அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன்.

தமது உறவுகளை பறி கொடுத்த துயரில் வதைபடும் சகலருக்கும் எனது ஆழ்மன அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரும் சுக நலத்துடன் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறேன்.

எமது இலங்கைத்தீவு முழுவதுமே எதிர் கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை ஒன்றில், அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத இந்த சூழலை நானும்; உணர்ந்து கொள்கிறேன்.

ஆனாலும் இந்த அவசரகாலச் சட்டமானது எந்த நோக்கத்திற்காக பிரகடனப்படுத்தப்படுகின்றதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

அழகிய எங்கள் இலங்கைதீவு இரத்தத்தீவாக உருவெடுத்திருந்த காட்சிகள் இன்னமும் மறையவில்லை. எமது மக்கள் எதிர்கொண்டிருந்த இழப்புக்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும், இரத்தப்பலிகளுக்கும்  இன்னமும் உரிய நீதியும், பரிகாரம் தேடப்படவில்லை.

இந்நிலையில் எமது மக்களிடமிருந்து மீண்டுமொரு அழுகுரல் ஓலம் இன்று எழுந்திருக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் நடந்தப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட மக்களில் தமிழர்களே அதிகமானர்களாக இருப்பினும் மனித உயிர்கள் என்ற வகையில் அனைத்து மக்களின் இழப்புக்களுமே சமனானவை. அதேவேளை தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறிப்பாக தமிழ் மக்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இன்று தமிழ் மக்களிடையே எழுந்துள்ளதையும் இச்சபையினுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

நடைபெற்ற சம்பவங்களில் இளம் குருத்துக்களும் குருதியில் சரிந்து கிடக்கும் காட்சிகள் எமது மனங்களை உலுக்கியிருக்கின்றது. கிறிஸ்தவ மக்களின் புனித நாளொன்றில் நிகழ்ந்த வன்முறை வேள்வி மனித மனங்களையே வதை வதைத்திருக்கின்றது!..

யுத்தம் முடிந்து அமைதியாக இருந்த இலங்கைத்தீவின் அழகை இரசிக்க வந்த பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதில் பலிகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த வன்முறைகள் இலங்கைத்தீவை மட்டுமன்றி உலக மக்களின் மனங்களையே உலுக்கியிருக்கின்றது. இன்னமும் எங்கு, எப்போது, எது நடக்குமோ என்ற அச்சத்தில் எமது மக்கள் உறைந்து கிடக்கின்றார்கள்.

உலகத்தின் பார்வைகள் யாவும் இன்று இலங்கைத்தீவின் பக்கமே திரும்பியிருக்கும் நிலையில், மனிதப் பலிகளை நடத்தும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புகள் யாவும் அரசாங்கத்தின்  கைகளில் மட்டுமே தங்கியிருக்கின்றது. ஆனாலும், கொடிய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதின் பெயரால் அப்பாவி மக்களை ஒடுக்கும் கைங்கரியங்கள் இங்கு நடக்காது பாதுகாப்பதும் அரசின் பொறுப்பேயாகும்.

களைகளைப் பிடுங்கி எறிவதற்கு மாறாக பயிர்களையும் சேர்த்து பிடுங்கி எறியும் கைங்கரியங்கள் இங்கு இனியும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். கடந்த கால வரலாற்றில் இவைகளும் நடந்தேறின என்பதையும் இங்கு நான் ஞாபாகப்படுத்த விருப்புகின்றேன்.

இன்று மீண்டும் பிரகடனப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும், அதற்குத் துணைபோகின்றவர்களையும், துணைபோகின்றவர்களில் சுயலாப அரசியல்வாதிகள் இருந்தால்; அத்தகையவர்களையும் ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விருப்புகிறேன். வன்முறையானது எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம் பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்

மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால நிலைக்கு ஒரு மனித முகம் இருக்க வேண்டும்! தொடர் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து இன்று மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகாலச்சட்டமானது, மறு புறத்தில் தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்கிவிடக்கூடாது.

வன்முறையில்லாத உரிமைக்குரல்களுக்கு இந்த அவசரகால சட்டம் மதிப்பளித்தே ஆகவேண்டும். எதையும் ஏன், எதற்கு, என்று இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் கேள்வி எழுப்பும் ஜனநாயக விழுமியங்களுக்கு சவால் விடுகின்ற ஒன்றாகவோ, நாம் அனைவரும் கட்டியெழுப்ப விரும்பும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாகவோ இந்த அவசரகாலச் சட்டம் இருந்துவிடக்கூடாது.

ஏன்னெனில் 1971ஆம், 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜே.வி.பியின் செயற்பாடுகளையும், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னராக புலிகளின் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்பட்டபோது, அப்பாவி பொது மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இச்சபையின் ஞாபகத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

தமிழ், முஸ்லிம், சிங்கள இன, மத சமூகங்களை ஒன்று பட்ட இலங்கைத்தீவின் சமத்துவ பிரஜைகளாகவே நான் பார்க்கின்றேன்.

மனிதநேயம் மக்களை ஒன்று படுத்துகிறது. சுயலாப அரசியல் மட்டுமே மத வாதம், இன வாதம் என மக்களை பிரித்து வைக்கின்றது. ஆகவே, இத்தகைய வன்முறைகளை வைத்து இனவாதம், மதவாதம் போன்ற முரண்பாடுகளை தூண்டிவிடும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ், முஸ்லிம், சிங்கள இன சமூக மக்கள் தத்தமது தனித்துவ அடையாளங்களோடும், சுதந்திரமாகவும் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கக் கூடிய அச்சமற்ற சூழலில் சேர்ந்து வாழ வேண்டும். ஒவ்வொரு இன சமூக மக்களுக்கும் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் எதிர்பார்க்கும் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

முக்கியமாக பகிரப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்பட முடியாத ஏற்பாடுகள் அதில் இருத்தல் வேண்டும். அதன் ஊடாகவே இத்தகைய கொடிய வன்முறைகளுக்கு எதிராக அனைத்து இன சமூக மக்களும் இலங்கையர்களாக கிளர்ந்தெழும் ஒன்று பட்ட ஒற்றுமையை முழுமையாக உருவாக்க முடியும்.

அதற்கு முழு இலங்கை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும், இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுமான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அதை மேலும் பலப்படுத்துவத்தின் மூலமே இது சாத்தியமாகும்.

கொடிய வன்முறைகளுக்கு எதிராக ஒன்று பட்டு குரல் எழுப்புவோம். இரத்தப்பலிகளில் இருந்து அனைத்து மக்களையும் நாம் பாதுகாப்போம்.

ஒவ்வொரு இன மத சமூக மக்களினதும் புனித நாட்களையும், அதை அந்த மக்கள் பாதுகாப்பான சூழலில் அனுஷ்டிப்பதற்கும் ஏற்ற சூழலையும் ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமையாகும்.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலையானது எமது நாட்டின் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதுடன், இயல்புச் சூழலையும் வெகுவாகப் பாதித்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் பெரும்பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நெருக்கடியானது இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான தேசிய பிரச்சனையாகும். இவ்விடயத்தில் தேசிய பாதுகாப்புக்காகவும், தேசிய நல்லிணக்கத்திற்காகவும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் தயாராக இருப்பதாக கூறியிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

இதேவேளை நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், இதை எமது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சனையாகக் கருதி அனைவரும் ஒற்றுமையாக நின்று அதை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உறுதியையும் நாம் வரவேற்கின்றோம்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மதங்களையும், இன வேறுபாடுகளையும் கடந்து இலங்கையர்களாக நாம் அனைவரும் ஓரணி திரண்டு செயலாற்றுவதன் ஊடாகவே பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்து, இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றேன். 

Related posts:


மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சப...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...