ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019

இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் – சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், இந்த நாட்டு மக்களுக்கு இன்று இலவசமாக – அதுவம் மிக இலகுவாகக் கிடைக்கின்ற சந்தைப் பொருளாக இந்த விவகாரம் மாற்றப்பட்டுள்ளது.

யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது இந்த நாட்டு அரசின் கடப்பாடாகும். மனமிருந்தால் இடமிருக்கும் என்பார்கள். இந்த நாட்டில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதும், இழப்பீட்டு அலுவலகம் அமைப்பதும், விரைவானதாகவும், அர்த்தமுள்ளவகையிலும், பாதிக்க்பபட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாகவும், உண்மைகளைக் கண்டறிவதாகவும் அமையவேண்டும்.
அழுதும் பிள்ளையை அவளே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் வேண்டுமென்றால் ஒரு பிள்ளைப் பிரசவித்தின்போது மருத்துவிச்சியின் பங்களிப்பு போல், பங்களிப்புகளை செய்யமுடியும். பிள்ளை பெற வேண்டியவளை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்தப் பிள்ளையை மருத்துவிச்சியினால் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதையே இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து இனங்களுக்கிடையிலான மோதல்கள், அரசியல் காரணங்களுக்கான மோதல்கள், மதங்களுக்கிடையிலான மோதல்கள், சமூகங்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற, நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.
இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயத்தை நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்த காலம் முதல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம். இச்செயற்பாடானது ஓர் ஆரம்பமே அன்றி, முடிவல்ல. இதையே இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இம்முறை ஜெனீவா கூட்டத் தொடரிலும் இந்தியா அதனையே வலியுறுத்தியிருக்கின்றது. அந்த வகையில் இந்தியா இந்த விடயத்தில் தனது கடப்பாட்டினை ஒழுங்குற நிறைவேற்றியிருப்பதையிட்டு, எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், இந்தப் பொறுப்புக் கூறல் என்ற விடயமானது, இந்த அரசை சார்ந்தது என்கின்றபோது, தற்போது இந்த அரசைக் கொண்டு வந்தவர்களான – இந்த அரசைத் முண்டு கொடுத்தும் கொண்டிருக்கும் கொண்டுள்ளவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்புமாகும். அவர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவருகின்றார்கள். வடக்கில் அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும், தெற்கில் அரசுக்கும் கால அவகாசம் வழற்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறு இரட்டைப் போக்கு அரசியலே இவர்களின் வரலாறாகும்.
அதாவது, ஒரு பக்கத்தில் அரசுடன் இணைந்து இந்தப் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் அதற்கான ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டே, மறுபக்கத்தில் அரசுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்பதுபோல் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். இதை எமது மக்கள் விளங்கிக் கொண்டு வருகின்றாரகள்
இலங்கையில் நடைபெற்ற கசப்பான அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறல் என்பது அவசியமாகும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு சமத்துவமாக வாழ்வதற்கு ஏற்றவகையான அணுகுமுறையே அவசியமாகும்.
அதைவிடுத்து “பழிக்கு பழி” என்றவாறாக விடயங்களை கையாள முற்பட்டால் அது இனங்களுக்கிடையே பகைமையையும், முரண்பாட்டையுமே மேலும் கூர்மைப்படுத்தும் அவ்வாறான கசப்பான சூழலுக்கு இடமளிக்காமல், இனங்களுக்கிடையே ஒற்றுமையும், ஐக்கியமும் ஓங்கி வளரச் செய்யும் வகையில் அவ்விடயங்களைக் கையாளும் பொறிமுறைகளுமு;, அணுகுமுறைகளும் அமைவது மிக மிக அவசியமாகும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதும், சர்வதேச நீதிப் பொறிமுறையும், சர்வதேசத் தலையீடுமே தமிழ் மக்களுக்கு நீதியையும், தீர்வையும் பெற்றுத்தரும் என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதும், தென் இலங்கையில் அரசுடன் தரகு அரசியல் நடத்துவதும் போலித் தமிழ்த் தேசியம் பேசுவோர் தந்தரிச அரசியல் என நினைக்கலாம். இவ்வாறான இட்டை முகம்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.
உள்நாட்டில் உழாத மாடு, ஜெனிவா போய் உழாது என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். நான் கூறியதே இன்று நடந்துள்ளது. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்குச் சென்று அங்கு சர்வதேசத்தைப் பிடித்து அவர்களைக்கொண்டு அரசின் காதைத் திருகப்போவதாக பெரும் எடுப்பில் போனவர்கள்.
அங்கே ஜெனிவாவில் பிரதான பொதுச் சபையில் கலந்து கொள்ள முடியாமல் ஜெனிவா தேனீர் கடைகளில் சந்திப்புக்களை நடத்தியும், கலந்துரையாடல்களை நடத்தியும் காலத்தை வீணடித்துவிட்டு, தமிழ் மக்களுக்காக எதையோ சாதித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துவிட்டு நாடு திரும்புகின்றார்கள்.
