்கள் ஈட்டுகின்ற சொற்ப வருமானமும் இதற்கென செலவாவதாகவும், வசதியற்றவர்கள் இக் கிராமத்து நீரைப் பருகி அவர்களில் பலருக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இம்மக்களின் தேவை கருதி அமைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை ஒரு வருடமே இயங்கிய நிலையில் தற்போது அது மூடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதனால் இம் மக்கள் சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் வரையில் தங்களது தேவைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குச் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதே நேரம் போக்குவரத்துப் பாதைகள் சீரின்மை காரணமாக மோட்டார் சைக்கிள் தவிர்ந்த வேறு வாகனங்கள் இக் கிராமத்திற்குள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இங்கு ஒரேயொரு பாடசாலையே உள்ள நிலையில், அதில் தரம் 05 வரையிலேயே கற்பிக்கப்படுகின்றதாகவும், மேலதிகக் கல்விக்காக இங்குள்ள மாணவர்கள் சுமார் 6 கிலோ மீற்றர் நடை பயணத்தில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாலை 3 மணியானால் இந்தக் கிராமத்திற்குள் நுழைகின்ற யானைகளால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
எனவே, இக் கிராமத்தில் கூட்டுறவுச் சங்கக் கிளை ஒன்றினை நிறுவுவதற்கும், போக்குவரத்து வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கும், காட்டு யானைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் உரிய தரப்பினரைக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|