இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019

அண்மைக்காலமாக மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான இழப்பீடுகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்குள் இன்று எமது பகுதிகளை கடும் வறட்சி நிலையானது வாட்டி வதைத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது சுமார் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குடிநீருக்கான தட்டுப்பாடு என்பது மிகவும் பாரியளவில்  காணப்படுகின்றது. இவ்வாறு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும், இந்த இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்ற முறைகளிலும், வழங்கப்படுகின்ற முறைகளிலும் ஏற்படுகின்ற தவறுகள் – முறைகேடுகள் காரணமாக எமது மக்கள் இழக்கின்றவற்றுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதில்லை என்பது இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தே தெரிய வருகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுகெதர மற்றும் அங்கம்மன ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்வதற்குக்கூட எந்தவொரு அரச அதிகாரிகளும் செல்லாத நிலையில், கடுமையான பாதிப்புகளை – இழப்புகளை சந்தித்தவர்களுக்கு குறைந்தளவிலான இழப்பீட்டுத் தொகைகளும், குறைந்தளவிலான பாதிப்புகள் – இழப்பீடுகளைச் சந்தித்தவர்களுக்கு அதி கூடிய இழப்பீட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு இரண்டு, மூன்று மடங்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டதாகவும் அம் மக்கள் கூறுகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கின்றபோது, வடக்கிலே கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் தொடர்பில்  உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்குமா? அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்குமா? என்ற சந்தேகமே ஏற்படுகின்றது.

ஒன்று, இந்த அரசு அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, இத்தனை ரூபாய் – அத்தனை ரூபா இழப்பீடாகத் தரப்படும் எனக் கூறுகின்றபோதும், அத்தொகை அம்மக்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவது, அரசு ஒரு தொகை கொடுத்தாலும் அத் தொகையானது உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இந்த இரண்டு விடயங்களுமே எமது மக்களையே இறுதியில் பாதிக்கச் செய்கின்றது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம் திகதி அவிசாவளைப் பகுதியில், கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம்; வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 400 குடும்பங்களின் இழப்புகள் தொடர்பான பிரச்சினை இன்னமும் தீரவில்லை என அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்பதாக அங்கு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான கடைத் தொகுதி கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்ட போதும், அதுவும் இன்னமும் முடிந்தபாடில்லை என்றே அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கும்கூட உரிய வகையில் இழப்பீட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக ஒதுக்கப்படுகின்றன. வடக்கிலே படையினர் வசமிருக்கின்ற எமது மக்களது காணி, நிலங்களை விடுவிக்கக் கோரினால், இராணுவம் அதற்கு நிதி கேட்பதாகக் கூறப்படுகின்றது. தெற்கிலே இராணுவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனில், இதைப் பற்றி என்ன சொல்வது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது “வந்தபின் காப்போம்” என்ற நிலையில் இருக்காமல், “வருமுன் காப்போம்” என்ற நிலையில் எப்போதும் இருக்க வேண்டும்

இந்த நாட்டிலே குறிப்பாக மழை காலங்கள் – வறட்சி காலங்கள் தொடர்பில் முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பிலான வரலாற்றுப் பாடங்களும் இருக்கின்றன. ஆகவே, மீளவும் அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னரே மக்களை அதிலிருந்து மீட்கப் பேராட வேண்டும் என்ற நிலைமை இல்லாமல் மக்களை அதிலிருந்து முன்கூட்டியே பாதுகாப்பதற்கான ஆயத்தங்களை இந்த அமைச்சு கொண்டிருக்க வேண்டும்.

இப்போது குறிப்பாக இந்த நாட்டிலே வெப்ப நிலை அதிகரித்துள்ளது வடக்கிலே வெப்ப நிலை மிக அதிகமான பாதிப்புகளை எமது மக்களுக்கு கொண்டு தருக்கின்றது. இந்த வறட்சி நிலையிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக – குறைந்தபட்சமாக குடிநீருக்கான வசதிகளையாவது மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

குடிநீருக்கான பவுசர்களைக் கொடுத்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு நீங்கள் இருந்தாலும், அந்த பவுசர்களில் விநியோகிப்பதற்கு வடக்கிலே குடிநீர் இருக்க வேண்டும். குடிநீருக்கே பாரிய தட்டுப்பாடுகள் அங்கே நிலவுகின்றன.

ஆகவே வடக்கில் மட்டுமல்ல, இன்று குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீருக்கான உத்தரவாதம் முன்கூட்டியே இருக்கின்றதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்ற செயற்பாடுகளையும் இந்த அமைச்சு ஆராய்ந்திருக்க வேண்டும்.

அதேபோன்று மழை காலங்களில், மழை நீர் சேமிக்கப்படக்கூடிய வகையிலான ஏற்பாடுகள், வழிந்து செல்லக்கூடிய வசதிகள், மண் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாய இடங்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டங்கள் குறித்த முன்கூட்டிய ஆய்வுகள் இருக்க வேண்டும்.

இன்று இந்த நாட்டில் பொது மக்களின் தேவைகளை அதிக அக்கறையுடன் கவனித்து, அவற்றுக்கு உடனுக்குடன் உதவுகின்ற வகையில் ஊடக நிறுவனங்கள் பல செயற்பட்டு வருகின்றன.

மழை, வெள்ளம் வந்தால் ஓடிச் சென்று மக்களுக்குத்; தேவையான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் இந்த ஊடக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. நாடளாவிய ரீதியில் மரங்களை நடுகின்றன. கடற்கரைகளை சுத்தஞ் செய்கின்றன. இருதய நோயாளிகளை பராமரிக்கின்றன. சுத்தமான குடிநீருக்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன. இதில் ஒன்றையேனும் ஒரு நாட்டின் அரசாங்கத்தால் ஒழுங்குற செய்ய முடியவில்லை என்றால், அதைவிட மோசமான நிலைமை வேறு என்ன இருக்கின்றது? 

பொது நிர்வாக அமைச்சு தொடர்பில் கதைக்கின்றோம். இன்னமும் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் என்ற விடயத்தில் நீங்கள் எந்தளவுக்கு முன்னேறியிருக்கின்றீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்

இந்த நாட்டில் தமிழ் மொழி மூலமான பரிச்சயத்தை மாத்திரமே கொண்டுள்ள எமது மக்களுக்கு, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரச சேவைகளின்போது சிரமங்கள் தோன்றுகின்ற போது, இதனை எமது மக்கள் பொது நிர்வாகம் என எப்படி இனங்காண்பார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.

ஆக, மொழி ரீதியாக பொது நிர்வாகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்படுகின்ற எமது மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் என்பது எந்த மொழியில் ஏற்படப் போகின்றது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இவ்வாறு எதிலும் பாகுபாடுகள் தொடருமானால், பிறகெதற்கு இந்த தேசிய நல்லிணக்க முயற்சிகள்? என்றே எமது மக்கள் கேட்கிறார்கள்

தமிழ்; அரசியல் கைதிகள் விவகாரம் இன்னும் அப்படியே இழுபட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டால்தான் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய நினைப்பே வருகின்றது –

கடந்த பொதுத் தேர்தலின்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய இந்த தமிழ் அரசியல் தரப்பினர், இந்த ஆட்சி வந்தவுடன், இந்த ஆட்சியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்றவர்கள், கடந்த ஆட்சி மாற்றத்தின்போது, இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்காக இரவு, பகல் ஓடித் திரிந்தவர்களால், இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் ஒரு துரும்பைக் கூட இதுவரையில் அசைக்க முடியவில்லை என்றால், பிறகெதற்கு அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள வேண்டும்? என எமது மக்களே இன்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தத் தமிழ்த் தரப்பினர் அழுத்தங் கொடுக்கவில்லையே என்பதற்காக அரசும் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான விடயத்தில் மௌனம் சாதித்துக் கொண்டே வருகின்றது என்றே நினைக்க வேண்டியிருக்கின்றது. அப்படி நினைப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கின்றேன். அதாவது இந்த அரசு தாம் சொல்வதைத்தான் கேட்கும் என இந்தத் தமிழ்த் தரப்பினரே கூறி வருகின்றனர்.

இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு கொடுக்க வேண்டியதை ‘அழுத்தமாகக்” கொடுத்துவிட்டால் போதும், அவர்கள் எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தங்களே கொடுக்க மாட்டார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும்.

அந்த எண்ணத்தில் எமது மக்களது பிரச்சினைகள், தேவைகள் எதுவும் தீர்க்கப்படாமல் விடக்கூடாது என்பதற்காகவே நான் தனித்தேனும் இருந்து குரல் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

அந்தவகையில், இங்கு அரசியல் என்பதைவிட மனிதாபிமானமே தேவைப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் முதலில் தேவை மனிதாபிமானமாகும்.

அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் இதே மனிதாபிமானமே இன்று தேவைப்படுகின்றது

தமிழ் மக்களின் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு, தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு.

இந்த ‘கம்பெரலிய’ எனப்படுகின்ற ‘கிராமப் பிறழ்வு’ வேலைத்திட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருந்தது. அந்த வகையில் யார்? யாருக்கு? எவ்வளவு தொகையினை, எந்தெந்த வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கினீர்கள்? என்றொரு கேள்வியை இதே நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதற்கு இதுவரையில் பதிலில்லை.

அதற்கான பதில் வெளிவந்தால், இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பெற்ற தொகை வெளிவந்திருக்கும். அத் தொகைகளை எந்தெந்த வேலைத் திட்டங்களுக்காக செலவு செய்தார்கள் அல்லது செலவே செய்ய வில்லையா என்ற விபரங்களும் தெரிய வந்திருக்கும். எனவே, அது தெரிய வரக்கூடாது என்பதற்காக இதே தமிழ்த் தரப்பு அதற்கான பதிலை இழுத்தடிக்குமாறு கூறியிருக்கலாம். அப்படியான திருகுதாள வேலைகளை செய்வதில் இவர்களுக்கு நிகராக இன்னமும் இவர்களே இருக்கின்றனர்.

எனவே, இந்தத் தமிழ்த் தரப்பினரை சந்தோசப்படுத்துகின்றோம் என்பதுடன் நின்றுவிடாது, எமது மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் .

Related posts: