“ஒரே நாடு ஒரே சட்டம்” – இனத்துவம் அன்று சமத்துவம் ௲ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 22nd, 2020

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இனதுவமல்ல சமத்துவம். இங்கு சகல இன மக்களினதும் இனத்துவ அடையாளங்கள் சமத்துவமாகப் பேணப்கபடும். இதை நான் நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

அத்துடன் ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான சமத்துவமான நீதியே எமது மக்களின் இலட்சியம். நாடாளுமன்றம் செல்லும் போது இன்னொரு கொள்கை இத்தகைய ஒரு கட்சி இரு கொள்கை என்ற அரசியல் பித்தலாட்டங்களை நிறுத்தி ஜாதார்த்த ரீதியான அணுகுமுறைக்கு வாருங்கள் என்றும் இதர தமிழ் தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது புதிய நாடாளுமன்றில் நேற்றையதினம் கொள்கைவிளக்க உரை நிகழ்த்தியபோது ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீட்டிற்கு அமைய புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் அதேவேளை, அரசாங்கத்தின் முதல் பணியாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

அவரது உரையின் முழு வடிவம்….

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நேற்றைய தினம் இந்த நாட்டின் 9வது நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் எனது கருத்துக்களையும் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் சமூக பொருளாதார கலாசார மற்றும் தேசிய பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலஹீனப்பட்டுப் போயிருந்த இந்த நாட்டினை, அனைத்துத் துறைகளிலுமாகக் கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு வாய்ப்பு இப்போது உருவாகியிருக்கின்றது என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

குறிப்பாக, அதிகளவிலான வீழ்ச்சி நிலையை நோக்கிப் போயிருந்த எமது பொருளாதார நிலைமையானது அண்மைக்காலமாக தொடர்கின்ற உலகளாவிய கொரோனா தொற்று அனர்த்தம் காரணமாக மேலும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும், அந்த பாதிப்புகளை எமது மக்களை உணரவிடாத வகையில் பாதுகாத்தும் கொரோனா அனர்த்தம் அதிகளவில் நாட்டில் பரவ விடாது தடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் தலைமைமீது மக்கள் அதிகளவிலான நம்பிக்கை கொள்ள வழியேற்படுத்தி உள்ளதையே அண்மைய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அந்த வகையில் இந்த நாட்டுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது சிறந்த தூர நோக்கு கொண்ட மனிதாபிமானமான தலைமைத்துவம் நாட்டை வளர்ச்சி நோக்கி முன்னெடுப்பதில் எப்போதும் கடுமையாக உழைக்கின்ற கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டல்கள், இவற்றோடு பின்னணியில் இருந்தாலும் முன்னணி வகித்து சிறந்த திட்டங்களை நாட்டின் எதிர்காலம் தொடர்பில் வகுத்துக் கொண்டிருக்கும் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களது உழைப்பு எல்லாம் இணைந்து நிச்சயமாக இந்த நாட்டை பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கைப் பிரகடன உரையிலே இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அனைத்துத் துறைகள் சார்ந்தும் முற்போக்கான திட்டங்களை வகுத்து, அதனை செயற்படுத்துவது தொடர்பில் உணர்த்தியிருந்தார்.

குடும்ப பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வது முதற்கொண்டு இந்த நாட்டு மக்களால் அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரக்கூடிய நிலைமை வரையில் சகல துறைகளையும் முன்னேற்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது விணைத்திறன்மிக்க நோக்கு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைவராலும் வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக வறுமை நிலைக் கொண்ட குடும்பங்களின் இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு முன்னுரிமை 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு என்பன மிகவும் வரவேற்கத்தன.

அதேநேரம் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பித்து, இதுவரையில் நியமனங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்கின்ற பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க முடியும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் வறுமைக்கு உட்பட்ட குடும்பங்களின் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் சம காலத்தில் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது சாலச் சிறந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் கல்வித் துறை மறுசீரமைப்பு என்பது இந்த நாட்டின் கட்டாயத் தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. மாணவர்கள் பொதி சுமக்கின்ற காலம் போய் மாணவர்களை ஈர்க்கக் கூடிய வகையிலும், நவீன தொழிற் சந்தைக்கு ஏற்றவகையிலும் எமது கல்வித் துறையில் மாற்றங்கள் வர வேண்டியது அவசியமாகும்.

கிராமிய மருத்துவமனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் விசேட அவதானத்தைச் செலுத்தி உள்ளார். எமது பகுதிகளிலும் கிராமத்து மட்ட மருத்துவ மனைகள் பல்வேறு தேவைகள் மற்றும் குறைபாடுகளுடன் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அந்த மருத்துவமனைகளும் தரம் உயரும் என்ற நம்பிக்கை இப்போது எமது மக்களுக்குள் எழுந்திருக்கின்றது.

அதேநேரம் கொழும்பு இராஜகிரியவில் செயற்பட்டு வருகின்ற ஆயர்வேத மருத்துவமனையும் பல்வேறு குறைபாடுகளுடன் செயற்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது. குறிப்பாக மருத்துவர்களுக்கான தட்டுப்பாடுகள், மருத்துவர்களுக்கான வசதிகள் போதாமை போன்ற குறைபாடுகள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த மருத்துவமனையின் மூலமாக நாளாந்தம் பெரும்பாலானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். எனவே தற்போது தேசிய மருத்துவத்துறைக்கென இராஜாங்க அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளமையினால் இத்தகைய குறைபாடுகள் விரைவில் நீக்கப்படுமென நம்;புகின்றேன்.

அதேநேரம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து, ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக  பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றதும், எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது, இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

எமது புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டிலே பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். எனினும், கடந்த காலங்களில் அவர்கள் முதலீடு செய்வதற்காக இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்தபோது அவர்களிடம் ஒரு சில தரப்புகளினால் கையூட்டங்கள் கோரப்பட்டதால் அந்த புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளாமல் திரும்பிச்சென்ற நிலைமைகள் உண்டு.

ஆனால் தற்போதைய இந்த அரசாங்கத்தில் அத்தகைய முறைகேடுகள் இடம்பெறாது என்;ற எனது நம்பிக்கையை நான் புலம்பெயர் உறவுகளுக்கு எடுத்துக் கூறி எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

வெளிநாடுகளில் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்ற நிலையில் பல்வேறு மாற்று அனுபவங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவாற்றல்களுடன் இத்தகைய புலம்பெயர் உறவுகள் எமது நாட்டிலே முதலீடுகளை மேற்கொள்கின்றபோது சர்வதேசத்துடன் போட்டி போடக் கூடிய பல்துறை உற்பத்திகளை இந்த நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அடுத்ததாக எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சானது இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததொரு அமைச்சாகும். மீளவும் இந்த அமைச்சை எனக்கு வழங்கியதற்காகவும் நல்லதொரு இராஜாங்க அமைச்சரை – கௌரவ கஞ்சன விஜயசேகர அவர்களையும், செயலாற்றல் மிக்க செயலாளராக திருமதி இந்து ரத்நாயக்க அவர்களையும் வழங்கியதற்காகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ பிரதமர் அவர்களுக்கும், கௌரவ பசில் ராஜபக்ச அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இந்த கடற்றொழில் அமைச்சின் மூலமாக குறிப்பாக, கரையை அண்டியதான கடல் தனித்துவ பொருளாதார வலயத்திற்கு உட்பட்ட கடல் சர்;வதேச கடல் என அனைத்து நிலைகளிலும் கடற்றொழிலை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விரிவாக்கஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் அவை தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்குமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளமையையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம் நன்னீர் உள்ளிட்ட அனைத்து நீரியல் வளச் செய்கைகளை மேலும் பரவலாக்கி மேம்படுத்தும் ஏற்பாடுகளும் அதன் நிலப் பரப்புகளை அதிகரிக்கும் ஏற்பாடுகளும் இத்துறையை மனைக் கைத்தொழிலாக முன்னெடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் கடற்றொழில் மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளச் செய்கை கைத்தொழில்கள் மூலமாக நாட்டு மக்களிடையே போசாக்கினை வளர்ப்பதும் இத் தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது முக்கிய நோக்கமாகும். அதற்கென நியாய விலையில் நீரியல் சார்ந்த உணவுகளை நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கும், அதேநேரம், இத்தொழிற்துறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நியாயமான விலை அவர்களது அறுவடைகளுக்காகக் கிடைப்பதற்கும் ஒரு பொறிமுறையினை நாங்கள் உருவாக்கி வருகின்றோம்.

இறக்குமதிகளை நிறுத்தி  கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச் செய்வதும் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பதும் எமது கொள்கையாகும்.

அத்துடன் கடற்றொழில் மற்றும் ஏனைய நீரியல் வள செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியான வங்கி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கும் நிலையான காப்புறுதித் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. அத்தகைய சுரண்டல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது வழிகாட்டலின் கீழ் நிச்சயமாக நாம் முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம் எமது நாட்டில் விவசாயத் துறையின் முன்னேற்றம் தொடர்பிலும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கைப் பிரகடன உரையில் வலியுறுத்தி இருந்தார்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயத்திற்கு பொருத்தமான பாரியளவு வயற் காணிகள் மற்றும் தோட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.

மேலும், பல செழிப்பு மிகு விவசாய காணிகள் மற்றும் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த காணிகள் என்பன பல்வேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடுகளின்றி சிக்கிக் கிடக்கின்றன.

ஏற்கனவே மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்தகைய காணிகள் அனைத்தையும் விவசாய செய்கைக்காக விடுவித்து, மானிய மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்தி பரவலாக்குவதும் அதிகூடிய விளைச்சலை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கின்றது.

இதன் மூலமாக நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக, அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி உணவு உற்பத்தியில் எமது நாட்டை தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும். அதன் அடுத்த இலக்கு  ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் குளங்கள் வாவிகள் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது கருத்து வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய குளங்களை வாவிகளை மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் மேற்கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், வடக்கு மாகாணத்திலே ஏற்கனவே செயற்பட்டிருந்த கைத்தொழிற்துறைகளை மீள இயக்குவதற்கும் இதுவரையில் பயன்படுத்தப் பெற்றிராத வளங்களை உள்ளீர்த்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொறிமுறைகளை வகுத்து புதிய கைத்தொழிற்துறைகளை ஏற்படுத்தியும் குடிசைக் கைத்தொழில்கள் சிறிய நடுத்தர மற்றும் பாரிய பரிமாண கைத்தொழில்கள் மென் பொருள் உற்பத்திகள் என  உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தையும் நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் எமது பகுதிகளிலே காணப்படுகின்ற ஏற்றுமதி தரம் கொண்ட இயற்கை வளங்களைக் கொண்டு பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் அவற்றை பரவலாக்குவதற்கும் நாம் எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆகவே, எமது பகுதிகளை உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலமாக தன்னிறைவு காணச் செய்யும் எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இதுவாகும்.

ஏற்கனவே கூட்டு சேர்ந்து எமது மக்களை ஏமாற்றி, வாக்குகளை அபகரித்து எமது மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யாமல் வெறுமனே பதவி ஆசனங்களை தேய்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போதும் அரசியல் பதவிகளுக்காக மாத்திரம் பிரிந்து நினறு எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்தும் கூடவே வாக்கு கேட்ட சக வேட்பாளர்களை ஏமாற்றியும் அரசியல் பதவி ஏற்று மீண்டும் எமது மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யாமல் இருக்க நினைக்காமல், இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எமது பகுதிகளையும் முன்னேற்ற முன்வாருங்கள் என சக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு நான் மீண்டும் மீண்டும் பகிரங்கமாகவே அழைப்பு விடுப்பதுடன்

எமது வெற்றியில் பங்கெடுத்துள்ள அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.             

நன்றி.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நாடா...
மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
வடக்கு - கிழக்கில் தமிழ் மொழிமூலமான அரச பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...