அன்று தென்னிலங்கையுடன் தேன்நிலவு – இன்று தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சல் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். –

முழுமையான உரை வருமாறு –

நாடாளுமன்ற உரை – 17.11.2023

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்றைய தினம் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்துள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எனது கருத்துக்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாடு எத்தகைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றது என்பதை யாரும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. இந்த நாடு, சூழ்ச்சிகரமான இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்த நாட்டினைப் பொறுப்பேற்க எவருமே முன்வராத நிலையில், தைரியமாக முன்வந்து இந்த நாட்டினைப் பொறுப்பேற்ற ஒரேயொரு தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள்.

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத்தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர்

ஜனாதிபதிபதி ரணில் அவர்கள்.. தென்னிலங்கை எமக்கு தீர்வு வழங்காதென்று சுயலாபக்கூச்சிலிடுவோர்

இதே ஆளுமை மிக்க ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான்காண்டுகள் தேன் நிலவு கொண்டாடி மகிழ்ந்தனர்…

எதை அவர்கள் சாதித்தனர்? இதற்கு நீங்கள் ஆயிரம் வியாக்கியானங்கள் கொடுத்தாலும் போதிய அரசியல் பலத்தோடு இருந்தும் நீங்கள் மாபெரும் வரலாற்று தவறு விட்டதை பதிவு செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் தமது உதடுகளுக்கு தாமே சீல் வைத்துக்கொண்டவர்கள்…

இன்று அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு சீல் வைத்திருக்கிறது என்று சுதந்திரமாக பேசுகிறார்கள்…

நல்ல மாற்றம்..  வரவேற்கிறேன்… சமாதானத்திற்கான கதவுகளை அரசாங்கம் இறுக மூடியிருப்பதாக சொல்கிறார்கள்…

பாவம் அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள் செவியிருந்நதும் செவிடர்கள் கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் செவியிழந்த மனிதர் முன்னே பாடலிசைத்தார்…

எத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அத்தனையும் பன்றிக்கு முன்னால் வீசப்பட்ட முத்தாக போய் விட்டன….

இலங்கை இந்திய ஒப்பந்தம்…இதை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சியின்…காலில் விழுந்து இடுப்பை பிடித்து மெல்ல எழுந்து கழுத்தை நெரிக்கும் அந்த வாத்தியார்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவராகவே பார்க்கப்படுகிறார்… தென்னிலங்கை இறுக…பூட்டி வைத்திருக்காம்… ஒப்புக்கொள்ளலாம் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறு…

சந்திரிகா அம்மையார் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட பல மடங்கு முன்னேற்றகரமான தீர்வை முன் வைத்த போது

இந்த வாத்தியார் இன்று தொத்தி ஏறியிருக்கும் கட்சி அன்று அதை எதிர்த்து கொழும்பில் ஊர்வலம் போனது. எந்த அடிப்படையில் போனீர்கள்?..

அப்போது இந்த வாத்தியார் தன் கண்களுக்கும் காதுகளுக்கும் சீல் வைத்துக்கொண்டிருந்தாரா?..

அல்லது கட்டாயப்பயிற்சியில் விறகுக்கட்டை ஏந்திக்கொண்டிருந்தாரா…

ஜனாதிபதி அவர்கள் மக்களுடன் பேசி பிரச்சனைகளைத் தீர்க்க தயாராக இருக்கின்றார்… ஆகையால் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்…

எனவே, இந்த நாட்டினை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வழிமுறைகளையும், எமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையினை பேணிப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளையும் நன்கு அறிந்தவரும் அவரேயாவார்.

அந்த வகையில்தான் 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினை அவர் முன்வைத்திருக்கின்றார் என்பதை நான் இங்கு கூறியே ஆக வேண்டும்.

எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது, இன்னமும் முழுமையான சுமுக நிலைக்கு வந்துவிடவில்லை. அதனை சுமுக நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நிலையில் எமது தேசிய உற்பத்திகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதே நேரம், அரசாங்கத்தை நம்பி வாழ்கின்ற, அரச உதவிகளை, மானியங்களை, நிவாரணங்களைப் பெறுகின்ற மக்களை கைவிடவும் முடியாது. பல்துறை சார்ந்த பணியாளர்களை பேண வேண்டும். இத்தகைய நானாவித விடயங்களையும் தூர நோக்குடன் சிந்தித்து இந்த வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்துள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு எனதும், எனது மக்கள் சார்ந்ததுமான நன்றியினை இந்த சபையிலே  தெரிவித்தக் கொள்கின்றேன்.

அந்த வகையில், அரச ஊழியர்களது வாழ்க்கைச் செலவின கொடுப்பணவாது, 10,000.00 ரூபாவினாலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கான கொடுப்பணவானது 2,500.00 ரூபாவினாலும், மாற்று வலு கொண்டவர்களுக்கான மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பணவானது 2,500.00 ரூபாவினாலும், மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பணவானது 1,000.00 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறுதல் (அஸ்வெசும) திட்டத்திற்கென முன்பு ஒதுக்கப்பட்ட 60 பில்லியன் ரூபாவினை 183 பில்லியன் ரூபா வரையிலும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் பொருளாதார நிலை  காரணமாக, சில வரையறைகளுக்கு உட்படுத்தப்படிருந்த அரச பணியாளர்களுக்கான அனர்த்த கடன் கொடுப்பனவானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழமைப் போல் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலைப் பொறுத்தவரையில், வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியனைக் கொண்டு நாம் வடக்கின் கடற்றொழில் துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், அதன் முகாமைத்துவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு, போசாக்கு உணவினை மேம்படுத்துவதற்கு, நன்னீர் வேளாண்மையினை அனைத்து நீர் நிலைகளையும் பயன்படுத்தி மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளோம். இவ்விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களை கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான விவாத உரையின்போது தரலாம் என நினைக்கின்றேன்.

எமது பகுதியினைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சினை என்பது நீண்டகால பிரச்சினையாகவே தொடர்ந்து வருகின்றது. இதற்கொரு தீர்வாக நாம் இரணைமடு குளத்தின் உயரத்தினை அதிகரித்து, கிளிநொச்சி மாவட்ட மக்களது குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர், கடலுக்கு விடப்படுகின்ற எஞ்சிய நீரை யாழ்ப்பாண மக்களது குடிநீருக்கென பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம். எனினும், சில சுயலாப அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக அத்திட்டமானது கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது 

அதேநேரம், மேலும் சில திட்டங்களையும் நாம் முன்வதை;திருந்தோம். குறிப்பாக, பாலி ஆற்றுத் திட்டம், பூநகரி குளத் திட்டம் என்பனவும் அவற்றில் அடங்கும். இதில் ஒரு திட்டமான பாலி ஆற்றுத் திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்கென இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், மகா நகரங்களை அண்டியதும், சுற்றுலா பயண நகரங்களை அண்டியதுமான ஸ்ரேசன் பிளாசா எனும் ரயில் நிலைய நகரங்களில் யாழ்ப்பாணமும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன். புதிய முதலீட்டு நகரங்களில் யாழ்;ப்பாண நகரமும் இணைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய முதலீட்டாளர்களுடன் இணைந்து, திருகோணமலையை நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எமது நாட்டை உற்பத்தி பொருளாதாரம் நோக்கிக் கொண்டு செல்வதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கனெ சுமார் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

அந்த வகையில் இந்த நாட்டுக்கு பெரும் வருவாயினையும், அந்நியச் செலாவணியினையும், நாட்டு மக்களின் போசாக்கு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினையும் ஆற்றி வருகின்ற கடற்றொழிலாளர்களது கடற்றொழில் முயற்சிகளையும் இதனுடன் இணைத்து முன்னெடுப்பதற்கான திட்டமும் எம்மிடம் உள்ளது என்பதையும், இது குறித்த முன்மொழிவினை நான் மேற்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் கையளித்துள்ளேன் என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், கைத்தொழில் துறை தொடர்பில் தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரமானது 4 மில்லியன் ரூபாவுக்குக் குறைந்த கைத்தொழில் துறை சார்ந்த முயற்சிகளை முன்னெடுப்பது என்ற நிலைமையை மாற்றி, வருடாந்த சுற்றுத் தொகை 600 மில்லியன் ரூபா வரையில் அதனை அதிகரித்திருப்பது, மாகாண மட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவனங்களை அமைப்பது போன்ற விடயங்கள் வரவேற்கத் தக்கதாகும்.

விவசாயத்துறை வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அரச விவசாய காணி நிலங்களை விவசாய மக்களுக்கே உரித்தாக்கிக் கொடுப்பது, கல்வியினை இலக்காகக் கொண்ட விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவது, கமநல சேவைகள் நிலையங்களை விவசாய நவீனத்துவ கேந்திர நிலையங்களாக மாற்றி அமைப்பது, குளங்களை புனரமைப்புச் செய்தல் போன்ற ஏற்பாடுகளும், தனியார்த் துறையினருடன் இணைந்த பாலுற்பத்தி மேம்பாடு போன்ற  ஏற்பாடுகளும் எமது மக்களின் வாழ்வாதாரங்களை அதிகிரித்துக் கொள்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

காணி, நிலமற்ற மக்களாகக் கருதப்படுகின்ற மலையக மக்களுக்கு காணி உரிமங்களை வழங்குவதற்கென 4 பில்லியன் ரூபாவினை ஒதுக்கி, அம்களுக்கும் காணி, நிலங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

மேலும், மலையகப் பகுதிகளை இலக்காகக் கொண்ட ‘பத்து  வருட மலையகத்’ திட்டம் (கந்துகர தசகய), நிலச் சக்தி திட்டம் (பிம்சவிய), நகர வீட்டு உரிமம் திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், குடிநீர்த் திட்டங்களுக்கான முன்னுரிமை என அனைத்துத் திட்டங்களும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

கல்வித் துறையினைப் பொறுத்தவரையில், முழுமையான கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலமான உயர் கல்வியில் சித்திடைந்த அனைத்து மாணவர்களுக்குமான பல்கலைக்கழக வாய்ப்பு, தற்போதைய தொழில்நுட்பத் துறையினை கருத்தில் கொண்டதான, சீத்தாவக்க விஞ்ஞான, தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழான குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் போன்ற புதிய பல்கலைக்கழகங்களை அமைத்தல், தனியார் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றியமைத்தல், 19 கல்வியியற் கல்லூரிகளை இணைத்த கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் அமைத்தல் மற்றும் மகாண சபைகளுக்கும் பல்கலைக்கழகங்களை அமைக்கின்ற அதிகாரத்தினை வழங்குதல், இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஐ. ஐ. ரி. பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில் கண்டி நகரில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை அமைத்தல், தற்போது செயற்படுகின்ற அரச பல்கலைக்கழகங்களை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மேம்படுத்தல், அரச சார்பற்ற பலக்லைகழகங்களின் கண்காணிப்பிற்கென வலுவான சட்டதிட்டங்களை வகுத்தல் மற்றும் அங்கு பயில்கின்ற மாணவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குதல், தேசிய உயர் கல்வி ஆணைக்குழு அமைத்தல், தேசிய நிபுணத்துவ ஆணைக்குழு அமைத்தல், நாட்டு மக்களின் ஆங்கில அறிவினை விரிவாக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள், அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுக்கென பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் போன்ற ஏற்பாடுகள் பல முன்மொழியப்பட்டுள்ளன.

அதேபோன்று, சுகாதாரத்துறை சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள், விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த நவீனத்துவ சபைகளினை அமைத்தல், இந்த நாட்டில் தற்போதைக்கு பின்னடைவினைக் கண்டுள்ள கட்டிட நிர்மாணத்துறை சார்ந்த மேம்பாட்டு ஏற்பாடுகள், எமது நாட்டின் தந்திரோபாய அமைவினை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி முன்னெடுப்புகள், மகளிர் தொடர்பிலான வலுவாக்க ஏற்பாடுகள், இலங்கையின் கைத்தறிக் கைத்தொழில் தொடர்பிலான முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு நடவடிக்கைகளுக்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமற் ஆக்கப்பட்டோர் தெடர்பில் இதுவரையில்  அவர்களது உறவினர்களில் 181 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 170 உறவினர்களுக்கு இந்த வருடத்தில் இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ள நிலையில், ஏனையோருக்கும் இழப்பீடுகளை வழங்குவதைத் துரிதப்படுத்தும் வகையில் 1,000.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி நகரினை சுற்றுலாத்துறை சார்ந்த நகரமாக அபிவிருத்தி செய்வதற்கென 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கீழ் மல்வத்து ஒயா திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மாகாண மட்டத்தில் கிரிக்கெற் விளையாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும், ஏனைய துறைகள் பல சார்ந்த முன்னெடுப்புகள் தொடர்பிலும் மிகுவான அக்கறையினை இந்த வரவு – செலவுத் திட்டம் செலுத்தியிருப்பது தொடர்பில் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களையும் இந்த நாட்டின் ஒருமித்த மக்களாகக் கருதி இந்த அரசாங்கம் தனது வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்திருப்பது வெகுத் தெளிவாக விளங்குகின்றது.

இத்தகைய நிலையில், இந்த அரசாங்கம் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அதாவது, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசாங்கங்கள் இன பாகுபாடுகளையே முன்னெடுத்து வருவதாக ஒரு சிலர் தங்களது சயலாப அரசியலுக்காக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய அரசாங்கங்கள் இத்தகையதொரு மனோ நிலையில் செயற்பட்டு வந்திருந்ததை நானே பல தடவைகள் பல இடங்களிலும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறேன். அதுதான் உண்மை.

ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கங்கள் இத்தகைய மனோ நிலையில் இல்லாமல், இனங்களிடையே ஐக்கியத்திற்கான வழிமுறைகளை முன்னிட்டு, செயற்பட்டு வந்திருப்பதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த போதிலும், எமது தரப்பில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எம்மைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை என்பதே எமது வரலாற்றின் உண்மை நிலைமையாகும்.

இதைவிடுத்து சுயலாப அரசியல் நலன்களுக்காக தொடர்ந்தும் அரசாங்கங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.

எந்தத் தரப்பிலும் ஒரு சில புல்லுருவிகள் இல்லாமல் இல்லை. அதற்காக ஒட்டுமொத்த தரப்பினர் மீதும் தொடர்ந்து பலிபோட்டுக் கொண்டிருப்பது மானுட தர்மத்திற்கே உகந்த செயல் கிடையாது.

கிழக்கு மாகாணத்திலே மயிலத்தமடு பகுதியில் உண்மையிலேயே கால்நடைகள் வளர்ப்போருக்கு மேய்ச்சல் தரை தொரடர்பில் பிரச்சினை இருந்து வருகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பாக நான் நாடாளுமன்றத்திலே பிரச்சினை எழுப்பியிருக்கிறேன். இந்த விடயம் தொடர்பில் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கiயினை எடுத்துள்ளார். அதனை செயற்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தனது அவதானத்தினை மீளவும் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...