டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம்!

Friday, September 13th, 2019


அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வரவேற்றுள்ளது.

இதற்கு அமைய அமெரிக்க நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கைகளை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய மூன்றாவது நாட்டின் ஊடாக அமெரிக்கா வரும் அகதிகள், முதலில் அந்த நாட்டில் அகதி அந்தஸ்தை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் மூன்றாம் நாட்டின் ஊடாக அமெரிக்கா செல்லும் அகதிகள், அகதி அந்தஸ்து தொடர்பான கோரிக்கையினை அமெரிக்க எல்லையில் சமர்ப்பிக்க முடியும். இந்த புதிய திட்டத்திற்கு சட்ட வல்லுனர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த திட்டம் சட்ட ரீதியாக அமுல்படுத்தப்படும் போது, வெளிநாட்டு அகதிகள் பாதிப்படைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் இருந்து கால்நடையாக மெக்சிக்கோவின் ஊடாக வரும் அகதிகள் அதிகம் பாதிப்படைவர் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான இந்த திட்ட பிரேரணை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட போது சான்பிரான்சிஸ்கோ கீழ் நீதிமன்றம் ஒன்று அதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அமெரிக்காவின் தென் மேற்கு பிராந்திய எல்லை பகுதிகளில் கடந்த ஓகஸ்ட் இறுதிவரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் எல்-சல்வடோர், குவாட்டமால மற்றும் ஹொண்டூரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: