ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019

இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை – நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக வசதிகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கள் போன்றவற்றை முதன்மைப்படுத்தியதாக நிறைவேற்றாளரினதும், சட்டவாக்கத் துறையினதும் – நாடாளுமன்றத்தினதும்  அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் என்ற வகையில் பரவலாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பார்க்கின்றபோது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள், மாகாண சபைகளில் 455 உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளில் 7654 உறுப்பினர்கள் என மொத்தமாக 8314 மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது, சுமார் 2452 மக்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மக்கள் பிரதிநிதிகளுக்குரிய ஊதியங்கள், வீட்டு வசதிகள், வாகனங்கள், வாகனச் செலவுகள், ஏனைய சலுகைகள் எனப் பார்க்கின்றபோது, அந்த அனைத்து வசதிகளும் இந்த நாட்டு மக்களின் மீதே பெரும் சுமையாகச் சுமத்தப்பட்டு வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 நிறுவனங்கள் தொடர்பிலான 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தங்களது பதவிகளுக்கான செலவீனச் சுமைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் தாங்குகின்ற மக்களுக்கு இந்த மக்கள் பிரதிநிதிகளால் ஏதேனும் சேவைகள் நடக்கின்றனவா? என்பது தென் பகுதியைப் பொறுத்து போதுமானளவு நடப்பதாகவே தெரிய வந்தாலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பூச்சியமாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் – இத்தனை மக்கள் பிரதிநிதிகள் இருந்தும், இந்த நாட்டின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக எனக் கூறப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதாவது, சுயாதீனமான நிர்வாகச் சேவைகளை முன்னெடுப்பதற்கு என்ற நோக்கத்திற்காக எனக் கூறப்பட்டு இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா? என்ற கேள்வி இன்று எமது மக்கள் முன் எழுந்துள்ளது.

இந்த ஆணைக்குழுக்களை உருவாக்குகின்ற முழுமையான அதிகார மையமாக செயற்படுவது அரசியலமைப்புச் சபையாகும். இதில் பொது மக்களது பிரதிநிதித்துவத்திற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்ற போதிலும், அரசியல் மயமற்றதான நோக்கத்தை முக்கியமாகக் கொண்டிருக்கவேண்டிய இந்தச் சபையில் அதிகமான உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களே கொண்டுள்ள நிலையில் – அதுவும் ஆளுங்கட்சி உறுப்பினர்களையே கொண்டிருக்கின்றது. ஆளுங்கட்சியுடன் செயற்பட்டு வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது. அரசியலமைப்புச் சபையில் உறுப்புரிமை பெறுகின்ற நிலையில், அந்த உறுப்புரிமையானது எதிர்க்கட்சி உறுப்புரிமையாகிவிடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்க்கட்சி என்ற போர்வையில் இருக்கின்ற ஆளுங்கட்சியினரே என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.

இந்த நிலையில் – இந்த ஆணைக்குழுக்களின் – நிறுவனங்களின் மூலமாக சுயாதீனத் தன்மையை எதிர்பார்க்க முடியுமா? என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.

அதாவது, 8314 மக்கள் பிரதிநிதிகளாகிய அரசியல்வாதிகளால் எதிர்பார்க்கப்பட இயலாத சுயாதீனமான நிர்வாகச் சேவையினை எதிர்பார்த்தே இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான ஆணையாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களை அதே அரசியல் பிரதிநிதிகளே பரிந்துரைத்து நியமிக்கப்பட வேண்டும் எனில், இந்த ஆணைக்குழுக்கள் எதற்கு? இது இந்த நாட்டு மக்களுக்கு மேலுமொரு வீண் செலவாக இல்லையா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

இந்த அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் இதே நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகவே தெரிவித்திருந்தார். அவரது கடுமையான விமர்சனத்திற்கு இந்த அரசியலமைப்புச் சபை ஆளாகியிருந்தது. நாட்டின் தலைவரின் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள ஒரு சபையினால் நியமனங்களுக்கான பரிந்துரைகளைப் பெறுகின்றவர்களைக் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை தொடர்பில் இந்த நாட்டு மக்கள் சிந்தித்திப் பார்க்க மாட்டார்களா? என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகின்றது.

அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுகள் இல்லை. சுயாதீன ஆணைக்குழுக்கள் தமக்காக உருவாக்கப்பட்டவையா? என்ற உணர்வுகள் நாட்டு மக்களிடையே இல்லை. இந்த ஆணைக்குழுக்களுக்கு – நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுகப்படுகின்ற அதிகாரிகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற தெளிவு மக்களுக்கு இல்லை.

குறிப்பாக இந்த ஆணைக்குழுக்கள் தமது செயற்பாட்டு ஒழுங்குவிதிகள் தொடர்பில் உரிய சட்ட கட்டமைப்பிற்குள் தமது அதிகார ஆணையை மிகவும் விரிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். பரந்தளவிலான மக்கள் அபிப்பிராயக் கோரலின் பின்னர் வகுக்கப்பட்ட தந்திரோபாய திட்டங்கள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். அதேநேரம், அதனது உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ள எண்ணக் கரு குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் நடக்கின்றனவா? என்பது கேள்விக்குள் மட்டுமே அடக்கப்பட்டு விடுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரே தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி, ஒரு பக்கச் சார்பாக நீதிமன்றத்தை நாடிச் செல்கின்ற நிலையில், இங்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் எமது மக்கள் எந்த நம்பிக்கையினை கொள்ள முடியும்? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது

துறை சார்ந்து மிகத் திறமையாக செயற்படுகின்ற ஒரு நடுத்தர வயதுடைய ஓர் அதிகாரியை இத்தகைய ஆணைக்குழுக்களில் தேடிக் கொள்வதே இன்று சிரமமான காரியமாக இருக்கின்றது.

