உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது !

Saturday, November 21st, 2020

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது. கொவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாத்திரம் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதும் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க தொன்றல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

உலகப் பொருளாதாரத்தில் நீடிக்கின்ற நிதி மூலதனத்தின் ஆதிக்கம் காரணமாக யூகத்தின் ஊடாக விரைவு இலாபம் பெறுகின்ற நிலைப்பாடு, பொருளாதார சமநிலையின்மையின் வளர்ச்சி, நுகர்வுமய கலாசாரத்தின் வளர்ச்சி, உழைக்கும் மக்களின் உயராத அல்லது வீழ்ச்சி கண்ட தொடர் மெய் ஊதியம், உழைப்பின் முறைசாரா மயமாக்கலின் தற்காலிகமாக்கப்பட்ட உலகளாவிய பரவல், கடன் சுமையால் பாதிப்புறுகின்ற குடும்பங்களின் அதிகரித்த எண்ணிக்கை, நில அபகரிப்பு, இயற்கையின் பண்டமயமாக்கலின் தீவிரம் போன்றவை காரணமாக உலகப் பொருளாதாரமானது ஏற்கனவே அதாவது 2009 ஆம் ஆண்டிலிருந்தே ஓரிடத்தில் தேங்கி நிற்கின்ற நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டிருந்த ஆய்வின்படி, 1800 ஆம் ஆண்டிலிருந்து 1950 ஆம் ஆண்டு வரையிலான 150 வருட காலகட்டத்தினுள் உலகப் பொருளாதாரமானது மிகவும் மந்த நிலையிலே வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதாவது, 1950 ஆம் ஆண்டின் பின்னர் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றது என்றும் 2008 ஆம் ஆண்டு வரையில் இது நீடித்தது என்றும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓரிடத்தில் தேங்கி நிற்கின்ற நிலைiயை அடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த 5 வருடங்களை எடுத்துக் கொண்டால் பொருளாதார வளர்ச்சியானது 5 வீதத்தை எட்டவில்லை என்றே கூற வேண்டும். அதாவது 3 வீதத்திற்கும் நான்கு வீதத்தி;றகும் இடையிலான வளர்ச்சியினையே கொண்டிருந்தது. 2019ஆம் ஆண்டாகின்றபோது எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியானது 2.3 வீதம் என்கின்ற கடும் வீழ்ச்சி நிலையைக் காட்டி நின்றது.

இத்தகைய நிலையில் உலகளாவிய கொவிட் 19 கொரோனா தொற்று அனர்த்தம் ஏற்பட்டு, அது தற்போது, பிரபல அறிஞர் மைக் டேவிஸ் (Mike Davis) கூறுவதைப் போல், ‘கொவிட் 19 கொரோனா தொற்று நமக்கு நன்கு பழக்கப்பட்ட பூதமாக முன் கதவுக்கூடாக நுழைகின்றது’ என்ற நிலையில் உலக நாடுகளுடன் சேர்த்து நாமும் இருந்து வருகின்றோம். 

இத்தகைய நிலையிலிருந்து நாம் எப்படி மீள்வது? என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. பொருளாதார வளர்ச்சியானது நல்ல நிலையில் இருந்து, ஒரு தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டால், ஆங்கில V எழுத்துப் போன்று வீழ்ந்து உடனடியாக எழுந்திருக்க முடியும். ஆனால், பொருளாதார வீழ்ச்சி நிலையில் இத்தகையதொரு அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், ஆங்கில U எழுத்துப் போன்று அந்த வீழ்ச்சியுடன் சில காலம் இருந்து பின்னர் எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவே, பொருளாதார வீழ்ச்சியுடன் இருக்க வேண்டிய சில காலத்தை நீண்டு செல்லவிடக் கூடாது. அதனை மிகக் குறுகிய காலகட்டமாக்குதல் வேண்டும். அதற்கென இறக்குமதி பராமரிப்பில் தங்கியிருக்காத, கடன் பளுவில் தொடர்ந்தும் தங்கியிருக்காத, அதீத நுகர்வுக் கலாசாரத்தைக் கொண்டிராத, சுய உற்பத்திப் பொருளாதாரத்தை நம்பியதான நிலையின் மேம்பாட்டின்பால் நாம் செல்ல வேண்டும். அதுவும், தற்போதைய நிலையில் ஆரம்ப கட்டமாக தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டதாக இது அமைதல் வேண்டும். ஏனெனில், சர்வதேச தேவைகளை நம்பக்கூடிய சூழ்நிலை இன்னும் காலதாமதமாகலாம். எனவே, தேசிய தேவைகளில் போதியளவு தன்னிறைவு காணும் வகையில் எமது தேசிய உற்பத்தித்துறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே நான் சுட்டிக் காட்டுகின்றேன்.

இதன் ஒரு கட்டமாக, கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேசிய வேலைத் திட்டத்தை எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் பெரும் முனைப்புடன் தற்போது முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில், காலத்திற்கேற்ப தேவைகைள இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்கின்ற வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, இந்த நாட்டுக்கு உரிய வகையிலான விவசாய, பெருந்தோட்ட, கடற்றொழில் துறைகள் மற்றும் இவற்றையும் எமது நாட்டின் ஏனைய வளங்களையும் கொண்ட உற்பத்தித்துறைகள், சுய கைத்தொழிற்துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது.

அதேநேரம், ஏனைய உற்பத்தித் துறைகள் சார்ந்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதுடன், எமது மக்களின் நலன் கருதிய அனைத்து சேவைகளையும் சமகாலத்தில் தொடர வேண்டிய தேவையும் உள்ளது.

