அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? – டக்ளஸ்; எம்.பி. கேள்வி!

Friday, August 9th, 2019

காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பில் காரசாரமாகப் பேசப்பட்டு வருவதும், பின்னர் அது மறந்துவிடுவதும், அத்தகைய ஒப்பந்தங்கள் காரணமாக பாரிய பாதிப்புகளுக்கு நாடு முகங்கொடுப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தம் இந்த நாட்டில் ஏற்படுத்திய பதற்ற நிலைக்குப் பின்னர் தற்போது இந்த இலங்கை – அமெரிக்காவிற்கிடையில் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டள்ளது எனக் கூறப்படுகின்ற சோபா – SOFA – ஒப்பந்தம் தொடர்பில் தற்போது ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் / அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பன செய்து கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல்’ பற்றிய சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில் –

இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ – Status of Forces Agreement – SOFA – – என்று இனங்காணப்படுகின்ற இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கையில் வெளிநாட்டுப் படைத்தளமொன்றுக்கு வழிவகுக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கையர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்ற நிலையில், அமெரிக்க படைத்தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் தங்களுக்குக் கிடையாது எனவும், இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே அது காணப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்தள்ளதாகக் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம் என வரும்போது, வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது எனக் கூறுவதை இந்த நாட்டு மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தென் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில், இத்தகைய அமெரிக்க இராணுவப் படைத்தளத்தினை வடக்கு – கிழக்கு பகுதிகளில் அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற பிறநாடுகளின் பிரசன்னங்கள் காரணமாகவும், அமெரிக்காவுக்கான ஏனைய நாடுகளுடனான இராணுவமயத் தேவைகள் காரணமாகவும் இலங்கையில் படைத்தளமொன்றை அமைப்பதில் அதிக பயன்கள் அமெரிக்கா அடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் தேவையை இந்த நாட்டில் வலுப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா மேற்கொள்கின்ற நடவடிக்கைளின்போது, அதற்கு வழிவிடவும், தென்பகுதியில் அதற்கான எதிர்ப்பினைச் சமாளிப்பதற்குமாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் இதற்கெனப் பலியாக்கப்படலாம் என்ற சந்தேகமே இப்போது எமது மக்களிடையே காணப்படுகின்றது.

இதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன என்றே கருத வேண்டி இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த மாதம் 05ஆம் திகதி அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் காணிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், கடற்கரைப் பகுதியினையும் கண்காணித்துள்ளனர்.

இவர்களது இந்த விஜயம் பற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டபோது, இது பற்றி தனக்குத் தெரியாது என்றும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அதேநேரம், கொழும்பிலிருந்து கிடைத்த தொலைபேசி உத்தரவுக்கு அமையவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வளவு காலமாக இழுபட்டுக் கொண்டிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தியானது அண்மையில் திடீரெனத் தொடங்கப்பட்டது. விரைவில் பலாலியிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் இப்போது கூறப்படுகின்றது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் மேம்பாடுகள் ஏற்படும் என்ற நிலையில் இதனை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலாலி வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இதுவரையில் இருந்துள்;;;ள பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக – அதாவது மேற்குப் பக்கமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் செயற்பாடானது, எமது மக்களது சொந்தக் காணிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரையும் அபகரிப்பதற்கான ஒரு திட்டம் என்பது ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், மயிலிட்டிப் பக்கமாக நுழைவாயிலைத் திருப்புவதற்கும், ஏற்கனவே மயிலிட்டிக் காணிகள் உள்ளடங்கலாக கடற்கரைப் பகுதியினை அமெரிக்கா ஆய்வு செய்திருப்பதற்கும் இடையில் சந்தேகம் எழுகின்றது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் பார்க்கின்றபோது, இலங்கையில் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கும், சிவில் பிரஜைகளுக்கும் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வியானா உடன்படிக்கையின் பிரகாரம், தூதுவராலயங்களில் நிர்வாக மற்றும் தொழில்நுட்பச் சபையினருக்கு உரித்தான வரப்பிரசாதங்கள், சலுகைகள் மற்றும் அனுமதிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் மேற்படி திட்டத்தின் ஊடாக இலங்கை அரசிடம் கோரியுள்ளதாகத் தெரிய வருகின்ற வரப்பிரசாதங்கள் வேறு வகையாகும்.

அந்த விடயங்களை இங்கே முழுமையாகக் கூறுவதற்கு நேரம் போதாது என எண்ணுகின்றேன். என்றாலும் அமெரிக்க தூதுவராலயம் கோரியுள்ள வரப்பிரசாதங்களை நன்கு ஆராய்கின்றபோது, அவர்கள் இலங்கையில் அமெரிக்கப் படைத்தளமொன்றை அமைப்பதையே கோருகின்றனர் என்பது தெளிவாகின்றது.

அத்தகைய வரப்பிரசாதங்களை வழங்குவதன் ஊடாக இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு அனைத்தும் பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படுவதுடன், இலங்கையின் அண்டைய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும், அதன் ஊடாக இந்த நாட்டுக்கு – நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்கா இலங்கையுடன் மட்டுமல்ல உலகிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்த சோபா ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளது என நீங்கள் கூறலாம்.

இந்த ஒப்பந்தம் காரணமாக அந்தந்த நாடுகளிலே இன்றைய நிலையில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாக்கி இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடிக் கொள்வதற்கு அந்த நாடுகளால் இயலாமல் இருப்பதற்குக் காரணம், இந்த சோபா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்றே கூறப்படுகின்றது.

இந்த விடயத்தினை உறுதிப்படுத்துகின்ற கட்டுரையொன்று Australian Woman  renews  plea  for  Japan’s   government  to  amend  U.S.  Forces  agreement  after  rape  ordeal’  எனும் தலைப்பில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி ஜப்பான் ரைம்ஸ் – Japan Times  பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றது.

எமது பகுதிகளிலே கிருசாந்திமார், கோணேஸ்வரிகளின் கதைகள் இன்னமும் கண்ணீருடன் நினைவு கூறப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கும் வழிவிட்டால், காலம் பூராகவும் இத்தகைய கண்ணீர்க் கதைகளையே நாங்கள் சுவாசித்துக் கொண்டிருக்க வேண்டி வரும் என்பதையே நான் இங்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கூறுகின்றேன்.

சோபா ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான டேவிட் மெக்கிரே – David Me Guire கூறியிருந்த ஒரு கருத்தின்படி, 

இந்து – பசுபிக் வலயத்தில் ஜனநாயகவாதிகள் என்ற வகையில் அமெரிக்காவினதும், இலங்கையினதும் பலம்மிக்க பங்களிப்பினைக் கட்டியெழுப்பிக் கொண்டு, எமது இரு நாட்டு மக்களினதும், வலயத்தினதும் பாதுகாப்பினை மேலும் விருத்தி செய்வதற்கே’ இந்த ஒப்பந்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது உண்மையெனில், இந்து – பசுபிக் வலயத்தின் பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற அக்கறை என்ன? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்து – பசுபிக் வலயத்தில் மாத்திரமன்றி இன்று ஆசியா முழுவதிலுமாக குறிப்பாக வர்த்தகப் பாதையினை சீனா கைப்பற்றிக் கொண்டுள்ள நிலையில், இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கும், எதிர் சவாலினை மேற்கொள்வதற்குமாக அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நாடுகளிடையே தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக இந்த சோபா ஒப்பந்தத்தைக் கொண்டு வருகின்றது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது.

எனவே, தற்போதைய நிலையில், சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைத் தேர்ந்தெடுக்கவே முயற்சிக்கின்றது என்பதே இப்போதைய தகவல்களாக உள்ளன.

இப்போதும்கூட அமெரிக்கா, வடக்கிலே முல்லைத்தீவிலிருந்து, கிழக்கிலே திருகோணமலை வரையில்  எண்ணெய் வள ஆய்வு எனக் கூறிக்கொண்டு, திருகோணமலைத் துறைமுகத்திலே கடற்படைத் தளமொன்றினை அமைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதே நேரம், பிரித்தானியாவும் திருகோணமலையிலே கடற்படைத் தளமொன்றை அமைப்பதில் ஆர்வங் கொண்டுள்ளதாக லண்டன் ரெலிகிராப் ஒரு தகவலாக அண்மையில் வெளியிட்டிருக்கின்றது.

அந்த வகையில் பூகோள நலன்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் படைத்தளமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக திருகோணமலை – காங்கேசன்துறை அடங்கலான பகுதியில் அமைய வாய்ப்பிருக்கிறதென்றே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகையதோர் ஏற்பாடு அமையுமிடத்து எமது மக்களின் வாழ்க்கை என்பது பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்பதை இந்த இடத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

அரசாங்கத்திடம் அடிக்கடி போய்த் திருட்டுத்தனமாக நிதி பெற்றுக்கொண்டு, இந்த அரசு எமது மக்களுக்கு நீதி தரவில்லை என வெறுமனே பிதற்றித் திரியாமல், இந்த விடயத்திலாவது அக்கறையுடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அப்படி இல்லாவிடில், அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை எமது மக்களை கூண்டோடு அழித்துவிடக் கூடிய நிலைமை உருவாகும் என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் உலகத்தின் போக்கையும் அதன் ஒழுங்கையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள். வாக்குப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் நேசிக்கும் குறுந்தூர பார்வையும், அரசியல் சுயலாபமும் எம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை. எமது கட்சியின் கொள்கையை எவ்வாறு உள்ளக அரசியலிலும், தேசிய அரசியலிலும்; வகுத்து செயலாற்றி வருகின்றோமோ?… அது போலவே சர்வதேச விவகாரங்கள் குறித்தும் வெளிவிவகார உறவுகள் குறித்தும், உலக ஒழுங்கின் போக்குகள் குறித்தும் எமது கட்சி உறுதியான யதார்த்தமான ஒரு கொள்கையைக் கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் நாடுகள் மீது உலக வல்லரசு நாடுகளின் உலகமயமாக்கல் திட்டம் பெரு வெள்ளம்போல் பாய்ந்து வருகின்றது. அதில் எமது இலங்கைத் தீவும் தப்பவில்லை. உலகமயமாக்கலோடு போட்டியிட்டு வெல்லும் முழுமையான திறன் எமது தேசிய பொருளாதாரத் திட்டங்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆகவே உலகத்தின் போக்கை உணர்ந்து உலகமயமாக்கலை நாம் ஓரளவிற்கு அனுசரித்துச் செல்ல வேண்டும்

அதே வேளையில் எமது நாட்டின் தேசிய சமூகப் பொருளாதரத்தையும் சமாந்தரமாக நாம் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்காலத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இலங்கைத்தீவு திகழ வேண்டும். அந்த வகையில், வெளிநாட்டு நிறுவனங்களுடன் எந்தவித உள்நோக்கமும் இன்றி செய்யப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார ஒப்பந்தங்களை நாம் வரவேகின்றோம். ஆனாலும், தமது அரசியல் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றும் கனவுகளுடன் செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தங்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மரத்திலிருந்து விழுந்த எமது மக்களை மாடுகள் ஏறி மிதித்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாடுகளிடமிருந்து எமது மக்களைக் காப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, எமது மக்களின் வாக்குகளுடன் வந்தவர்கள், பண மூட்டைகளைச் சுமக்கின்ற கழுதைகளாக மாறிவிட்டுள்ள நிலையில், எருமை மாடுகளையும் கொண்டு வந்து எமது பகுதியிலே அவிழ்த்துவிட வேண்டாம் எனக் கோரிக்ககை விடுகின்றேன்.

Related posts:

பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ்...
வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரத...

வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்?...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....