24 குழந்தைகள் கடத்தல் – கேமரூனில் சம்பவம்!

Thursday, January 23rd, 2020

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்து 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர். குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது.

அதைத் தொடர்ந்து குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச் சென்று வைத்திருந்த காட்டுக்குள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது.

அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். உடனே இராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் 2 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

கேமரூனில் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Related posts: