அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, December 7th, 2022

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முழுமையான உரை –

இன்றைய தினம், 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்,  வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் மூன்றாம் மதிப்பீட்டில், கடற்றொழில் அமைச்சு தொடர்பில் அதன் அமைச்சர் என்ற வகையில், எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடலளவு பிரச்சினைகள் நாளாந்தம் தோன்றினாலும், பிரச்சினைகளின் முன்பாக தீர்வுகளைத் தேடிக் கொள்வதே எமது செயற்பாட்டுக் கொள்கையாக இருக்கின்றது. அன்றி, தீர்வுகளுக்கு முன்பாக பிரச்சினைகளைத் தேடிக் கொள்கின்ற கொள்கை எமக்கு இல்லை என்பதால், எங்களது நடைமுறைச் சாத்தியமான, தூர நோக்கு கொண்ட அரசியல் செயற்பாடுகளைப் போன்றே, எமது அமைச்சு சார்ந்த விடயங்களையும் நாம் வினைத்திறன் மிக்கதாக முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில், உணவுப் பாதுகாப்பு, மக்களின் போசாக்கு மேம்பாடு, வாழ்வாதாரங்கள் விருத்தி, அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டல் போன்ற இலக்குகளை முன்வைத்து, கடற்றொழில் அமைச்சின் மூலமான பங்களிப்பினை உச்ச அளவில் அதிகரிப்பதே எமது முக்கிய நோக்கமாகவுள்ளதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உங்களுக்குத் தெரியும். புயல்கள், கோவிட் – 19, கொரோனா அனர்த்தம், பேர்ள் எக்ஸ்பிரஸ்; கப்பல் விபத்து, எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் இன்மை, எரிபொருள் விலையேற்றம், காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏனையத் துறைகளைப்போல் இந்த நாட்டில் கடற்றொழில் துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகள் அதிகமாகும்.

இத்தகைய நெருக்கடிகள் மிகுந்திருந்த காலகட்டங்களில் எமது கடற்றொழிலாளர்கள், வாழ்க்கையில் விரக்தியடைந்து விடக் கூடாது என்பதாலும், கடற்றொழிலைத் தொடர வேண்டும் என்பதற்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எந்த வகையிலேனும் எட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஓர் இறுக்கமான சூழலிலும்கூட, தென் பகுதி முதற்கொண்டு, மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என அனைத்துப் பகுதிகளிலுமுள்ள கடற்றொழில் பகுதிகளுக்கு நேரில் சென்று, நான் அம்மக்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடியிருந்தேன். இந்த செயற்பாட்டினை நான் இன்றும்கூட தொடர்ந்து முன்னெடுத்தும் வருகின்றேன்.

கடற்றொழில் மற்றும் நன்னீர் உற்பத்திகளைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான 09 மாதங்களில் 290,640 மெற்றிக் தொன் உற்பத்திகளை, இடர் மிகுந்த இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ள இயலுமாக இருந்துள்ளது.

இதில், ஆழ்கடல் கடற்றொழில் உற்பத்தியானது 96,080 மெற்றிக் தொன்களாகும். இது, மொத்த மீனின உற்பத்தியில் 33.1 வீதமாகும். இது, குறிப்பிடத்தக்க வளர்ச்சி வீதம் அல்ல என்கின்ற போதிலும், ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்யத்தக்க நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதால், 2023ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இதில் நாம் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அந்தவகையில், கடற்றொழில் துறைமுகங்களின் அபிவிருத்தி தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்தைக் கொண்டுள்ளோம். தற்போதைய நிலையில் 23 கடற்றொழில் துறைமுகங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், அநேகமான கடற்றொழில் துறைமுகங்கள், தூர நோக்கற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதை, இன்று அத்துறைமுகங்கள் எதிர்கொள்கின்ற இயற்கை ரீதியிலான பிரச்சினைகளையும் முன்வைத்து, அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக, கடற்றொழில் துறைமுகங்களின் நுழைவாயில் முதற்கொண்டு, அதனது தொட்டி (பேசின்) வரையில் அடிக்கடி குவிகின்ற மணல் காரணமாக கடற்றொழில் துறையானது பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது. அந்தவகையில், இத்தகைய தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, திறைசேரிக்கு செலவுச் சுமை ஏற்படாத வகையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், வடக்கில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் புதிய கடற்றொழில் துறைமுகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் நாட்டில் தற்போது 15 நங்கூரமிடும் தளங்களும், கடலுணவு அறுவடைகளைத் தரையிறக்கம் செய்கின்ற 912 தளங்களும் செயற்பட்டு வருகின்றன. இவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரப் பிரச்சினை என்பது இன்று எமது நாட்டை மட்டுமல்ல, உலக நாடுகள் பலதையும் ஆட்கொண்டு வருகின்றது. அந்த வகையில் பல நாடுகள் மீனின உற்பத்திகளை இறக்குமதி செய்வதில் பின்வாங்குகின்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளதால், எமது ஏற்றுமதியானது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்கியிருக்கின்றது.

இதன் மறுபக்கமானது, இன்று தேசிய சந்தையில் மீனினங்களின் விலையில் வீழ்ச்சி நிலையினைக் கொண்டு வந்திருக்கின்றது. இது, நுகர்வோருக்கு சாதகமாக இருக்கின்றது. இந்த ஆண்டு  எமது நாட்டில் தனிநபரது மீனின நுகர்வானது நாளொன்றுக்கு 31.3 வீதத்தை எட்டியிருக்கின்றது. என்ற போதிலும், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் நிலையினையும் உருவாக்கியிருக்கின்றது. எனவே, இரு தரப்பினருக்கும் நியாயம் கிட்டும் வகையில் நாம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடற்கரையினை அண்டிய கடற்பரப்பிலான கடற்றொழிலில் இந்த வருட 09 மாதங்களில் 109,520 மெற்றிக் தொன் அறுவடை கிடைத்துள்ளது. இது, மொத்த மீனின உற்பத்தியில் 37.7 வீதமாகும். அதே நேரம், நன்னீர் வேளாண்மையில் இந்த வருட 09 மாதங்களில் 85,040 மெற்றிக் தொன் அறுவடை எட்டப்பட்டுள்ளது. மொத்த மீனின உற்பத்தியில் இது, 29.3 வீதமாகும்.

கடற்கரையினை அண்டிய பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிப்பதற்கான விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளுக்கமைவாக நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், ஒழுங்கான முகாமைத்துவம் இன்மை, அதிகளவிலான கடற்றொழில் ஈடுபாடு, மீனினங்களின் வாழ்விடங்களை அழித்தல், உலக வெப்பமயமாக்கல், கழிவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் உலகின் இன்றைய கடற்றொழில் துறையானது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கூறுகின்றது.

இத்தகையதொரு நிலையில், ஆழ்கடல் நோக்கிய கடற்றொழிலை நாம் மேலும் ஊக்குவித்து வருவதுடன்,  கரையை அண்டிய பகுதிகளில் நிலையான மற்றும் மிதக்கும் கூடுகளினால் ஆன மீனின வளர்ப்பு தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இம்முறைமையானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த இலக்காக நாம் மேல் மாகாணத்தை அதாவது களணி ஆறு, மற்றும் மொரட்டுவ பொல்கொட நீர்த்தேக்கம் சார்ந்த கடற் பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இச் செயற்திட்டத்தை தென்பகுதி மற்றும் வடமேல் மாகாணத்தை நோக்கியும் அடுத்த ஆண்டுக்குள் பரவலாக்க எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம், மீனின உற்பத்திப் பெருக்கம் கருதி, செயற்கைப் பவளப் பாறைகைளை உருவாக்கும் வகையில், பயன்பாட்டுக்கு உதவாத பழைய பஸ்கள், ரெயில் பெட்டிகள்ஈ படகுகள், கொங்கீறிட் கட்டமைப்புகள் போன்றவற்றை கடலில் இட்டும் வருகின்றோம்.

கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண் கைத்தொழிலில் எரிபொருளின் விலையேற்றம் மற்றும் இதர உள்ளீடுகளின் விலையேற்றம் என்பன குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உண்டு பண்ணி வருவதை மறுக்க முடியாது. தற்போதைய நிலையில்  எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்ற போதிலும் அதன் விலை அதிகரிப்பானது ஒரு பிரச்சினையாக உள்ளது. மின் கட்டண அதிகரிப்பும் கடற்றொழில் கைத்தொழிலுக்கு பாதிப்பினை உண்டு பண்ணுகின்ற நிலையும் அத்துடன் காணப்படுகின்றது. மின் அலகுகளின் விலையினை கடற்றொழில் சார்ந்து குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன், ஐஸ் உற்பத்தியின் விலையினைக் குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றோம்.

