6500 புகலிட கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

Tuesday, August 2nd, 2016
புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் கடற்பயணம் மேற்கொண்ட 6,530 அகதிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ள கடலோர காவல் படையினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து புகலிடம் கோரி ஐரோப்பா வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் கடற்பயணம் மேற்கொண்ட நிலையில், மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,100 அகதிகள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்ட அகதிகளைக் கரை சேர்க்கும் நடவடிக்கைகளை கடலோரக் காவல் படை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருக்கின்றது.

மீட்கப்பட்ட அனைவரும், தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களின் விபரங்களைப் பதிவு செய்ய உதவி வருகிறோம்.இந்நிலையில், அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளன நிலையில் உயிருக்குப் போராடிய மூவரை இத்தாலி கடற்படைக் கப்பல் “வேகா’ மீட்டுள்ளது.

அத்துடன், கடல் நீர் புகுந்து நீரில் மூழ்கும் நிலையில் இருந்த படகிலிருந்து 130 அகதிகளை ஜேர்மனியைச் சேர்ந்த உதவிக் குழு மீட்டுள்ளது.இதனிடையே, மத்தியதரைக் கடலில் கடந்த வியாழக்கிழமை முதல் 6,530 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கடலோரக் காவல் படை மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை, ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் விபரங்களின்படி, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் சிரியா, லிபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைந்தனர்.

அத்துடன், பாதுகாப்பற்ற படகுகள் நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் இந்த ஆண்டு மாத்திரம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: