ஈரானில் பெட்ரோல் விலை உயர்வு: கண்டித்து மக்கள் போராட்டம்!

Tuesday, November 19th, 2019

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்ததை அடுத்தும், பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட மானியத்தை நீக்கி, 50% வரை விலை உயர்த்தப்பட்டதை அடுத்தும் அந்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி இனி, ஒரு மாதத்துக்கு 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே 15 ஆயிரம் ரியால் என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்கள்.

மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தெரிவிக்கிறது.

எனினும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஷிராஸ், டோரூட், கார்ம்சார், கோர்கன், இலம், கராஜ், கோரமாபாத், மெஹ்திஷாஹர், காஸ்வின், கோம், சனந்தாஜ், ஷாஹ்ரூட் மற்றும் ராஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டம் வெடித்தது.

தலைநகர் டெஹ்ரான் மற்றும் மேற்கூறிய நகரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போக்குவரத்தை முடக்கினர். மேலும் வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இந்த போராட்டத்தால் ஈரான் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: