10 நாளில் சுவாதி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்!

Tuesday, August 23rd, 2016

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் உருவமும், சிசிடிவி காட்சியில் பதிவான உருவமும் ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருவதாகவும், இந்த பணி முடிந்தவுடன் இன்னும் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி நுங்கம்பாக்கம் காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளையும், கொலையை நேரில் பார்த்த சாட்சிகளையும் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்(24) என்ற வாலிபரை ஜூலை மாதம் 2ம் தேதி கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.புழல் சிறையில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ள சிவகுமார் ஆகியோர் அடையாளம் காட்டினர்.

மேலும், சுவாதியின் நண்பர் முகமது பிலால் உள்ளிட்ட 6 பேரின் சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கில் இன்னும் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நுங்கம்பாக்கம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், இரத்த மாதிரி உள்பட 28 தடயங்களை சமர்ப்பிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.தற்போது, சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முக பாவனை ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது

Related posts: