4,650 அகதிகள் லிபிய கடற்பகுதியில் மீட்பு!

லிபிய மற்றும் இத்தாலி கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 30க்கும் அதிகமான மீட்பு நடவடிக்கைகளில் 4,650க்கும் அதிகமாக அகதிகள் மீட்கப்பட்டதோடு 28 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கடந்த 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்திருப்பதோடு உயிரிழப்பும் 50 க்கும் அதிகமாகும். காலநிலை சூமுகமாக இருக்கும் சூழலில் ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் தஞ்சப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இதில் 27 இரப்பர் படகுகள் உட்பட 33 படகுகள் மீட்கப்பட்டதாக கடலோர காவல் படையினர் குறிப்பிட்டுள்ளனர். லிபியாவில் இருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலேயே இத்தாலியின் லெம்படுசா தீவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கடலோர காவல் படை, அயர்லாந்து கப்பற் படை மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் படகுகளே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
தஞ்சக்கோரிக்கையாளர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கும் சூழலில் இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் இத்தாலியை அடைந்தவர்களின் எண்ணிக்கை 142,000 ஆகும். இந்த ஆபத்தான பயணத்தில் சுமார் 3,100 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
2015இல் இத்தாலியை 154,000 தஞ்சக்கோரிக்கையாளர்கள் அடைந்ததாகவும் இதன்போது 2,892 பேர் வரை மரணித்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|