அண்மையில்கூட 80 வயதினைத் தாண்டிய நிலையில் – அதாவது 80, 83, 85, 87 வயதுகளில் சில ஆணைக்குழுக்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தாமதமாவதாக முறைப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவானது அது ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக செயற்பாடின்றிய நிலையில் இருந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கடந்த வருட இறுதியில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதுவரையில் ஒரு பட்டதாரியோ, கணக்காளரோ, நிபுணத்துவம் பெற்ற கணக்கு பரிசோதகரோ, பொறியியலாளரோ அதன் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ஆக, 25 வருடங்களாக அந்த ஆணைக்குழுவுக்கென மக்களின் நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என்றே தெரிய வருகின்றது.

எனவே, இந்த நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இத்தகைய வீண் விரயங்களுக்காக மக்களது நிதியினை செலவு செய்யாமல், செலவு செய்யப்படுகின்ற நிதிக்கேற்ப பயன்களை எமது மக்கள் பெறத்தக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் அவசியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு பெயருக்கு வாய் வீரம் பேசிக் கொண்டு, எமது மக்களது நிதியை வீணடித்துக் கொண்டு, எமது மக்களுக்கு கடுகளவேனும் பயனில்லாத வகையில் இருக்கின்ற தமிழ்த் தரப்பினர் போல் இந்த அரச நிறுவனங்களும் இருந்துவிடக் கூடாது

இன்றைய நிலையில் செயற்பாடற்ற அல்லது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்காத நிறுவனங்களை வைத்துக் கொண்டு பராமரித்துக் கொண்டிருப்பதைவிட, அவற்றுக்கான ஒரு தொகை பணியாளர்களை நியமித்து, ஊதியம் உட்பட அனைத்தச் சலுகைகளுக்காகவும் மக்கள் நிதியினை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதைவிட, இந்த நாட்டை பொருளாதார ரீதியில் தூக்கி நிறுத்த வேண்டிய துறைகள் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளன. தூக்கி நிறுத்தப்பட வேண்டிய மக்கள் இருக்கின்றனர்.

இந்த வரவு – செலவுத் திட்டத்திலே எதிர்பார்க்கின்ற வருமானத்தைவிட இரட்டிப்பான செலவுகளை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நிங்கள் எதிர்பார்க்கின்ற வருமானத்தை எப்படி நீங்கள் ஈட்டப் போகிறீர்கள்? என்பது உங்களுக்கும் கேள்விக்குறியாகவே இருக்க வேண்டும்.

பல்வேறு கடன் திட்டங்களை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதனூடாக எமது மக்களையும் கடன்காரர்களாக்கிவிட்டு, நீங்கள் எதிர்பார்க்கின்ற செலவுகளை மேற்கொள்வதற்கும் மேலும் கடன் வாங்கப் போகிறீர்கள்.

மறுபக்கத்தில் மக்களிடமிருந்து வரிகளை எதிர்பார்க்கின்றீர்கள். அறவிடுகின்றீர்கள். மக்களுக்கு என்ன வருமானங்கள் இருக்கின்றன, வரிகளை செலுத்தி, அன்றாட உணவைத் தேடிக் கொள்வதற்கு? என்பது பற்றி நீங்கள் ஆராய்வதாக இல்லை.

கடன்களையும் வரிகளையும் தவிர்த்து வேறு என்ன வருமான வழிகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நடைமுறைச் சாத்தியமான பதில் கிடையாது என்றே நினைக்கின்றேன்.

நேற்று இரவிலிருந்து எரிபொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இன்று முதல் உணவுப் பொருட்களிலிருந்து, பஸ் கட்டணங்கள் என மீண்டும் ஒரு சுற்று விலை உயர்வுகள் இந்த நாட்டில் தொடரும் என நினைக்கக் கூடியதாக இருக்கின்றது

நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைப் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய அக்கறையில்லாமல் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கைவிடப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

தோட்டத் தொழிற்துறைகள் சார்ந்திருந்த மக்கள் பெருமளவில் இன்று அதிலிருந்து விடுபட்டு, வெவ்வேறு தொழிற்துறைகள் நாடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவான முறையில் இல்லாமல் இருக்கின்ற நிலையில், தேசிய கல்வி ஆணைக்குழுவும் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இயங்கி வருகின்றது.

எனவே, இத்தகைய ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்குவதற்குரிய வழிவகைகளை, குறிப்பாக அரசியல் நோக்கங்கள் அற்ற நியமனங்களின் ஊடாகவும், அரசியல் தலையீடுகள் அற்ற நிர்வாக முறைமையின் கீழும் உறுதிபடுத்தப்படல் வேண்டும் என்ற விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

கௌரவ ஜனாதிபதி அவர்களினதும், கௌரவ பிரதமர் அவர்களினதும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் கீழான நிதி ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் இந்த நாட்டின் – நாட்டு மக்களின் நலன் கருதிய பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிகக் முடிகின்றது. குறிப்பாக அவர் செல்கின்ற இடங்களில் மக்களால் முன்வைக்கப்படுகின்ற பல்வேறு தேவைகளை அவரால் காலதாமதமின்றி அம் மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். அந்த வகையில் அவரது மேற்படி பணிகளை வரவேற்பதுடன், அவரது மக்கள் நலன் சார்ந்த பணிகள் மேற்படி நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேலும் சிறக்க வேண்டும் என்றார்.

Related posts:


வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...