இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் – 2017 நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016

எமது மக்களின் சமாதானத்தின் குரலாக… சக வாழ்வின் குரலாக… இன சமத்துவ உரிமையின் குரலாக.. இன ஐக்கியத்தின் குரலாக… எமது வாழ்மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் குரலாக… எமது மக்களின் நியாயமுள்ள உரிமைக்குரலாக… நாம் ஒலிப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2017ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்ட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

2017ம் ஆண்டுக்கென இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தைப் எமது மக்களின் நலன்களில் இருந்து பார்க்கும்போது அது அதிகளவில் எமது மக்களுக்கு மகிழ்ச்சியினை தரமுடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது என்பதை நான் இங்கு தெரிவித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். கடந்த காலங்களிலும் அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்ததாகக் கூறிய நிலையிலும், அவ்வாறு குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத நிலை எமது மக்களுக்கும்  குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அதே நேரம் இவ்வாறு விலை குறைக்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைக்கப்பட்ட விலைகளுக்கே விற்கப்படுகின்றனவா என்பது குறித்து  உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் சார்ந்து பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். கடந்த ஆண்டு கல்வித்துறை சார்ந்து ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட குறைந்தளவு நிதியே இம்முறை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இசெட் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களில் 15000 பேருக்கு பாடநெறிக் கட்டணத்தில் 8 ,லட்சம் ரூபா கடன் வழங்கப்படும் என்ற சலுகையையும் பார்க்கின்றபோது கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் இருந்து எழுகிறது.

அதே நேரம், நாட்டில் முன்பள்ளிகளையும் அறநெறி பாடசாலைகளையும் மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில் அவற்றில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு போதியளவு ஊதிய தொகையொன்றினை மாதாந்தம் வழங்கக் கூடியதான கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணம், கராப்பிட்டிய மற்றும் அம்பாறை மருத்துவ மனைகளில் விஷேட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்தல் மற்றும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்தல்மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் போன்றவை தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பட்டதாரிகள் தொழிற் துறைகளை ஆரம்பிக்க 1.5 மில்லியன் ரூபா வீதம் வட்டியற்ற கடன் வழங்குவதற்கென 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் வேலையற்ற  பட்டதாரிகள் பலர் காணப்படும் நிலையில் இத் திட்டம் ஓரளவுக்கு பயனளிக்கும் என நம்புகின்றேன். அதே நேரம் இதற்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகளின் தொகை அதிகரித்திருப்பதையும் இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டும்.

அரச வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உப்பு உற்பத்தி நிலையங்கள் துன்ப நிலையில் இருப்பதாகவும் அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. நமது நாட்டில் தற்போது பல அரச வியாபார நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஒதுக்கீடானது முரண்பாடாகவே தெரிகிறது. இவ்வாறு நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களை அரசு தொடர்ந்து செயற்படுத்த முனைவதால் அதனால் ஏற்படுகின்ற நட்டத்தை எமது மக்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே மேற்படி நிறுவனங்கள் குறித்து அரசு ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரவேண்டியது அவசியமாகும்.

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன. அதே நேரம் மேற்படி உற்பத்திகளுக்கான வெளிநாட்டு உள்நாட்டு சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.  கொழும்பில் விஷேட கைப்பணி மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கான முயற்சியும் பாராட்டத்தக்கது.

அதே நேரம், வடக்கில் யாழ் மாவட்டத்தில் அச்சுவேலியில் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழிற் பேட்டையானது ஆரம்பத்தில் அது சார்ந்து காட்டப்பட்ட கவனம் தற்போது குறைந்துள்ள நிலையில் கவணிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருதாகத் தெரிய வருகிறது. எனவே, இதனை ஒரு விஷேட ஏற்பாடாகக் கொண்டு உள்ளூர் உற்பத்திகளையும் உள்ளுர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி, வட கடல் நிறுவனம், வவுனியா கைத்தொழிற் பேட்டை ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள கைத்தொழில் நிறுவனங்கள் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பிரமிட் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்களுக்கு எதிரான சட்டங்களை நிதி நிறுவனங்கள் வரை நீடிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

இத் திட்டங்களால் யுத்த அவலங்களுக்கு உள்ளான வடக்கு – கிழக்கு மக்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். அந்தளவுக்கு இப் பிரச்சினை எமது மக்களுக்கு பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் இதற்கெதிரான சட்ட நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி எமது மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்றகரமான நிலைப்பாடே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான மக்கள் மீள் குடியேற்றம் செய்;யப்பட்டுள்ளதாலும் அவர்களது வீடுகள் பல அழிந்தும் சேதமடைந்தும் இருப்பதாலும் அவர்களுக்கான வீடுகளின்மை பிரச்சினையானது இன்னும் தீர்ந்ததாக இல்லை. ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த 65000 பொருத்து வீடுகளை எமது மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்புகின்ற நிலையிலும் ஒரு சிலரது அரசியல் சுயலாபங்கள் காரணமாக அத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எமது மக்களின் விருப்பங்களை அறிந்து அத் திட்டத்தை தற்காலிகத் திட்டமாக செயற்படுத்த அரசு முன்வர வேண்டும் என நான் இச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டில் பாலுற்பத்தியை விருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. இத் திட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கும் பரவலாக்கப்படுமென நம்புகின்றேன். இதன்படி ஒரு பாலுற்பத்தியாளருக்கு 10 மாடுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்துறையை வளர்த்தெடுப்பதற்கு மேய்ச்சல் தரைகளையும் நாம் அதிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மேய்ச்சல் தரைகள் இல்லாமை காரணமாக இத்துறையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் அவதானத்தில் கொள்வது அவசியமாகும்.

யாழ்ப்பாணம் உட்பட 10 கரையோர மாவட்டங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பிலும் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்று ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் அத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது. வடக்கில் அது ஆரம்பிக்கப்படவில்லை. வடக்கைப் பொறுத்த வரையில் முல்லைதீவு மணலாறு தொடக்கம் மன்னார் முசலி வரையிலான கடலோர கிராமங்கள் இத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக இனங்காணப்பட்டிருந்தன. அந்த வகையில் தற்போது இங்கு கூறப்படுகின்ற திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கில் தற்போதுள்ள சூழ்நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டியதும் தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முயற்சிகள் இன்னும் தொடருகின்றன.

அதே வேளை, பிற மாவட்ட கடற்றொழிலாளர்களது ஊடுருவல்களும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் வாழ்வாரத்தினை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. வடக்கின் கடல் வளங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலைகளை மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று எமது நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாகக் முல்லைதீவு மாவட்டமே காணப்படுகின்றது. அங்கு  நந்தி கடலை புனரமைப்பு செய்து உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டால் சுமார் 5000 வரையிலான கடற்றொழிலாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டம்  குறித்து நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

எனவே இதனையும் அவதானத்தில் எடுத்து இத்திட்டத்தை செயற்படுத்த அரசு விரைந்து முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இன்னும் பல திட்டங்களை நாம் வகுத்து செயற்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்த வகையில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படல் வேண்டும். இதற்கான திட்டங்களை இந்த அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதுடன், எமது விவசாயத் துறைக்கென ஒரு தேசிய பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.

அத்துடன் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது ஏற்பட்டுவருகின்ற காலமாற்றங்கள் காரணமாக காலபோக அறுவடைகளில் பெரும் பாதிப்பு நிலை ஏற்பட்டு வருகின்றன. எனவே இதற்கு முகம்கொடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலைகளில் விவசாய மக்களை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேவேளை உணவு உற்பத்திப் பற்றாக்குறைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமுர்த்தி உதவித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் இங்கு முன்வைத்த கருத்துக்கு அமைவாக அதன் பெயரை ‘ஜன ,சுறு’ என மாற்றுவதாயின் அதற்கான தமிழ் பதமான ‘மக்கள் செல்வம்’ என்ற பதத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். இதே வேளை சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளை அதிகரிக்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று தங்களது வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்துள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக  கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களலுள்ள மக்களுக்கு அதி விஷேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதுவிதமான வாழ்வாதார வசதிகளும் இன்றி தற்போது பல காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவதானத்தில் கொண்ட விஷேட திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்ற கோரி;க்கையை மிகவும் வலியுறுத்தி இச் சபையில் முன்வைக்கின்றேன்.

அதே நேரம் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் புதிய தொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவிக்கக்கூடிய பல திட்டங்கள் காணப்படுகின்றன. இத்திட்டங்களில் இயலுமானவரை மேற்படி முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்  பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதிகமாக உள்ளது. ஆகவே இவர்களுக்கென விஷேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிவாரணத் திட்டங்களால் இம் மக்களது பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கென 180 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடளாவிய ரீதியில் இச் செயற்பாடுகள் இதுவரை எத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை அளவிட முடியாமல் உள்ளது.

நாங்கள் தேசிய நீரோட்டத்திற்கு வந்தது முதல் இன்று வரையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்திற்காகவும் தேசிய நல்லிணக்கத்தை வலுமிக்கதாகக் கட்டியெழுப்புவதற்காகவும் அயராது உழைத்து வருகின்றோம். அவ்வாறு எம்மால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடிந்தளவுக்கு தற்போதைய நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகத் தெரிய வரவில்லை என்பதை நான் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தற்போதைய நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது தேசிய நல்லிணக்கத்திற்கு பதிலாக இனங்களுக்கிடையே விரிசல் நிலையே அதிகரித்து வருவதை உணரக்கூடியதாக இருக்கிறது.

இதற்கு உதாரணமாக அண்மையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனது அரச கடமையை ஆற்ற முனைந்த ஒரு தமிழ் கிராம சேவையாளர் மீது மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள் இனவாத வார்த்தைகளால் மிகவும் அநாகரீகமான முறையில் திட்டிதீர்த்கிருக்கிறார்.

பௌத்த மதத்தின் உண்மையான போதனைகளுக்கு மாறாக அதன் புனிதத்தன்மையை களங்கப்படுத்தும் வகையில் மட்டுமன்றி

தேசிய இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவுமே  அவரது செயற்பாடு அமைந்திருக்கிறது. இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிரான செயல்கள் எந்த தரப்பில் இருந்து வந்தாலும் அதை நாம்

ஒரு போதும் ஏற்பவர்கள் அல்ல. நாம் விரும்பும் இன நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலும் அல்ல. ஒரு இனத்தின் மீது இன்னொரு

இனத்தவர்கள் சார்பில் யாரும் மேலாண்மை செலுத்துவதும் அல்ல.

ஆகவே இது போன்ற  நிலமைகளை  இந்த அரசு மாற்றியமைக்குமென நான் எதிர்பார்க்கிறேன்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் மக்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. இது எமது மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிப்பதாகவே உள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படாத சில கட்டண உயர்வுகளையும் நாட்டில் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, நீருக்கான கட்டண உயர்வை இங்கு சுட்டிக்காட்ட முடியும். அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவ்வாறான வரி அதிகரிப்புக்களை மேற்கொள்வதானது எமது மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தரப் போவதில்லை.

அதே நேரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அங்குள்ள பெரும்பாலான மக்களது நிலை மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையே அங்கு உருவாகியுள்ளது என்பதையும் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருக்கும் குறைகளை நாம் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகிறோம்.

அதே வேளை இதில் உள்ள நிறைவான விடயங்களையும் நாம் இதய சுத்தியோடு வரவேற்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் மட்டுமன்றி எமது சகோதர சிங்கள மக்களும் ஒவ்வொரு வரவு செலவு திட்டங்களாலும் அதி உச்ச பயன்பாட்டை அடைய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.இதேவேளை  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களுக்கு தேவைகளின் நிமிர்தம் அதி கூடிய நிதியினை ஒதுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஆனாலும் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் குறிப்பாக, வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி திறை சேரிக்கு திரும்பி வந்துள்ளதாக அறிய முடிகின்றது.கடந்த ஆட்சியின் போது  மத்திய அரசே வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளது என்று குற்றம் கூறினார்கள்.

ஆனாலும், மலர்ந்திருக்கும் புதிய ஆட்சியிலும் தொடர்ந்தும் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி அந்த மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்த படாமலேயே திறை சேரிக்கு திரும்பி வந்து கொண்டிருகிறது.இதன் உண்மை யாதென கண்டறியப்பட வேண்டும். இது யார் தவறு?.. வட மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளா? அன்றி இன்று மலர்ந்திருக்கும் மத்திய அரசின் தடைகளா?..

இது குறித்து இந்த சபையில் ஒரு விவாதம் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.எது உண்மை? எது பொய்?.. என்பது எமக்கு தெரியும். ஆனாலும் எமது மக்களுக்கும் அந்த உண்மை தெரிந்தாக வேண்டும்.தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் என்பதே எமது விருப்பம்.

ஆனாலும் அது நிறைவேறக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதே சுயலாப தமிழ் அரசியல் கட்சிகளின் நோக்காக இருந்து வருகின்றது.தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக்கி அதில் தங்களது பதவி நாற்கலி சுகங்களை அனுபவிப்பதே போலித்தமிழ் தேசிய வாதிகளின் விருப்பங்களாகும்.

அன்று அடுத்த பொங்கலுக்குத் தமிழீழம் என்றார்கள்;. அடுத்த மே தினம் சுதந்திர தமிழீழத்தில் என்றார்கள். இன்று 2016 நடுப்பகுதியில் தீர்வு கிடைக்கும் என்றார்கள். பின்பு 2016 கடைசியில் என்றார்கள். பின்பு அது கணிப்பு என்றார்கள். தற்போது 2017 தீபாவளிக்கு என்கிறார்கள். அதாவது இன்று கடன் இல்லை என்று கடைகளுக்கு முன்னால் அறிவிப்புப் பலகை வைப்பதுபோல.

இந்தப் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து அதனது 100 நாட்கள் வேலைத்திட்டத்தினுள் தீர்ப்பதற்கான முயற்சிகளை, போலித் தமிழ்த் தேசியம் பேசி மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்திருக்க வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முதல் ஆறுமாதம் அல்லது குறைந்தது ஒரு வருடத்திற்குள் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அல்லது அது ஆறிய கஞ்சி பழம் கஞ்சி ஆகிவிடும். அரசுக்குப் புதிய பிரச்சினைகள் வந்து அரசியல் இலக்குத் திசை திருப்பப்பட்டு விடும். அடுத்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே இன்று எழுகின்றன. ஆனாலும் ஒரு விடயத்தை சகலரும் சிந்திக்க வேண்டும்.யுத்தம் மட்டுமே இங்கு முடிவிற்கு வந்திருக்கின்றதே ஒழிய, யுத்தத்தினால் உருவான வடுக்கள் இன்னும் தீரவில்லை.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களே இன்னமும் முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவில்லை.இதுவரை மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமைகள் கூட திருப்திகரமாக அமையவில்லை.வீழ்ச்சியடைத்த தொழில் துறைகளும் பொருளாதார வளங்களும் போதியளவு தூக்கி நிறுத்தப்படவில்லை. எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நிற்கும் சுய பொருளாதார பொறிமுறைகள் இன்னமும் முழுமை பெறவில்லை.

அதை விட நிரந்தர அரசியல் தீர்வு இன்னமும் காணப்படவில்லை.

இவைகள் அனைத்தும் உறுதிப்படுத்தபட்ட பின்னரே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைப்பது குறித்து சிந்திக்க முடியும்.

இது குறித்து நாம் ஜனாதிபாதி அவர்களுடனும் பிரதமர் அவர்களுடனும் மற்றும் சம்பந்தப்பட்ட சர்வதேச சமூகத்திடமும் பிரத்தியேகமாக சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

ஆகவே எமது மக்களின் சமாதானத்தின் குரலாக…

சக வாழ்வின் குரலாக… இன சமத்துவ உரிமையின் குரலாக..

இன ஐக்கியத்தின் குரலாக… எமது வாழ்மக்களின் வரலாற்று

வாழ்விடங்களின் குரலாக…எமது மக்களின் நியாயமுள்ள

உரிமைக்குரலாக…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகிய நாங்கள் முன் வைக்கும்

கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.

10.-1-300x229

Related posts:


உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...