கடற்றொழிலுக்கான எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும், உலகளாவிய ரீதியில் இது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

தற்போது கடற்றொழிலுக்கான எரிபொருளை எமது கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் முறையாக அனைத்துக் கடற்றொழிலாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் கடற்றொழில் துறைமுகங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் தனியார்த்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலமாகப் பகிர்ந்து வருகின்றன.

அதேநேரம் நாம் மாற்று வலுச் சக்திகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமது நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்ற வகையிலும், எரிபொருளை மாத்திரம் நம்பியிராத மாற்று வலுச் சக்தியினை அறிமுகஞ் செய்து, பரவலாக்குகின்ற வகையிலும் இத்தகைய முயற்சிகள் அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மின் கலத்தால் இயங்கத்தக்க இந்த புத்தாக்க இயந்திரத்தை அடுத்த வருடத்தில் அறிமுகஞ் செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்

அந்த வகையில் 3 குதிரை வலு கொண்ட இயந்திரத்திற்கான மின் கலத்திற்கு மின் நிரப்பலுக்கு 86 ரூபாவே செலவாகும் வகையில் 100 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் செல்லத்தக்க மின்கலத்தால் ஆன இயந்திரங்களை நாங்கள் பரீட்சித்துப் பார்த்துள்ளோம். இந்த புத்தாக்க இயந்திரம் பொருத்தப்பட்ட படகினை கடந்த 04ஆம் திகதி நானே நேரில் சென்று, துறை சார்ந்த அதிகாரிகளுடன் பானந்துறை கடற்பரப்பில் வெள்ளோட்டம் இட்டு ஆய்வினை மேற்கொண்டேன். கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தூர எல்லைகளுக்கேற்ப இயந்தரத்தின் குதிரை வலுச் சக்தியை அதிகரிக்க முடியும். இதனை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு விடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த இயந்திரமானது, மின்கலத்தையும், அதே நேரம் எரிபொருளையும் பயன்படுத்தக்கது. இந்த இயந்திரத்தினை மின்கலம் மட்டுமன்றி, சூரிய மின்கலம், காற்றலை மின் கலம் போன்றவற்றாலும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, எரிபொருள் பாவனையை அடியோடு இல்லாதொழிக்கின்ற இந்த மின் கல இயந்திரமானது, எமது கடற்றொழிலாளர்களுக்கு பாரிய செலவினத்தை மீதப்படுத்துவதுடன். எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்றொழிலுக்கு செல்லாமல் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும், மீனினங்களின் விலை அதிகரிப்பு காரணமாக உரிய போசாக்கினை பெற இயலாதுள்ள நுகர்வோருக்கும் இது பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக, குதிரை வலுச் சக்திகளுக்கேற்ப மின்கலத்திற்கான மின் நிரப்பலுக்கு சுமார் 86 ரூபா முதல் ஆகக் கூடியது 800 ரூபா வரையிலே செலவாகும். இதன் மூலம் சுமார் 200, 300 கிலோ மீற்றர் வரையில் சென்று வர முடியும். இதையே நாங்கள் எரிபொருள் மூலம் செயற்படுத்துகின்றபோது 5000 ரூபா முதல் 25,000 ரூபா வரையில் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மின்கல இயந்திரமானது தற்போது சிறிய வகையிலான கடற்றொழில் படகுகளுக்கு எனத் தயாரிக்கப்படவுள்ள நிலையில், பாரிய கடற்றொழில் படகுகளுக்கெனவும் அதன் கொள்ளவுக்கு ஏற்ப இயந்திரங்களைத் தயாரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனையும் விரைவில் அறிமுகஞ் செய்யவுள்ளோம். எமது நாட்டில் சுமார் 27 ஆயிரம் சிறிய கடற்றொழில் படகுகளும், சுமார் 5000 பலநாட் களங்களும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியினைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயந்திரத்தின் அறிமுகத்தின் மூலம் எமது தேசிய உற்பத்தியினை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்பது இன்னுமொரு முக்கிய விடயமாகும்.

