3 அமெரிக்க சிறப்பு கொமாண்டோ வீரர்கள் படுகொலை!

Friday, October 6th, 2017

நைஜர் நாட்டில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ள அமெரிக்க சிறப்பு கமாண்டோ படையின் 3 வீரர்கள், தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் நாட்டின் இராணுவத்திற்கு தேவையான பயிற்சி, ஆலோசனை மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க பாதுகாப்பு படைகள் முகாமிட்டுள்ளன. இரு நாட்டு இராணுவமும் இணைந்து கூட்டாக பயிற்சி மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் நைஜர் ராணுவ வீரர்களும் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தலைநகர் நியாமியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மாலி நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீரர்கள் ரோந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமெரிக்க சிறப்பு கமாண்டோ படையின் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். நைஜர் வீரர்கள் தரப்பில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அல்கொய்தா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. நைஜர் ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உதவி வழங்க சென்றுள்ள அமெரிக்க வீரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Related posts: