கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2019

இன்று இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப் போயிருக்கின்ற நிலையில், மின்சாரப் பிரச்சினையும் தற்போது தலைதூக்கி இருக்கின்றது.

இந்த நாட்டில் தற்போதைய இந்த வறட்சி நிலைமை ஆரம்பித்திருந்த காலகட்டத்திலிருந்தே பல ஊடகங்கள்கூட, எதிர்வரும் நாட்களில் மின் தடைக்கு இந்த நாடு உட்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறியிருந்தன. அந்த எச்சரிக்கையினை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக, ஊடகங்களைப் பார்த்து,  கறுப்பு ஊடகங்கள் என வர்ணித்துக் கொண்டிருந்தீர்கள். இறுதியில் இந்த நாடு இன்று இருட்டுக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது.

இன்று மக்களைப் பார்த்து, சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறீர்கள். மின்சாரத்தை இந்த நாட்டில் வீண்விரயம் செய்வது யார்? எனக் கேட்க விரும்புகின்றேன். சாதாரண பொது மக்களா? அரச நிறுவனங்களா? மின்சாரத்தை மிக அதிகளவில் வீண் விரயம் செய்கின்றார்கள்? என்ற கேள்வியை நீங்களே கேட்டுப் பாருங்கள்

இந்த நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்து கொண்டும், அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இப்போது இரண்டு மின் குமிழ்களை அணைத்து விடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்துகின்றீர்கள்.

இந்த நாட்டில் வறுமையில் இருக்கின்ற மக்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென வரவு – செலவுத் திட்டத்தில் கூறுகின்றீர்கள். அதற்கென சமுர்த்தி பயனாளிகளுக்கென 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குகின்றீர்கள். இந்த நாட்டில் கிட்டத்தட்ட 13 இலட்சம் பேர் சமுர்த்திப் பயனாளிகளாகவுள்ளனர். மேலும் 6 இலட்சம் பேரை அதில் இணைக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், சமுர்த்திகூட இன்றிய நிலையில், பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலையில் இருக்கின்றன. இவர்களில் மின்வசதி இன்றிய மக்களும் வாழ்கிறார்கள்.  மின் வசதி இருக்கின்ற மக்களும் நாளாந்தம்  ஒன்று அல்லது, இரண்டு மின் குமிழ்களையே பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். இதே நிலையில்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் நிலைமைகள் இருக்குமென்றே கூற முடியும். அதையும் அணைத்துவிட்டு, இருட்டில் இருக்கச் சொல்கிறீர்களா? என எமது மக்கள் கேட்கின்றனர்.

குளிரூட்டிகளை செயற்படுத்த வேண்டாம் என்கிறீர்கள். இந்த நாட்டில் எத்தனை வீடுகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகின்றது. இன்றிருக்கின்ற விலைவாசிகள், வரி விதிப்புகள் காரணமாக எமது மக்களில் பெரும்பாலானவர்களது வயிறுகள் பற்றி எரிகின்ற நிலையில், எமது மக்களின் வயிறுகளை தளர்விப்பதற்கே எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாத நிலையில், மின்சாரத்தை வீண்விரயம் செய்து அதற்கான பணத்தைக் கட்டுவதற்கு அவர்கள் முன்வருவார்களா? அவர்களிடம் அத்தகைய பொருளாதார வசதிகள் இருக்கின்றதா? என கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரச நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அநேகமானவற்றில் மின் பாவனையானது மிக அதிகளவில் வீண் விரயம் செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுப்பதற்கு நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள். தேசிய மின் கட்டமைப்பை நிறுத்திவிட்டு, மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறு கூறுகிறீர்கள். எரிபொருள் உங்களுக்கு இலவசமாக இறக்குமதியாகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இன்று இந்த மின் வெட்டு காரணமாக தொழில் முயற்சியாளர்கள் பலரும், வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்கின்ற நிலையில் மின்வெட்டு இடம்பெறுகையில், கைத்தொழிற்துறையில் பாதி நாள் உற்பத்திகள் பாழாகிப் போய்விடுகின்றன. எல்லா தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் மின்பிறப்பாக்கிகள் இல்லை.

அவ்வாறு மின்பிறப்பாக்கி கொண்டு மின்சாரம் பெற்றாலும்கூட மறுபக்கத்தில் எரிபொருள் விலையைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. மேலும் எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைகள் வரலாம். அதற்கென அதிக நிதி வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டி வரலாம்.

தற்போதைய மின்சார நெருக்கடிக்கு தீர்வு மின்வெட்டு ஒன்றுதான் என்றால், அதன் பின்னணியில் ஏற்படுகின்ற மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானிக்க வேண்டும்.

இந்த நாட்டில் மின்வெட்டு இடம்பெறக் கூடுமென 2016ஆம் ஆண்டிலேயே தான் தெரிவித்திருந்ததாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்;வுகாண வேண்டுமாயின் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டுமெனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக அவர் கூறுகின்றார். 

மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர்களும் ஏற்கனவே கூறியிருந்ததாகத் தெரிய வருகின்றது. அப்படி எனில் உரிய காலத்தில் ஏன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? என்ற கேள்வி எழுகின்றது

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தேசிய மின் கட்டமைப்புக்கு புறம்பாக சூரிய சக்தி வலுவைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த அளவில் மின் பாவனையை மேற்கொள்கின்ற வீடுகள் இனங்காணப்பட்டு, இரண்டு லெட் மின்குமிழ் வீதம் கொடுக்கப்படும் எனவும் அரச தரப்பில்  கூறப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் என்னவாயிற்று? என்பது தெரியாது. அதாவது, இந்த நாட்டில் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படுகின்ற நிலையில் அவற்றுக்கு தீர்வாக கூறப்படுகின்ற வசீகரமான வார்த்தைகள் யாவற்றையும் பின்னர் படிப்படியாக காற்றிலே பறக்கவிடுவது வழக்கமாகியே விட்டது

லெட் மின்குமிழ் பயன்பாட்டினை இந்த நாட்டில் பரவலாக்குவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்குரீதியில் மேற்கொண்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று இந்த நெருக்கடி நிலைமை தோன்றியிருக்காது.

சூரிய மின் வலு புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது. புதுப்பிக்கத்தக்க வலு என்றொரு அமைச்சும் மின்வலு அமைச்சுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கு எட்டு வீத வட்டிக்கு மூன்றரை இலட்சம் ரூபா கடனாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இருந்தும் உங்களது சூரிய சக்தி மின்வலு உற்பத்தி சார்ந்து மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது பற்றி நீங்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அந்த எட்டு வீத வட்டியையும், தவணைக் கொடுப்பனவுகளையும் கொடுத்து முடிக்கும் போது, சாதாரண மக்களுக்கு 25 வருடத்திற்கும் மேலாக மின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்பதால் சாதாரண மக்கள் அத்திட்டம் தொடர்பில் திரும்பியும் பார்க்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த சூரிய வலு மின்னுற்பத்திக்கான உபகரணங்களை கொண்டு வந்து விநியோகஞ் செய்கின்ற 230 நிறுனங்கள் அனுமதி பெற்ற நிறுவனங்களாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிறுவனங்களும் மக்களுக்கு பணி செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனாலும், அதிக விலை கொடுத்து நாம் ஏன் நட்டமடைய வேண்டும்? என மக்கள் நினைக்கின்றார்கள். சூரிய வலு மின் உற்பத்தி தொடர்பில் உங்களுக்கு அதிக அக்கறை இருப்பின்? அதனது உபகரணங்களுக்கான வரியை உங்களால் குறைக்க முடியாதா? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கை மக்களின் சூரிய ஒளி மூலமான மின் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியானது 50 அமெரிக்க டொலர் மில்லியன் நிதியினை குறைந்த வட்டிக்கு அனுமதித்திருந்ததாகக் கூறப்பட்டது. கோரிக்கை விடுத்திருந்தால் அதனை 200 அமெரிக்க டொலர் மில்லியன் வரையில் அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தக் கடனை விரைவாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையிலும், மக்களை ஆர்வமூட்டுகின்ற கடன் திட்டமாகவும் மாற்றியிருந்தால், இன்று இந்த நாட்டில் மின்சாரத்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறப்படுகின்றது.

நாட்டுக்குக் கிடைத்திருந்த இந்த நிதியை அரசு தனது தேவைக்குப்  பயன்படுத்திவிட்டு, இன்று மின் வெட்டை அமுல்படுத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டையே பலரும் முன் வைக்கின்றனர்.

இன்று இந்த நாட்டில் இருக்கின்ற எத்தனையோ அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், பகல் வேளையிலும் மின்குமிழ்கள் இன்றி பணியாற்ற முடியாத நிலையிலான ஏற்பாடுகளிலேயே அவை அமையப் பெற்றுள்ளன. பகலில் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக இல்லை. சூரிய ஒளி மின்சாரம் பற்றி கூறிய நீங்கள், இன்று வரையில் எத்தனை அரச அலுவலகங்களுக்கு அந்த வாய்ப்பினை எற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்? என்ற கேள்வியும் எழுகின்றது

மழை வந்தால்தான் மின்சார உற்பத்தி நடைபெறும் என்கின்ற எதிர்பார்பிலிருந்து மாறுபட்ட திட்டங்கள் தொடர்பில் இந்த நாடு சிந்திக்க வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்துவிட்டன. அந்தச் சநத்தர்ப்பங்களில் எதனையும் சரிவரப் பயன்படுத்த முடியாத, நீங்கள் எதிர்காலத்திலும் இதே நிலையில்தான் இருக்கப் போகின்றீர்களா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

இந்திய அரசின் உதவியுடன் மேலுமொரு அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில்  கூறப்பட்டு, இன்று ஆறு வருடங்களும் கடந்துவிட்ட நிலையில், அது தொடர்பில் இன்னமும் இழுபறி நிலையே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்திய உதவியுடனான இந்த அனல் மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை நீங்கள் எரிவாயு உற்பத்தி நிலையமாக மாற்றுமாறு கோரி வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பாரிய பரிமாணத்தினாலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலைய திட்டங்கள் யாவும், உரிய சந்தர்ப்பங்களில் அனுமதி கிடைக்காமை காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவற்றின் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

2037ஆம் ஆண்டாகும்போது தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு 1,389 கிகா வோட்  சூரிய வலு மின் உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதுகாலவரைக்குள் நிலக்கரியினால் 2,700 கிகா வோட் அலகு உற்பத்தி செய்ய முடியுமென மின்சார சபை கூறுவதாகத் தெரிய வருகின்றது. எனினும், இதற்கான வேலைத் திட்டங்கள் என்ன? என்பது பற்றி தெளிவில்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் இப்படியே, 2010ல் அது நடக்கும், 2015ல் இது நடக்கும், 2020ல் எல்லாம் நடக்கும் எனக் கூறிக் கூறியே இருக்கின்ற இந்த காலங்கள், எதுவுமே இல்லாமல் வெறுமனே கழிந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்த நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் உரியதொரு பொறிமுறையினை ஏற்படுத்துவதற்கு இப்போதாவது முன்வாருங்கள். இயற்கை மழையும் தற்போதைக்கு கைகொடுப்பதாக இல்லை. செயற்கை மழையும் கை கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் இப்போது போய் கடவுளிடம் மன்றாடுவதில் எவ்விதமான பயனும் இல்லை. கடவுள் பல்வேறு சந்தர்ப்பங்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனை எல்லாம் நீங்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்ததை ஏற்காமல், அது உழுத்துப் போனது என்றும், தும்புத் தடியால்கூட அதை தொட்டும் பார்க்க மாட்டோம் எனக் கூறியவர்கள், இன்று திடீரென சுடலை ஞானம் வந்ததுபோல், ‘மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அடங்கிய 13வது திருத்தம், அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலேயே இருக்கிறதென’ நாங்கள் அன்று முதல் கூறி வருவதை ஏனைய தமிழ்த் தரப்பினர் இன்று ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார்கள். இதனை அப்போதே ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த நாடும், எமது மக்களும் இத்தனை அழிவுகளுக்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

அதுபோல்தான் இருக்கிறது உங்களது கடவுள் மன்றாட்டக் கதைகளும் எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் எழுவைத்தீவுப் பகுதியிலே நிர்மாணிக்கப்பட்டிருப்பதைப்போன்று – ஹைபிரிட் முறைமையிலான மின் விநியோகத் திட்டத்தினை ஏனைய அனைத்து தீவுகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதேநேரம், கடந்த காலங்களில் மீள்குடியேற்ற மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் மற்றும் மின் விநியோகம் வழங்கப்பட்டதைப்போன்று, மீள்குடியேற்றப்பட்டு, மின்வசதியற்ற குடும்பங்களுக்கென மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேநேரம், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மின்சார சபை சிற்றூழியர்கள் முதற்கொண்டு ஏனைய வெற்றிடங்களுக்கு அப்பகுதி சார்ந்தவர்களையே நியமிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நெடுஞ்சாலைகள் தொடர்பில் கூறுகின்றபோது, தற்போது ‘தங்கப் பாதை’ என்கின்ற ஒரு வீதி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தெரிய வந்துள்ளது. இந்த ‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படும்? என்பது குறித்தும் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் இடையிலான பாதை நிர்மாணப் பணிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருந்தது. இதன் தற்போதைய நிலைமை என்னவென்றும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்

அதிவேகப் பாதைகள், பெருந்தெருக்கள் என இந்த நாட்டில் வீதி கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னமும் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்தபாடில்லை என்றே தெரிய வருகின்றது.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு பக்கத்தில் அதிவேகப் பாதைகள், பெருந்தெருக்கள் அமைக்கப்படுகின்ற அதே சமாந்தர காலகட்டத்தில் இரயில் பாதைகளின் விஸ்தரிப்புகளும் தேவையாகவே உள்ளன.

குறிப்பாக, இரயில் கடவைகள் சார்ந்த இடங்களில் மேம்பாலங்களை அமைக்கின்ற ஒரு திட்டத்தினை கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக விரைவான இரயில் சேவைக்கு வழிவிடுவதனுடன், இரயில் கடவை விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

Related posts:

தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித...
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...