உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, December 4th, 2017

தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும்  தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக  குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள என ஈழ மக்கள் – ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று எமது நாடு மீண்டுமொரு இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து இருக்கின்றது. இதனால் 16 மாவட்டங்களில் சுமார் 1 இலட்சத்து 22 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிலரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ள நிலையில், சுமார் 762 வீடுகள் முழுமையாகவும், சுமார் 29 ஆயிரத்து 246 வீடுகள் பாதியளவிலும் சேதமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற இரு அமைச்சுகளினதும் பொறுப்புகள் தற்போதைய நிலையில் இன்றிமையாதவையாகவே இருக்கின்றன.

எமது நாட்டின் சுகாதாரத் துறையினைப்  பொறுத்தவரையில், இந்தக் காலகட்டமானது, மிகவும் சவால் நிறைந்த காலகட்டமாகவே தென்படுகின்றது. ஒரு பக்கத்தில் ‘சைற்றம்’ பிரச்சினை தொடர்பில் இடம்பெற்றிருந்த போராட்டங்கள் காரணமாக மருத்துவர்கள் பலர் அவற்றில் ஈடுபட்டதும், மருத்துவ கற்கை நெறிகளில் ஈடுபடுகின்ற மாணவர்கள் அவற்றில் ஈடுபட்டதும், நாடளாவிய ரீதியில் நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டதும், ஒரு துரதிர்ஸ்டவசமான நிலையாகவே காணுகின்றேன்.

இத்தகைய நிலையில், 2010ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் இந்த ஆண்டிலேயே எமது நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் – அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அந்த வகையில் நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டில் 1 இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், 395 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 3 ஆயிரத்து 236 பேர் நோயாளர்களாக இனங்காணப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தனர். ஆனால், இந்த வருடத்தில் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 833 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

அந்த வகையில் பார்க்கின்றபோது, வடக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோய்த் தொற்றாளர்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதாவது, 4,726 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இக்காலப்பகுதிக்குள் 585 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், தற்போது கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக அங்கு டெங்கு நுளம்புகளின் பெருக்கும் திடீரென அதிகரித்துள்ளதாக மாவட்ட பூச்சியியல் ஆய்வுப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் 813 பேர் இனங்காணப்பட்டிருந்த நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மன்னாரில் 513 பேரும், முல்லைத்தீவில் 326 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

அத்துடன், வடக்கில் தற்போது மலேரியா நோயினைப் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கமும் காணப்படுகின்றன. இது தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். இவ்வகை நுளம்புகள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாகவே அறிய முடிகின்றது.

மேலும், தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால், மேற்படி நோய்களைப் பரப்புகின்ற நுளம்பு வகைகளின் பெருக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்துத் துறைகள் சார்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வடக்கு மாகாணம் மட்டுமல்லாது, தற்போதைய மழைக் காலம் காரணமாக நாடளாவிய ரீதியில் மேற்படி ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், மலேரியா நுளம்புகள் பெருகுகின்ற கிணறுகளில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீன் குஞ்சுகள் விடப்படுதல் சாத்தியமான அணுகுமுறை எனக் கூறப்படுகின்ற நிலையில், அவ்வகை மீன் குஞ்சுகளைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்படல் வேண்டும்.

இதே நேரம், நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கை 20 இலட்சம் எனவும் கூறப்படுகின்றது. அடையாளம் காணப்படாத மற்றும் முழுமையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரம், நீரிழிவு நோய் காரணமாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 5 இலட்சம் என்றும் தெரிய வருகின்றது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு உட்படுகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், 2014ஆம் ஆண்டில் 1,500 பேரும், 2015ஆம் ஆண்டில் 1,600 பேரும், 2016ஆம் ஆண்டில் 1,645 பேரும் நீரிழிவு நோயாளர்களாகப் புதிதாக பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மேலும் 2,721 பேர் புதிதாகப் பதிவாகியுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாiலையின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

நீரிழிவு நோய் ஒரு தொற்று நோயாக இல்லாத போதிலும், தற்போதைய நிலையில் நாடளாவிய ரீதியில் இந் நோய் மனித ஆரோக்கியத்திற்கு பாரியதொரு சவாலாகவே  தோற்றம் பெற்றுள்ள நிலையில், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும்,  இவை மேலும் வலுவுள்ளதாகவும், பரந்தளவிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், எச். ஐ. வி தொற்றும் தற்போதைய நிலையில் எமது நாட்டுக்;கு சவால் விடுகின்ற ஒரு நோயாகவே இனங்காணப்பட்டு வருகின்றது. 1987ஆம் ஆண்டில் எமது நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இனங்காணப்பட்டதிலிருந்து, இந்த வருடம் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 2,783 பேர் இத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 82 பேர் சிறுவர்கள் என்றும், 450 பேர் இந் நோய் காரணமாக இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இக்காலகட்டத்திற்குள் 35 பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் இதுவரையில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

கிராமப் புறங்களில் அதிகளவிலாக பாம்புக் கடிக்கு இலக்காகின்றவர்களது தொகை வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் வரையிலேயே காணப்பட்டு வந்துள்ள நிலையில், அதுவும் தற்போது சுமார் 80 ஆயிரமாக அதிகரித்து, வருடத்திற்கு சுமார் 400 பேர் வரையில் உயிரிழக்கின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

அதே நேரம் இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை போன்ற மாவட்டங்களில் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரது எணணிக்கையும் அதிகரித்துள்ள நிலைமைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிகமாக நெற் செய்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் இந்நோய்க்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இந்நோய்க்க்கு 2,544 பேர் உட்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையிலான நோய்கள் நாட்டில் பரவியுள்ள நிலைமையினைக் காண முடிகின்றது. மனித வளத்தினை அதிகம் நம்பியிராத, இயந்திரங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மனித செயற்பாடுகள் முடக்கப்படுகின்றபோது, நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து விடுகின்றன. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடு என்ற வகையில் வளரும் தேவைகளுக்கேற்பவும், முடக்கப்படுகின்ற மனித செயயற்பாடுகளுக்கு ஏற்பவும், மாசடையச் செய்விக்கின்ற சூழலுக்கு எதிரான செயற்பாடுகளின் முன்பாகவும் சுகாதாரத்துறையின் ஏற்பாடுகள் மாற்றம் பெற வேண்டியத் தேவையே மிகுதியாகக் காணப்படுகின்றன.

அந்த வகையில் சுகாதாரத்துறையின் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதே நேரம் நோய்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஊட்டப்படுகின்ற செயற்திட்டங்களை, அந்தந்த நோய்கள் குறித்த சர்வதேச தினங்களிலும், அதனை அண்டியதான சில தினங்களிலும் மாத்திரம் முன்னெடுத்துவிட்டு, பின்னர் அடுத்த வருடத்தில் அதே சர்வதேச தினங்கள் வரும்வரையில் கைவிட்டுவிடாமல், அந் நோய்களின் தாக்கங்கள் குறைகின்ற வரையிலாவது அந்தந்த விழிப்பூட்டல் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக அதனால் ஏற்படுகின்ற நோய்களைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்கு மிகவும் நெறுக்கடியான நிலையிலேயே வைத்திய சேவைகளை வழங்க வேண்டியிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் ஒரேயொரு போதனா வைத்தியசாலையே இருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலை. தற்போதைய நிலையில் இங்கு 49 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. 361 வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 312 வைத்தியர்களே பணியாற்றி வருகின்றனர்.

1,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. 1,400 தாதியர்கள் இருக்க வேண்டிய நிலையில், 400 தாதியர்களே பணியாற்றி வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் தாதியப் பட்டதாரிகளை உருவாக்குகின்ற யாழ் பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கழிந்து விட்டுள்ள நிலையில், இதுவரையில் சுமார் 50 தாதியர்களே பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அப்படியிருந்தும், மேற்படி தாதியர்களில் எவருமே இலங்கை தாதியப் பதிவுச் சபையில் பதிவைக் கொண்டவர்களாக இல்லை என்றும் தெரிய வருகின்றது.

தாதியப் பட்டதாரிகளை இலங்கை தாதியப் பதிவுச் சபையில் பதிவு செய்வதற்காக பூர்வாங்கப் பணிகளை பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பினர் உரிய காலத்தில் பூரத்தி செய்யாதமை காரணமாகவே, யாழ் பல்கலைக்கழக தாதியப் பட்டதாரிகளுக்கு தாதியப் பதிவானது சாத்தியமாகாமல் இருப்பதாக பட்டதாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. இதனால், பட்டம் பெற்றும் இத்தாதியர்கள், தாதியத் தொழிற் சந்தையில் புறக்கணிக்கப்பட்டதொரு நிiயிலேயே இருந்து வருகின்றனர்.

யாழ் பல்;கலைக்கழக இணை மருத்துவப் பிரிவிலிருந்து வெளியேறுகின்ற தாதியப் பட்டதாரிகளைப் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தும், இலங்கை தாதியப் பதிவுச் சபையில் அங்கத்தவர்களை நியமிப்பதில் இரண்டு தாதியச் தொழிற் சங்கங்களுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளே பதிவு ஏற்பாடுகளின் தாமதத்திற்கு காரணம் என்று பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.

அதே நேரம், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், தாதியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு விN~ட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சில யோசனைகளை இங்கு முன்வைக்கின்றேன். அவை தொடர்பில் ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமென நினைக்கின்றேன்.

தாதியர் ஆட்சேர்ப்பிற்கென தற்போது நடைமுறையிலுள்ள 18 – 28 வயதெல்லையை 18 – 32 வரை அதிகரிப்பது.

ஆங்கிலப் பாடத்தில் சீ திறமை பெறாதவர்களுக்கு அத் திறமையைப் பெற ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அவர்களை இணைத்தக் கொள்வது.

தாதியர் சேவைக்கு விண்ணப்பங்கள் கோருகின்றபோது, விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற வருடத்திலிருந்து பின்நோக்கிய 10 வருட காலத்திற்குள் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தினை முடித்து, அதில் சித்தி பெற்றவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவது.

தாதியர் ‘சேவிஸ் மினிட்’ பிரகாரம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விகிதாசாரத்தினை அதிகரித்து, தகுதியான ஆண்களை இணைத்துக் கொள்வது.

உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைவோர் குறைந்து வரும் காரணத்தால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாயப் பாடம்; என்பதால், உயர் தரத்தில் ஏதாவது பாடங்களில் திறமைச் சித்தி பெறுகின்றவர்களுக்கு தாதியர் பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒரு விN~ட கொள்கைத் திட்டமொன்றை வகுப்பது.

தனியாரத்;துறை தாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதில் சித்தியடைவோருக்கு அரச மருத்துவ மனைகளில் நியமனங்களை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் குறித்து ஆராய்வது.

மேற்படி, யோசனைகளை கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஆராய்ந்து, ஒரு நல்ல தீர்வினை எடுப்பார் என நம்புகின்றேன்.

நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுவாகவே தாதியர்களுககான பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், தென் பகுதியிலிருந்து வடக்கு மாகாணத்தில் பணி புரிவதற்காக அனுப்பப்படுகின்ற தாதியர்கள் மொழிப் பரிச்சயமற்ற காரணத்தினாலும், தங்குமிட வசதிகளின் சிரமங்கள் காரணமாகவும், ஒரு பிடிப்பற்ற நிலையிலேயே தமது பணிகளை வெறும் கடமைக்காக ஆற்றுகின்ற நிலைமைகளும், காணப்படுவதால், எமது பகுதியைச் சார்ந்தவர்களை இப் பணியில் இணைத்துக் கொள்வது சகல விதத்திலும் பொருத்தமாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

தாதியர்கள், மருந்தகர்கள், ஆய்வுகூட  மற்றும் இயன்முறை மருத்துவக்  கற்கைகள் என்பன தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனியான பிரிவாக செயற்பட்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அது மருத்துவ பீடத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இதனையும் தனியான ஒரு துறையாக ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.

மேலும், யாழ் போதனா வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிரிவுக்கென  600 மில்லியன் ரூபாவும், நோயாளர் விடுதித் தொகுதி அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாவும், பாரிசவாத பிரிவுக்கு 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கானப் பணிகள்  நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகின்றன. இப்பணிகளைத்  துரித கதியில் முன்னெடுத்து அத்துறைகளை விரைந்து இயங்கச் செய்வதற்கு  நடவடிக்கை வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், குறைந்தது 300 கட்டில்களைக்; கொண்டதாகவும் சத்திரசிகிச்சை தொகுதி மற்றும் மகப்பேற்று அறை உள்ளடங்களாகவும் ஒரு மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான தேவை இருக்கின்றது.  இதற்கென சுமார்  2000 மில்லியன் ரூபா செலவிட நேரிடும் என்றும் தெரிய வருகின்றது.

மேலும், வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. சுகாதாரத் தொண்டர்களாக கடந்த அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களிலிருந்து பணிபுரிகின்ற சுமார் 820 சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். இவர்களில்; தகைமை வாய்ந்தவர்கள் – அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர். அவர்களை முதற்கட்டமாக நிரந்தரமாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஏனைய தகைமை கொண்டிராதவர்களுக்கு அத் தகைமையினை அவர்கள் பூர்த்தி செய்கின்ற வரையில் ஒரு கால அவகாசத்தனை வழங்கி அவர்களையும் உள்ளீர்க்க முடியும்.

எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் சிறுவர் மருத்துவ பிரிவு இணுவில் ஆஊடுநுழுனு வைத்தியசாலை வளாகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவ் வேலைத்திட்டங்கள் அனைத்தும் மந்தகதியிலேயே நரடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.. இதனை துரிதமாக செய்து முடிக்க வேண்டியது அவசியம.;

மேலதிக  சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் நோயாளிகளைக் கொண்டு செல்ல அம்புயலன்ஸ் வாகனங்கள் தற்போது  9 ஆக உள்ள நிலையில், மேலும் 4 வண்டிகளின் தேவை அவசியமாகவுள்ளது.

மேலும் வடக்கு மாகாணத்தில் ஏனைய பல்வேறு வைத்தியசாலைகளிலும் பல்வேறு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த நிலையில் வைத்தியசாலைகளின் பணிகளுக்கென இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த ஆளணிகள் மாகாணங்கள் பிரிந்த நிலையில் வடக்கு மாகாணத்திற்கு குறைந்துவிட்டிருந்தன. அந்த ஆனணிகளின் தொகையை வைத்தே ஆனணிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வந்திருந்த நிலையில், 2013ஆம் ஆண்டு இத்தகைய நிலைமை சீர் செய்யப்பட்ட போதிலும், அது போதுமானதாக இல்லை. எனவே தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வடக்கு மாகாணத்தின் ஆளணிகளுக்கான மதிப்பீடு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்  என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே பொன்று பல வைத்தியசாலைகளிலும், நோயாளர்களுக்கான கட்டிட வசதிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டியத் தேவைகள் இருக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் நான்கு ஆதார வைத்தியசாலைகள் இருக்கின்றன. இவற்றில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை எடுத்துக் கொண்டால், சத்திரசிகிச்சை மற்றும் மயக்க மருந்து தொடர்பிலான மருத்துவ நிபுணர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மந்திகை ஆதார வைத்தியசாலையில் மகப் பேற்று, மயக்க மருந்து மற்றும் பொது மருத்துவ நிபுணர்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஊர்காவற்றுரை ஆதார வைத்தியசாலையில், கட்டிடங்கள், மருத்துவர்கள், குழந்தைகளுக்கான வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபணர் போன்ற தேவைகள் காணப்படுகின்றன. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில், குழந்தைகளுக்கான வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபுணர்களுக்கான தேவைகள் உள்ளன.

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி இன்னமும் முழுமையாக செலவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த நிதியை முழுமையாக செலவிட்டு, அங்குள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம், முழங்காவில் வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமான வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதிகள் இல்லாத நிலை, பொது மற்றும் சத்திர சிகிச்சை நிர்ணர்கள் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. வவுனியா வைத்தியசாலையை எடுத்துக் கொண்டால், பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை இருக்கின்றது. மேலும் சிறுநீரக நோயாளர்கள் மிகவும் அதிகரித்துள்ள மாவட்டமாக வவுனியா மாவட்டம் வடக்கு மாகாணத்தில் காணப்படுவதால் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலையை எடுத்துக் கொண்டாலும், பழைமையான கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதியில் இவ் வைத்தியசாலை அமைந்திருப்பதன் காரணமாக மழைக் காலங்களில் பொது மக்கள் பாரிய சிரமங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. மேலும், தரமுயர்த்தப்படவுள்ள முருங்கன் வைத்தியசாலைக்கும் அடிப்படை வசதிகளின் தேவை இருக்கின்றன.

தற்போது வடக்கில் டெங்கு நோய் தொற்று அதிகரித்துக் காணப்படுவதாலும், மழைக் காலம் ஆரம்பித்துள்ளதாலும் இத்தகைய நோய்களின் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், ஆய்வுகூட நிபுணர்களின் தேவை அதிகமாக உள்ளதால், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத் தேவையும் உண்டு.

அந்த வகையில், யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற வைத்தியசாலைகளில் தற்போது நிலவுகின்ற பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானங்களை இது தொடர்பில் செலுத்துவார் என நம்புகின்றேன். அவர் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் நேரில் வந்து அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்தவர் என்ற வகையில், எமது பகுதியின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு மேலும் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எமது மக்களிடையே இருக்கின்றது.

வடக்கு மாகாண சபையானது அக்கறையின்மை, ஆற்றலின்மை, முயற்சிகளின்மை காரணமாக இத்தகைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றை நிவர்த்திக்கின்ற வகையில் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி, இத் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது எமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் தொகையானது நூற்றுக்கு 12 வீதமாக இருப்பதாகவும், இது 2020ம் ஆண்டளவில் 20 வீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்த வயோதிபப் பிராயத்தையுடையவர்கள் பல்வேறு வகையிலான நோய்களுக்கு ஆட்படக்கூடும் என்பதால், அதற்குப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுவதுடன், அதற்கென விN~ட கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.

எனவே, தற்போது சிறுவர்களுக்கென தனியான பிரிவுகள் மருத்துவ மனைகளில் ஏற்படுத்தப்படுவதுபோல், வயோதிபருக்;கெனவும் தனியான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கும், நாட்டில் வயோதிபர்களுக்கென தனியானதொரு மருத்துவ மனையை அமைப்பதற்கும், 75 வயதுக்கு மேற்பட்டோர்கள் தொடர்பில் விN~ட கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளமையை மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், வெளிநாடுகளில் மருத்துவத் துறைப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கைக்குத் திரும்புகின்றவர்களுக்கு, இலங்கை மருத்துவ சங்கத்தின் மூலமாக நடாத்தப்படுகின்ற பரீட்சையில் தோற்றுவதற்காக, அம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உட்படுத்துகின்ற நிலையில், ஏற்கனவே நமது நாட்டில் நடைமுறையிலிருந்த அம் மாணவர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்குப் பொருத்தமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்களை உட்படுத்துகின்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக, ருகுனு பல்கலைக்கழகத்தில் கற்கச் செல்கின்ற தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெறுவதில்லை என்றும், அதே நேரம் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, கௌரவ அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ் மாவட்டத்தில் கடந்த 1983ம் வருடத்திலிருந்து சித்த மருத்துவத் துறை சார்ந்த 5 ஆண்டு பாட நெறிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கென இதுவரையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தனியான துறையோ, பீடமோ இல்லாத நிலையில், அது ஒரு அலகாகவே இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. எனவே, சித்த மருத்துவத்துறைக்கென யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பீடத்தை ஏற்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அதற்குரிய நடவடிக்கையினை எடுக்க முன்வருமாறும் கௌரவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றென்.

அடுத்ததாக, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தற்போது நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்களை மாதிரிக் கிராமங்கள் வடிவிலும் மேற்கொண்டு வருகின்றார். அவரது தந்தையார், முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் இத்தகைய மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த காலகட்டங்களில் யாழ்ப்பாணத்திற்கென சில திட்டங்கள் கிடைத்திருந்தன.

அதன் பின்னர் வீடமைப்பு அமைச்சின் கீழ் இத்தகையத் திட்டங்கள் கிடைக்கப்பெறவில்லை. வீடமைப்பிற்கான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

யுத்தம் முடிவுற்ற காலகட்டங்களின்போது, எமது மக்களுக்கு போதிய வீடமைப்புத் திட்டங்கள் இல்லாத நிலையில், வீடமைப்பு அமைச்சின் மூலமாக வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு கடன்களைப் பெற்ற வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பலரும், பொருளாதார வசதிகளின்மை காரணமாக வீடுகளை பாதி கட்டி முடித்த நிலையில், அவற்றை முழுமையாக்க முடியாமலும், கடன் தொகைகளை மீளக் கட்ட முடியாமலும் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

அதன் பின்னரான காலப் பகுதிகளில் எமது மக்களில் மேலும் பலருக்கு பல்வேறு உதவித் திட்டங்களின் மூலமாக வீடமைப்பு வசதிகள் கிட்டியுள்ள நிலையில், மேற்படி மக்களுக்கு அத்தகைய திட்டங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், மேற்படி மக்கள் தொடர்பில் –  யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில், ஒரு விN~டமான ஏற்பாட்டினை முன்னெடுத்து, அம் மக்களின் கடன்களை இரத்துச் செய்வதற்கும், அவர்களுக்கு ஏனைய உதவித் திட்டங்களின் கீழ்; வீடமைப்புத் திட்டங்கள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறு கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் எமது மக்களின் தற்போதைய பொருளாதார நிலை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவதால், வீடமைப்பிற்கான கடனுதவிகள் என்ற வகையில் குறிப்பிட்ட தொகைகளை மாத்திரம் வழங்குவது, அவர்களது வீடில்லாப் பிரச்சினைக்கு உரிய தீர்வாக இருக்கப் போவதில்லை. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வறிய மக்களுக்கான வீடுகளின் தேவை 25 ஆயிரம் வரையில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. ஏனைய மாவட்டங்களிலும் இதே தேவைகள் இருக்கின்றன. ஏனைய வீடமைப்பு உதவித் திட்டங்கள் மீள்குடியேற்ற மக்களையே இலக்காகக் கொண்டுள்ள நிலையில், மேற்படி வறிய மக்களுக்கென மாதிரிக் கிராமங்களின் தேவை உணர்த்தப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமங்கள் புதிதாக அமைக்கப்படல் வேண்டும். இதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாடாளுமன்ற சபையில் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் நான் பிரஸ்தாபித்து வருகிறேன். ஆனாலும் தீர்க்கப்பட வேண்டிய பிரதான பிரச்சினை என்பது இந்த நாட்டில் நிலவும் தேசிய இனப்பிரச்சினையே ஆகும்.

தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும்  தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக  குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் வாழும் ஏனைய இன சமூக மக்களோடு சரி நிகர் சமமாக வாழ விரும்பும் எமது மக்கள்,…அதற்கு மாறாக இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படுகிறார்கள்.

ஆகவே எமது மக்கள்  சமவுரிமை சுதந்திரத்தை விரும்புகிறார்கள். தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் யாவும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. .அதை நான் மறுக்கவில்லை. ஆனாலும்,.. முன்னெடுத்த முயற்சிகள் யாவும், இலட்சியங்களை கனவு கண்ட தமிழ் பேசும் மக்களின் கண்களுக்கு வெறும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு முயற்சிகளும் கானல் நீராகி ஏமாற்றங்களை தந்திருந்த போது, அம்பு துளைத்த மான்களாக வதை பட்டு, வலி பட்டு எமது மக்கள் அலைந்து திரிந்தார்கள்.

