ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019

நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் .

ஏற்கனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்பாக இடம்பெற்றிருத்த வன்முறை, சுயாதீன ஊடக நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை என்று தொடங்கி, நேற்றைய தினம் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஓர் ஊடகமானது தன்னைப் பற்றியோ அல்லது தான் சார்ந்த கட்சியைப் பற்றியோ, அமைப்பினைப் பற்றியோ தவறாக அல்லது போலியாக எதனையும் வெளிப்படுத்தியிருந்தால், அவ்விடயம் தொடர்பில் பிரஸ் கவுன்சில் இருக்கின்றது. அதில் முறைப்பாடு செய்ய முடியும். அல்லது சட்டரீதியிலான நடவடிக்கைக்குப் போக முடியும்.

எங்களைப் பற்றி ஓர் ஊடகம் போலியான தகவலை வெளியிட்டிருந்த நிலையில் நாங்கள் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குப் போயிருந்தோம். அதில் எமக்கு சாதகமான தீர்ப்பே கிடைத்திருந்தது.

அவ்வாறானதொரு முறையினை நோக்கிச் செல்லாமல், இப்படி காடைத்தனங்களை ஊடகங்கள்மீது கட்டவிழ்த்து விடுவதானது கண்டிக்கத்தக்க விடயம் மட்டுமல்ல, கேவலமான விடயமும் ஆகும்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது என்பது இதுதானா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அண்மைக்காலமாக ஊடகங்களை சிலர் கறுப்பு ஊடகங்கள் எனக் கூறி வருகின்றனர். நேற்றைய தினம் மேற்படி ஊடக நிறுவனத்தின் மீதான காடைத்தனத்திலும் முழுமையாக கறுப்பாடை அணிந்தவர்களே காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

ஊடகங்கள் மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும். உண்மையை மக்களுக்கு உரைக்க வேண்டும். ஊடக தர்மத்தினைப் பாதுகாக்க வேண்டுமே அன்றி, எந்தவொரு தரப்பினருக்கும் அடிபணிந்து போக வேண்டியத் தேவை அவர்களுக்கில்லை.

அதேபோன்று, தனியார் ஊடகங்களில் தனது அல்லது தங்களது கருத்துக்களை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என அழுத்தங்கொடுக்க முடியாது. அப்படியானவர்கள் சொந்தமாக ஊடகம் நடத்த வேண்டும்.

சக்தி ரி.வி, சக்தி எப்.எம். போன்ற ஊடகங்கள் நல்லமுறையில் செயற்பட்டு வருகின்றன. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றன. உண்மையிலேயே தவறு செய்கின்றவர்களை சுட்டிக்காட்டுகின்றன. உண்மையிலேயே தவறு செய்கின்றவர்கள் பற்றி யாரும்; கருத்துக்களைக் கூறினால், அந்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வருகின்றனர். அதற்காக இத்தகைய காடைத்தனங்களை கட்டவிழ்த்துவிடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டு, எமது கட்சி இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றது என்பதைக் கூறிக் கொண்டு, அதே நேரம், அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலு; விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொண்டு, இன்றைய தலைப்பிற்கு வருகின்றேன்.

ஒரு குற்றத்தில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறொரு நாட்டில் மறைந்திருக்கின்ற ஒரு நபரை கைது செய்து கொண்டுவந்து, அவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை கொடுப்பதற்கு இந்த மீள ஒப்படைத்தல் சட்டம் வாய்ப்பினை வழங்குகின்றது.

இந்த வாய்ப்பு மீள ஒப்படைத்தல் ஒப்பந்தத்தினை செய்து கொள்கின்ற இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுகின்றது.இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. இதன் மூலமாக நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இந்த ஒப்பந்தத்தினை தற்போதைய நிலையில் நாம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கியமான நாடுகளும் இருக்கின்றன.

இந்த நாட்டுக்கு மிக மோசமான நிலைமையினை ஏற்படுத்தியவர்கள். ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி, மறைந்து கொண்டிருக்கின்ற நாடுகளுடன் மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை இந்த நாடு மிக விரைவாக செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது இந்த நாட்டை பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அடிக்கடிக் கூறி வருகிறீர்கள்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் முதலாவது சந்தேக நபர் அதனது முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் என பெயர் குறிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி சர்வதேச பொலிஸ் சிகப்பு பிடிவிறாந்து விடுத்திருந்தது. இருந்தும் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருக்கின்ற வரையில் சர்வதேச பொலிஸாரினால் அவரைக் கைது செய்ய முடியாது.

ஏனெனில், சிங்கப்பூருக்கும், சர்வதேச பொலிஸாருக்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாத நிலையில் இது சாத்தியமில்லை என்றே தெரிய வருகின்றது.

இதே நிலையே மெக்சிக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளில் நிலவுகின்றன. இந்த நாடுகளுக்கும், சர்வதேச பொலிஸாருக்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்களும் இல்லை.

இந்த நிலையில்தான் இந்த மீள ஒப்படைத்தல் சட்டமானது முதன்மை பெறுகின்றது என்றே கூற வேண்டும்.

ஆகவே இந்த நாடு சிங்கப்பூருடனும் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமானால், அர்ஜூன் மகேந்திரனைக் கைது செய்து கொண்டுவர முடியும்.

சிங்கப்பூருடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு இந்த நாட்டுக்கு அவ்வளவு சிரமம் இருக்குமென நான் நம்பவில்லை. ஏனெனில் இந்த இரு நாடுகளும் பொதுநலவாய நாடுகள் சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இத்தகைய நிலையில் சிங்கப்பூருடன் மீள் ஒப்பந்தமொன்றினை செய்து கொள்வதற்கு ஏன் இன்னும் நீங்கள் தயாராக இல்லை? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அதேபோன்று டுபாய் – ஐக்கிய அமீர் ராஜ்ஜியம்.  இந்த நாட்டுடனும் மீள ஒப்பந்தம் செய்வது பற்றி நீங்கள் யோசிப்பது இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதென்றே கருதுகின்றேன்.

இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே மறைந்திருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் அடிக்கடித் தெரிவித்து வருகின்றன.

அதேபோன்று, இலங்கையில் அதிகளவிலான போதைப் பொருள் வர்த்தகத்திலும் இந்த குழுக்களுக்கு பாரிய பங்களிப்புகள் இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன.

அந்தவகையில் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது செய்து கொள்கின்ற நாடுகளுடன் செய்து கொள்ள வேண்டாம் என நான் கூறவில்லை. செய்து கொள்ளுங்கள். அதேநேரம், சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடனும் செய்து கொண்டால் இந்த நாடு இன்று முகங்கொடுத்துள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு முடிவினைத் தேடிக் கொள்ள முடியும் என்றே கூறுகின்றேன்.

இந்த மீள ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனிதப் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, இலஞ்சம், கொள்ளை, அந்நிய செலாவணி மோசடி, ஆபத்தான போதைப் பொருள் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களையே ஒப்பந்தத்தினை மேற்கொள்கின்ற இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் கைது செய்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரம் ஒரு நாட்டில் அரசியல் புகழிடம் பெற்றவர்களை கைது செய்வதற்கு இந்த ஒப்பந்தத்தினால் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என்றே தெரிய வருகின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம் பெற்று, கொள்ளையடித்து, அந்நிய செலாவணி மோசடி செய்து, போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். அவரவர் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன்.

அந்தந்நத நாடுகளுடனும் இந்த ஒப்பந்தத்தினை செய்யுங்கள். செய்து, அவர்களைக் கைது செய்து இங்கு கொண்டு வந்து, கொள்ளையடித்த இந்த நாட்டு மக்களின் பணத்தை பெற்று, இந்த நாட்டு மக்களை சுமையற்றதொரு வாழ்க்கையை வாழ விடுங்கள் என்றே நான் கேட்டுககொள்கின்றேன்.

Related posts:

அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்தும் எமது மக்கள் மீண்டெழ வேண்டும் - நாடாளு...
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட...
தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...

காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்க...
தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு
தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்...