இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் – பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 21st, 2017
எமது நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் சார்ந்து கூறுவதாயின், இறக்குமதிக்கு ஒத்த வகையில் ஏற்றுமதியின் வளர்ச்சி காணப்படாத நிலையே தொடர்கின்றது. இதன் காரணமாக நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையானது விரிவடைகின்ற நிலை என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது என்றே கருதுகின்றேன். எனவே, பொருளாதாரத்தின் ஏனைய வளர்ச்சிப் போக்குகளுடன் ஒன்றிணைந்த வகையிலான ஏற்றுமதிகளின் வேகத்தினை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இன்று ( 21.02.2017) கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,
ஏற்றுமதியில் நாம் பின்நிற்பதற்கு ஏற்றுமதிக்கான பொருட்களின் பல்வகைத் தன்மை இன்மையே காரணமாக இருக்கிறது. தேயிலை, இறப்பர், மாணிக்கக் கற்கள், தைத்த ஆடைகள் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களே எமது நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களாக தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.
1995ம் ஆண்டில் பல்வகைப் பொருட்கள் ஏற்றுமதியில் எமது நாட்டைவிட குறைந்த மட்டத்தில் இருந்த வியட்நாம், இன்று மின் அணுவியல் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதால் எமது நாட்டைப் பின்தள்ளி முன்னணிக்கு வந்திருக்கின்றது.
2000ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சீனா தனது ஏற்றுமதியில் மேலும் 76 பல்வகைப் பொருட்களை இணைத்துக் கொண்டுள்ளது. இது அந்நாட்டு தனி நபர் வருமானத்துக்கு 245 டொலர்கள் பெறுமதியினைச் சேர்க்கிறது. அதேபோன்று, தாய்லாந்து இக்காலகட்டத்துள் 70 பொருட்களை மேலும் அதிகமாக்கிக்கொண்டு, அந்நாட்டு தனிநபர் வருமானத்திற்கு 326 டொலர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளது.
எனவே எமது ஏற்றுமதியில் நாம் பல்வகைப் பொருட்களை இணைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்குரிய தொழில்நுட்ப அறிவினை பெருக்க வேண்டியுள்ளது. அறிவு விருத்தியின் ஊடாக எட்டப்படுகின்ற ஒரு பொருளுக்கான உற்பத்தியானது, அதன் ஊடான பல்வகை உற்பத்திகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றேன். குறிப்பாக, சீனா மின் அணுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், தைத்த ஆடைகள், இயந்திரங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் கைதேர்ந்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு பல்வகை, பெறுமதி கூடிய பொருட்களைத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே, இத்தகைய அறிவு நிலை வளர்ச்சியை நாம் பெற வேண்டுமாயின், பல்நாட்டு சமூகங்களைச் சார்ந்தோரது உதவிகள், ஒத்துழைப்புகள் பெறப்படுதலும் முக்கியமானது என நான் கருதுகின்றேன். அதாவது, பல நாடுகளிலிருந்து வருகின்ற மக்கள் பல்வகை ஆற்றல்களை ஒரு நாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள். சிங்கப்பூரை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு 40 வீதமானவர்கள் வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த வகையில் மிக நீண்ட காலமாக எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்களது ஆற்றல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற எமது புலம்பெயர் மக்களது உதவிகளை, ஒத்துழைப்புகளை நாம் அதிகமாகப் பெற வேண்டும் என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
புலம்பெயர்ந்தவர்களின் முதலீட்டுப் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் எமது மக்களின் பங்களிப்புகளை எமது பல்வகை உற்பத்தித்துறைக்கு நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கேற்ற வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என நான் நம்புகின்றேன். இரட்டைப் பிரஜாவுரிமைகளை வழங்குவது போன்றே, அம் மக்கள் அடிக்கடி எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வகையிலான சூழல்களும், அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்ற நாடுகளில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதைவிட சிறப்பான வாய்ப்புகளை அவர்களுக்கு எமது நாட்டில் உருவாக்கி, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் கவரப்பட வேண்டும். அதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என இச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.
எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர் மக்களுக்கு பல்வேறு தரப்பினரால் அழைப்பு விடுக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சூழல் இங்கு உருவாக்கப்படவில்லை என்றும், அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி, கொமிஷன் வழங்கி இங்கு முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் மக்கள் தயாராக இல்லை என்றும் ஊடக வாயிலாக அம்மக்களது பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மை என்னவென்று ஆராய்ந்து, அவ்வாறான தடைகள் இருக்குமாயின், அவை அகற்றப்பட வேண்டும்.
அத்துடன், கைத்தொழிற் துறை சார்ந்தும் மேலும் எத்தகைய விருத்திகளை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்;. புதிய கைத்தொழில்களை எமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சிகள் எட்டப்பட வேண்டும். தனியார்த் துறைக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். உற்பத்திகள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், கூட்டு தொழில் முயற்சிகள் தொடர்பில் அதிக ஆர்வமும் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே நேரம், எமது கடல் வளத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பல்வேறு தொழிற்துறைகளை அமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அவசியமாகும்.
யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாக முகங்கொடுத்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நீண்ட காலமாகவே கைவிடப்பட்ட கைத்தொழில்சார் பகுதிகளாகவே காணப்படும் நிலையில், இங்கு மேற்கொள்ளத்தக்க கைத்தொழில்கள் பற்றிய பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அப் பகுதிகளில் அத்துறைகளை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கறுவா ஏற்றுமதியில் நாமே ஏகபோகமானவர்கள்
‘ஒபெக்’ அமைப்பிடம் எரிபொருள் தொடர்பான ஏகபோகம் இருப்பதைப் போல், சுமார் 2000 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டிடமே கறுவாவுக்கான ஏகபோகம் இருந்து வருகிறது. எமது ஏற்றுமதிப் பொருட்களிலேயே இது ஒன்றுதான் எமது ஏகபோகமாக இருக்கிறது. என்றாலும், இது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பு என்ற வகையில் சர்வதேச சந்தையில் நிலையானதொரு இடத்தை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிய வருகிறது.
எமது நாட்டில் இன்று பரந்த நிலையில் காணப்படுகின்ற கறுவா போன்ற உற்பத்திகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பிலான நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு, இவ்வாறான துறைகள் மென்மேலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
ஏற்றுமதிப் பொருட்களுக்கான உற்பத்திகளை பல்வகைத் தன்மைகளுக்கேற்ப அதிகரிக்க வேண்டிய நிலையிலும், இறக்குமதியைவிட  ஏற்றுமதி தொடர்பிலேயே அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். அதே நேரம், எமது உற்பத்திகள் சந்தைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் அப் பொருட்களுக்கான இறக்குமதியினைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் என எண்ணுகின்ற நிலையில், உள்ளூர் உற்பத்திகளின் தரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, இவ்வாறான அடிப்படைகள் குறித்தும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சாதகமான சூழல்களை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டு, அவை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும்,
புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய வகையிலான சாத்தியப்பாடுகள், மற்றும் அதற்கான தடைகள் குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்றும்,
நேரடி சந்தைப்படுத்தல்கள் தொடர்பிலும், வாய்ப்புகளுக்கான முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
அதிகளவில் பல்வகைப் பொருட்கள் தொடர்பிலான முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும்,
உள்ளூர் வளங்களைக் கொண்ட பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பில் அதிக பட்சமான அக்கறை செலுத்தப்பட்டு, அவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன். என்றும் தெரிவித்தார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட...
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...