கடும் வெயில் : பிரான்சில் 1400 பேர் பலி!

Tuesday, September 10th, 2019


கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தி அந்நாட்டு சுகாதர அமைச்சை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ளது.

மேலும் அனல்காற்று வீசியதன் காரணமாக 75 வயதுக்கு மேற்பட்ட பலர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்து..

உள்நாட்ட வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அந்நாட்டின் சுகாதார அமைச்சர்  இதனை கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் நிலவியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

குறிப்பாக பிரான்சில் கடும் வெப்பம் நிலவிய நிலையில், அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

பலரும் நோய்வாய் பட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது.

எனினும் கோடை வெயிலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.