100 சடலங்கள் மொசூல் புறநகரில் கண்டுபிடிப்பு!

Wednesday, November 9th, 2016

தெற்கு மொசூலின் சிறு நகர் ஒன்றில் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலை யில் சுமார் 100 சடலங்கள் கொண்ட பாரிய மனிதப் புதைகுழி ஒன்றை ஈராக்கிய இராணுவம் கண்டுபிடித்துள்ளது.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவிடம் இருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்ட மொசூல் புறநகர் பகுதியான ஹம்மாம் அல் அலிலில் உள்ள விவசாய கல்லூரிக்குள் இந்த புதைகுழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இது இருக்கும் என்று ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தடயவியல் குழு குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஈராக் இராணுவத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சடலங்களின் பெரும்பாலானவையின் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதோடு அதன் ஆடைகளை கொண்டு சிவிலியன்கள் அல்லது இராணுவம் என்பதை கண்டறிய முடியாத நிலையில் இருப்பதாக ஈராக் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2014 தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் கணிசமான நிலத்தை கைப்பற்றி இருக்கும் ஐ.எஸ் குழு அங்கு பொதுமக்கள் மற்றும் பிடிபடும் இராணுவத்தினர் மீது சிரச்சேதம் உட்பட பல தண்டனைகளையும் வழங்கி வருகிறது.

coltkn-11-09-fr-04172651999_4994645_08112016_mss_cmy