இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதேச சபைகளுக்கே வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 29th, 2019

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என எமது மக்கள் அடிப்படை, அன்றாட, அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிறுவனங்களை எல்லாம் ஒன்றாகக் கொண்டிருக்கின்ற ஓர் அமைச்சு தற்போது செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த அமைச்சுக்கு பாரிய பொறுப்புக் கூறல்களின் கடமைப்பாடு இருக்கின்றது.
தற்போது இந்த நாட்டில் ‘பொறுப்புக் கூறல்” பற்றி அதிகமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அந்தப் பொறுப்புக் கூறலிலும் அதி முக்கியமான பொறுப்புக் கூறலை ஏற்க வேண்டிய பொறுப்பும் இந்த அமைச்சுக்கு இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.
அதாவது – மேற்படி அரச நிறுவனங்களில் எமது மக்கள் – தமிழ் பேசுகின்ற மக்கள் முகங்கொடுத்து வருகின்ற மொழிப் பிரச்சினை காரணமாக, எமது மக்கள் தங்களது தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்ள இயலாது நீண்ட காலதாமதங்களுக்கும், பாரிய இடையூறுகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இது இன்று நேற்றல்ல, மிக நீண்ட காலமாகவே தொடருகின்ற ஒரு பிரச்சினையாகும்.
சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாதல் வேண்டும் என இலங்கை அரசியல் அமைப்புக்கான 13வது சீர்திருத்தத்;தால் திருத்தப்பட்டவாறான 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்று அரசியல் அமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான 22(1)ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள நிலையில்,
உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக்கும் கூறு எதனதும் சனத்தொகை சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மை சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ, அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்புக்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தலாம் என – ஜனாதிபதி பணிக்கலாம் என்று அரசியலமைப்பிற்கான 16வது திருத்தப்பட்டவாறான 22(1) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள நிலையில்,
இந்த ஏற்பாடுகளை இதுவரையில் ஒழுங்குற நடைமுறைப்படுத்தாத நீங்கள், தேசிய நல்லிணக்கத்திற்காக எனக் கூறி, எதை எதையெல்லாமோ செய்து வருவதாகக் கூறுவது வேடிக்கையானதாகவே இருக்கின்றது.


இன்றுவரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எமது மக்களால் வடக்கு மாகாணம் தவிர்ந்தும், கிழக்கில் ஒரு சில அரச நிறுவனங்களைத் தவிர்ந்தும் வேறு எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று தங்களது தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இருக்கின்றது

ஒருவர் பிறப்பச் சான்றிதழ் ஒன்றைப் பெறப் போனால், அவருக்கு மரண சான்றிதழ் வரும்வரையில் அவர் அந்த அலுவலகத்திற்கெனவே நடந்துதிரிய வேண்டிய நிலைமைகளே காணப்படுகின்றன.
எனவே, இந்த நிலைமையில் உடனடி நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும். இது, இந்த அரசின் பொறுப்புக் கூறலின் மிக முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகும்.
மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்களை பதிவு செய்கின்ற திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம் என பொது மக்கள் அன்றாடம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் செய்கின்ற நிறுவனங்களை இந்த அமைச்சு கொண்டிருக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் சில அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய மேற்படி அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலப் பரிச்சயமற்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனில், எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்திலும் அத்தகைய நிலைதோன்றிவிடுமோ என்ற அச்சமும் எமது மக்கள் மத்தியில் இப்போது ஏற்பட்டு வருகின்றது. அங்கும் இப்போது பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர்களே சிற்றூழியர்கள் முதற்கொண்டு நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நாட்டில் 41 பிரதேச செயலகங்கள் இரு மொழி மூலச் செயற்பாடுகளைக் கொண்ட பிரதேச செயலகங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 பிரதேச செயலகங்களை இரு மொழி மூல செயற்பாடுகளைக் கொண்ட பிரதேச செயலகங்களாக மாற்றப்பட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தற்போது இரு மொழி மூல பிரதேச செயலகங்களை பார்க்கின்றபோது, மொத்த ஜனத்தொகையில் சுமார் 65 வீதத்திற்கும் மேலாக தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்திற்கென இருமொழி மூல பிரதேச செயலகங்கள் இன்னமும் செயற்பாட்டில் இல்லை என்றே தெரிய வருகின்றது. இந்த நிலையில், இந்த நாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழரையும் இந்த மாகாணமே அண்மையில் தந்திருந்தது எனும்போது, எவ்வளவு மோசமாக இருக்கின்றது? எமது மக்களின் நிலைமை என யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தை எடுத்துக் கொண்டல், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்ற வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இன்னமும் இரு மொழி பிரதேச செயலகங்கள் செயற்படுவதாக இல்லை என்றே கூறப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தெஹிஅத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு மட்டுமே இரு மொழி பிரதேச செயலகமாக செயற்பட்டு வருகின்றதாகக் கூறப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை, உக்குவளை ஆகிய பகுதிகளில் இரு மொழி மூல பிரதேச செயலகங்கள் இன்னமும் செயற்பாட்டில் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு, திம்பிரிகஸ்யாய, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேச செயலகங்கள் இரு மொழி மூல பிரதேச செயலகங்கள் எனக் கூறப்படுகின்றது. கொலன்னாவை பிரதேச செயலகம் இன்னமும் அத்தகைய செயற்பாட்டில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரச நிறுவனங்களில் தலைமையகங்கள் பலவும் கோட்டை பிரதேச செயலாளர் பிரிவிலும் அடங்குகின்றன. குடிவரவு – குடியகல்வு திணைக்களமாக இருக்கட்டும், ஆட்களைப் பதிவு செய்கின்ற திணைக்களமாகட்டும், பல அமைச்சுகளாகட்டும், தேர்தல்கள் திணைக்களமாகட்டும் பல்வேறு அரச தலைமை அலுவலகங்கள் அமையப்பெற்றுள்ளன என்ற வகையில், கோட்டை பிரதேச செயலாளர் பிரிவினையும் இரு மொழி மூல பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டியத் தேவை அவசியமாகின்றது என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
இதுவரையில் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய வகையில் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். எமது மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது, அவற்றை முடக்கி வைத்திருப்பதானது, எமது மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே தெரிகின்றது. எனவே, இது தொடர்பில் கூடிய அவதானமெடுத்து, வெகுவிரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டன என்றும்,
அவை குறித்த உள்ளுராட்சி சபைகளின் சாரதிகள் ஊடாக கொழும்பில் இருந்தும் எடுத்து வரப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாக பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது

இந்த பவுசர்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் செலவுகள் அனைத்தும் அந்தந்த உள்ளுராட்சி சபைகளையே சாருகின்ற நிலையில், இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர்ப்பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தால் கேட்கப்பட்டால் சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரதேச செயலக பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த ஏற்பாடு என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கிளடையே தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.
மேலும், வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்பட்டு வருவதால் அவற்றை நிரப்ப வேண்டியத் தேவையும் தொடர்கின்றது.
வடக்கு மாகாண சபையின் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் இவைகளை கவனிக்க தவறிவிட்டார்கள். மாகாண சபைகளுக்கு இருக்கும் 37 அதிகாரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து எஞ்சிய 35 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை கூட இவர்கள் தமிழ் மக்களுக்காக பயன்படுத்தியிருக்கவில்லை.
ஒய்யாரக்கொண்டையாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம். பேசுவது போலித்தமிழ் தேசியம்! சாதித்தவை வெறும் பூச்சியம்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்கள். சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!
காமலீலை குற்றவாளி பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்குமாறு இந்தியப்பிரதமர் மோடியிடம் கேட்டவருக்கு, சிறையிருக்கும் ஒரு தமிழ்த்தாயின் புதல்வனை விடுவிக்கும் சிந்தனை தோன்றவில்லை.
இது யாரது குற்றம்? தனது ஓய்வு கால பொழுது போக்கிற்காக வடக்கு நோக்கி அரசியல் நடத்த வந்தவர் குற்றமா? அல்லது, தமிழரின் வலிகைளையும் வதைகளையும் அறியாத ஒருவரை வடக்கு மாகாண அதிகாரத்தில் உட்கார வைத்தவர்கள் குற்றமா?
யுத்த காலத்தில் அரசிடமிருந்து பெற்ற குண்டு துளைக்காத வாகனம் ஏறி பவனி வந்தவர்கள், அதே அரசுக்கு எதிராக கூச்சலிட்டு சூளுரைப்பது போல் சுத்து மாத்து அரசியலில் ஈடுபட்டார்கள்.
இன்று, அரசிடம் கூனிக்குறுகி இரந்து கேட்டு யாசகம் பெற்ற அரச ஆடம்பர மாளிகையில் வசித்துக்கொண்டு, அதே அரசுக்கு எதிராக பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அறிக்கையிட்டு பம்மாத்து காட்டுகிறார்கள்.
நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் நடித்துக்கொண்டிரு என்று அரசின் காலில் விழுந்து ஆலோசனை கூறிவிட்டு ஃ அடுத்த தேர்தலுக்கு நீங்கள் ஆயத்தமாகும் உங்கள் புலுடாக்கள் இனியும் வெற்றியளிக்காது.
தமது ஓய்வு காலத்தை பொழுது போக்கு அரசியலுக்காக செலவழிக்க வந்தவர்களும், வெளியில் வீரப்பேச்சும், அரசின் பின் கதவு தட்டி தத்தமது சொந்த சலுகைகளை மட்டும் பெறும் தரகு தலைமைகளும், தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்க போவதில்லை.
நான் இடையாறாது நேசிக்கும் எனது மக்களின் அரசியல் கனவுகளுக்கு மட்டுமின்றி, எமது மக்களின் நடை முறை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பும் எனது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
தலைநகரின் குடிசன மற்றும் வாகன நெரிசல்களை கட்டப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!
கொழும்பு நகருக்குள் காணப்படுகின்ற வாகன நெரிசல்களையும், குடியிருப்புகளின் நெரிசல்களையும் அவதானத்;தில் கொண்டு, உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டு வருகின்றது.
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது சுமார் 3.5 மில்லியன் அளவு மக்கள் தொகை வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
இந்த மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சேரிகளிலிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்விடங்;கள் போதுமான வசதிகளை கொண்டிராததும், சுகாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலைமைகளிலுமே இருக்கின்றன.
புகையிரதப் பாதையை அண்டியதாக பம்பலப்பிட்டீ, வெள்ளவத்தை பகுதிகளில் பல குடும்பங்கள் இதே நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு மின்சார வசதிகள்கூட கிடையாத நிலையே காணப்படுகின்றது.
மேலும், கொழும்பில் பல இடங்களிலும் நகரப்பகுதிகளை சார்ந்து, வெளித் தெரியாத நிலையில் பெரும்பாலாக சேரிகளே காணப்படுகின்றன.
இத்தகைய மக்களுக்கு நல்ல வகையிலான வீடுகள் அமைத்து, அவர்களை அங்கங்கு குடியமர்த்துவது நல்ல முயற்சி என்றாலும், இவர்களில் பெரும்பாலானவர்களது வாழ்வாதாரங்கள் அவர்கள் தற்போது வசித்து வருகின்ற சேரிப் பகுதிகளை அண்டிய நகரங்களையே மையமாகக் கொண்டுள்ளன.
குறிப்பாக, குணசிங்கபுர, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை போன்ற பகுதிகளில் சேரிகளில் – தோட்டங்களில் வாழுகின்ற பலரும் கொழும்பு மெனிங் சந்தை, புறக்கோட்டை நடைபாதை கடைகள், மற்றும் பிராதான பஸ் நிலையம், துறைமுகம்; போன்றவற்றை மையமாகக் கொண்டு, தங்களது வாழ்வாதாரங்களை நாளாந்த ரீதியில் ஈட்டுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே, இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துகின்றோம் எனக் கூறி, தூர இடங்களில் குடியமர்த்தினால், இவர்களது வாழ்வாதாரங்கள் பாதிப்படையக் கூடும் என்பதையும் மனதில் கொண்டே இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதேநேரம், கொழும்பு நகரில் காணப்படுகின்ற அரச அலுவலகங்களை கொழும்புக்கு வெளியில் – கொழும்பினை அண்டிய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவது நல்ல முயற்சியாகும். முன்னாள் ஜனாதிபதி, அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இதே கொள்கையுடனேயே அப்போது பல ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
அதேநேரம், அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே பகுதியை நோக்கி நகர்த்துவதாலும், பிற்காலத்தில் இன்னொரு நெரிசல் மிக்கப் பகுதி உருவாகுவதற்கான சாத்தியம் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேல் மாகாணத்தில் தற்போது கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கு சற்று குறைவான சனத்தெகை இருக்கின்ற நிலையில், இன்னும் சில வருடங்களில் இத்தொகையானது மேலும் 3 மில்லியன்களால் அதிகரிக்க முடியும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
மேலும், கொழும்பு குப்பைகளை புத்தளம், அறுவாக்காடு பகுதிக்கு கொண்டு செல்கின்ற திட்டம் தொடர்பில் அண்மையில் அதற்கெதிரான போராட்டமொன்று புத்தளம் நகரப் பகுதியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்கெனவே இந்த நாட்டில் குப்பை மேடு தொடர்பில் எமது மக்களுக்கு மீதொட்டமுல்லை குப்பை மேடு ஒரு பாடமாக அமைந்துள்ள நிலையில், ஒரு பகுதியிலிருந்து குப்பைகளை இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றபோது, அந்தப் பகுதி சார்ந்த மக்களின் எதிர்ப்புகள் ஏற்படுவதை நாம் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் கொழும்பிலே கண்டிருக்கின்றோம்.
இந்த குப்பை பிரச்சினை மட்டுமல்ல, பொது மக்கள் சார்ந்த எந்த விடயமானாலும், அதனை மேற்கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.
அது அரசியல் யாப்பு திருத்தமாகவும் இருக்கலாம், கொழும்பு குப்பையாகவும் இருக்கலாம். அவை தொடர்பில் முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதன் பின்னர் திட்டங்களை செயற்படுத்தங்கள் எனக் கேட்டுககொள்கின்றேன்.

Related posts:

மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...