இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து.

Wednesday, March 22nd, 2017

நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற மரணங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு திட்டத் தெளிவுகள் அடங்கிய பாடத் திட்டங்களை எமது பாடசாலை பாட நூல்களில் குறிப்பாக தரம் 4இல் இருந்து உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (22.) கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், உலகளாவிய ரீதியில் கடந்த 2015ம் ஆண்டு 574 இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 32,550 பேர் கொல்லப்பட்டு, 108 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக 70.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டதாகவும், அதே நேரம், எமது நாட்டைப் பொறுத்த வரையில், கடந்த 1993ம் ஆண்டு முதல் கடந்த 2005ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்துள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 36,026 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 63,18,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் குறிப்பாக 2006 – 2015ம் ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் மாத்திரம் எமது நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 803 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 97,25,904 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலக அனர்த்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது சர்வதேச ரீதியில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தல் அல்லது எதிர்த்தெழுதல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், எமது நாட்டில் இவ்விடயம் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரம், எமது நாட்டில் நீரில் மூழ்கி ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள ஒரு நிலையையும் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த மாதம் கம்பளை – துன்கிந்த பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள், திருகோணமலை மூதூர் கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள், உடவளவை நீர்த் தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் என அடுத்தடுத்து ஏற்பட்ட மரணங்களை இங்கு சுட்டிக்காட்ட இயலும். அந்த வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களைப் பார்க்கின்றபோது எமது நாட்டில் வருடாந்தம் நீரில் மூழ்கி ஏற்படுகின்ற மரணங்கள் 1500க்கும் அதிகம் எனத் தெரிய வருகின்றது.

எனவே, இது தொடர்பில் பாடசாலை மட்டங்களிலிருந்தே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, இத்தகைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு ரீதியிலான பாடங்கள் அடங்கியதான திட்டங்கள் எமது பாடசாலை பாட நூல்களில் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தப் பாடத்திட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்படும்போது அதனைக் கையாளுதல், அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கத் தயாராகுதல், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் போன்ற தெளிவுரைகள் உரிய காட்சிகளுடன் விளக்கப்படக்கூடியதாக இருத்தல் அவசியமாகும்.

அதே நேரம், எமது நாட்டில் ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. வீதி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுவதாகவும், அதற்கு சமமான அல்லது அதைவிட அதிகமானத் தொகையினர் படுகாயங்களுக்கு உட்படுவதாகவும் தெரிய வருகின்றது.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பதாக பிரித்தானிய நாட்டில் ‘ஹென்டன் வாகனக் கட்டுப்பாட்டு முறைமை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றும் அது நடைமுறையில் இருப்பதாகவும், மனித திறன்களை விருத்தி செய்வதே இதன் இலக்கு என்றும், இதனடிப்படையில், பாதைகளை பயன்படுத்துவது தொடர்பிலான அறிவு, புரிந்துணர்வு போன்றவற்றை அந்த நாட்டு மக்களுக்கு பாடசாலை செல்லும் வயதிலிருந்தே வழங்கப்படுகின்றது என்றும் தெயவருகிறது. இந்த முறைமை வீதி விபத்துகளைக் குறைப்பதற்கு வலுவுள்ளதொரு திட்டமாக இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

எனவே, வீதி விபத்துகளை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், வீதி ஒழுங்குகள் தொடர்பிலான திறன் விருத்தியினை பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வலுவான பாடத் திட்டங்களை பாடசாலை பாட நூல்களில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...