அதேநேரம், எமது கடல் வளங்களுக்கும் சூழலுக்கும் பாதிப்புக்களை உண்டு பண்ணுகின்ற கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்துறை செயற்பாடுகளை ஆய்வுகளின் மூலமாகவும், நடைமுறை ரீதியிலும் இனங்கண்டு, அவற்றைத் தடை செய்து வருகின்றோம். ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண் செயற்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகiயும் தொடர்ந்து நாம் மேற்கொண்டு வருகின்றோம். இதன் ஊடாக ஒழுங்கமைந்த முகாமைத்துவத்தை உருவாக்குவது எமது நோக்கமாகும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம், எமது கடற்றொழில் துறைக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பெரும் சோதனையாக அமைந்துவிட்டுள்ள இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத்தாண்டியதும், சட்ட விரோதமானதுமான செயற்பாடுகள் தொடரவே செய்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில் இயன்றளவில் சட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். நான் ஆரம்பத்திலேயே கூறியது போல், இராஜதந்திர மட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தல், அவர்களது சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், இரு நாடுகளும் இணைந்த கடல் வள ஆய்வுகளை அப்பகுதிகளில் ஆரம்பித்தல், கடல் வள முகாமைத்துவத்தை ஏற்படுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சட்ட ரீதியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளால் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளை தேர்ந்தெடுக்கப்படுகின்ற எமது கடற்றொழிலார்களுக்கு, அப்படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி, சட்டரீதியிலான தொழில் முறைமைக்கென வழங்கும் திட்டமும் இருக்கின்றது. இதன் பயனாக இராட்சத இந்திய இழுவை மடி வலைப்படகுகளுக்கு முகங்கொடுத்து எமது கடற்றொழிலாளர்களாலும் பயமின்றி கடற்றொழிலில் ஈடுபடக்கூடியதொரு சூழலை உருவாக்குவதே கடற்றொழில் அமைச்சின் நோக்கமாகும். அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பது என்பார்கள். அதைப் போன்ற ஒரு செயற்பாடுதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லைத்தாண்டியதும், சட்டவிரோமானதுமான செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளம் பாரியளவில் அழிக்கப்படுவதுடன், எமது கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் சொத்துக்களும் பாதிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ்விடயம் குறித்து நாம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் காரணமாக நாளடைவில் இப் பிரச்சினையிலிருந்து போதியளவு எம்மால் மீள முடியுமென எதிர்பார்க்கின்றேன். இதைவிடுத்து, இப்பிரச்சினை குறித்து அரசியல் இலாபம் கருதி,  வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை.

ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள், எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம். அந்த நிதியினை மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கும்,  நாம் தீர்மாளித்துள்ளோம். அத்துடன், அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இப்பிரச்சினை தொடர்பில் இரு தரப்பு இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகளை நாம் இன்னமும் கைவிடவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற தொழில் ரீதியிலான பிரச்சினைகள், கடல் வளங்கள் எதிர்கொள்கின்ற பாதிப்புகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கென இந்தியாவின் புதுடில்லியில் கூடிய 40 நாடுகளைச் சேர்ந்த கடற்றொழிலாள பிரதிநிதிகளைக் கொண்டே சர்வதேச கடற்றொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே நாட்டிலிருந்தே இன்று எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளத்திற்கும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதென்பது ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையாகும்.

நன்னீர் வேளாண்மையைப் பொறுத்த வரையில், இத்துறையின் செயற்பாடுகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தற்போதைய நன்னீர் சார்ந்த மீனின உற்பத்திகளின் தொகையை மேலும் பல மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. தற்போது நன்னீர் மீனின மற்றும் இறால் குஞ்சுகளுக்கான கேள்வி அதிகம் என்றாலும், அதனை போதியளவில் பூர்த்தி செய்ய இயலாத வகையில் நிதி நிலைமை காணப்பட்டது. இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை கருதி அடுத்தடுத்த கட்டங்களில் நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியும் என நம்புகின்றேன்.

நன்னீர் மீனின குஞ்சுகள் மட்டுமன்றி, கடலட்டை குஞ்சுகள், இறால் குஞ்சுகள,; பாலை, கொடுவா உள்ளிட்ட மீனினக் குஞ்சுகள் போன்றவற்றை அதிகளவில் உற்பத்தி செய்கின்ற நோக்கில் கருத்தரிப்பு நிலையங்களையும், வளர்ப்பு நிலையங்களையும் நாம் அதிகரித்து வருகின்றோம். அடுத்த வருடத்தில் இத்துறை சார்ந்து போதிய வளர்ச்சியை மேலும் எட்ட முடியும்.

அநேகமாக கமத்தொழில் திணைக்களம். மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்களின் கீழ் வருகின்ற நீர் நிலைகளையும், அனைத்து களப்புகளையும் நாம் உற்பத்தி இடங்களாகக் கொண்டு, இத்துறையினை பரவலாக மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போதும் பாரிய குளங்கள், நடுத்தரக் குளங்கள், பருவகால நீர்நிலைகள் பலவற்றிலும் நாடளாவிய ரீதியில் நாம் மீனின மற்றும் இறால் குஞ்சுகளை வைப்பிலிட்டு வருகின்றோம். அவை தொடர்பான விபரங்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தபாலில் நாம் அனுப்பி வருகின்றோம். அவர்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் இது தொடர்பில் கோரியுள்ளோம்.

பழையன கழிதல், புதியன புகுதல் என்ற அடிப்படையில், எமது வளங்களைப் பாதுகாத்து, சூழலைப் பாதுகாத்து, கடல்சார்ந்த மற்றும் நன்னீர் சார்ந்த உற்பத்திகளை நாம் இந்த நாட்டிலே அனைத்து வளமிக்கப் பகுதிகளிலும் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் உற்பத்தியார்கள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், தரமான உற்பத்திகளின் பெருக்கத்திற்கும் அடித்தாளமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வளங்கள் அடிப்படையில் கடலட்டை உற்பத்தி கிராமங்கள் மற்றும் உற்பத்தித் தொகுதிகள், கடல் பாசி வளர்ப்பு, பாலை, கொடுவா உள்ளிட்ட மீனின வளர்ப்பு, இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் வெற்றியளித்து வருகின்ற நிலையில், தாங்களும் செய்யாமல், பிறரையும் செய்ய விடாமல் காலகாலமாக செயற்பட்டு வருகின்ற வெற்று வாய்ப்பேச்சு அரசியல் இதன் பின்னணியில் தவழ்ந்துக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. போலி தமிழ்த் தேசியத்தின் பேரில் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே தொல்லியல்களாக மீதப்படுத்த விரும்புகின்ற இத்தகைய சுயலாப அரசியல் கலாசாரமானது எமது மக்களை எந்த வழியிலும் தலைதூக்க விட விரும்புவதில்லை என்ற விடயமே இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதையும் இங்கு நான் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

அதே நேரம், வடக்கில் சீனா கால் பதித்து, கடலட்டைப் பண்ணைகளை கைப்பற்றிக் கொண்டதாக ஒரு பித்தலாட்ட கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வடக்கில், யாழ்ப்பாணம் அரியாலை, பூம்புகார் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் உருவாக்கிய அரசாங்கம் எனக் கூறிக் கொண்ட அரசாங்கத்தின் காலத்தில் சீன நாட்டைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு வழங்கிய கடலட்டை குஞ்சு பொறிக்கும் நிலையத்தைத் தவிர, இதுவரையில் சீன நாட்டவர்களால் வேறு எந்தவொரு கடலட்டைப் பண்ணையும் செயற்படுத்தப்படவில்லை.

தற்போது சீன முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய முதலீட்டாளர்களும் கடலட்டைப் பண்ணைகளை ஆரம்பிக்கும் நோக்கில் எம்மை அணுகுகின்றனர். கடலட்டைப் பண்ணைகளை அன்றி, கடலட்டை இனப் பெருக்க, கருத்தரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதென்றால் அது குறித்து ஆலோசிக்கலாம் என அவர்களிடம் கூறப்பட்டதே தவிர, இவர்களில் எவருக்கும் அதற்கான அனுமதியை கடற்றொழில் அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அடுத்து, வடக்கிலுள்ள காணிகளை கடற்றொழில் அமைச்சும் அபகரித்து வருவதாக உளறுவாய் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்றனர். கடற்றொழில் அமைச்சானது, மேற்படி தொழில் முயற்சிகளில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள, அந்தந்த பிரதேசங்களைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கி வருகின்றது என்பதை இவர்கள் முதலில் அந்தந்த இடங்களுக்குச் சென்று அறிந்துவிட்டு, கதைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், கடல் சார்ந்த மற்றும் நன்னீர் சார்ந்த உற்பத்திகளின் அபிவிருத்தி மேம்பாடு தொடர்பில் நாம் இந்தியா, இந்தோனீசியா, பங்களாதேஸ், தாய்லாந்து, கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

ஏற்றுமதி இலக்கு கொண்ட கடலுணவு உற்பத்திகளைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு, முதல் 09 மாதங்களில் இறால் ஏற்றுமதியின் மூலம், 10,960.2 மில்லியன் ரூபாவும், நண்டு ஏற்றுமதியின் மூலம் 5,426.6 மில்லியன் ரூபாவும், கடலட்டை ஏற்றுமதியின் மூலம் 2,527.8 மில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஏற்றுமதியாளர்கள் மீனினங்களை கொள்வனவு செய்கின்றபோது தேசிய விலைகளில் கொள்வனவு செய்வதனால், மீனின உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமையும் காணப்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி பெறுமதிக்கொப்ப தேசிய ரீதியில் மீனினங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், இது தொடர்பில் விரைவில் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏற்றுமதியினை அதிகரிப்பது தொடர்பில் நாம் அவதானமெடுத்து செயற்பட்டு வருகின்ற அதேவேளை, கடலுணவு சார்ந்த இறக்குமதிகளைக் குறைப்பது தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டே வருகின்றோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு, முதல் 09 மாதங்களில் கருவாடு, உலர் நெத்தலி, மாசி, ரின் மீன், மீனின உணவுகள்,  மீனினங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கென 16,336.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

 இத்தொகையானது 2019ஆம் ஆண்டு 38,952 மில்லியன் ரூபாவாக இருந்து, அடுத்தடுத்த  வருடங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு 28,847.7 மில்லியன் ரூபாவாகி, கடந்த வருடம் 18,808.5 மில்லியன் ரூபாவாகக் கொண்டு வரப்பட்டது.

இத்தொகையினை மேலும் நாம் குறைக்கும் வகையில் தரமானதும், சுகாதாரம் மிக்கதுமாக தேசிய உற்பத்திகளை ஊக்குவித்து வருகின்றோம். அந்த வகையில், தேசிய ரின் மீன் உற்பத்தியும் அடங்குகிறது. அதேநேரம், இறக்குமதி ரின் மீன்களின் இறக்குமதி வரியினை 100 ரூபாவிலிருந்து 200 ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். மீனின உணவுகளின் உற்பத்தியினை தேசிய ரீதியில் அதிகரிப்பதற்கும் தனியார்த் துறையுடன் இணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். கருவாடு, மாசி போன்ற உற்பத்திகளை தரத்துடன் கூடிய உற்பத்திகளாக, அதிகளவில் முன்னெடுப்பதற்கும் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

அதேநேரம், பெறுமதி சேர் கடலுணவு உற்பத்திகள் குறித்தும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளை அகற்றும் வகையில் புத்தாக்க முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக தற்போது ஆழ்கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற ஐஸ் கட்டிகளின் எண்ணிக்கையினை குறைத்து, அதன் மூலம் உற்பத்திச் செலவினை குறைக்கும் நோக்கத்துடனும், hழிலுக்கு கொண்டு செல்லப்படுகின்ற ஐஸ் கட்டிகளின் குளிர்த் தன்மையை தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் புதிய இயந்திர பொறிமுறையொன்றை அறிமுகஞ் செய்ய உள்ளோம். இந்த இயந்திரம் பொருத்தப்பட்ட பலநாட் களமானது பரீட்சார்த்தமாக விரைவில் ஆழ்கடலுக்கு விடப்படவுள்ளது.

மேலும், கடற்றொழிலின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி கருதி, கடற்றொழில் முகாமைத்துவம், களப்பு கட்டமைப்புகளின் பாதுகாப்பு, மாறுபடுகின்ற கால நிலைகளுக்கு தாக்குப் பிடிக்கத்தக்க புதிய சிறு கடற்றொழில் படகினை அறிமுகஞ் செய்தல், கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம், ஓய்வூதியத் திட்டம், கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பங்களிப்பு சேமிப்புத் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான விசேட வங்கிக் கடன் திட்டம், பலநாட் களங்களுக்கான நவீன திசைகாட்டிக் கருவிகளைப் பொருத்துதல், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழக்கின்ற கடற்றொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கள் போன்ற ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேநேரம், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடுகின்ற 15,032 கடற்றொழிலாளர்களும், மறைமுகமாக கடற்றொழிலில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற  4,888 கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதுடன், மேற்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களாக, கம்பஹா மாவட்டத்தில் நேரடியாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற 11,081 பேரும், மறைமுகமாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்றவ 3,866 பேரும், கொழும்பு மாவட்டத்தில்  நேரடியாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற  3,250 பேரும், மறைமுகமாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற 851 பேரும், களுத்தறை மாவட்டத்தில்  நேரடியாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற 701 பேரும், மறைமுகமாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற 171 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி கப்பலின் காப்புறுதி நிறுவனம் மூலம் மூன்று சுற்றுகளில் கிடைத்துள்ள 1,403,638.570 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டுத் தொகையானது பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கென செலுத்தப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொiயானது மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.

அந்த வகையில், முதலாவது சுற்றில் 281,377,515.00 மில்லியன் ரூபாவும், இரண்டாவது சுற்றில் 335,012,930.00 மில்லியன் ரூபாவும், மூன்றாவது சுற்றில் 787,248,125.00 மில்லியன் ரூபாவும் மூன்று மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தெகையானது விபத்துக்குள்ளான கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையே அன்றி, எமது திறைசேரி நிதி அல்ல என்பதை நான் வலியுறுத்திக் கூற வேண்டியும் உள்ளது.

மேலும், அண்மையிலே கோப் குழுவானது இங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தொடர்பில் சில பரிந்துரைகளை முன்வதை;திருந்தது. அப் பரிந்தரைகள் வரவேற்கத்தக்கவை. அதற்கேற்ப அக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைக்கும் பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அத்துடன், நோர்த் சீ மற்றும் சீநோர் நிறுவனங்களையும் நாம் புதிய நிர்வாகத்தினைத் தெரிவு செய்து மறுசீரமைப்பிற்கு உட்படுத்தி வருகின்றோம் குறிப்பாக இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் மூலப்பொருட்களைப் பெற்று நோர்த் சீ நிறுவனத்தின் வலை உற்பத்திகளை அதிகளவிலும், தொடர்ந்தும் தரமிக்கதாக மேற்கொள்ளவுள்ளோம்.

நீர்வாழ் உயிரின செய்கை அபிவிருத்தி முகவர் நிறுவனம் (Nயுஞனுயு) மற்றும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி, அதிகார சபை (Nயுசுயு) ஆகியவற்றின் செயற்பாடுகளையும் மேலும் வலுப்படுத்தியும், பரவலாக்கியும் வருகின்றோம்.

இறுதியாக, பொதுவானதொரு விடயம் குறித்து எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எமது ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் இந்த நாட்டு தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் ஆரோக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இப்போது மட்டுமல்ல கௌரவ ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் நீண்டகாலமாக அக்கறை கொண்டிருப்பவர்.

அந்த வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று, அதனை எமது மக்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன் வரவேண்டும்.

எம்மைப் பொறுத்த வரையில் தற்போது இந்த நாட்டில் அரசியல்யாப்பில், நடைமுறையில் இருக்கின்ற எமது அரசியலாப்பின் 13வது திருத்தத்தை பலப்படுத்தி, அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகின்றோம்.

இல்லாததை பற்றி கதைத்து, இருப்பதையும் கைவிட்டுவிடக் கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இனவாத சக்திகளுக்கு மெல்லுவதற்கு அவலை கொடுக்காமல், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு அவர்களும் சொல்லுவதற்கு உரிய சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கென உழைப்பதற்கு முன்வருமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதுடன்,

எமது கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளில் பெரும் ஒத்துழைப்புச் சக்தியாக விளங்குகின்ற கௌரவ இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா அவர்களுக்கும், எமது அமைச்சில் எனது காலத்தில் ஏற்கனவே இராஜாங்க அமைச்சர்களாக இருந்த கௌரவ சனத் நிசாந்த பெரேரா, கௌரவ கஞ்சன விஜேசேகர, கௌரவ உபுல் சானக்க ஆகியோருக்கும், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க உள்ளடங்களாக அமைச்சின் அதிகாரிகளுக்கும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த உள்ளடங்களாக திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும், எமது அமைச்சின் கீழள்ள ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளடங்களாக அனைத்து அதிகாரிகளுக்கும், அனைத்து பணியாளர்களுக்கும், எமது செயற்பாடுகளுடன் இணைந்து இந்த நாட்டின் கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைத் துறைகளை மேம்படுத்தி வருகின்ற அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும், நன்னீர் வேளாண்மைத் துறையினருக்கும் மற்றும் இங்கே கடற்றொழில்த்துறை தொடர்பில் கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்கிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வணக்கம்.

Related posts:

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சப...
வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!