இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த ட்ரம்ப்!

Monday, September 9th, 2019


தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தலைவர்களுக்கிடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அமெரிக்க அரசும் ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக இரகசிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை ஆல்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Related posts: