அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Sunday, November 27th, 2016

எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிற நிலையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இவ்வாறான நிலை ஏன் தோன்றுகிறது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாய தேவை இருந்து வருகிறது என்பதை நான் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

உலகிலேயே அதி கூடிய அரச ஊழியர்கள் உள்ள நாடு இலங்கை என்றும், உலகிலுள்ள ஏனைய நாடுகளில் 250 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற வீதத்தில் உள்ள நிலையில், இலங்கையில் 25 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற வீதத்தில் இருப்பதாகவும் எமது சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் முன்பு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.

அந்த வகையில், தற்போது எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. எனினும், நாட்டில் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளையும் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலை ஏன் தோன்றுகிறது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத் தேவை இருந்து வருகிறது என்பதை நான் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இந்த இடத்தில், பல்வேறு துறைகள் சார்ந்து, பல ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரம், ஆளணிகள் இருக்கின்ற நிலையில் அந்தப் பணிகளின் தாமதங்களுக்கு உள்ளாகுவதற்கான காரணங்கள் அறியப்பட வேண்டும் எனவும்,

இந்தப் பணியாளர்களிடையெ வினைத்திறன் இல்லை எனில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

சிறந்த முகாமைத்துவம் இல்லை எனில், அதற்கான வசதிகளை எற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

அரச ஊழியர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்துவதால், ஒரு நாளைக்கான சேவையின்போது 18 இலட்சம் மணித்தியாலங்கள் வீணடிக்கப்படுவதாக அண்மையில் அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்திருந்ததையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

அதே நேரம், எமது நாட்டில் தமிழ் மொழி மூலமான மக்கள், அரச நிறுவனங்களின் ஊடான தங்களது தேவைகளை நிறைவேற்றச் செல்கின்றபோது, மொழி ஒரு தடையாக அமைந்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம் என்பதை இங்கு பலரும் அறிவீர்கள் என நான் நம்புகின்றேன்.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் பொது மக்களுக்கு இலகுவாகத் தங்களது தேவைகளை நிiவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பணியாளர்களை பணிகளில் அமர்த்தப்படுவது முக்கியமான ஒரு விடயமாகும் என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புவதுடன்,

அதற்கான ஏற்பாடுகள் இல்லாத இடங்களில் அந்த ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

அரச பணிகளில் ஈடுபடுவோருக்கு இரு மொழித் தேர்ச்சி கட்டாயம் என கடந்த காலங்களில் சொல்லப்பட்டு வந்தது. அது, இன்றைய நிலையில் எந்தளவுக்கு சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என்பது பற்றிய ஒரு விளக்கத்தை கௌரவ அமைச்சர் வழங்க வேண்டும் என்றும்,

இந்த நாட்டைப் பொறுத்த வரையில், இந்த இரு மொழித் தேர்ச்சியானது அரச பணியாளர்களுக்கு அவசியம் தேவை என்பதால் அது தொடர்பில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கையின் மொழிகள் தொடர்பான அடிப்டைச் சட்டம் அரசியலமைப்பின் ஐஏ  அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள எற்பாடுகள் 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தாலும், (1987) 16வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தாலும், (1988) திருத்தப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் மொழி உரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதையும்,

அதன் பிரகாரம், சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாதல் வேண்டும் என்றும், (அலசியலமைப்புக்கான 13வது சீர்திருத்தத்தால் திருத்தப்படவாறான 18(1), மற்றும் 18(2)

இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆதல் வேண்டும் என்றும், ( 19ஆம் உறுப்புரை)

சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிருவாக மொழிகளாக இருத்தல் வேண்டும் என்றும், (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான – 22(1)ஆம் உறுப்புரை)

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும், சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், பொதுப் பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான 22(1)ஆம் உறுப்புரை)

ஆயின், உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக்கும் கூறு எதனதும் சனத்தொகை சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மை சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ, அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்புக்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தலாம் என – ஜனாதிபதி பணிக்கலாம் என்றும், – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தப்பட்டவாறான 22(1) ஆம் உறுப்புரை)

இதன் காரணமாக 29 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக வர்த்தமானியில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் 72 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் வரத்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில்,

இந்த 72 பிரிவுகளில் 41 பிரிவுகள் செயற்பட பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 31 பிரிவுகள் பிரகடனப்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும்,

இந்த சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த இரு மொழி அமுலாக்கல் தொடர்பில் இதுவரை 23 சுற்றறிக்கைகள் வெளியடப்பட்டும், அதன் செயற்பாடுகள் இன்னும் எமது மக்களுக்கு பலன் தராத நிலையிலேயே இரக்கின்றது என்பதை நான் இங்கு அவதானத்தக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

எனவே, இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பாடுகளை முன்னெடுத்து, மொழி காரணமாகப் பாதிக்கப்படுகின்ற எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் ஏற்கனவே வலியுறுத்தியிருந்ததையே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான மொழிக் கொள்கை அமுலாக்கல் மூலமாகவே எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மேலும் சிறப்பானதாகவும், வலுமிக்கதாகவும் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே

அரச ஊழியர்களது இடமாற்றங்களின்போது அவர்கள் முகங்கொடுக்கின்ற ஒரு முக்கியப்  பிரச்சினை – அவர்களது குடும்பங்களை, இடமாற்றம் பெறுகின்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது எற்படுகின்றது. பிள்ளைகளின் பாடசாலை வசதிகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்கின்றனர். இது தொடர்பிலும் அதிக அவதானம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அரச பணிகளுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக, கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாத நிலையில் உள்ளன. குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்திலே சுமார் 75 கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களும், கிளிநொச்சி மாவட்டத்திலே 20 வெற்றிடங்களும், முல்லைதீவு மாவட்டத்திலே 48 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. அண்மையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிகின்றேன். அதனை விரைவு படுத்த வேண்டும் என்றும்,

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலும் முக்கியமான வெற்றிடங்கள் பல நிரப்பப்படாத நிலையே காணப்படுகின்றன.

அந்த வகையில், யாழ் மாவட்டத்தில், சுமார் 60 பொது முகாமைத்துவ சேவை உதவியாளர்களுக்கான வெற்றிடங்களும், சுமார் 30 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும், சுமார் 20 சாரதிகளுக்கான வெற்றிடங்களும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில், காணி தொடர்பிலான மேலதிக அரச அதிபர், திட்ட உதவிப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் (5), அபிவிருத்தி இணைப்பாளர்கள் (4), மக்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் (32) போன்ற வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

முல்லைதீவு மாவட்டத்திலே, இலங்கை நிர்வாகச் சேவைக்கான 5 வெற்றிடங்களும், திட்டமிடல் சேவைக்கான 7 வெற்றிடங்களும், முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 64 வெற்றிடங்களும், சாரதிகளுக்கான 3 வெற்றிடங்களும், அலுவலக பணிகள் சேவையில் 5 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.

எனவே இந்த வெற்றிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் பிரதேச செயலகங்களில் தற்போதைய அதிகரித்து வரும் ஆளணித் தேவைகளுக்கேற்ப கட்டிட வசதிகள் போதியதாக இல்லை என்பதால் அவற்றை விஸ்தரிக்க வேண்டியுள்ளன.

அதே போன்று, வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தில் பிரதேச செயலகங்களுக்கான புதிய கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் மாநாட்டு மண்டபங்கள் அமையப் பெற்றுள்ள போதிலும், அந்த மாநாட்டு மண்டபங்களுக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் ஒலி அமைப்புத் தொகுதிகள் போதியளவு காணப்படாத நிலையே உள்ளது. எனவே இவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,

முக்கியமாக யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கஸ்டப் பகுதிகளாகக் காணப்படுகின்ற தீவுப் பகுதிகளுக்கு கடமை நிமித்தம் செல்கின்ற அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுகின்ற நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களது தேவைகள் கருதியும் தற்போது நெடுந்தீவுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற 2,000. 00 ரூபா போக்குவரத்து கொடுப்பனவினை 5,000.00 ரூபாவாக உயர்த்துவதற்கும்,

அதே நேரம், நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைத்தீவு போன்ற கஸ்டப்பகுதிகளுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு தற்போது எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படாத நிலையில,; இவர்களுக்கு குறைந்தபட்சம் மாதாந்தம் 3,000.00 ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவும்படியும்,

அரச அதிகாரிகள் இவ்வாறான கஸ்டப் பகுதிகளில் சிறிது காலமாவது தங்களது கடமைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் கௌரவ அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், ஏற்கனவே சில ஏற்பாடுகள் இருந்ததைப் போன்று, நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சியாளர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், பெண் சுகாதார அதிகாரி போன்றோர் ஒரே இடத்தில் – ஒரே கூரையின் கீழ் இருந்து சேவையாற்றத்தக்க வகையில் கிராம செயலகங்களை அமைப்பதற்கும்,

அதே நேரம், நாடளாவிய ரீதியில் தற்போது 2010ம் ஆண்டு வரையில் கணினிமயப்படுத்தப் பட்டுள்ள பொது மக்களது பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் போன்ற அனைத்து தரவுகளையும் அன்றாடம் கணினிமயப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

10.-1-300x229

Related posts: