இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Thursday, January 10th, 2019

இரசாயன ஆயுதங்கள் – இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கின்ற வகையில், நாங்கள் இங்கு கலந்துரையாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பொலித்தீன் – பிளாஸ்ரிக் போன்றவற்றின் ஆபத்தான பிடியிலிருந்து இந்த நாடு இன்றும்கூட விடுபடாமல், அவை ஒருவிதமான கோரப்பிடியாகவே தொடர்வதையும் நாங்கள் அவதானத்தில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான திருச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பொலித்தீன் – பிளாஸ்ரிக் பொருட்கள் கண்ட இடங்களில் எரியூட்டப்படுவதால், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் எமது மக்கள் தெளிவு பெறாதவர்களாகவே இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

அண்மையில், கரவனல்ல பகுதியில் ஓர் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் பகிரங்கமாக எரியூட்டப்பட்டிருந்ததாகவும் தென் பகுதி செய்திகள் தெரிவித்திருந்தன.

இத்தகையதொரு நிலைமை பலவாறாக ௲ பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரப்படும் நிலையில், நேற்றைய தினம் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த ‘புதிய லக்கல பசுமை நகரானது’ பொலித்தின் – பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்ட நகரமாக அமையும் என அந்த நகரவாசிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க முன்மாதிரியாகும். ஏற்கனவே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இந்த நடைமுறையை மேற்கொண்டு வருகின்றது என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த வகையில் அந்தந்த நிறுவனங்கள், மக்கள் சமுதாயம் தெளிவு நிலை பெற்று, இந்த நாட்டின், நாட்டு மக்களின், நாளைய சந்ததிகளின் நன்மை கருதி, செயற்பட முன்வருவார்களேயானால், இந்த நாடும், நாட்டு மக்களும் நன்மையடைவார்கள் என்பது நிச்சயம்.

ஆனால், எமது மக்களின் பணத்தில் ஊதியம் உட்பட ஏனைய வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு, அந்த மக்களின் நலன்கருதி செயற்பட வேண்டிய சில அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் தங்களது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக அல்லது அரசியல் அழுத்தங்களுக்காக அல்லது சுய ஆதாயங்களுக்காக எமது மக்களை பலியிடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிலைமைகளையே தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சில விடயங்களை, குறிப்பாக இவ் அனர்த்தம் ஏற்பட்டதற்குரிய காரணி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இச்சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

குறுகிய நேரத்தில் ஏற்பட்ட பெருமழையே இதற்கு காரணம் எனக் கூறி பொறுப்புவாய்ந்த சில அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்றே தெரிய வருகின்றது

இரணைமடுக் குளம் 36 அடி வரை நீரை தேக்கக் கூடியதாக, அதாவது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடி நீரை தேக்கி நிற்கக் கூடிய முறையில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களால் வான்கதவுகள் திறக்கப்பட்ட அன்றைய தினமே இரணைமடுக் குளம் முழுமையாக நிரம்பிய நிலையிலேயே இருந்துள்ளது. அன்று வான்பாய்ந்தபின் வான்கதவுகள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக அறிகின்றேன். இதன்போது எறதாழ 9 அங்குலத்திலிருந்து ஒரு அடி வரையிலான நீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

இந்நிலையில், அன்றிலிருந்து 21 ஆம் திகதி மாலைவரை பெய்த மழை வீழ்ச்சி காரணமாக மீண்டும் குளத்தின் நீர்மட்டம் அதன் உச்ச எல்லையாகிய 36 அடியை அண்மித்திருந்துள்ளது என்றும்,

இதனைத் தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு குறுகிய நேரத்தில் பெய்த கனமழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் 40 அடியைத் தாண்டி உயர்ந்து, அணையையும் மேவி வழிந்தோடிக்; கொண்டிருந்தது என்றும் தெரிய வருகின்றது.

அதன்பின் விழித்தெழுந்த அதிகாரிகள் அதிகாலை அளவில் அவசர அவசரமாக வான்கதவுகளை திறக்க முற்பட்டபோது அதிக நீர் நிரம்பியதன் அமுக்கம் காரணமாக மின்னியக்கியின் மூலமான வான்கதவுகள் இயங்க மறுத்துள்ளன. இதனால் கைகளினால் அவற்றை திறந்துள்ளனர். சரியான முறையில் நீர் முகாமைத்துவம் செய்;யப்படாது, அதாவது குறுகிய இடைவேளையில் வான்கதவுகளை படிப்படியாக திறந்து முகாமைத்துவம் செய்யப்படாமல் திடீரென, ஒரேநேரத்தில் வான்கதவுகள் திறந்ததன் விளைவால் பெருமளவான நீர் குறுகிய நேரத்தில் அதிவேகத்துடன் வான் பாய்ந்துள்ளது. இங்கு அவதானிக்க வேண்டியது என்னவெனில்,

இரணைமடுக் குளத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களினால் இரணைமடுக் குளம் திறந்துவைக்கப்பட்ட பின்பு, அதாவது டிசம்பர் மாதம் 7 திகதியிலிருந்து, நீரின் மட்டத்தை சரியாக முகாமைத்துவம் செய்திருந்தால் இவ்வாறான பேரழிவை தடுத்திருக்கலாம்.

அழிவுகளின் பின் கிளிநொச்சி அரச அதிபரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கிளிநெச்சியில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட அனர்த்தத்திலும் பார்க்க வான் வேகமாகப் பாய்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தமே அதிகமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதி குளத்தின் நீர் முகாமைத்துவத்தில் தலையிட்டு, தனது குறுகிய நோக்கம் கருதி வான்கதவுகளை திறந்துவிடவேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாக கதைகள் வெளியாகிவருகின்றன.

அரசாங்கம், அதுகாலவரை 82 ஆயிரம் ஏக்கர் அடி நீர் சேகரித்துக்கொண்டிருந்த இரணைமடுக் குளத்தை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ஏக்கர் அடி நீரை சேகரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து, குறிப்பிட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்பட்டதன் பின்னர் அதில் வெறும் 8 ஆயிரத்து 100 ஏக்கர் அடி நீரை வருடத்திற்கு யாழ்ப்பாணத்துக்கு குடிநீராக வழங்க இருந்த புனரமைப்பு திட்டத்தையும் இதே அரசியல்வாதி தான் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து நிறுத்திய பெருமைக்குரியவர்.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையே இரணைமடுக் குளம் நிரம்பிய நிலையில் இருந்தும், தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருந்த நிலையில் அதன் விளைவாக எந்நேரத்திலும் வான்கதவுகள் திறக்கவேண்டியிருந்தும்; வான் பாயும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கையினை கொடுக்கும்படியான அறிவித்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பானவர்கள் கொடுத்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என்றே கூறப்படுகின்றது.

இதன் விளைவாகவே பலர் பாரியளவில் தமது உடமைகள், ஆவணங்கள் மற்றும் கால்நடைகளையும் இழக்க நேரிட்டுள்ளது. ஒரு தனிநபர் மட்டும் 45 மாடுகளை இழந்ததாக அறியவருகின்றது.

அதுமட்டுமல்ல, குளத்தின் நீர் நிர்வாகத்திற்கு பொறுப்பானர்கள் 21 ஆம் திகதி; மாலை இரணைமடுக் குளமும்; அதற்கு நீர்வழங்கும் ஏனைய குளங்களும்; நிரம்பிய நிலையில், தொடர் மழை பெய்துகொண்டிருந்தும் அவசியமேற்பட்டால் வான்கதவுகளை திறக்கவேண்டிய முன்னேற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்ததன் விளைவே நீர்மட்டம் ஏறத்தாள 40 அடி வரை சென்ற நிலையில் வான்கதவுகளை அதிகாலை அவசர அவசரமாக அதுவும் மின்சார வான்கதவுகள் அதிக நீர் கொள்ளளவினால் செயலிழந்த பின் கையினால் திறக்க நேரிட்டது. குள நிர்வாகத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் எவரும் 22 ஆம் திகதி காலைவரை சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என அறிகின்றேன்.

இது தொடர்பாக பூரண விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிளிநொச்சி வந்திருந்தபோது நான் கேட்டிருந்தேன். அதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார். அத்துடன் அன்றைய கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூபா 10 ஆயிரம் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது அதனை ரூபா 25 ஆயிரமாக அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தேன். அதே கோரிக்கையினை மீண்டும் நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

நட்டஈடு கொடுப்பனவுகள் தெடர்பான சுற்றறிக்கைகளின் பிரகாரம் ஒருமுறை நட்டஈடு பெற்றவர் மீண்டும் நட்டஈடு பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஏற்கவே யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு நட்டஈடு பெற்றவர்கள் இவ் வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கும் நட்டஈடுகள் பெறும் வகையில் சுற்றறிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்

அத்துடன், மேற்படி வெள்ளப் பாதிப்பிற்கு காரணமான இரணைமடுக் குள நீர் முகாமைத்துவத்தில் அரசியல்வாதியின் தலையீடு மற்றும் வெள்ளப் பாதிப்பிற்கான மேற்படி குள முகாமைத்துவத்தின் பங்களிப்பு தொடர்பிலும், ஏற்கனவே இரணைமடுக் குளப் புனரமைப்புப் பணிகளில் இதே அரசியல்வாதியின் ஊழல், மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டொன்று நிலவுவதால், அவ்விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென இரு விசாரணைக் குழுக்களை அமைக்குமாறும் இந்தச் சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், கடந்தகால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டுகள் பாதிப்புகளினாலும், கைகள், கால்கள், கண்கள் பாதிப்பு மற்றும் இழப்புகளினாலும் வாழ்ந்து வருகின்ற எமது மக்களினதும், ஏனைய மாற்றுத் திறனாளிகளினதும் மருத்துவ மற்றும் வாழ்வாதார ஏற்பாடுகள் கருதி தற்போதுள்ள அரச சலுகைகள், கொடுப்பனவுகள் தவிர்ந்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு, துரித கதியில் அவை செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, விடைபெறுகின்றேன்.


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்...
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? டக்ளஸ் எம்.பி. கேள்வி!