எமது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்காத வகையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் செயற்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவான்நதா தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2017
தங்களது உறவுகள் காணாமற்போன ஒவ்வொரு குடும்பங்களும் காணாமற்போன அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே ஆவல் கொண்டுள்ளனர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அல்லது, அவர்களது தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் பெறப்பட வேண்டும். அதுவரையில் அந்த குடும்பங்கள் உணர்வு, பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையானது தவிர்க்கப்பட இயலாதது. அந்த வகையில், காணாமற்போனவர்கள் கண்டு பிடிக்கப்படும் வரை அல்லது அவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரும் வரை அவர்களது உறவுகள் காணாமற்போன உறவுகளைக் கண்டறிவது சார்ந்த பல்வேறு செயற்பாடுகளில் இறங்குவது இயல்பானதொரு விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (21) காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்துள்ள அவர், காணாமற்போன உறவுகளை மீளக் காண்பது அல்லது, அவர்கள் தொடர்பிலான விபரங்களைக் கண்டறிவது தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்து, காணாமற்போனவர்களது உறவினர்களால் அறவழிப் போராட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் 121வது நாளாக அது தொடர்கின்ற நிலையில், காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் சார்ந்த விடயங்கள் குறித்து இங்கு வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
எமது நாட்டைப் பொறுத்த வரையில், பல்வேறு நிலைகளில் பலர் காணாமற்போயுள்ளனர் என்பது யாவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மையாகும். தென் பகுதியிலே, 1971ஆம் ஆண்டு மற்றும் 1988 – 89ஆம் ஆண்டு காலங்களிலும், இந்தக் காலகட்டங்களைத் தவிர்ந்த ஏனைய காலகட்டங்களிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1980களிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களிலும் நபர்கள் காணாமற்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பலவிதமான செயற்பாடுகளும், தமிழ் மற்றும் சிங்களத் தரப்புகளில் மேற்கொள்ளப்ட்ட வன்முறைச் செயற்பாடுகளுமே இவ்வாறு நபர்கள் காணாமற்போதலுக்கு காரணமாக முன்வைக்கப்படுகின்றது.
காணாமற்போனோர் பற்றி கண்டறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ காலத்தில் ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சுமார் 33 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்று தெரியவந்தது.
அதன் பின்னர் 2013 – 2015 காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆணைக்குழுவுக்கு 5,000 அரச படைகள் உட்பட சுமார் 25 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிய வந்திருந்தது.
அதே நேரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது 1989ஆம் ஆண்டிலிருந்து சுமார் 16 ஆயிரம் முறைப்பாடுகளை காணாமற்போனோர் பற்றி பதிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதே வேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் காணாமற்போனவர்களது எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு மேல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் பிரகாரம், அப்போதைய சனத்தொகையுடன் ஒப்பீடு செய்து பார்த்து, காணாமற்போனவர்களது எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டக் கூடுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தற்போதைய அரசு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமற்போனோர் பற்றிய 65 ஆயிரம் முறைப்பாடுகள் அரசாங்க ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளதாக ஒப்புக் கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் இத்தகைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டபோது, எமது மக்கள் அதீத எதிர்பார்ப்புகளுடன் சென்று, தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்தனர். ஒரு சிலர் சில சுயலாப சக்திகளின் தூண்டதல்களுக்கு எடுபட்டும், அறியாத் தனம் காரணமாகவும், தவறான தகவல்களை வழங்கியிருந்த சந்தர்ப்பங்களையும் ஊடகங்கள் சில பரபரப்புச் சந்தை விலை கருதி அவ்வப்போது வெளியிட்டிருந்த நிலைமைகளும் இல்லாமல் இல்லை.
அந்த வகையில் மேற்கண்ட ஆணைக்குழுக்கள் முன்பாக தங்களது முறைப்பாடுகளை, சாட்சியங்களைப் பதிவு செய்திருந்த எமது மக்களின் வேதனைகளை ஒரு சில ஊடகங்கள் தங்களது வர்தகச் சந்தைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே அன்றி, காணாமற்போனவர்களது உறவுகளுக்கு அதன் மூலமாக எவ்விதமான பயன்கள் கிட்டியிருக்கவில்லை. இத்தகைய நிலையில், காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வராத நிலையில், துயரத்தின் தீவிரம் அதிகரித்த நிலையில், வாழ்க்கையில் முன்னேற்ற நகர்வுகள் இன்றிய நிலையில், எதிர்காலத்தை நினைத்து ஒரு அடி முன்னே எடுத்து வைக்க முடியாத நிலையில், ஒருவிதமான முடக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டு எமது மக்கள் அறவழிப் போராட்டத்தினை கடந்த 121 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது உறவுகள் காணாமற்போன ஒவ்வொரு குடும்பங்களும் காணாமற்போன அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே ஆவல் கொண்டுள்ளனர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அல்லது, அவர்களது தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் பெறப்பட வேண்டும். அதுவரையில் அந்த குடும்பங்கள் உணர்வு, பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையானது தவிர்க்கப்பட இயலாதது. அந்த வகையில், காணாமற்போனவர்கள் கண்டு பிடிக்கப்படும் வரை அல்லது அவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரும் வரை அவர்களது உறவுகள் காணாமற்போன உறவுகளைக் கண்டறிவது சார்ந்த பல்வேறு செயற்பாடுகளில் இறங்குவது இயல்பானதொரு விடயமாகும்.
இவ்வாறானதொரு நிலையிலேயே காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் எமது நாட்டில் உருவாக்கப்படுகின்றது. வெளிநாடுகளின் தேவைக்காக மேற்படி அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் ஒரு விமர்சனம் இருந்து வருகின்ற நிலையில், ஒரு குறிப்பட்ட தரப்பாரைத் தண்டிப்பதற்காகவே இந்த அலுவலகம் உருவாக்கப்படுகின்றது என்று ஒரு சிலரால் கூறப்படுகின்ற நிலையில், நான் அடிக்கடிக் கூறிவருவதைப் போன்று எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்டையிலேயே நான் இந்த அலுவலகம் குறித்து பார்க்கின்றேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு, அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். காணமற்போனவர்களது உறவுகளுக்கு நியாயம், பரிகாரம் காணப்பட வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இத்தகைய நிலைமைகள் ஏற்பாடாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது, இனங்களுக்கிடையில் மீண்டும் கசப்புணர்வுகள் ஏற்படாத வகையில், தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதையே இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
நான் ஏற்கனவே கூறியதைப் போல், எமது நாட்டில் பல்வேறு முறையிலான பொறிமுறைகளின் ஊடாக ஆணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்றபோது, காணாமற்போன தமது உறவுகள் தொடர்பில் துன்ப, துயரங்களைச் சுமந்து அங்கு சென்ற போதிலும், இறுதியில் அவற்றின் மூலமாக எவ்விதமான ஆறுதல்களும் கிடைக்கப் பெறாமல், வெறுங்கையுடன் திரும்பிய எமது மக்கள் மத்தியில் தற்போது உருவாக்கப்படுகின்ற இந்த காணாமற்போனோர் பற்றிய அலுவலகமும் ஒரு அலுவலகம் மாத்திரம்தானா? என்ற கேள்வி எழுவது நியாயாமாகும்.
எனினும், இந்த அலுவலகம், குறிப்பிட்டதொரு கால வரையறைக்கோ அல்லது நாட்டினுள் பூகோள ரீதியிலான வரையறைக்கோ உட்பட்டதாக அமையப் பெறாத வகையில், விசாரைணகளை மேற்கொள்வதற்கும், தேவையான ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையான அலுவலகமாகத் தெரிய வருகின்றது.
மேலும், அரச நிறுவனங்களோ அல்லது அரச அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கக் கூடுமென எதிர்பார்க்கின்ற நிலை அற்றதான வகையில், தனது விசாரணைகளின் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கின்ற விடயங்களை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கக்கூடிய சட்ட ரீதியான தகுதி கொண்டதாக இந்த அலுவலகம் அமையப் பெறுகின்றது.
அதே நேரம், பாதிக்கப்பட்டோருக்கு பரிகாரங்களை வழங்கும் முகமாகவும், கடந்தகால வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிபடுத்துவதற்காகவும் ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்குரிய சட்ட ரீதியிலான அதிகாரமும் மேற்படி அலுவலகத்திற்கு வழங்கப்படுகின்றது.
அத்துடன், முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு வருகின்ற பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக மேற்படி அலுவலகத்திற்கு விஷேட அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளமையினால், முறைப்பாட்டாளர்கள் மேற்படி அலுவலகத்தை நாடுவதில் இருக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
இவ்வாறான நம்பிக்கைகளை முன்வைத்து அமைக்கப்படுகின்ற மேற்படி அலுவலகமானது, காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரம், நட்டஈட்டு வழங்குதல்களுக்காகவும், கடந்தகால சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் தகுதி, காhணமற்போன சம்பவங்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விபரங்களை சேகரித்து ஆவணப்படுத்துதல் போன்ற அதிகாரங்களைக் கொண்டிருக்கும்; எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில், காணாமற்போனவர்களைக் கண்டறிவதற்காக தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கின்ற எமது மக்களுக்கு மேற்படி காணாமற்போனோர் பற்றிய அலுவலகமானது ஒரு நம்பிக்கையை எற்படுத்தும் என்றே தோன்றுகிறது. எனவே, எமது மக்களின் நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் மேற்படி அலுவலகம் செயற்பட வேண்டும் என்பதையும், அதே நேரம் தமது உறவுகளை காணாது பாரியளவில் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆற்றுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதையும் அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
நான் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதன் பிரகாரமும், மேலே குறிப்பிட்டதன் பிரகாரமும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த காணாமற்போனவர்களைக் கண்டறிவது தொடர்பிலான ஆணைக்குழுக்களின் முன்பாக ஒரு சிலர், தவறான வழிகாட்டல்கள், தூண்டுதல்கள் காரணமாகவும், அறியாமை காரணமாகவும் பொய்யான தகவல்களை வழங்கியிருந்த நிலையில், அத்தகைய ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் மீள விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற நிலையில், அல்லது மீண்டும் அவ்வாறான பொய்யான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுமானால் அவை குறித்தும் முழுமையான பக்கசார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், அத்தகைய பொய்யான முறைப்பாடுகளை முன்வைப்போருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்படி காணாமற்போனோர் அலுவலக சட்டமூலத்தில் குறிப்பிடப்படாதுள்ளதால், இது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதாவது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஏதேனும் சுயலாப அரசியல் நோக்கங்கள் அடிப்படையிலான அழுத்தங்கள், தூண்டுதல்கள் காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ ஒரு நபர் மீது அல்லது ஒரு தரப்பார்மீது பொய்யான முறையில், அல்லது அறியாமைக் காரணமாக, எழுந்தமானமாகப் பலி போடுகின்ற சந்தர்ப்பத்தில், பலிக்குட்படுகின்ற நபர் அல்லது தரப்பாருக்கு ஏற்படக்கூடிய அனைத்து இழப்புகளையும் அவதானத்தில் கொண்டு, பாதுகாப்புமிக்கதொரு அதிகாரமிக்கப் பொறிமுறை உருவாக்கப்படுதலின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்துகின்றேன் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...