அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018

அரசியல் கைதிகள் என்ற சொற் பிரயோகமானது இன்று நேற்றல்ல, 1940களில் அன்றைய அரசு சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தது முதல் இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சொற் பிரயோகமாகும். அதன் பின்னர் 1971, 1988 – 89 காலகட்டங்களிலும் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிகளின்போது இந்த சொற் பிரயோகம் மிகவும் அழுத்தமாகப் பிரயோகிக்கப்பட்டும் வந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் தடுப்பினையும் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் பாதாள உலகக் கோஸ்டியினர் அல்லர். தங்களது சுயத்திற்காக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டோரும் அல்லர்.

தமிழ் மக்களின் விடுதலை நோக்கியப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தில் விரும்பி இணைந்தோ அல்லது பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டோ செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த தமிழ் அரசியல் கைதிகள் தாங்களும் வாழ்வதற்காகவே போராடி வருகின்றனர். நீதி, நியாயம் கோருகின்றனர். இவர்களை வைத்து, வெளியில் இருந்து யாரும் அரசியல் செய்வதற்காக அல்ல. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் குற்றம் ஒன்றினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாரினால் கைதிகளிடமிருந்து பெறப்படுகின்ற வாக்குமூலம் பயன்படுத்த இயலாது எனினும், இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருமே இன்னமும் பிணைகூட இன்றி தடுப்பில் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களிடமிருந்து பொலிலிஸார் பெற்றுக் கொண்டுள்ள வாக்குமூலங்கள் என்றே கூறப்படுகின்றது. இந்த வாக்குமூலங்கள் எப்படி எல்லாம் பெற்றிருக்கக்கூடும் என்பது பற்றி, நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நான்காவது செயற்பாட்டுப் பிரிவின் மூன்றாவது விடயத்திற்கு ஏற்ப, இழப்புகளுக்கான நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைப்பது தொடர்பில் இன்று நாங்கள் விவாதங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கான நியாயத்தினைக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் இன்று ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி – நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆரம்பந்தொட்டே வலியுறுத்தி வருகின்றோம். இத்தகைய நிலைமையில், இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என ஒருவரும் இல்லை என்ற கதையினைக் கூறி, நீங்கள் இந்த விடயத்தைத் தட்டிக் கழித்து வருகின்றீர்களே அன்றி, இதற்கொரு முடிவினை எடுப்பதற்கு பின்னடித்து வருகின்றீர்கள்.

ஆக, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும், சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் எனத் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டால், நீங்கள் அதிகளவில் செலவு செய்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் ‘தேசிய நல்லிணக்கம்’ என்பது வெறும் கண்துடைப்பு தானே? என்றே கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகளை இவ்வாறு தொடர்ந்து நீதி, நியாயமின்றி தடுத்து வைத்திருப்பதில் அவர்களது மனித உரிமைகைகள் திட்டமிடப்பட்டு மீறப்படுகின்றன.  இந்த இழப்புக்கான எதிரீடுகள் அலுவலக சட்டமூலத்தில் ‘இன்னலுற்ற ஆட்கள்’ பற்றிய  வரைவிலக்கணத்தின் (அ) 1ஆம் பந்தியில் ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற மோதலின்போது, அதன் விளைவாக, அல்லது அதனுடன் தொடர்புடைய, அல்லது, அதன் பின்னரான என்றும், 3ஆம் பந்தியில், இலங்கையிலுள்ள தனியாட்களின், குழுக்களின் அல்லது மக்கள் சமுதாயங்களின் உரிமைகள் மீதான முறைப்படுத்தப்பட்ட முழுமையான மீறுகைகளின்போது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவிலக்கணத்தின்படி இந்த தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குகின்றனர் என்றே கருதப்பட வேண்டும். அந்தவகையில், இவர்களுக்கு – அதாவது இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன இழப்பீடுகளை வழங்கப் போகிறீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள். மேலும் இந்த விடயத்தை தள்ளிப் போடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள், இந்த அரசாங்கத்தை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறித்திரிபவர்கள, உண்மையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதோ, இந்தத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள்மீதோ அக்கறை கொண்டிருந்தால், ஆளுமைமிக்கவர்களாக இருந்திருந்தால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பியிருந்தால், அவர்களை எப்போதோ விடுவித்திருக்கலாம்.

அதற்கான அரசியல் அதிகாரம் அவர்களிடம் இருக்கின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டின் புதிய அரசின் 100 நாட்கள் வேலைத்திட்ட காலகட்டத்திலேயே இதனை செய்திருக்கலாம். இப்போது – அதாவது தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கின்ற காலங்களில் இங்கே வந்து நீலிக் கண்ணீர் வடிக்கத் தேவையில்லை என்றே கருத வேண்டியுள்ளது

இழப்புகளுக்கான எதிரீடு அலுவலகமென்பது, யுத்தம் இந்த நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அலுவலகம் துரித கதியில் அமையப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கின்ற எமது மக்களுக்கு இது பூரண மன நிம்மதியைத் தந்து விடாது. எனினும், அவர்களது மனக் காயங்களுக்கு ஒத்தடமாகவாவது இது அமையும் என்றே நாம் கருதுகின்றோம்

கடந்த காலத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட எமது மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் போதிய வாழ்வாதாரங்கள் இன்றிய நிலையில், மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார உதவியாக ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என நான் ஏற்கனவே பலமுறை இந்தச் சபையின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தேன். அது தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரினால் ஓர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அத்தகைய துரதிஸ்டவசமான நிலைமைகள் ஏற்படாத வகையில், கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு இந்த அலுவலகத்தின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, தற்காலத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதைப் போன்று, இந்த மக்களும் இந்த நாட்டு மக்கள் எனக் கருதி, அவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய மக்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கென ஒரு விசேட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக இங்கு முன்வைக்கின்றேன்.

கடந்த கால யுத்தப் பாதிப்புகள் காரணமாகவே எமது மக்களில் பலர் – குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லுமுகமாக நுண் கடன் உட்பட நிதி நிறுவனங்களில் கடன் தொகைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இன்று அவர்கள் பெரும் கடன்காரர்களாகி, தற்கொலை செய்து கொள்கின்ற நிலை தொடர்கின்றது. மேலும், பல குடும்பங்கள் விவாகரத்தில் பிரிந்து வாழுகின்ற நிலையும் எமது பகுதிகளில் உருவாகி வருகின்றது. இவை எல்லாம் எமது சமூகத்தில் சொல்லொணா துயரங்களாகவே தொடர்கின்றன.

இத்தகைய நுண்கடன் பெற்றவர்களுக்கு ஒரு தீர்வாக இந்த அரசு ஒரு இலட்சம் ரூபாவிற்கு உட்பட்ட கடனாளிகளுக்கென ஒரு திட்டத்தினைக் கொண்டு வந்தபோதிலும், அதனது விண்ணப்பத்திற்குரிய தகைமைகள் தொடர்பில் அறிவிப்பதற்கான காலக்கெடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் அது அந்தளவிற்கு எமது மக்களுக்கு உரிய பயன்பாடுகளைத் தரவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும், மேற்படி கடன் திட்டங்கள் தொடர்பில் அரச மட்ட தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது, அது கடன் பெற்ற எமது மக்களுக்கு கடன் கொடுத்தவர்களால் பாரிய அழுத்தங்களை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொள்வதற்கும்; வழிவகுத்து வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எனவே, அந்த மக்களைப் முழுமையாக தற்போதைய கடன் தொல்லை நிலைமைகளில் இருந்து மீட்பதற்கு ஏதுவானதான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும,; இந்த அலுவலகத்தின் ஊடாக வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் இந்த அலுவலக சட்டமூலத்தில் குடும்பங்களின் தலைமைத்துவத்தினை ஏற்றிருக்கின்ற பெண்கள் தொடர்பில் விசேட செயற்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலான விடயமும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

அங்கவீனமுற்ற ஆட்கள் என இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்தகால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களாக பலநூறு பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே உரிய மருத்துவ வசதிகளைப் பெற முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு விசேட மருத்துவ வசதிகள் கொண்ட ஓர் அமைப்பு முறை ஏற்பாடு அவசியமாகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அத்துடன் இங்கே, இன்னலுற்ற ஆட்களின் குழுக்களுக்கான அல்லது, அத்தகைய இன்னலுற்ற ஆட்களின் உறவினர்களுக்கான பயனுள்ளவொரு பரிகாரத்திற்கும், நலன்களுக்குமான உரிமையை ஏற்று அங்கீகரிக்க கருதப்படுகின்ற வழிமுறைகள் பற்றி கூறப்படுகின்றது.

இன்னலுற்ற ஆட்களின் உறவினர்கள் என்கின்றபோது, அந்த உறவினர்களும் இன்னலுறுகின்றவர்களே என்ற வகையில் கணிக்கப் பெற்றே அவர்களுக்கான இழப்பீடுகள் அளிக்கப்பட வேண்டும். இங்கு ஒருவரது இறப்பினால் – கொலையினால் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டதனால் அல்லது அங்கவீனமானதால் அதற்குரிய இழப்பு என்கின்ற அடிப்படையில் ஒரு கணிப்பும், அந்த இறந்த – கொலையான அல்லது காணாமற்போகச் செய்யப்பட்ட அல்லது அங்கவீனமான நபரினால் அந்தக் குடும்பம் இழக்க நேரிட்டுள்ள வருமானம் என்ற அடிப்படையில் ஒரு கணிப்பும் கொண்டு மேற்படி இழப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த இடத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.

மேலும், இந்த அலுவலகம் காணப் போவதாகக் கூறப்படுகின்ற பரிகாரங்கள் – நலன்கள் தொடர்பான விடயங்களில் நினைவுச் சின்னங்கள் உட்பட இறந்த ஆட்களை நினைவூட்டிக் கொள்ளும் வழிவகைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இறந்தவர்களை நினைவுக் கூறத்தக்க வகையிலும், மதக் கிரியைகளை மேற்கொள்வதற்கும் ஒரு பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நான் இந்தச் சபையிலே முன்வைத்திருந்தேன். அதற்கான அனுமதி கிடைத்திருந்தும் அது இன்னும் சாத்தியமாகாத நிலை காணப்படுகின்றது. எனவே, இறுதி யுத்தம் நடைபெற்று, அதிகளவிலான உயிர்கள் பலியான இடத்தில் அந்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

யுத்த அழிவுச் சின்னங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து அகற்றுவதையும் ஒரு விடயமாக இதில் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். இதிலும்கூட தேசிய நல்லிணக்கம் பற்றி கதைக்கின்ற நீங்கள் பாரபட்சமே பார்க்கின்றீர்கள்

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் ஏற்பட்டிருந்த யுத்தப் பாதிப்பு இடங்கள் அனைத்தும் மீளப் புனரமைக்கப்பட்டு, மீளக் கட்டியெழுப்பப்பட்டு, அவை இன்று ஆக்கத்தினை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

ஆனால், எமது பகுதிகளில் மாத்திரம் அவற்றை அப்படியே வைத்து, பழைய குரோதங்களை மீண்டும் தூண்டுகின்ற வகையில் அதைப் பார்க்கின்ற பெரும்பான்மை இன மக்களுக்கு காட்சிப் படுத்தி வருகின்றீர்கள்.

மறுபக்கத்தில் எமது மக்கள் இத்தகைய செயற்பாடுகளுக்கு முன்பாக மிகவும் வேதனையடைகின்ற – உணர்வுகளால் ஒருவிதமான துன்பங்களை சுமக்கின்ற நிலையே காணப்படுகின்றது.

எனவே, இந்த விடயங்களை அவதானத்தில் கொண்டு, எவ்விதமான பாரபட்சங்களும் அற்ற வகையில், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த அலுவலகம் உருப்பெற்று, செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை முன்வைக்கின்றேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...