இன்று யுத்தம் இல்லை. ஆனாலும் எமது மக்கள் சுமந்து நின்ற யுத்தத்தின் வடுக்களுக்கு ஈடான நிரந்தர அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இருந்தும் உரிய முறையில் அது முன்னெடுக்கப்படவில்லை.

அனுபவங்களே அர்த்தமுள்ள படிப்பினைகள். உண்மையாகவே  தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை யாரும் புதிதாகக் காண விரும்பினால். இதுவரை கால அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தும் ஏன் தோல்வியில் முடிந்தன என்பதை முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவதை  இனியாவாது நிறுத்த வேண்டும்!… இந்த நாட்டில் அரசியல் யாப்பில் இருக்கும் அரசியல் நடைமுறைகளை ஆரம்பக் கட்டமாக முதலில் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

அரசியல் தீர்வு முயற்சிகள் யாவும் அசையமுடியாத தேராக அரசியல் சகதிக்குள்  புதைந்து நிற்கின்றன.  அதை இழுத்து வந்து இலட்சிய திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால் நடைமுறை யதார்த்த வழியில் சிந்திக்க வேண்டும்.

அதற்காக என்ன செய்ய வேண்டும்?… எங்கிருந்து தொடங்க வேண்டும்?… இந்த கேள்விகளுக்கு விடை கண்டு அர்த்த பூர்வமான செயல் வடிவத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

அரை குறைதீர்வு என்றும்,.. பழுதான தீர்வு என்றும்,  ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்றும் காலங்காலமாக கூறிக்கொண்டு, கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் வெறுமனே நிராகரித்து விட்டு  எமது மக்களுக்கு எந்த தீர்வை எவர்தான் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அரசியல் பேச்சு வார்த்தை என்று கூறி, அவ்வப்போது அழகழகான கோசங்களை உச்சரித்து, வெறும்  கானல் நீரை மட்டுமே  காட்டி எமது மக்களை  கால காலமாக ஏமாற்றிக்கொண்டிருகிறார்கள். அதைவிடவும் இருக்கின்ற வாய்ப்புகளில் இருந்து தொடங்கி இறுதி இலக்கு நோக்கி செல்ல எம்மை தவிர எந்த தலைமைகளும் முன்வரவில்லை.

நீண்ட காலமாக நான் சொல்லி வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனங்கள். நிறைந்தவை. தொலை தூர நோக்கு கொண்டவை. இதை அன்றே ஏற்றிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இந்த மண்ணில் சுதந்திர பிரஜைகளாக இன்று வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

அழிவுகள் நடந்திருக்காது,…அவலங்கள் தொடர்ந்திருக்காது…

தமிழ் பேசும் மக்கள் தாம் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தை நடை முறையில் இதுவரை பெற்றிருப்பார்கள். ஆனாலும் அது இங்கு நடக்கவில்லை!

இது ஒரு தேசிய இனத்தின் ஏமாற்றம். இந்த நாட்டில் வாழும் ஒரு பூர்வீக குடிமக்களின் துயரம். இத்தைகைய எனது ஆழ்மன துயர்களில் இருந்துதான் நான் இந்த சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறேன்.

அடுத்த தேர்தலில் எப்படி வெல்வது என்ற தந்திரங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்கள் அரசியல் தீர்வின்றி அவலப்படும் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றும் தந்திரங்களை ஏன் தெரிந்து கொண்டிருக்கவில்லை?..

இனிமேலும் இந்த தேர்தல் தந்திரங்கள் எமது மக்களிடம் பலிக்காது. ஆகவே நடைமுறையில் இருக்கும் அதிகாரங்களை ஏணிப்படிகளாக கொண்டு இலக்கை எட்டும் எமது வழிமுறை நோக்கி வருமாறு  அழைப்பு விடுத்தவனாக விடைபெறுகின்றேன்

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...
சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!