இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு அதனை எமது கல்வித்துறையில் ஆரம்பந்தொட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கடந்த சுமார் 400 வருட காலகட்டத்தை எடுத்துப் பார்க்கும் போது, பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த அனர்த்தங்கள் யாவும், கால கட்டங்களின் வரிசைப் படியும், இடங்கள் சார்ந்தும், பருவகால வேறுபாடுகளின் அடிப்படையிலும் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.

இவ்வாறான அனர்த்தங்களில், 1978ம் வருடம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி, 2004ல் எமது நாட்டுக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி,  2011ல் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மிக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அரநாயக்க, புலத்கொகுபிட்டிய மற்றும் கடுகண்ணாவ, மீரியபெத்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள், கடந்த மே மாதம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட வடக்கு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், அவிஸ்ஸாவலை சாலாவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு என்பன எமது மக்கள் மத்தியில் நீங்கா நிலையில் இருந்து வருகின்றன.

இவ்வாறு எமது நாட்டில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்கள் பல்வேறு விதமான இழப்புகளையும், கேள்விகளையும் ஏற்படுத்துவதுடன், அவை பலத்த சவால்களையும் எதிர்நோக்கச் கெய்கின்றன என்றே கூறவேண்டும்.

இலங்கையில் காணப்படுகின்ற 103 ஆறுகளில் 10 ஆறுகள் பெரிய ஆறுகளாகக் காணப்படுகின்றன. இந்த பெரிய ஆறுகளைப் பொறுத்தவரையில், களனி கங்கை, ஜின் கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் மகாவலி கங்கை போன்ற ஆறுகளால் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ற வகையில் மக்கள் வாழக்கூடிய தகுந்த சூழல்கள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறான சூழல்கள் கிட்டாத நிலையில், மக்கள் எங்கேனும் கிடைக்கின்ற இடங்களில் வாழச் செல்கின்ற நிலையிலேயே ஆற்றுக் கரைகளிலும் தங்களுக்கான இருப்பிடங்களையும், தொழில் தளங்களையும் அமைத்துக் கொள்கின்றனர்.

இலங்கையில் ஏற்படுகின்ற தென்மேல் மற்றும் வடகீழ் பருவ கால மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால், இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களும், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இலங்கையில் பாதிப்பினை உண்டு பண்ணுகின்ற இன்னுமொரு பிரதான அனர்த்தக் காரணியாக இருப்பது மண்சரிவுகளாகும். மலைப் பகுதிகளில் திட்டமிடாத குடியிருப்புகள், கட்டட நிர்மாணங்கள், பயிர்ச் செய்கைகள் என்பன மேற்கொள்ளப்படுவதால் இவையும் இந்த மண்சரிவுகளுக்குக் காரணமாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

பொதுவாக மத்திய, சப்பிரகமுவ மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் இந்த மண்சரிவு அனர்த்தங்களைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில். பதுளை, நுவரெலியா, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்கள் அதிகமாக இந்த மண்சரிவுக்கு உட்படுகின்ற மாவட்டங்களாகக் காணப்படுகின்றன.

எனவே, இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படுகின்ற பல்வேறு இழப்புகளைத் தடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுவுள்ளதாகவே எடுக்க முன்வர வேண்டும்.

குறிப்பாக, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான அறிவித்தல்களை விடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், முன்கூட்டியே அவ்வாறான இடங்கள் இனங்காணப்படுகின்றபோது, இயன்றவரையில் அவற்றைத் தடுப்பதற்கோ அல்லது அவற்றிலிருந்து மக்களை – சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கோ முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டுமே ஒழிய வெள்ளம் வந்த பின் அணை கட்டுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையே இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

எனவே, இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் அதிகாரிகள் மிக முக்கிய பங்கு வகிப்பது அவசியமாகின்ற அதே நேரம் இவர்களுக்கான வசதிகளை இந்த அமைச்சுச் செய்து கொடுக்க வேண்டும்.

ஏனெனில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பல இயற்கை அனர்த்தங்களின்போது அவற்றுக்கு அதிகாரிகளே காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் என்பதையும் நாங்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதூவது, மக்களுக்கு உரிய நேரத்தில் சரியான தகவல்களை அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே பெரும்பாலான மக்களது குற்றச் சாட்டுகளாக இருந்தன.

குறிப்பாக, ஒவ்வொரு வருடங்களிலும் வடக்கில் – யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை காரணமாக வெள்ள அபாயங்கள் தோன்றுவது வழக்கம். இவ்வாறான காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருப்பதைவிட, இந்த அனர்த்தம் தொடர்ந்தும் ஏற்படுகின்ற நிலையில், குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே பாதிக்குப்படுகின்ற நிலையில், முன்கூட்டியே சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை மேற்கொள்ளாமல், தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கிவிட்டுச் செல்லவே அனைத்து அரசுகளும் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இது போல்தான் ஏனைய அனைத்துத் திட்டங்களும் இருக்கின்றனவா? என சந்தேகிக்க வேண்டி ஏற்படுவதும் இயல்பானது என எண்ணுகிறேன்.

இன்று கொழும்பிலே வானிலை அவதான நிலையம் ஒன்று இருக்கிறது. அது நாங்கள் கண்ட நாளிலிருந்து அதே நிலையில்தான் இருக்கிறதே தவிர, ஏதேனும் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி அறிய விரும்புவதுடன்,

அந்தக் கட்டிடத்தைச் சுற்றித் தற்போது பல உயரமான கட்டிடங்கள் தோன்றியுள்ள நிலையில், அதன் தரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயற்கை அனர்த்தப் பாதிப்பு இருந்து வருவதால் அங்கு ஒரு வானிலை அவதான நிலையத்தை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தற்போது அனர்த்த ஆபத்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக 18 அனர்த்தங்கள் குறித்து ஆராய்ந்து அறியப்பட்டுள்ளதாகத் தெரிய வரும் நிலையில், அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி குறித்த அனர்த்தங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும்,

அதே நேரம், இவ்வாறான  அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளை ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுப்பதற்கும்,

அதன் அடிப்படையில் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏனைய அபிவிருத்தி தொடர்பான அமைச்சுக்களுடன் குறிப்பாக வீடமைப்பு, விவசாயம் போன்ற விடயங்களில் இணைந்து முன்னெடுப்பதற்கும்,

அதே நேரம், வடக்கு மாகாணத்தில் ஆழியவளை – மாவிலங்கை அனர்த்த வெளியேற்றுப் பாதை அபிவிருத்திக்கென ஏற்கனவே திட்ட மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்த நிலையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலரும் தொடர்ந்து பல குற்றச்சாட்களையே இன்னமும் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு, இந்த அனர்த்தம் நடந்து சுமார் 23 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஒக்டோம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட்ட 23 வீடுகள் பூரணத்துவம் இன்றியும், தரமற்றவையாகவும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி ஏற்பட்ட சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 11 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், அக்கறைப்பற்று, நுரைச்சோலை பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது தொடர்பில் இழுபறி நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

கடந்த மே மாதம் கொழும்பு கொலன்னாவ, கடுவல, பியகம, களணி, அவிஸ்ஸாவலை, ஹோமாகம உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 301,602 பேர் பாதிக்கப்பட்டனர். 104 பேர் உயிரிழந்தனர். 99 பேர் காணாமற் போனார்கள்.

இவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு கடந்த ஒக்டோம்பர் மாதம் 4ம் திகதி 847 மில்லியன் ரூபா நிதி அமைச்சரவையினால் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நட்டஈட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களது எண்ணிக்கைக்கு இணங்க பிரித்துப் பார்த்தால், ஒரு நபருக்கு கிடைக்கக்கூடிய தொகையானது 2,808.00 ரூபாவாக அமைகின்றது.

இந்த தொகை அந்தப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்குப் போதுமா?

எனவே, கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அடுத்து தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சு பற்றிய எனது கருத்துக்களை முன்வைக்க விரும்பகின்றேன்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் உணர்வுபூர்வமான பல கொள்கைகளை முன்வைத்தும், முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். எனவே, இதனை உணர்ந்து ஏனைய அனைத்துத் தரப்பினரும் செயற்பட்டால்தான் இந்த தேசிய நல்லிணக்கத்தை எமது நாட்டில் வலுவுள்ளதாகவும், நிலையானதுமாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தேசிய நல்லிணக்கம் என்பது எமது நாட்டு மக்களிடையே உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.

வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, அலுவலகங்களை அமைத்து, பிரச்சாரங்களை மேற்கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டி, நாங்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தகின்றோம் என்று கூறிக் கொண்டிருப்பதால் மாத்திரம் எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

நீண்ட காலமாக ஆயுத மோதல் நிலைமையில் சிக்குண்டு இருக்கின்ற எமது நாட்டின் இரு தரப்பு மக்களும், சம நிலையில் ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாகப் புரிந்து கொண்டு, இணைந்து செயற்படுவதற்கும், இணைந்து வாழவும் அடியெடுத்து வைப்பதற்கான சூழலை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையே உண்மையான தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன்.

எனவே, இந்தச் செயற்பாடுகளை உளப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டுமே ஒழிய, மூளைச் சலவைகளால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைப்பது, இரு தரப்பு மக்களைப் பொறுத்த வரையில், அது தோல்வியிலேயே முடியும் என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

ஈ.பி.டி.பி. கட்சியினராகிய நாம். தேசிய நீரோட்டத்திற்குள் பிரவேசித்த காலம் முதல் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியும், அதனை எமது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுமே செயற்பட்டு வருகின்றோம் என்பதை இங்கு மீண்டும், மீண்டும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில் எங்களது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் மற்றும் கருத்துக்களால் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் எமது மக்களிடையே தேசிய நல்லிணக்கச் சிந்தனைகளை நாம் ஏற்படுத்தியுள்ள அளவுக்கு,

வேறு எந்த சக்திகளாலும் ஏற்படுத்தியிருக்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்.

அனைத்து தரத்தினாலான மக்களிடையேயும் நாம் இந்த தேசிய நல்லிணக்கச் சிந்தனைகளை சமாந்தரமாக வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டு வருகின்றோம் என்பதை நான் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இதனை நாம் உளப்பூர்வமாக மேற்கொண்டு வருவதால்தான் இது சாத்தியமாகிறது. அதைவிடுத்து, வெறும் கடமைக்காக செய்யப் போனால், அது ஒரு போதும் வெற்றியளிக்காது.

எனவே, எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,

எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு அதனை எமது கல்வித்துறையில் ஆரம்பந்தொட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதற்கென பல தேசியத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டிய அவசியங்களும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்கக் கூடிய வகையிலும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கக்கூடிய வகையிலும் எமது கல்வித் திட்டத்தில் தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், இரு மொழித் தேர்ச்சி பற்றிய அரச ஊழியர்களுக்கான ஒரு தேசியக் கொள்கை அவசியமாகும். தற்போதுகூட இந்த இரு மொழித் தேர்ச்சிக்காக கனடா அரசு பாரிய நிதியினை வழங்குகின்ற போதிலும், தமிழ்மொழி தெரியாத அரச ஊழியர்கள் – தமிழ்மொழி பற்றிய அறிவின்மையை கொண்டிருக்கின்ற நிலையில் அந்த நிதி உதவியினால் பலனடைகின்றனரே அன்றி, தமிழ் மொழியைக் கற்பதற்கு ஆர்வம் காட்டுவதாக இல்லை எனத் தெரிய வருகிறது.

எனவே, தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இந்த மொழிக்கொள்கை அமுலாக்கம் என்பது அடிப்படைத் தேவையாகும். இது தொடர்பில் கடந்த காலங்களில் 23 சுற்றறிக்கைகள் விடுக்கப்பட்டும் அதில் எந்தவொரு முன்னேற்றமும் நடைமுறையில் காணப்படாத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் எமது பாடசாலை பாட நூல்களில் தமிழ் – முஸ்;லிம் மக்களது இந்த நாட்டுடன் பிணைந்த வரலாறுகளும் இடம்பெற வேண்டும். அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பக் கூடியதான பாடத்திட்டங்கள் இரு மொழிப் பாட நூல்களிலும் உள்ளடக்கப்பட வேண்டும்.

அரச பணியாளர்களை எடுத்துக் கொண்டால் தற்போதைய நிலையில் சுhர் 5–6 வீதத்தினரே தமிழ்; மொழி மூலமான பணியாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் தென்பகுதியில் அரசியல் தலையீடுகள் காரணமாக மேலும் பலர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, தெற்கில் அதற்குரிய ஆளணி வெற்றிடங்கள் இல்லாத நிலையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அனுப்பப்படுவோரால் மொழி பற்றிய தெளிவின்மைகள் காரணமாக மக்கள் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும், எமது பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அந்த வேலை வாய்ப்புகள் கிட்டாத நிலையுமே உருவாகின்றன.

எனவே, இவ்வாறான நிலைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நான் இந்த சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ, அதே நேரம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகின்றனர் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் கூறி வருகின்றேன்.

அந்த வகையில் எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வெண்டும்.

குறிப்பாக, காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தல், காணாமற் போனோர் விவகாரம், யுத்த குற்ற விசாரணைகள் என பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, யுத்த அழிவுகளை நினைவுச் சின்னங்களாக்கி பொது இடங்களில் வைத்து, அந்த இடங்களை சுற்றுலா தளங்களாக்கி வருவதால், அதனால் எமது நாட்டு மக்களிடையே – இரு தரப்பு மக்களிடையேயும் பல கசப்பான உணர்வுகளே தொன்றும் நிலையானது நிரந்தரமாக்கப்படுகிறது. எனவே அனைத்தும் பொது இடங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன்.

கடந்த கால யுத்தம் வெல்லப்பட்டபோதிலும், அதன் மூலமாக தவறான வழிமுறையே தோற்கடிக்கப்பட்டது அன்றி, அதன் மூலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் எமது மக்களிடையே உணர்வு ரீதியாக உறுதியாக நிலைப்படுத்த வெண்டும்.

அதே நேரம், தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சீர்குழைத்து விடும் வகையில் இந்த நாட்டில் பலர் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் இனங்களுக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில கருத்துக்களைக் கூறி வருகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

எனவே, இவை தொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்தி, இந்த நாட்டில் உளப்பூர்வமான வகையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதனை வலுப் பெறச் செய்வதற்கும் அனைவரும் முன்வரவேண்டும் எனவும், அதற்கு இந்த இரு அமைச்சுக்களும் இயன்றவரை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்; கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

Related posts:


நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப...
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...