அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா
Saturday, April 8th, 2017ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலேயே எமது நாடு முன்னிலை வகிப்பதாகவும், எமது நாட்டு சனத் தொகையில் 40 வீதமான மக்கள் மது பாவனையை மேற்கொள்வதாகவும் தெரிய வருகிறது. அதே நேரம், வெளிநாடுகளில் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் என்கின்ற நிலையில் அங்கு மது பயன்பாடு குறைவாகவும், இலங்கையிலே மதுவுக்கு அடிமையானவர்கள் குறைவு என்கின்ற நிலையில், மது பயன்பாடு அதிகம் என்றும் தெரிய வருகின்றது.
புகையிலை மற்றும் மது பானங்களால் அரசு ஈட்டுகின்ற வருடாந்த வருமானம் சுமார் 143 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில், அதனைப் பயன்படுத்துகின்றவர்களுக்கான சுகாதார இழப்புகளாக அரசு வருடாந்தம் சுமார் 212 பில்லியன் ரூபாவினை செலவு செய்ய வேண்டியிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டில் மது மற்றும் புகையிலை பாவனை காரணமாக வருடத்திற்கு சுமார் 47,000 பேர் இறப்பதாகத் தெரியவருகின்றது. இந்த நிலையானது எமது நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமான உயிரிழப்புகளைவிட, அதிகமானதொரு நிலையைக் காட்டக்கூடியதாகவே இருக்கின்றது.
இன்றைய நிலையில் 15 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்டோர் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோரிடையே போதைப் பாவனையானது பரவலாக அதிகரித்துள்ள நிலையே காணப்படுவதாக தெரிய வரும் நிலையில், பாடசாலை மட்ட மாணவர்களது விருந்துபசார நிகழ்வுகளில், விளையாட்டு நிகழ்வுகளில்கூட மதுபானம் பரிமாறப்படுகின்ற சம்பவங்களையும் அண்மைக் காலமாக எமது நாடு கண்டுவருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கடந்த ஆண்டு அறிக்கையைப் பார்க்கின்றபோது, எமது நாட்டில் 13 – 15 வயதுகளுக்கு இடையிலான பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்களிடையே புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை இலக்குகளாகக் கொண்டு, பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் பாபுல், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதை அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. 2006ஆம் ஆண்டு மதுசாரம் மற்றும் புகையிலை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது ஒழுங்குற செயற்படாமையின் விளைவினையே இவ்வாறான விற்பனைகள் எடுத்துக் காட்டுகின்றன என்றே கருத வேண்டி இருக்கிறது.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் முறையே யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா போன்ற மாவட்டங்கள் மது பாவனையில் முன்னிலை வகித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணமும், மட்டக்களப்பும் நேரடி யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டு, யுத்தச் சுவடுகளை இன்னும் களைய முடியாதிருக்கின்ற மாவட்டங்களாகும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களையும், அங்கவீனமாக்கப்பட்டவர்களையும், வாழ்வாதார வாய்ப்புகள் அதிகம் கிட்டாதவர்களையும் கொண்டுள்ள மாவட்டங்களாகும். உயிர் வாழ்வதற்காக போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களை அதிகமாகக் கொண்டுள்ள மாவட்டங்களாகும்.
நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் நிலமற்ற மக்களை அதிகமாகக் கொண்டு, தொழிற்துறையாக அங்கீகரிக்கப்படாத தொழிலில், அதுவும் மாதத்தில் சில நாட்களே ஈடுபட்டு, குறைந்த ஊதியத்தைப் பெறுகின்ற மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற மாவட்டமாக உள்ளது.
ஆக, மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாயம், அன்றாடப் போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்ற மக்கள் சமுதாயம் வாழுகின்ற மாவட்டங்கள் மது பாவனைக்கு அதிகமாகவே ஆட்பட்டிருப்பது வேதனையான விடயமாகும்.
2020ஆம் ஆண்டில் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக எமது நாடு மாற்றப்படும் எனக் கூறப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு மாகாணத்தில், கல்குடா, கும்புறுமூலை பகுதியிலே சுமார் 450 கோடி ரூபா முதலீட்டில், 19 ஏக்கர் பரப்பளவில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதே நேரம், இந்த விவகாரம் தற்போது ஒரு பாரிய விடயமாகவே பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டு, எதிர்ப்புகளும் தலைதூக்கியுள்ளன.
எமது நாட்டை போதையற்ற நாடாக மாற்றும் திட்டத்திற்கும், மேற்படி மதுபான உற்பத்தித் தொழிற்சாலை திட்டத்திற்கும் இடையில் காணப்படுகின்ற முரண் நிலையானது எமது மக்களை சிந்திக்கத் தூண்டியுள்ளதாகவே உணர முடிகின்றது. இந்த நிலயில், மது பாவனையற்ற நாடாக மாற்றுவதற்கு அதற்குரிய நெறிமுறைகளை உருவாக்குவதற்கு பதிலாக, மது உற்பத்தித் தொழிற்சாலைகளை எமது நாட்டில் உருவாக்குவது எந்த வகையில் நியாயமானது? என்ற கேள்வியே எழுகின்றது.
மது பாவனை காரணமாக நாட்டில் பாரியளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின் நிலையில், அரசுக்கு வருமானத்தைவிட மிக அதிகளவில் செலவுகளே ஏற்படுகின்ற நிலையில், சமூக சீர்கேடுகள் பாரியளவில் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அந்த அளவுக்கு மிகத் தாராளமாகவே மது உற்பத்திகள், இறக்குமதிகள் இங்கு இடம்பெறுகின்றன என்றால், இன்னும் மது பான உற்பத்திக்கான தேவை இந்த நாட்டிலே இருக்கின்றதா? என்று கேட்க விரும்புகின்றேன்.
மேற்படி உற்பத்திச் சாலையின் மது பான உற்பத்திகளின் மூலமாக ஏற்படக்கூடிய தீங்குகளைப் போன்றே இப்பகுதியின் நீர்வளம் தொடர்பிலும் ஆபத்து நிலையே ஏற்பட உள்ளமையை இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே நீர் தட்டுப்பாடு என்பது இப்பகுதியைப் பொறுத்த வரையிலும் பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ள நிலையில், மேற்படி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால், இதற்கென பாரியளவில் நீர்த் தேவை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் மிக அதிகமாகவே பாதிக்கக் கூடிய மேற்படி தொழிற்சாலை குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தற்போதுள்ள கால நிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் எமது நாட்டின் நெல் உற்பத்தி என்பது மிகவும் குறைவானதாகவே இருக்க வாய்ப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அரிசிக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கின்ற நிலையில் இருக்கும் எமக்கு, எதிர்வரும் காலங்களிலும் அரிசியை மேலும் இறக்குமதி செய்ய வேண்டியத் தேவையே ஏற்படக்கூடிய நிலை தென்படுகிறது. இத்தகைய பற்றாக்குறை ஏற்படுகின்ற நிலையில் அரிசியின் விலை குறைவதற்குப் பதிலாக, அரிசியின் விலை மேலும், மேலும் அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகும்.
நாட்டில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளபோது, அரச களஞ்சியசாலையிலிருந்து 4000 மெற்றிக் தொன் நெல்லை தனியார் மது பான உற்பத்தி நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதாக நெல் சந்தைப் படுத்தல் சபை அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
கால நிலை காரணமாக நாட்டில் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்தொரு நிலையில், நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், இவ்வாறு அரிசியினை மது பான உற்பத்திக்காக வழங்குவது என்பதை மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்ற எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில் மேற்படி மது பான உற்பத்தி தொழிற் சாலையானது, அதிகமாக நெல் உற்பத்தியினைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்படுவது குறித்தும் சந்தேகமே ஏற்படுகின்றது. நாளடைவில் மதுபான உற்பத்தி அதிகரித்து, இந்த நாட்டில் எமது மக்களின் பிரதான உணவாகிய அரிசியானது, உணவுக்காக கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற சந்தேகமே ஏற்படுகின்றது.
எனவே, இத்தகைய நிலையினை இந்த அரசு அவதானத்தில் கொண்டு, எமது மனித வளங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்து, மேம்படுத்தி, வளர்க்கக் கூடிய வகையிலான கொள்கைத் திட்டங்களை வகுத்து, அவற்றை ஒழுங்குற செயற்படுத்த வேண்டும் என்றும், சட்டங்கள் வகுக்கப்படுவதால் மாத்திரம் எதுவிதமான பயனுமில்லை என்பதால், வகுக்கப்படுகின்ற சட்டங்களை உரிய முறையில் செயற்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்க...
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் ...
வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...
|
|
வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்க...
இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்ள...
தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...