குறிப்பாக, கொவிட் 19 கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் மற்றும் அதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கின்ற சம காலத்தில் எமது சுகாதாரத் துறையின் வலுத் தன்மை தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இத்தகைய அனைத்து விடயங்களையும் இந்த வரவு – செலவுத் திட்டம் அவதானத்தில் கொண்டிருக்கிறது.

அதே நேரம், ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல், பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகையானது யுத்தம் செய்வதற்காக எனும் சுயலாபம் கருதிய வீண் புரளியைக் கிளப்பக் கூடாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, அரச மற்றும் தனியார் பொருளாதார செயற்பாடுகளைப் போன்றே, தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை காரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்த அனுபவம் இந்நாட்டு மக்களுக்கு உண்டு.

அதேநேரம், போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், போதைப் பொருள் இந்நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதைக் கட்டுப்படுத்தல், போதைவஸ்துகளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், போதைவஸ்துகளுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளித்தல்,  வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம் கொவிட் 19 கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் என மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.

ஜனநாயக உலகம் கட்டியெழுப்பப்பட்ட காலம் முதற்கொண்டு, அதாவது பிரான்ஸ் புரட்சியுடன் ஒரு விடயம் தோற்றம் பெற்றுள்ளது. அதாவது, ஏதாவது சுகாதாரத்துறை சார்ந்த அனர்த்தம் ஏற்படுகின்றபோது உடனே அது பொருளாதார நெருக்கடியாக மாற்றப்பட்டு, பின்னர் அது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகின்றது.

இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் எதிர்க்கட்சிகள் அதனை சிறப்பாகவே செய்து வருகின்றன. ‘பாடுவது தேவாரம். இடிப்பது சிவன் கோவில்’ என்பது போல், எமது தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் எதிர்த் தரப்பிலும் காலம் தள்ளுகின்ற போலி தமிழ்த் தேசியத்தை ஒட்டிக் கொண்டுள்ள சுயலாப அரசியல்வாதிகள், அனர்த்தத்திலிருந்து அரசியல் வரையில் அனைத்தையும் இனவாதமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தேசிய நல்லிணக்கத்துடன் கூடிய பயணத்துக்கு நொண்டியடிக்கின்ற இவர்கள், எமது மக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டு, எமது மக்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டு, எமது மக்களை இனவாதிகளாக ஏனைய மக்களுக்கு மலிவாக அடகு வைக்கின்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி இந்த நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்றுதான் தேசிய நல்லிணக்கமும் அவசியமாகும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன். அதாவது, இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்புவது போல், சகல தரப்பினரும் இணைந்தே இதனை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது சுயலாப இருப்புக்கும் அதற்கு முதலிடுகின்ற அரசியலுக்கும் தங்களால் காவு கொடுக்கப்பட்ட எமது உறவுகளின் அப்பாவி உறவினர்களது கல்லறைகளுக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் கட்டைப் பஞ்சாயத்து உரிமை கொண்டாடும் போட்டியில் ஊடகங்களில் முதலிடம் பிடிக்கின்ற ஊதாரி அரசியலை இன்னும் தொடருகின்ற வெற்று வாய்ப்பேச்சு போலி தமிழ்த் தேசியமும், அதனை கிண்டலடித்து ஊதித் தள்ளுகின்ற அதி தீவிர போலித் தமிழ்த் தேசியமும். உயிருடன் இருக்கின்ற எமது மக்களை கல்லறைகளாக்கி, கல்லறை அரசியலையே சில்லறையாகவும் மொத்தமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

மயானங்களை துப்புரவு செய்கின்ற இவர்கள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத்; தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருக்கின்ற வளங்களைக் கொண்டு எமது மக்கள் வாழ்க்ககையில் முன்னேற வேண்டும் என நாங்கள் உழைக்கின்ற நிலையில், எமது மக்களின் அவலங்களை தொடரவைத்து அதன் மூலமாக இவர்கள் தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

போலி தமிழ்த் தேசியத்தின் நல்லாட்சியில் நன்றாகவே தங்களுக்காக உழைத்தவர்கள், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களின் விடுவிப்பிற்கு, காணாமற்போனோருக்கான பரிகாரங்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பிற்கு, அபிவிருத்திக்கு, வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு, அரசியல் தீர்வுக்கு நேர்மையாக உழைக்காமல், இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் தீர்வினை முதலீடாக்க வேண்டும் என்கின்றனர். இத்தகைய ஆபூர்வமான சிந்தனைகள் அழிவின் விழிம்பில்தான் வரும் என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள்.

அதேநேரம், கதிரைக்காக காத்திருந்த குதிரை, அன்று யுத்தம் நடைபெற்றிருந்தபோது, இதே நாடாளுமன்ற சபையில் 40 ஆயிரம் சவப்பெட்டிகளை தயாரிக்குமாறு தமது சுயலாப அரசியலுக்காக வேண்டி தென்லிங்கைக்கு சவடால் விட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி, அங்கே தனது குடும்பத்துடன் சுகபோக வாழ்க்கையை வாழந்துவிட்டு, தனது காட்டிக்கொடுப்பு இராஜதந்திரத்தை பயன்படுத்தி, மீண்டும் இங்கு வந்து, தனது பாகனுடன் சேர்ந்து  கனைக்க ஆரம்பித்துள்ளது. கல்லறையிலிருந்து கனைக்கின்ற இது எத்தனை ஆயிரம் சவப் பெட்டிகளை மீண்டும் கல்லறைகளுக்கு இட்டுச் செல்லுமோ? தெரியாது என்றே தமிழ் சமூக ஆர்வலர்கள் கதைத்துக் கொள்கின்றனர். இதனது மௌனமும், கனைப்பும் எமது மக்களைக் காட்டிக் கொடுப்பதன் அறிகுறி என தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...