இவர்களின் இந்தப் பயணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் ஏதுமில்லை. ஜெனிவா தேனீர் கடைகளில் பேசுகின்ற விடயங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜெனிவா பொதுச் சபையில் பிரதிபலிக்கச் செய்யாது மாறாக அது ஊடகங்களுக்கும் அவரவரின் கட்சி அரசியலுக்குமே உதவலாம்.
எனவே, பொறுப்புக் கூறல் என்ற விடயத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்பாகும்.
எனவே, காலங் கடந்தாவது இந்த நாடு இவ்விடயம் தொடர்பில் இப்போதாவது அக்கறை கொள்வது நல்லதென்றே குறிப்பிட்டு, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது எண்ணக் கரு மூலமாக இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ‘ஜனசவிய’ – மக்கள் வலு – உதவித் திட்டத்தின் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசினால் கொண்டுவரப்பட்ட ‘சமுர்த்தி” – சுபீட்சம் – திட்டத்தின் மூலமாக கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையில் சுமார் 14,22,557 குடும்பங்கள் பயன்பெற்று வருவதாகவும், மேலும் 1,50,000 குடும்பங்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு கூறப்பட்டிருந்த 1,50,000 பயனாளிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டார்களா? என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கின்ற நிலையில், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சமுர்த்தி உதவித் திட்டத்திற்கென 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்;ளப்பட்டுள்ளது.
புதிதாக சமுர்த்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற பயனாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டே உதவிகள் வழங்கப்படும் என்றும், அந்த கால வரையறைக்குள் அவர்கள் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட்டு விடுவார்கள் என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஆகவே, இவ்வாறு புதிய பயனாளிகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பொருளாதார ரீதியில் பலப்படுத்த முடியுமானால், இதற்கு முன்பிருந்தே சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற குடும்பங்களை ஏன் இன்னும் பொருளாதார ரீதியல் பலப்படுத்த முடியாது போய்விட்டது? என எமது மககள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன.
பங்களிப்பு அபிவிருத்தியின் பிரவேச அடிப்படையிலான சமுர்த்தித் திட்டமானது, பல்வேறு சக்திகளால் காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பலஹீனமான மக்களின் ஆக்க ரீதியிலான ஆற்றல்களை கூட்டிணைந்த முயற்சியின் ஊடாக வெளிப்படுத்தி, அம் மக்களுக்கு சாதகமான வகையில் – தற்போது நடைமுறையிலுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, அம் மக்களது முயற்சியினால் உருவாகும் பங்களிப்புத் திட்டமென வரையறைப்படுத்தப்படுகின்றது.
பல்வேறு சக்திகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த எனும்போது இது குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மிக அதிகமாகவே சுட்டிக்காட்டுகிறது என்றே தற்போதைய இந்த நாட்டின் நிலையிலிருந்து குறிப்பிடப்படல் வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும். அதில் இன்னும் ஒரு படி நிலை தாண்டி, ‘பல்வேறு சக்திகளால் அடக்கி வைக்கப்படுகின்ற மக்கள்’ என்றும் கூட வடக்கு மாகாண மக்களை குறிப்பிட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்த நிலையில் இன்று கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி சமுர்த்தி உதவிகளை எதிர்பார்த்தவர்களாக பல ஆயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்டுள்ள 23 கிராம சேவையாளர் பிரிவுகளில் எவ்விதமான சமுர்த்திக் கொடுப்பனவுகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக எடுத்துக் கொண்டால், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைக் கிழக்கு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 136 கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வெலிஒயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமிருந்து தற்போது 11 ஆயிரத்து 52 பேருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற நிலையில், மேற்படி 23 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழ்கின்ற 9 ஆயிரத்து 551 பேர் சமுர்த்தி உதவிகள் பெற தகுதியிருந்தும், அவர்கள் இன்னமும் சமுர்த்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.
மேலும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி உதவிகள் பெற தகுதியுடைய பல ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் சமுர்த்தி உதவித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படாதுள்ளனர்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்;ப்பாணம் மாவட்டத்திலே 36 ஆயிரத்து 334 குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்திலே 8 ஆயிரத்து 435 குடும்பங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலே 5 ஆயிரத்து 961 குடும்பங்கள், வவுனியா மாவட்டத்திலே 6 ஆயிரத்து 712 குடும்பங்கள், மன்னார் மாவட்டத்திலே 5 ஆயிரத்து 903 குடும்பங்கள் என 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வாழ்கின்றன.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பெண்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்குக் குறைந்தவர்களாகவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவர்களைத் தவிர பொருளாதார ரீதியில் மிகவும் வலுவற்ற நிலையில் மேலும் பல குடும்பங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்து வருகின்றன.
யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட காலப்பகுதிகளில் இம்மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் அரசு விசேட திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக தமிழ் மக்களின் நலன் கருதா தமிழ் அரசியல் துரோகிகளை நோக்கி தமிழ் மக்களின் அரசியல் பலம் கேரள கஞ்சா போல் கடத்தப்பட்டமை காரணமாக எமது மக்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் வாய்க்கவில்லை. எமக்கு இருந்த குறைந்தளவு அரசியல் பலத்தினை வைத்து எம்மால் இயன்றளவு உதவிகளை எமது மக்களுக்கு செய்ய முடிந்திருந்தது எனினும் அது போதுமானதல்ல. எமக்கு போதிய அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருந்தால், எமது மக்களின் அடிப்படை மற்றும் பொருளாதாரப் பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரையிலான பல்வேறு பிரச்சினைகள் இன்று நடைமுறை சாத்தியமான வகையில் தீர்க்கப்பட்டிருக்கும்.
நீங்களும் இத்தகைய பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கென விசேட பொருளாதார திட்டங்கள் எதையும் முன்வைப்பதாகவும் இல்லை. கடன் திட்டங்களை மாத்திரம் கடனுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, இந்த சமுர்த்தித் திட்டத்திலாவது அம்மக்களில் தகுதியானவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு இனியாவது உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன்.
அதேநேரம், 50 ஆயிரம் குடும்பங்களுக்கான விசேட வாழ்வாதார கருத்திட்டம் பற்றிக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென இதனது பங்களிப்பு என்ன என்பது தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது. 50 வீத மானிய அடிப்படையிலான திட்டம் இது என்பதால் கடந்தகால பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 90 வீதமான மானிய அடிப்படையில் இத் திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டால், எமது மக்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்ற விடயத்தையும்; இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அத்துடன், சமுர்த்தி அலுவலர்கள் தொடர்பிலான தொழில் ரீதியிலான சிக்கல்கள் இன்னும் தீர்ந்ததாக இல்லை. சமுர்த்தி அதிகார சபையானது சமுர்த்தி திணைக்களமாக மாற்றப்பட்டதன் பின்னர், நிரந்தர நியமனங்கள் தொடர்பில் சிக்கல்கள் தொடருவதால், மேற்படி அலுவலர்கள் ஊதியம், பதவியுயர்வு, ஓய்வூதியம் போன்ற விடயங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறதே அன்றி, அதற்கென முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அடுத்ததாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடுகின்றபோது, அண்மைக் காலமாக இந்த நாட்டில் மிளகு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் மிகவும் பரவலாகவே பேசப்பட்டிருந்தது.
மறுபக்கத்தில் மீள் ஏற்றுமதி மிளகு காரணமாகவே இந்த நாட்டு மிளகு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த மீள் ஏற்றுமதி தொடர்பில் அதிக அவதானங்களை எடுத்து, அதனை தடுத்து நிறுத்தாவிட்டால், இந்த நாட்டின் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலான சர்வதேசத்தின் நம்பிக்கையானது மேலும் சிதைந்துவிடும். இப்போதே சிதைந்து வருகின்றது என்றே தெரிய வருகின்றது.
குறிப்பாக பாக்கு ஏற்றுமதி வர்த்தகமானது தற்போது வலுவிழந்துக் காணப்படுவதாகவே தெரிய வருகின்றது. கடந்த காலங்களில் கருங்கா – கொட்டப் பாக்குகள் இங்கிருந்து மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் விளைவே இதுவெனக் குறிப்பிட இயலும். இனிவரும் காலங்களில் இத்தகைய மீள் எற்றுமதிகள் முற்றாகத் தடைசெய்யப்படுவதோடு, உள்நாட்டு மிளகு மற்றும் பாக்கு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் ஏற்றுமதி தொடர்பில் அவதானங்களைச் செலுத்த வேண்டும்.
அதேநேரம், கித்துள் வளம் தொடர்பில் அதிகார சபை ஒன்று எற்படுத்தப்படப் போவதாகத் தெரிய வருகின்றது. இதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் நான் பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய வெளிநாட்டு சந்தைவாய்ப்புகளின் கேள்விகளுக்கிணங்க கித்துள் உற்பத்திகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிய வருகின்றது. அந்தவகையில், இத்துறையை மேலும் நவீன முறையில் வளர்த்தெடுக்க முடியும் என நம்புகின்றேன்.
அதேபோன்று, வெற்றிலைச் செய்கையினை வடக்கு மாகாணத்திலும் மேலும் செழிப்பான முறையில் முன்னெடுக்க முடியும். இலங்கை வெற்றிலைக்கும் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது.
அதேபோன்று கறுவா, ஏலம், சாதிக்காய் போன்ற பாரம்பரிய சிறு எற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலும் நிறையவே அவதானங்கள் செலுத்தப்பட்டால் இந்த நாட்டிற்கு மிக அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகை பயிரினங்கள் நிறையவே – இயல்பாகவே செழிப்பாக வளரக்கூடிய சூழல் இருந்தும் இந்த நாட்டில் அது அவ்வளவு தூரம் கணக்கில் எடுக்கப்படாத நிலைமையானது துரதிர்ஸ்டவசமானதாகும்.
அதேபோன்று இந்த நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஏனைய சிறு ஏற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலும் கவனமெடுத்து, அவற்றை வளர்த்தெடுப்பதற்கும், அதுசார்ந்த உற்பத்தியில் இந்நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடைபெறுகின்றேன்.
நன்றி.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- ...