இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு  தமிழ் மக்களின் சார்பாக முக்கியத்துவம்வாய்ந்த பல விடயங்களை வலியுறுத்தி வருகின்றேன்.

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.

நான் ஏற்கெனவே கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அவதானத்துக்குக் கொண்டுவந்ததைப்போல், முப்படைகள், காவல்துறை மற்றும் சிறைச்சாலைகளுக்கென ஆளணிகளை இணைத்துக்கொள்ளும்போது, இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில், அந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய தேசிய கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் சனத்தொகையினதும் இன விகிதாசாரத்தினதும் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப முப்படையினரும் காவல்துறையினரும் பணியில் அமர்த்தப்படவேண்டும் என்றும், போதிய அளவில் அந்த அந்த மாவட்டங்களில் வசிக்கின்ற மக்களது மொழிகளினால் பணிகளை மேற்கொள்ளத்தக்க அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் தேசியப் பாதுகாப்பையும் இலகுவாகப் பேணமுடியும் என்பதுடன், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பயனுள்ள வகையில் கட்டியெழுப்பவும் முடியும். தொழில் வாய்ப்பின்மைப் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண்பதற்கும் சமூக, ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கும்,பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் வேண்டும்.

அதேநேரம் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகும். அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் அதிகளவில் பொருத்தமான வாழ்வாதாரங்கள் அற்ற நிலையில் மிகவும் க~;டமானதொரு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இவர்களை இனம் கண்டு இவர்களுக்கான வாழ்வாதாரங்களை முன்னெடுக்கத்தக்க வகையில் போதிய கொள்கைத்திட்டம் ஒன்று அவசியமாகும். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள பொதுவான நிவாரணத் திட்டங்களால் எம்மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறான பிரச்சினைகள் எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளாக மாத்திரமன்றி உணர்வு ரீதியான பிரச்சினைகளாகவும் உருவெடுத்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யுத்த அழிவுச் சின்னங்களை உடனடியாக அகற்றுங்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்த காலம் முதல் வலியுறுத்தி வரப்படுகின்ற பல விடயங்களில் ஒரு விடயம் யுத்தம் நடந்த பகுதிகளில் யுத்த வடுக்களாகக் காணப்படுகின்ற சில பொருட்கள் மற்றும் கட்டடங்கள் போன்ற அழிவுகள் யுத்தச் சின்னங்களாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளை அகற்ற வேண்டியமை பற்றியதாகும். அப்பகுதிக்குள் செல்கின்ற எமது மக்கள் மத்தியில் கடந்த காலக் கசப்புணர்வுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் உல்லாசப் பிரயாணத் தலங்களாக அவை மாற்றப்பட்டு வருவதன் காரணமாகவும் எமது நாட்டு மக்களிடையே பல்வேறு உள ரீதியான தாக்கங்களை அவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தமிழ் மக்களிடையே தாம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகம் என்ற தாழ்வுணர்வுகள் மேற்படி செயற்பாடுகள் காரணமாக ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இயலாதுள்ளது. ஆகவே, கடந்தகாலத் தமிழ்த் தலைமைகளின் தவறான வழிமுறைகள் தோற்கடிக்கப்பட்டனவே தவிர தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உணர்வுகளை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தாமல் தேசிய நல்லிணக்கம் குறித்து நாம் கதைத்துக் கொண்டிருப்பதைச் சாத்தியமற்ற ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எனவே, இவ்வாறான எமது மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களில் அதிக அவதானத்தைச் செலுத்தித் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான பற்றுதலை எமது மக்கள் மத்தியில் உளப்பூர்வமாகக் கட்டியெழுப்பி அதனூடாக எமது மக்கள் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஓர் ஆரோக்கியமான நிலைமையை நாம் தோற்றுவிக்க வேண்டும் என்பதையும் இங்கு நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். எனவே கடந்த காலக் கசப்பான சம்பவங்களை எமது மக்களுக்கு மீள நினைவுபடுத்தாத வகையிலும் மீண்டும் அவ்வாறான ஒரு காலகட்டத்துக்குள் மக்களைத் தள்ளிவிட எண்ணிவிடாத வகையிலும் அவற்றை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயற்பாடுகள்மூலமே எம்மால் இந்நாட்டில் இரு இனங்களுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமான தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது.

தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாம் இலங்கையர் என்ற அடையாளத்தை இழக்கவோ அதேநேரம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ விரும்பவில்லை. தமிழ் மக்கள் தமிழர்களாகவும் அதேநேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகின்றனர் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். அதேநேரம் எமது இனப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பிலான  அரசியல் தீர்வு குறித்து கௌரவ பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகளையும் அது தொடர்பில் காட்டுகின்ற அக்கறையையும் நான் வரவேற்கின்றேன்.

அதேநேரம் எமது மக்களின் காணிகள் பல இன்னமும் அம்மக்களுக்கு வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இந்த நாட்டில் தற்போது தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அத்தேவைகளுக்காக அரச காணிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், எமது மக்களின் வாழ்விடங்களையும் வளமான விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த நிலங்களையும் விடுவித்து எமது மக்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும் என்று இங்கு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழரின் வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன!                                                                                 

ஏற்கெனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும் இந்த வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின்போது நான் வலியுறுத்தியமைக்கமைவாகவும் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேல் நீதிமன்றங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான வழக்குகள் பல நிலுவையில் இருப்பதன் காரணமாகவும் தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கு இலகுவானதோர் ஏற்பாடு என்ற வகையிலும் தமிழ்மொழி மூலமான நீதிபதிகளை நீதிமன்ற அமர்வுகளின்போது அமர்த்த வேண்டுமென்ற விடயத்தை நான் இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது இனரீதியான கோரிக்கையல்ல. எமது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் கருதியே இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்பதை அவதானித்தில் கொள்ளவேண்டுமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன முரண்பாட்டை வளர்க்க தீய சக்திகள் முயற்சிக்கின்றன!

நாட்டில் ஏற்கெனவே தோன்றியிருந்த இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தற்போது ஒருசில தீய சக்திகளால் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆங்காங்கே தென்படுவதாகத் தெரிய வருகின்றது. அந்தவகையில், அண்மைக் காலமாக சகோதர இன மக்களாகிய சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே மோதலை  ஏற்படுத்துகின்ற வகையில் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறே கிழக்கில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முனைந்து வருவதாக அறிய முடிகின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இனவாதம் ஒரு நச்சு விதை!

இனவாதம் என்பது ஒரு நச்சு விதையாகும். எனவே அது எந்தத் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவதாயினும் அதனை இரும்புக் கரம் கொண்டே நாம் அடக்க வேண்டும். தவிர, நியாயமான கோரிக்கைகள் என்று வரும்போது அதுதொடர்பில் நாம் மனிதாபிமான ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள்

யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள 5ஆம் வட்டம், ஜேஃ67ஆம் இலக்க கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள காணியில் 1985ஆம் ஆண்டிலிருந்து சுமார் 68க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் 1991ஆம் ஆண்டு முதல் அரச நில வரிப்பணம் செலுத்தி வருவதாகவும்  கூறுகின்றனர். யுத்தம் காரணமாக 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்துள்ள இம்மக்கள்  2009ஆம் ஆண்டு மீண்டும் அதே காணியில் மீள் குடியேறி தங்களது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களது வசதிக்கு ஏற்றவகையில் சேதமாகிப் போயிருந்த இருப்பிடங்களை மீளப் புனரமைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தக் காணி நீதி அமைச்சுக்குரியது என்று கூறுப்பட்டு அம்மக்களை அங்கிருந்து  வெளியேறுமாறு கோரப்பட்டு வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே  இவ்விடயம் தொடர்பில் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில் அவதானம்  செலுத்தி அம்மக்களின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு அக்காணியை அம்மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையெடுத்து உதவுமாறும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். நீதிமன்றத்திற்கான தேவைகள் ஏற்படும்போது அதற்குப் பொருத்தமான அரச காணியை இனங்காட்ட இயலும் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 ஆயுத வன்முறை ஓய்ந்து வாள் வெட்டு வன்முறை தலை தூக்கியுள்ளது.

மழை விட்டும் தூவானம் விலகவில்லை என்பதுபோல, ஆயுதம் ஏந்திய வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையிலும் யாழ். குடா நாட்டில் தற்பொழுது வாள் வெட்டு  வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இதனை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு வெறும் சட்டம், ஒழுங்கினால் மாத்திரம் இயலாதெனவும் நான் கருதுகின்றேன்.  ஏனெனில், சுமார் 30 வருடங்களாகப் பாரியதொரு யுத்தம் நிலவியுள்ள நிலையில் எமது இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்கள் இல்லாமை காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.  இதற்காக நாம் அந்த இளைஞர்களையோ பொலிசாரையோ மாத்திரம் குறை கூற முடியாது.  அதற்கு அரசியல்வாதிகள் என்ற வகையில் நாங்களும் மத அமைப்புக்களும் சமூக, கலாசார அமைப்புக்கள் போன்ற பொது அமைப்புக்களும் பொறுப்பேற்கவேண்டும்.  இளைஞர்களை இவ்வாறான செயற்பாடுகளின்பால் தள்ளிவிடாத வகையிலான விழிப்புணர்வுகளை நாம் அவர்களுக்கு வழங்கவேண்டும்.

அந்தவகையில், காவல் துறையினரும் இதனை அவதானத்தில் எடுத்துக்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.  அதேநேரம் காவல் துறையினர் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் மிக அவதானமாகக் கவனமாக மேற்கொள்ளப்படவேண்டிய அணுகுமுறைகளாக இருப்பது அவசியமாகும்.

ஏற்கனவே அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக முறையிலான போராட்டங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் அதனை ஒடுக்குவதாகக் கூறி வன்முறைகளைப் பிரயோகித்ததன் பயனாக முள்ளிவாய்க்கால் வரை எங்களை இட்டுச் செல்ல வழிகோலியது என்பது எங்களுக்கு முன்பிருக்கின்ற அனுபவப் பாடமாகும் என்பதையும் நாம் கருத்திற்கொண்டே செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்பதை நான் இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

எமது இளைஞர்கள் விழிப்புனர்வோடு எழ வேண்டும்.

சமகால இளைஞர்களே அடுத்துவரும் எமது சந்ததியினருக்கான தீர்க்கமான எதிர்காலத்தைப் படைக்கக் கூடியவர்கள்.  எமது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் மட்டும் போதாது.  கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாகக் கொண்டு மட்டுமே எமது இளைஞர்கள் விழிப்புணர்வுகொண்டு எழவேண்டும்.  எமது இளைஞர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் அல்ல.  அவர்கள் தமிழ் அரசியல் தலைமைகளுக்கே அறிவூட்டும் ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும்.  மாறாக, தமிழ் பேசும் இளைஞர்கள் அர்த்தமற்ற வன்முறைகளுக்குத் தூபமிடுவோரின் பின்னால் செல்லும் நிலைமைகளுக்கு இந்த அரசாங்கம் வழிவகுக்கக் கூடாது என்பதே எமது விருப்பமாகும்.  ஆகவே, உண்மையாகவே அரசியல் உரிமைகள் குறித்து இலட்சியக் கனவுகளோடு வாழும் எமது இளைஞர்களின் கனவுகள் விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.  இதேவேளை தகைமையுள்ளவர்களுக்கு அரச வேலைவாய்ப்பும் அந்தத் தகைமையில்லாதோருக்குத் தொழிற்துறைகளை நிறுவி அதன்மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.  இதன்மூலம் எமது இளைஞர்களை நாம் சரியான திசைவழி நோக்கிக் கொண்டுவர முடியும்.  அத்துடன் பொதுமக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்கின்ற ஊர்வலங்கள், போராட்டங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பொலிசார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள், அம்மக்கள் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறாது பாதுகாத்துக் கொள்ளும்வகையில் மட்டுமே அமையவேண்டும். அத்துடன் அம்மக்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றை மதிக்கின்ற செயற்பாடுகளாகவும் அவை அமையவேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை.

1990, 1991, 1992, 1993 போன்ற காலகட்டங்களில் தொடரணி என்ற ரீதியில் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்ட சுமார் 4000இற்கு மேற்பட்டோர் அக்காலகட்டம் முதல் யுத்தம் முடிவுக்கு வரும்வரையில் யுத்தம் நிலவிய பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.  எனினும், இவர்கள் இன்னும் பதவியுயர்வுகள் எதுவுமின்றி  pழடiஉந உழளெவயடிடநள  ஆகவே தொடர்ந்தும் சுமார் 25 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருவதாகத் தெரியவருகின்றது.  அதேநேரம் இவர்களில் பலர் யுத்த காலகட்டத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டனர்.  அந்த வேளையில் அவர்களுக்கு ஒரு தொகை ந~;டஈடு வழங்கப்பட்டது.  எனினும்,

வேறு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லையென்று தெரியவருகின்றது.  தற்போதுள்ள நடைமுறைக்கிணங்க மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பின்னர் அதாவது 2000ஆம் ஆண்டளவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டோருக்கே 15 வருட சேவைக்காலத்தினைக் கருத்திற்கொண்டு பதவியுயர்வுகள் உட்பட இதர சலுகைகளும் வழங்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு மேற்படி பொலிஸாருக்கு உரிய பதவி உயர்வுகளை வழங்குவதற்கேற்ற கொள்கைத்திட்டம் ஒன்றினையும் வகுக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம்.

யாழ்ப்பாண கோட்டையின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் நான்  ஏற்கெனவே கௌரவ பிரதமர் அவர்களின் அவதானத்துக்குக் கொண்டுவந்தபோது, கௌரவ அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் காலிக் கோட்டை புனரமைப்பு தெடர்பில் ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் இணைந்து யாழ் கோட்டைப் புனரமைப்பு பனிகணை மேற்கொள்ள முடியுமென்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அத்துடன் கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரத்தக்க வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொது நினைவு தினத்தை பிரகடனப்படுத்துமாறும், உயிரிழந்த உறவுகளுக்கு சமய ரீதியிலான அனு~;டானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவதாக ஒரு பொது நினைவுத்தூபியை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மீண்டும் மீண்டும் இந்த சபையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவ்வாறான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்கின்றபொழுது  பல்வேறு சர்ச்சைகள் அநாவசியமாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டு அவை இனவாத ரீதியாக முன்னெடுக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் முடியுமென்று நான் கருதுகின்றேன். குறிப்பாக ஒவ்வொரு வருடமும்  கார்த்திகை மாதம் ஆரம்பமானவுடனேயே ஒரு விடயம் எமது நாட்டில் பாரியதொரு பிரச்சினையாக உருவாக்கப்படுகிறது. அதாவது, மாவீரர்கள் தின கொண்டாட்டத்திற்கு புலிகள் தயாரென்ற ஒரு பிரச்சாரம் தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  அதேநேரம், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட எமக்கு உரிமையில்லையென்ற நிலைப்பாடும் எமது மக்களிடத்திலே ஏற்படுத்தப்படுகிறது.

அதேநேரத்தில், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட, எமக்கு உரிமை இல்லை என்ற நிலைப்பாடு எமது மக்களிடத்தில் ஏற்படுத்தப்படுகின்றது. இந்த நிலைப்பாடானது, இந்த அரசாங்கம் தொடர்பிலான எமது நம்பிக்கையைச் சிதைத்துவருவதாகத் தென்படுகின்றது. இது தேசிய நல்லிணக்கம் பற்றிய சிந்தனைகளை புறந்தள்ளும் வகையிலே – இந்த மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது. எனவே, நான் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளமைக்கு அமைவாக யுத்தத்தால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூரத்தக்க வகையில், ஒரு பொதுவான நினைவுத் தினத்தையும் மத அனு~;டானங்களை மேற்கொள்வதற்கு ஒரு பொது நினைவுத் தூபியையும் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நன்றி

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க...
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் - மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் ...