16 நாட்களில் ஒரு இலட்சம் பேர் பலி – கொரோனா தொற்றால் உலக நாடுகள் தடுமாற்றம்!

Saturday, April 18th, 2020

உலகளவில் கடந்த 16 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சம் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வைரஸின் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் முதலாவது மரணம் சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பதிவாகியது.

இதையடுத்து, 83 நாட்களில், அதாவது ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்தது.

இந்த நிலையில், அடுத்த 50 ஆயிரம் உயிரிழப்புகள் 8 நாட்களில் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மேலும் 50 ஆயிரம் மரணங்கள் அடுத்த 8 நாட்களிலும், அதாவது நேற்றைய தினம் வரையிலும் பதிவாகியுள்ளன.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் பதிவிட்டுள்ளன.

இதேவேளை, பிரான்ஸ்க்கு சொந்தமான சார்ள்ஸ் டி கோள் விமானம் தாங்கி போர்க் கப்பலில் ஆயிரத்துக்கும் அதிகமான கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பலில் 2 ஆயிரத்து 300 இற்கும் அதிகமான கடற்படையினர் உள்ள நிலையில், அவர்களில் ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 300 பேரின் பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெறவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 992 பேர் பூரண குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது

Related posts: