ஹிலாரி இணையத்தள முடக்கம்! 

Monday, August 1st, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள அதே சமயம், 1970களில் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவியை பதம் பார்த்த, ‘வாட்டர்கேட்’ ஊழல் போல் ஒரு சம்பவம், தற்போதும் தோன்றி உள்ளது.

இன்டர்நெட் பரவலாக இல்லாத காலத்தில், குடியரசு கட்சியைச் சார்ந்த நிக்ஸன் தரப்பினர், எதிரணியினரான ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகமான, வாட்டர்கேட் கட்டடத்தினுள் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து, அவர்களின் தேர்தல் உத்திகளை அறிந்து கொள்ள முயன்றனர் என்று பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து நிக்ஸனுக்கு நேரடியான அறிவு இருந்தது என்பது, பின்னர் நடந்த விசாரணையில் உறுதியானதால் அவர் பதவி விலக நேரிட்டது.

தற்போதைய இன்டர்நெட் யுகத்தில், ஜனநாயக கட்சி அலுவலக கம்ப்யூட்டர்களில் சேமிக்கப்பட்டிருந்த தேர்தல் உத்திகள், ரஷ்யாவில் இருந்து திருடப்பட்டன என்று ஹிலாரி தரப்பு குற்றஞ்சாட்டியது.

அவ்வாறு திருடப்பட்ட ஒரு செய்தியில், ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் கட்சி தலைமை, ஹிலாரியை ஆதரித்து, போட்டியில் எதிர்த்து நின்ற பெர்னி சாண்டர்ஸை தோற்கடிப்பது குறித்த உத்தியும் அடங்கி இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

ஆனால், தொடர்ந்து இவ்வாறான, ‘கம்ப்யூட்டர் ஹேக்கிங்’ குறித்து ஜனநாயக கட்சி தரப்பு, ரஷ்யாவை குற்றஞ்சாட்டி வருகிறது. இதை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முழுமையாக மறுத்துள்ளார்.

ஆனால், அமெரிக்க ஜனநாயக கட்சி தரப்பினரும், அந்நாட்டில் உள்ள பத்திரிகையாளர்களில் சிலரும், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதையே ரஷ்யா விரும்புவதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான சில செயல்களை ரஷ்யா தன்னிச்சையாக செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இரண்டு கட்சிகளின் வேட்பாளர் தேர்வு படலத்தின் போது, ஹிலாரி அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது, ‘மிகவும் இரகசியம்’ எனக் கருதப்படும் அரசு கடிதங்களை, தன் சொந்த, ‘இ – மெயில்’ கணக்கில் இருந்து அனுப்பியது, அவரது நம்பகத்தன்மை மற்றும் விவேகத்தை கேள்விக்குறியாக்கியது.

தற்போது, டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா இன்டர்நெட் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் விளையாடுவதான குற்றச்சாட்டு, ஹிலாரி மீதான கறையை சிறிதளவேனும் போக்குகிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதே சமயம், அமெரிக்கா-, ரஷ்யா பனிப்போர் காலத்திற்கு பின், தீவிரவாதம் குறித்த உலக பார்வையை திசை திருப்பி, பன்னாட்டு அரசியல், மீண்டும், நாடுகளும் அரசுகளும் சம்பந்தப்பட்ட விஷயமாக மாறுகிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.